Published:Updated:

நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!

நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!

போல்டு அண்டு பியூட்டிஃபுல்ஆர்.வைதேகி

நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!

போல்டு அண்டு பியூட்டிஃபுல்ஆர்.வைதேகி

Published:Updated:
நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!

ஜாக்குலின் இப்போது ஜூனியர் நயன்தாரா. விஜய் டி.வி-யின் செல்லக்குட்டி ஜாக்குலின், ‘கோகோ’ (கோலமாவு கோகிலா) படத்தின் மூலம் சினிமாவுக்கு ஜம்ப் செய்கிறார்.

அப்போ விஜய் டி.வி-க்கு டாட்டாவா? 

‘`ஏங்க நல்லாத்தானே போயிட்டிருக்கு... எனக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாமே விஜய் டி.விதான். அவங்களே என்னை அடிச்சு விரட்டினாக்கூட, நான் அங்கேயிருந்து போக மாட்டேன்...’’ - ஜக்கம்மா மேல் சத்தியம் செய்கிறார் ஜாக்குலின்.

‘கைப்புள்ள’ ரேஞ்சுக்கு எல்லாராலும் கலாய்க்கப்படுகிற ஜாக்குலின், நிஜ வாழ்க்கை யில் போல்டு அண்டு பியூட்டிஃபுல் பொண்ணு.

‘`என்னைப் பார்க்கிறவங்க எல்லாம், `இந்த வயசுல இத்தனை விஷயங்கள் பண்றியா'னு கேட்கறாங்க. ஆனா, அத்தனை விஷயங்கள் செய்யறதுக்கு இந்த 21 வயசுல நான்பட்ட கஷ்டங்களும் தோல்விகளும் எனக்குத்தான் தெரியும். அப்பா இல்லாத குடும்பத்துச் சோகத்தை அனுபவிச்சவங்களால மட்டும்தான் புரிஞ்சுக்க முடியும்...’’ - கரகரக் குரலில் கனம் சேர்கிறது.

நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!

‘`நான், அம்மா நிர்மலா, தம்பி ஹனிஷ்னு எங்க குடும்பத்துல மூணே பேர்தான். அம்மா ஹோம் மேக்கர். தம்பி ப்ளஸ் ஒன் படிக்கிறான்.

அம்மா ரொம்பக் கூச்ச சுபாவமுள்ளவங்க.  வீட்டைவிட்டு வெளியில வரமாட்டாங்க. அப்பா ஓர் ஆக்சிடென்ட்டுல தவறிட்டார். அவர் போனதும் எங்க வீடு, வீடா இல்லை.

ப்ளஸ் டூ முடிச்சதும் அம்மா என்னை இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னாங்க. எனக்கு அதுல விருப்பமில்லை. ஏர்ஹோஸ்டஸ் ஆகணும்கிற ஆசையில அதுக்குப் படிச்சேன்.  ஆசைப்பட்ட மாதிரியே ஏர்ஹோஸ்டஸ் ஆகிட்டேன். ஆனா, எனக்கு சைனஸ் பிரச்னை இருந்ததால டிராவல் உடம்புக்கு ஆகலை. ட்ரீட்மென்ட்டுக்காக ஒரு பிரேக் எடுத்துக் கிட்டேன்.

எனக்கு `ஆங்கரிங்'கும் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். அதெல்லாம் எனக்கு வருமாங்கிற தயக்கமும் இருந்தது. விஜய் டி.வி-யில  ஒருமுறை ஆடிஷனுக்குப்போய், முதல் ரவுண்டுலயே வெளியில வந்திருக்கேன். ‘நீ ரொம்பக் குழந்தை மாதிரி பேசறே... கொஞ்சம் மெச்சூர்டா பேசக் கத்துக்கிட்டு வா’னு சொல்லி அனுப்பிட்டாங்க.  எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாம போனதால, எனக்குப் பெரிய வருத்தமெல்லாம் இல்லை.

ஏர்ஹோஸ்டஸ் வேலையிலேருந்து பிரேக் எடுத்துட்டு வீட்டுல இருந்த டைம்... நாளைக்கு ஆடிஷன்னா, இன்னிக்கு நைட் என் ஃப்ரெண்ட்கிட்டருந்து போன் வருது. ‘ஏதோ ஒரு ஸ்கூல்ல விஜய் டி.வி-க்கு ஆடிஷன் நடக்குது, போய் அட்டெண்ட் பண்ணு’னு சொன்னாங்க. அப்போ நான் சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இல்லை. அதனால எனக்கு அந்த விளம்பரத்தை எங்கே தேடறதுன்னே தெரியலை. விடிய விடிய விஜய் டி.வி-யை ஆன் பண்ணி வெச்சுக்கிட்டு அந்த விளம்பரம் வருமானு உட்கார்ந்திருந்தேன். ஒருவழியா வந்தது. அட்ரஸைக் குறிச்சுக்கிட்டு, அடுத்த நாள் காலை 8  மணி ஆடிஷனுக்கு

9 மணிக்குச் சாவகாசமா போனேன். ரெண்டு, மூணு தெருவுக்குக் கூட்டம் நிற்கிறதைப் பார்த்து ஷாக் ஆயிட்டேன்.

க்யூவுல நின்னுக்கிட்டிருக்கும்போதே ‘ஆடிஷன் ஓவர்... நீங்கல்லாம் போகலாம்’னு சொல்லிட்டாங்க. அடடா... இதென்னடா ஜாக்குலினுக்கு வந்த சோதனைன்னு நினைச்சிட்டிருந்தபோது, ஒருத்தங்க வந்து, ‘பொண்ணுங்க க்யூ கொஞ்சம் கம்மியா இருக்கு. எதுக்கும் அங்கே போய் நின்னு பாரு’னு சொன்னாங்க. அதுல போய் ஒரு மணி நேரம் நின்னேன். அது நடிப்புக்கான ஆடிஷன். முதல் ரவுண்டுல செலக்ட் ஆயிட்டேன். ‘பார்க்க நல்லாருக்கீங்க. ஆனா, இன்னும் இம்ப்ரூவ் பண்ணணும்’னு சொன்னாங்க. அடுத்த நாள் செகண்ட் ரவுண்டு, தேர்டு ரவுண்டுனு தாண்டிட்டேன். என்னை செலக்ட் பண்ணிட்டாங்க.  ‘ஒருவாட்டியாவது விஜய் டி.வி-யில முகம் காட்டினா போதும்’கிற என் கனவு நனவாகிருச்சு. அப்போ எனக்கு சீரியல் பண்ற ஐடியா இல்லைன்னாலும், சேனல் என்ட்ரிக்கு அதுவும் ஒரு வாய்ப்பா இருக்கும்னு ஓகே சொன்னேன்...’’ - மனப்பாடம் செய்த டயலாக் மாதிரி தன் கதை சொல்கிறவருக்கு ‘ஆண்டாள் அழகர்’ சீரியல் தான், சேனலுக்கான என்ட்ரி டிக்கெட்.

‘`காம்பியர் கனவுல இருந்த எனக்குத் தொடர்ந்து சீரியல் பண்றதுல ஆர்வமில்லை.  அந்தக் கனவும் ஒருநாள் நனவானது. ‘யேசுதாஸ் 50’ நிகழ்ச்சியில மைக் பிடிச்சு ஆங்கரா நின்ன அந்த ஸ்பெஷல் தருணம் வாழ்க்கையில மறக்க முடியாதது. ரெட் கார்பெட்ல நிறைய செலிப்ரிட்டீஸ்கிட்ட பேசவும் வாய்ப்பு கிடைச்சது. அந்த ‘ஆஸம் மெமரி’யிலேருந்த மீள முடியாம இருந்த எனக்கு, அடுத்த சர்ப்ரைஸ் காத்திட்டிருந்தது. லயோலா காலேஜ்ல விஸ்காமுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். அதுக்கான செலக் ஷன் லெட்டர் வந்திருந்தது. ஸ்ரீபெரும்புதூர்ல எங்க வீட்டுலேருந்து காலேஜுக்குக் கிளம்ப பெட்டி படுக்கையெல்லாம் ரெடி பண்ணிட்டிருந்தேன். விஜய் டி.வி-யிலேருந்து கால்... ‘இன்னும் மூணு மணி நேரத்துல சென்னைக்கு வர முடியுமா’னு கேட்டாங்க. அந்த மொமென்ட்டுக்குத் தானே காத்திட்டிருந்தேன்.

அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பிப் போய் விஜய் டி.வி-யில நின்னேன். யார்கிட்ட என்ன பேசணும், எப்படிப் பேசணும்னு எதுவுமே தெரியாது. என் முதல் ஷோ பார்த்தீங்கன்னா கழுவிக் கழுவி ஊத்துவீங்க.

அது நான் விரும்பித் தேடிக்கிட்ட வேலை... இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு வெறித்தனமா விஷயங் களைத் தேடித் தேடிக் கத்துக்கிட்டேன். அந்தத் தேடலும் உழைப்பும்தான் இப்போ இந்த இடத் துக்கு என்னைக் கூட் டிட்டு வந்திருக்கு...’’ - நிகழ்தருணத்துக்குத் திரும்புகிறவர், லயோலா கல்லூரியில் விஸ்காம் மூன்றாமாண்டு மாணவி.

‘`விஜய் டி.வி-யில வந்த துமே பட வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சிருச்சு... காமெடி ஷோ பண்றதால எனக்கு காமெடி சூப்பரா வரும்னு பல படங்கள்ல காமெடியன் கேரக் டருக்குக் கேட்டாங்க. ஆனா, நான் அந்தளவுக்கு வொர்த் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு வந்தா பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்தபோது ‘கோகோ’வுல நடிக்கக் கேட்டாங்க. நயன்தாராவுக்குத் தங்கச்சின்னா `நோ' சொல்லத் தோணுமா? படம் பார்த்துட்டு ‘ஜாக்குலினா இது’னு நிச்சயம் ஒரு நிமிஷமாவது நினைப்பீங்க. அப்படி யொரு கேரக்டர்.

நயன்தாரா மேடம் அவ் வளவு ஸ்வீட். வெளியில இருந்து பார்க்கிறபோது அவங்களை நமக்கு எவ்வளவு பிடிக்குமோ அவங்ககூட பேசினா அதைவிட பிடிக்கும். லேடி சூப்பர் ஸ்டார்கூட நானும் நடிச்சிருக்கேன்ற ஃபீலே தனி.

முதல்நாள் ஷூட்ல உட்கார்ந்திட்டிருந்த போது அவங்ககிட்ட என்ன பேசறது, எப்படிப் பேசறதுனு தயங்கிட்டே இருந்தேன். அவங்க அப்போ மேக்கப் பண்ணிட்டிருந்தாங்க.  `ஹாய்' சொல்லக்கூட பயந்துட்டு அவங்களையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தேன். திடீர்னு அவங்களே ‘ஹாய் ஜாக்குலின்’னு கூப்பிட்டாங்க. ‘ஹாய் மேடம்... உங்களுக்கு என்னைத் தெரியுமா’னு கேட்டேன். ‘நீங்க விஜய் டி.வி-யில ஷோ பண்றீங்களாமே... நேத்து சொல்லிட்டிருந்தாங்க’ன்னாங்க. தான் எவ்வளவு பெரிய ஆளுங்கிறதை மறந்து தன் கூட நடிக்கிறவங்க யாரு, அவங்க என்ன பண்றாங்கனு தெரிஞ்சு வெச்சிருக்கிறதை நினைச்சதும்,  அவங்க மேல இருந்த மரியாதை இன்னும் அதிகமாகிடுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்!

