Published:Updated:

அறம் தொடரட்டும்!

அறம் தொடரட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
அறம் தொடரட்டும்!

அவள் திரை  நிவேதிதா லூயிஸ்

அறம் தொடரட்டும்!

அவள் திரை  நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
அறம் தொடரட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
அறம் தொடரட்டும்!

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுக்கும் குடிநீர் வற்றிப்போன வறண்ட கிராமத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்... `அறம்' தவிர? தண்ணீருக்கான நம் தேடல் இன்னும் காலம் செல்லச் செல்ல எத்தனை கொடூரமானதாக இருக்கப்போகிறது என்பதைப் பலர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், கண்முன் ஒரு வறண்ட கிராமமும், அதன் அருகிலேயே இருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையமும் காட்சிகளாக விரியத் தொடங்குகின்றன. அன்பு மகளின் பிறந்தநாளுக்கு 350 ரூபாய் கேக்கே போதும் என்று இயலாமையால் ஆர்டர் செய்துவிட்டுத் திரும்பும் தாய். அவளோடு நீச்சல் வீரனாகும் கனவுகளை நெஞ்சில் சுமக்கும் மகன், 600 ரூபாய் விலையில் ஆஜானுபாகுவாக நிற்கும் `இந்தியா' என்று எழுதப்பட்ட கேக்கை ஏக்கமாகப் பார்த்துச் செல்லும்போதுதான் நிமிர்ந்து உட்காருகிறோம். கேக்கில் தங்கையின் பெயரைத் தமிழில் எழுத விரும்பும் சிறுவனை விரட்டி ஆங்கிலத்தில் எழுதி வாங்கி, அதை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பேக்கரி சேட்டன், ஆழ்குழாய்க் கிணற்றில் குழந்தை விழுந்ததைச் சுற்றி நடக்கும் ஊடக விவாதங்களில் பவுடர் அப்பிய கருத்தாளர்கள், குடிக்கத் தண்ணீர் இல்லாத கிராமத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவென குழந்தைக்குச் சொட்டு மருந்து விடும் செவிலி, ஒருபுறம் ராக்கெட் தளமும், மறுபுறம் ஆழ்குழாய்க் கிணறும் என்று படம் முழுக்க விரிகின்றன காட்சிகள்.

வெயிலில் இறங்கி நிற்கும் கலெக்டர் அம்மாவுக்குக் குடைபிடிக்க ஓடிவரும் அதிகாரி, பணிநிமித்தம் வண்டியில் சென்று கொண்டிருப்பதாகப் பொய் சொல்லிவிட்டு ரோட்டோரத்தில் நின்று `தம்' அடிக்கும் அதிகாரி, கிராமத்தினரைக் கலகக்காரர்களாகக் காட்ட முதல் கல்லை எறிந்து கலவரத்தைத் தொடங்கும் காவல்துறை அதிகாரி என, அரசு இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். கபடிக் கனவுகளைத் தொலைத்துவிட்ட பெயின்டருக்கும் அவர் மனைவிக்கும் இடையேயான காதல், பொட்டல் காட்டில் மலரும் மஞ்சள் நெருஞ்சிப்பூபோல ஜொலிக்கிறது - அத்தனை அழகியல் அதில்!

அறம் தொடரட்டும்!

கடலோரக் கரிசல் கிராமத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்றில் நான்கு வயதுச் சிறுமி ஒருத்தி தவறி விழுந்துவிட, அவளைக் காப்பாற்ற ஒரு ஊரே கூடி நின்று துடிக்கிறது - மாவட்ட ஆட்சியர் தலைமையில். அந்த ஆட்சியர்மீது நடக்கும் ஒரு விசாரணையினூடே நகர்கிறது கதை. கையில் எந்த உபகரணமும் இல்லாமல், வெறும் கயிற்றில் `பட்டர்ஃப்ளை நாட்' போட்டுக்கொண்டு குழந்தையைக் காப்பாற்றலாம் என்று அதிகாரி ஒருவர் சொல்லும்போது, நமக்கே ஆற்றாமை வருகிறது. குழந்தையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோற்றுவிட, இறுதியில் ஒரு ரிஸ்க்கான முடிவை எடுக்கிறார் கலெக்டர். `முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? குழந்தை என்ன ஆனாள்?' என்பதுதான் கதை. அதிகாரமும் கல்வியும் மக்களுக்கு, சமூகத்துக்கு உதவி செய்யத்தான். ஆனால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதையும், எந்த இடத்தில் இருந்தாலும், சமூக அக்கறை இருந்தால், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், மக்கள் பணியாற்ற முடியும் என்பதையும் அழுத்தம்திருத்தமாக கலெக்டர் மதிவதனி உணர்வதை நமக்குப் பாடமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். வழக்கமான நாடகத்தனம், சினிமாத்தனம் இல்லாத, யதார்த்த சினிமாவை நோக்கிய அருமையான முயற்சி - அறம். குத்துப்பாட்டு, அனல்பறக்கும் சண்டை, பன்ச் டயலாக் என மசாலாத்தனம் இல்லாமல், சினிமா தரத்தில் மிளிர்கிறது.

ஓம் பிரகாஷின் கேமரா... காய்ந்த பூமியையும், கடலையும், அதன் மனிதர்களையும் உவர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்றச் சரியான நடிகர்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. `காக்கா முட்டை' குட்டி நடிகர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ், சுனு லட்சுமி என்று மிகச்சரியான பாத்திரத் தேர்வுகள். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல்கல். அறிமுக இயக்குநர் கோபி கதை சொல்லத் தொடங்கி, ஐந்தே நிமிடத்தில் `ஓகே' சொல்லி இருக்கிறார் நயன்! படம் முழுக்க கைத்தறிப் புடவையில், நகைகள் பெரிதாக எதுவுமின்றி, ஆர்ப்பாட்டம் இல்லாத, அமர்த்தலான மதிவதனியாகவே வாழ்ந்திருக்கிறார். `மதிவதனி எனும் நான்' என்ற வசனத்துடன் படம் முடியும்போது, தியேட்டரில் விசில் பறக்கிறது.

அறம் - தொடரும், தொடர வேண்டும்! சிறந்த வெற்றிப்படம் ஒன்றைத் தந்த அறிமுக இயக்குநர் கோபிக்கு வாழ்த்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறம் தொடரட்டும்!

சர்ச்சையைத் தூண்டுகிறாளா, ‘லக்ஷ்மி’?

கே.எம்.சர்ஜுன் இயக்கிய ‘லக்ஷ்மி’ என்ற குறும்படம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. கனடாவின் டைவர்சிட்டி ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தங்கம் வென்ற இந்தப் படம், `லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட்'டில் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் சந்திக்கும் மன இறுக்கத்தையும், அது சார்ந்த மனப்போராட்டத்தையும் அப்பட்டமாகக் காட்டுகிறது படம். `கற்பு எனும் வளையம் பெண்ணுக்கு மட்டும் ஏன்... தன் ஆசைப்படி திருமணமான பெண் வாழக்கூடாதா?' என ஒரு தரப்பினரும், `மிடில் கிளாஸ் பெண்கள் வழிதவறுவதாகக் காண்பிப்பது கலாசார சீர்கேடு, இது சரியா?' என்று மற்றொரு தரப்பினரும் விவாதம் செய்துவருகின்றனர். இதில் பாரதியார் பாடல்கள் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சிலர் கூறிவருகின்றனர். மொத்தத்தில் இந்தப் புதிய ஜானர் குறும்படம் கற்பு, கலாசாரம் குறித்த ஓர் அழுத்தமான கருத்தைப் பதிவு செய்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism