Published:Updated:

"சீக்கிரமே கல்யாணம்!" - `மேற்குத் தொடர்ச்சி மலை' காயத்ரி

"சீக்கிரமே கல்யாணம்!" - `மேற்குத் தொடர்ச்சி மலை' காயத்ரி
"சீக்கிரமே கல்யாணம்!" - `மேற்குத் தொடர்ச்சி மலை' காயத்ரி

`ஜோக்கர்', `மேற்குத் தொடர்ச்சி மலை' உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி அவருடைய சினிமா என்ட்ரி பற்றிப் பேசியிருக்கிறார்.

"'ஈஸ்வரியின் நடிப்பு சூப்பர்’னு எல்லோரும் பாராட்டும்போது, `நம்மளைதான் பாராட்டுறாங்களா, இவ்வளவு பெரிய ஸ்டார்கள் உள்ள தமிழ் சினிமாவுல நமக்கும் ஒரு இடம் கிடைச்சிடுச்சா?!’னு சந்தோஷமா உணர்ந்தேன். போன் கால், பொக்கேனு பாராட்டும் வாழ்த்துகளுமாதான் தினம்தினம் கழியுது!” - `மேற்குத் தொடர்ச்சி மலை' நாயகி காயத்ரியின் பேச்சில் அவ்வளவு சந்தோஷம். படத்தில் இவர் அந்த ஈஸ்வரியாகவே வாழ்ந்திருந்தார். பட அனுபவம் குறித்து அவரிடம் பேசினேன். 

"நான் ஒரு மலையாளி. படித்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு. சினிமாவுக்கு வருவேன்னு கனவுலகூட நினைச்சதில்லை. ஆனா, இன்னைக்கு அதெல்லாம் நடந்துடுச்சு. சின்ன வயசிலிருந்தே பரதம் ஆடுவேன். அதனால முகபாவனைகள் அழகாக வரும். அப்படி எடுத்த சில போட்டோக்களை ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணியிருந்தேன். அந்த போட்டோக்களை `96' பட இயக்குநர் பிரேம்குமார் சார் பார்த்திருக்கார். அப்போ அவர் இயக்குநர் பாலாஜி தரணிதரனோட `ஒரு பக்கக் கதை' படத்தின் ஒளிப்பதிவாளர். 

அந்தப் பட ஹீரோயின் ரோலுக்கு நான் சரியா இருப்பேன்னு பிரேம் சாருக்குத் தோன்றியிருக்கு. என்கிட்ட கேட்டார். ஆனா, அந்த சமயத்துல என்னால முடியலை. பிறகு, பிரேம் சார் என்னைப் பற்றி விஜய் சேதுபதி சார்கிட்ட சொல்லியிருக்கார். அவர் தயாரிக்கிற `மேற்குத் தொடர்ச்சி மலை' பட ஈஸ்வரி கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு நினைச்சிருப்பார்போல! 

விஜய் சேதுபதி சாரே எனக்கு போன் பண்ணிப் பேசினது, ஆச்சர்யம். என்னால நம்பவே முடியல. அவர் வாய்ஸ்ல வேற யாரோ மிமிக்ரி பண்ணிப் பேசி விளையாடுறாங்கனுகூட நினைச்சேன். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். `படத்துல நடிக்கச் சம்மதமா'னு அவர் கேட்டப்போ, வானத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு. யோசிக்காம உடனே ஓகே சொல்லிட்டேன். பிறகு, ஸ்கிரீன் டெஸ்டுக்காக சென்னை வந்தேன். அப்போ விஜய் சேதுபதி சார் இருந்தார். என்னை வெல்கம் பண்ணினார். இப்போ நினைச்சுப் பார்த்தா,  அதெல்லாம் கனவு மாதிரி இருக்கு. 

பிறகு, தேனிக்குப் போனோம். ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குச் சில நாள்களுக்கு முன்னாடியே இயக்குநர் லெனின் பாரதி சார் எனக்கு நடிப்பு பற்றிய சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்க்கிற ஒரு அக்காவோடு சேர்ந்து என்னையும் வேலைக்கு அனுப்பி வைப்பார். அங்கே இருக்கிறவங்களுக்கு நான் படத்தில் நடிக்கப்போறேன்ங்கிற விஷயமெல்லாம் தெரியாது. கூட்டத்தில் ஒரு ஆளா வேலை பார்த்துட்டு சம்பளம் வாங்கிட்டு வருவேன். அங்கே என்கூட வேலை செஞ்சவங்ககிட்ட இருந்துதான் ஈஸ்வரியோட உடல்மொழியைக் கொண்டுவந்தேன். மொத்தத்தில், `நடிக்கக் கூடாது. அவங்களைமாதிரி இயல்பா இருக்கணும்’னு புரிஞ்சுக்கிட்டேன்.

இந்தப் பாடங்களுக்குப் பிறகுதான் படத்தோட ஷூட்டிங் தொடங்கியது. படத்தில் நீங்க பார்த்த மலையில் நாங்க அதிகாலையில் மூணு மணிக்கு ஏற ஆரம்பிப்போம். மலையேறி இறங்கும்போது நிறைய அட்டைப் பூச்சிகள் கடிச்சிருக்கும். இப்படி நிறைய கஷ்டப்பட்டுதான் நடிச்சோம். படம் பார்த்துட்டு பலரும் வாழ்த்தும்போது, அந்தக் கஷ்டமெல்லாம் காணாமப் போயிடுச்சு. 

இந்தப் படத்துக்குப் பிறகுதான் `ஜோக்கர்' படத்தில் நடிச்சேன். ஆனா, `ஜோக்கர்' முதல்ல ரிலீஸ் ஆயிடுச்சு. `ஜோக்கர்’ படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ சந்தோஷப்பட்டேன். பெங்களூருலிருந்த தமிழர்கள் எல்லோரும் எனக்கு வாழ்த்துச் சொன்னாங்க. இப்போ `மேற்குத் தொடர்ச்சி மலை’க்குப் பிறகு நடிக்க நிறைய வாய்ப்புகள் வருது. சில கதைகள் பிடிச்சது, பல கதைகள் பிடிக்கலை. நல்ல கதையா வரட்டும்னு காத்திருக்கேன்.

உங்களுக்கு இன்னொரு குட் நியூஸ்...  சமீபத்துலதான் எனக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கு. எங்க குடும்பத்துக்கு அவங்க ஃபேமிலி ஃபிரெண்ட். அவரோட பெயர் ஜீவன் ராஜன். அவரும் சினிமா துறையை சேர்ந்தவர்தான். கன்னட சினிமா ஒளிப்பதிவாளர். சினிமாவுல நான் நடிக்கிறதுக்கு அவர் எந்த மறுப்பும் சொல்லலை. என்னை நல்லா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தர். நான் நடிச்ச படங்களையெல்லாம் பார்த்திருக்கார். அவருக்கு என்னை மட்டுமல்ல, என் படங்களும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுத்த வருடம் கல்யாணத் தேதி குறிச்சிருக்காங்க. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். அதுக்கும் என் வருங்கால கணவர் ஓகே சொல்லிட்டார்.  

இப்போ, மலையாளத்தில் ஒரு படத்துல நடிக்கிறேன். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் மாமியார் வீட்டைச் சேர்ந்த யாராவது ஒருத்தர்தான் எனக்குத் துணையா வர்றாங்க. அந்தளவுக்கு அவங்க எனக்கு முழு சப்போர்ட் தர்றாங்க!" மகிழ்வும் நெகிழ்வுமாக முடிக்கிறார், காயத்ரி.

அடுத்த கட்டுரைக்கு