உங்களுக்கு என்ன கஷ்டம்னாலும் நயன்தாரா மேடம்கிட்ட மனசுவிட்டுச் சொல்லலாம். உடனே அந்த கஷ்டத்தைத் தீர்த்து வெச்சிடுவாங்கன்னு அர்த்தமில்லை. ஆனா,  அவங்ககிட்ட மனசுவிட்டுப் பேசினா  மனசு லேசாகும். ஷூட்டிங் டைம்ல பல நாள் நானும் அவங்களும் மட்டும் இருந்திருக்கோம். ஏதாவது தொணதொணன்னு பேசி, தப்பாகிடப் போகுதோன்னு நினைச்சிட்டிருப்பேன். அவங்களோ செம ஜாலி.

நான் இப்பதான் கேமராவைப் பத்திப் படிச்சிட்டிருக்கேன். அவங்க கேமராவைப் பத்தியெல்லாம் சொல்ற விஷயங்கள் ஆச்சர்யமா இருக்கும். நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. இவ்வளவு சிம்பிளாகவும் ஸ்வீட்டாகவும் இருக்கிறதாலதான் அவங்க லேடி சூப்பர் ஸ்டாரா இருக்காங்க’’ - நயன்தாராவிடமிருந்து நகர மறுக்கிறது ஜாக்குலின் மனசும் பேச்சும்.

ஜாக்குலினின் அடையாளம் அவரது குரல். வி.டி.வி.கணேஷ் குரலோடெல்லாம் அதை ஒப்பிட்டுக் கலாய்ப்பவர்கள் அதிகம். ஜாக்குலினுக்கோ அது ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’.

‘`என் குரல் இதைவிட மோசமா இருந்திருந்தாகூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ்ல நிறைய பேர் நல்லா பாடுவாங்க. அவங்க பாடும்போது கூடசேர்ந்து பாடணும்னு ஆசையா இருக்கும். இன்னும் சொல்லப்போனா ஆங்கரிங் பண்றவங்களுக்குக் குரல் ரொம்ப முக்கியம்.  ஆனா, எனக்கு அப்படி கிடையாது. யாராவது எந்த விஷயத்தையாவது வெச்சு என்னைக் கலாய்ச்சாங்கன்னா அதை மாத்திக்கணும்னு நினைப்பேன். ஆனா, என் குரலை அப்படி நானே நினைச்சாலும் மாத்திக்க முடியாது.

இப்பல்லாம் என் வாய்ஸ்தான் எனக்கான அடையாளம்னு பெருமையா ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். தவிர, நான் பண்றது காமெடி ஷோ. அதுல சிரிப்புதான் முக்கியம். என்னை வெச்சுக் கலாய்க்கிறது மூலமா நாலு பேரை சிரிக்கவைக்க முடியுதுன்னா நோ பிராப்ளம். கவலைப்படறதுக்கான விஷயங்களைத் தாண்டி வாழ்க்கையில சந்தோஷத்தைக் கொடுக்க எத்தனையோ உண்டு.

ஒரு காலத்துல ராத்திரி ரெண்டு மணிக்கு ஷூட்டிங் முடியறபோது எனக்குத் துணைக்கு வர ஆளிருக்க மாட்டாங்க.  எப்படிப் போறதுனு கலங்கி நின்ன நாள்கள் உண்டு. ஆடிஷன் ஃபைனல்ஸ்ல என்கூட வந்தவங்களை எல்லாம் சுற்றி நின்னு கைகொடுத்து, கட்டிப்பிடிச்சு பாராட்டிக் கொண்டாட அவங்க குடும்பமே இருக்கும். ஆனா, பத்துக்குப் பத்து வாங்கிட்டுப் பெருமையோடு நிற்கற என்கூட யாருமே இருக்க மாட்டாங்க. என் வலிகளை மட்டுமில்லை, என் வெற்றிகளையும் நான் மட்டுமே சுமந்த நாள்கள் அவை.

இன்னிக்கு வாழ்க்கை மாறியிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு எல்லா வகையிலயும் சப்போர்ட் பண்றாங்க. சின்னச் சின்ன சந்தோஷங்களைக்கூட மிஸ் பண்ணாம கொண்டாடி மகிழ என்னைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கு... அது போதும்...’’ - ஜாக்குலினின் கரகரக் குரல் இப்போது கம்பீரக் குரலாக ஒலிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism