Published:Updated:

"முதல்ல அல்வா வாசு, அடுத்து நீ’னு வடிவேலு அண்ணன் சொன்னார்!" மறுபிறவியெடுத்த முத்துக்காளை

"முதல்ல அல்வா வாசு, அடுத்து நீ’னு வடிவேலு அண்ணன் சொன்னார்!" மறுபிறவியெடுத்த முத்துக்காளை

காமெடி நடிகர் முத்துக்காளை முதல் முதலாக பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்துப் பேசுகிறார்.

"முதல்ல அல்வா வாசு, அடுத்து நீ’னு வடிவேலு அண்ணன் சொன்னார்!" மறுபிறவியெடுத்த முத்துக்காளை

காமெடி நடிகர் முத்துக்காளை முதல் முதலாக பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்துப் பேசுகிறார்.

Published:Updated:
"முதல்ல அல்வா வாசு, அடுத்து நீ’னு வடிவேலு அண்ணன் சொன்னார்!" மறுபிறவியெடுத்த முத்துக்காளை

`செத்துச் செத்து விளையாடுவோமா!' - நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் பெயர் சொல்ல, இந்த ஒரு வசனம் போதும். உண்மையிலேயே மனிதர் செத்துப் பிழைத்துதான் வந்திருக்கிறார். ``ஆமாண்ணே, இடையில கொஞ்சநாள் குடியில கிடந்தேன். `இத்தோட ஒழிஞ்சான்'னாங்க. எல்லாத்தையும் தாண்டிதான் ஓடிக்கிட்டிருக்கேன். இது என் செகண்ட் இன்னிங்ஸ். இப்போ, ஒரு இந்திப் படத்துல கமிட் ஆகியிருக்கேன்." என்கிறார். 

```என்னது முத்துக்காளை இந்திப் படத்துல நடிக்கிறானா', `இவனுக்கு வந்த வாழ்வைப் பாருய்யா’னு நான் என்னவோ அமிதாப்பச்சனுக்கே டஃப் கொடுக்கப்போறது மாதிரி சிலர் திரும்பத் திரும்ப கேட்குறாங்க. கார்பென்டரா வேலை பார்த்துக்கிட்டு, ஒரே ஒரு டீயை வாங்கி மூணு பேர் குடிச்சதுல தொடங்கி, `இந்த உடம்பை வெச்சுக்கிட்டு உனக்கு ஸ்டன்ட் மாஸ்டர் கனவா, நீ காமெடியன்தான் போ'னு அசிங்கப்பட்டதெல்லாம் இவங்க யாருக்கும் தெரியாதுண்ணே!" - வெள்ளந்தியாகப் பேசுகிற முத்துக்காளை நடித்திருக்கிற அந்த இந்திப் படம், `மேரே இந்தியா'. தமிழில், `நம் இந்தியா' என்ற பெயரிலும் உருவாகிவருகிறது. `படத்தின் ஆடியோ லான்ச் விரைவில் இருக்கும்' என்ற முத்துக்காளையிடம் தொடர்ந்து பேசினேன்.

``ஸ்டன்ட் மாஸ்டர் ஆகணும்கிறதுதான் ஆசை. கராத்தே, சிலம்பமெல்லாம் கத்துக்கிட்டு சென்னை வந்து இறங்கினவனுக்கு ஏவி.எம் ஸ்டுடியோவுல கார்பென்டர் வேலை கிடைச்சது. ஊருக்கே போயிடலாம்னா, சொந்த பந்தங்க மூஞ்சியில முழிக்க யோசனையா இருந்தது. காமெடியனா ரெண்டு நிமிடம் படத்துல தலைகாட்டுற வரைக்கும் கோயில் கொடைக்கு ஊருக்குப் போனாலும், ராத்திரி போயிட்டு, காலையில ஊர் கண் முழிக்கிறதுக்குள்ள கிளம்பிடுவேன். `சென்னையில என்னய்யா செய்ற'னு கேட்டா, என்கிட்ட என்ன பதில் இருக்கு?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறகு ஒருவழியா வடிவேலு அண்ணன் கூட்டத்துல சேர்ந்தேன். போண்டா மணி, அல்வா வாசு, நான்... இப்படி நாங்க ஒரு கேங்கா திரிவோம். அந்த நாள்கள்லதான், `செத்துச் செத்து விளயாடுவோமா'ங்கிற மாதிரி சில வசனங்கள் எனக்கும் கொஞ்சம் பெயர் வாங்கிக் கொடுத்தது. அப்போகூட ஊரு பெருசா மாலை போட்டு வரவேற்கலை. ஏன்னா, ரெண்டு படத்துல என்னைப் பார்த்த முறைப்பெண் `உங்களைக் கட்டிக்க ஆசைப்படுறேன்'னு சொன்னாங்க. `ரெண்டு மூணு நிமிஷம் கூட்டத்துல ஒருத்தனா வந்துட்டுப் போறவனுக்கு என்ன வருமானம் வரும்?'னு சொல்லி, அவங்க வீட்டுல எதிர்ப்பு. அதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அது எதிர்ப்பை இன்னும் அதிகமாக்கிடுச்சு. 

இப்படியே போய்க்கிட்டிருந்த நிலையில குடிக்கும் அடிமையாகிட்டேன். அல்வா வாசுவும் நானும் அப்படிக் குடிப்போம். வடிவேலு அண்ணன் ஒரு தடவை மூஞ்சிக்கு நேராகவே, `முதல்ல வாசு சாகப்போறான், அடுத்து நீ'னு சொன்னார். அதேபோல அல்வா வாசு திடீர்னு ஒருநாள் இறந்துட்டான்.

அன்னைக்குதான் என் மனசுக்குள்ள அதுவரைக்கும் இல்லாத ஒரு பயம். வீட்டுக்காரி, மகன்னு வந்துட்ட பிறகு, ஒரு சீன்ல வந்துட்டு போறவன்யானு ஊர் சொல்லிக்கிட்டிருக்கிற சூழல்ல, அந்தச் சம்பாத்தியத்தையும் குடிக்குக் கொடுத்துகிட்டு, என்ன வாழ்க்கை வாழறோம்'னு ஒரு நிமிடம் நினைச்சேன். அன்னைக்கு சாயுங்காலத்துல இருந்து குடியை நிறுத்தினேன். வெற்றிகரமா ஒரு வருடம் முடியப்போகுது.

இன்னும்கூட சிலர் நம்பமாட்டேங்கிறாங்க. அவங்க நம்ப மறுக்கிறதுக்கும் காரணம் இருக்கு. எல்லாப் படத்துலேயும் குடிகாரனாகவே வந்தா, அவங்க எப்படி நம்புவாங்க. கடைசியா, `சிங்கம் 3' படத்துல அந்தமாதிரி நடிச்சேன். ஷூட்டிங் முடிஞ்சு கிளம்புறப்போ, ஹரி சார்கிட்ட போய், `அடுத்த படத்துக்கு என்னைக் கூப்பிட்டா, குடிக்காதவனா ரோல் தாங்க சார்'னு சொன்னேன். இனி எல்லார்கிட்டேயும் இப்படித்தான் கேட்கணும்போல!'' என்கிற முத்துக்காளை, பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்புடன் முடித்தவர். இப்போது ஓப்பன் யுனிவர்சிட்டியில் எம்.ஏ முடித்துவிட்டார்.

``பணத்தைப் பொறுத்தவரை எப்போ யாருக்குப் போதும்கிற மனசு வந்திருக்கு. ஆனா, ஆசையை அளவா வெச்சுக்கிட்டுதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். புகழும் கிடைச்சவரைக்கும் போதும்ணே... யோகா செய்கிற மோடிகூட சேர்த்து மீம் போடுற அளவுக்கு என்னை யோசிச்சிருக்காங்களே.. அது போதும். அடுத்து, எம்.ஏ. எப்படினுதானே கேட்குறீங்க.. பையனைக் கொண்டுபோய் பள்ளிக் கூடத்துல சேர்க்கப்போனேன். `அப்பா, அம்மா யாராவது ஒருத்தர் டிகிரி முடிச்சிருக்கீங்களா?'னு கேட்டாங்க. டிகிரி காப்பிகூட குடிச்சதில்லைனு சொன்னேன். `சீட் இல்லை'னு சொல்லிட்டாங்க. டிகிரி வாங்கியே ஆகணும்டானு அன்னைக்கு முடிவெடுத்தேன்!'' என்று சிரிக்கிறார், முத்துக்காளை. அந்தச் சிரிப்பில் அத்தனை வலி. 

முரட்டுக்காளையா வாங்க முத்துக்காளை! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism