Published:Updated:

"'கபாலி' குமுதவள்ளியை விடவும் உங்களுடைய அந்தப் பதில்தான் மிகவும் பிடித்தது!" ராதிகா ஆப்தேவுக்கு ஒரு ரசிகையின் கடிதம் #HBDRadhikaApte

"'கபாலி' குமுதவள்ளியை விடவும் உங்களுடைய அந்தப் பதில்தான் மிகவும் பிடித்தது!" ராதிகா ஆப்தேவுக்கு ஒரு ரசிகையின் கடிதம் #HBDRadhikaApte

"'கபாலி' குமுதவள்ளியை விடவும் உங்களுடைய அந்தப் பதில்தான் மிகவும் பிடித்தது!" ராதிகா ஆப்தேவுக்கு ஒரு ரசிகையின் கடிதம் #HBDRadhikaApte

"'கபாலி' குமுதவள்ளியை விடவும் உங்களுடைய அந்தப் பதில்தான் மிகவும் பிடித்தது!" ராதிகா ஆப்தேவுக்கு ஒரு ரசிகையின் கடிதம் #HBDRadhikaApte

"'கபாலி' குமுதவள்ளியை விடவும் உங்களுடைய அந்தப் பதில்தான் மிகவும் பிடித்தது!" ராதிகா ஆப்தேவுக்கு ஒரு ரசிகையின் கடிதம் #HBDRadhikaApte

Published:Updated:
"'கபாலி' குமுதவள்ளியை விடவும் உங்களுடைய அந்தப் பதில்தான் மிகவும் பிடித்தது!" ராதிகா ஆப்தேவுக்கு ஒரு ரசிகையின் கடிதம் #HBDRadhikaApte

அன்புள்ள ராதிகா ஆப்தே...

உங்களுக்கு ஒன்று தெரியுமா. எங்கேயோ ஒலிக்கும் பிடித்த பாடலின் அடுத்த வரியைத் தன்னையறியாமல் பாடும்போதும், சறுக்கு மரத்தில் `ஹேய்ய்ய்’ எனக் கத்திக்கொண்டே சறுக்கும்போதும், `பார்ச்ட்' படத்தின் ஆரம்பக் காட்சிகளின் லஜ்ஜோ போன்றே ஆடைகளுக்கான கண்காணிப்பைத் தளர்த்தி, முகத்தில் அடிக்கும் காற்றுக்குச் சிரிக்கும்போதும், பிடித்த இசை ஒலிக்கையில் சுற்றிலும் யாருமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அசைவுகளுக்குக் குதிக்கும்போதும், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில், சிறு வயது `நான்’ உள்ளிருந்து எட்டிப்பார்க்கும்போதும், சுவர்கள் இல்லாத பெருவெளியின் தனிமையில் மெள்ள மூச்சிழுத்து வெளிவிடும்போதும், குளிர் நீரில் காலை விடும்போதும் மனதுக்குள் உற்சாகம் தோன்றுமே... அந்த உணர்வுதான் உங்களைத் திரையில் பார்க்கும்போதும் உண்டாகிறது.

என் போன்ற பெண்கள் பலரும் எங்கள் வானங்களை அண்ணாந்து பார்க்க மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் கனவுகளில் பௌர்ணமி இரவின் கடற்கரைகளில் அமர்ந்திருப்போம், முதுகில் பெரிய பையை மாட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி அடர்ந்த கானகத்தின் உச்சிக் கிளைகளைப் பார்த்துக்கொண்டிருப்போம், மழை இரவில் பேருந்து நிறுத்த இருக்கையில் கால்களைத் தொங்கவிட்டு, பிடித்த பாடலைக் கேட்டு தலை ஆட்டிக்கொண்டிருப்போம். வேர்த்து வழியும் உடலில் காற்று வீசும்போது ஜிலுஜிலுவென உணரவைக்கும் தளர்வான ஆடைகள் அணிந்து, கடின வேலைகள் செய்வோம். தலைமுடியை விருப்பம்போல வெட்டிக்கொண்டு அலட்சியமாகப் புரளவிட்டபடி நடப்போம், விருப்பான ஆடைகள் அணிவோம், ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டு தண்ணீரில் குதிப்போம். கதைகள், கவிதைகள் எழுதுவோம்; படங்கள் இயக்குவோம். புகைப்படங்கள் எடுக்க ஊர் ஊராகச் சுற்றுவோம். நள்ளிரவில் கண் விழித்துக்கண்ட கனவுகளை ஓவியங்களாக வரைவோம். கூத்துப்பட்டறைகளில் நடித்துக்கொண்டிருப்போம். இன்னும் இன்னும் என்னென்னவோ செய்துகொண்டிருப்போம். ஆனால், நிஜத்தில் நாங்கள் என்ன செய்துகொண்டிருப்போம்? 

எப்போதும் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் பார்வைகளை மதிப்பிட்டுக்கொண்டே, அந்தப் பார்வைகளின் காரணங்கள் எங்கள் உடலில்தான் இருக்குமோ என நாங்களே உருவாக்கிய ஒரு நீதிக்கூண்டில் கேள்வி கேட்டுக்கொண்டிருப்போம். அது விளைவிக்கும் குற்றவுணர்வில் புழுங்கிக்கொண்டிருப்போம். இதைத் தாண்டி வேறெங்கும் கவனம் செலுத்தமுடியாமல், எங்களால் முடிந்தது இவ்வளவுதான் என்று பொதுமைப்படுத்திக்கொண்டிருப்போம். அந்தக் குற்றவுணர்வு தரும் வேதனையில் எங்களையே தண்டித்துக்கொண்டு கனவுகளைத் தூக்கத்தில் மென்றுகொண்டிருப்போம். அதனால்தான், உங்களைப் பார்த்தால் அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், எவ்வளவோ முயன்றும் எங்களால் செய்ய இயலாத ஒன்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நாங்கள் போலியான உணர்வுகளைக் கட்டமைத்து அடிமையாகக் கிடக்கிறோம். 

உள்ளாடைகள் எல்லோரும் அணிவோம்தானே; அது எல்லோருக்கும் தெரியும்தானே. ஆனாலும், கண நேரம் உள்ளாடையின் ஸ்ட்ராப் வெளியே தெரிந்துவிட்டாலும், ஒரு கப்பலையே கவிழ்த்துவிட்டதுபோல அவசரமாகச் சரி செய்வோம். எங்களுக்கு மார்பகங்கள் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்தானே. ஆனாலும், குனியும்போது கவனமாக கையால் உடையை உடலோடு சேர்த்துப் பிடித்துக்கொள்வோம். மாதவிடாய் என்றால் உதிரப்போக்கு என்று எல்லோருக்கும் தெரியும்தானே. ஆனாலும், கறை உடையில் படிந்து வெளியில் தெரிந்தால் அசிங்கம் என மனம் குமைவோம். நாங்கள் பார்வைகளுக்கு மட்டும் அஞ்சுவதில்லை, இவற்றைச் செய்யாமல்விட்டால் `இதைக்கூட கவனிக்காமல் அப்படி என்ன செய்கிறாய்?’ என்று எங்களுள்ளே எழும் கண்டிப்புக் குரலுக்கும் அஞ்சுகிறோம். அதனால்தான் எந்நேரமும் எங்கள் உடலைக் குறித்தே எண்ணுகிறோம்; ஆடைகள் சரியாக அணிந்திருக்கிறோமா என நிமிடத்துக்கு ஒருமுறை உறுதிசெய்கிறோம். சுற்றியுள்ளவர்களின் பார்வைகளை அவதானித்து எங்கள் உடைகளின் நல்லதனத்தை மதிப்பிடுகிறோம். 

பார்வைகளும் உணர்வுகளும் அடைபட்ட ஒரு குறுகிய கூரையின் கீழ் வாழ்ந்து, அந்தச் சிறைக்கு ஆட்பட்டுவிட்டோம். எங்களால் அதைவிட்டு வெளிவர முடியவில்லை. எங்கள் உடலுக்கென விதிக்கப்பட்ட எல்லைகளை உடைக்கவும் முடியவில்லை. நீங்களோ உங்கள் உடல் எல்லைகளை முறித்துத் திரையில் மிளிர்ந்தபோது, ஆச்சர்யமாகப் பார்த்தோம். அப்போதே எங்கள் மனங்களில் இடம்பிடித்துவிட்டீர்கள். `பார்ச்ட்' படத்தின் அந்த நிர்வாணக் காட்சிகளுக்காக, உங்கள் மீது அவதூறுகள் வீசப்பட்டன. ஜஸ்ட் லைக் தட் என அந்தக் குரல்களைக் கடந்துவந்தீர்களே, அப்போது உங்களை மெய்மறந்து பார்த்தோம். அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து கேட்கப்பட்ட அந்த ஒரே கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் நினைவில் உள்ளது. அதுதான் கபாலியின் குமுதவல்லியை விடவும் உங்களை விரும்ப வைத்தது.

"உடைகளோ, நிர்வாணமோ, வக்கிரப் பார்வைகளுக்கு எல்லாம் ஒன்றுதானே. உடைகள் வக்கிரப் பார்வைகளைத் தடுக்கப்போகிறதா என்ன? எப்படி ஒருவர் என் உடலைப் பார்க்கிறார் என்பதை என்னால் யோசித்துக்கொண்டிருக்க முடியுமா? தன்னுடலை குறித்து தாழ்வுணர்ச்சி உள்ளவர்களே மற்றவர்களின் நிர்வாணத்தை இப்படி அணுகுவார்கள். இந்தக் காட்சியில் நடிக்க நான் முடிவெடுத்தேன் அல்லவா? அந்த முடிவுதான் எனக்குப் பெரிதாகப்படுகிறது. ஏனென்றால், என் உடல் குறித்து இன்னும் சுதந்திரமாக எண்ணுவதற்கான வெளியை அது திறந்திருக்கிறது. நாம் சில விஷயங்களைப் பார்ப்போம், படிப்போம், உடைகள் இல்லாத அந்த மனிதன்போல மாற நினைப்போம். ஆனால், அப்படி ஆவது என்பது நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதைப் பழக்கப்படுத்துவது. அந்த மாதிரியான முடிவுகள்தான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. இதுதான் என் பயணம். மற்றவர்கள் நினைப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியாது!" 

இந்தப் பதிலுக்காக மட்டுமல்ல, உங்கள் வேலையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் உங்கள் படங்களைப் பார்த்து அறிந்துகொள்கிறோம். `மாதவிடாயில் என்ன?’ என்று நீங்கள் பேசும்போதும், உங்களை எங்களுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. எங்கள் உடல் தாண்டி எங்களைச் சிந்திக்கத் தூண்டியதில் பெரும் பங்கு உங்களுக்கும் உண்டு. எங்கள் கனவுகளுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடும் தெம்பை உங்கள் வார்த்தைகளிலிருந்து நாங்கள் பெறுகிறோம். இன்று இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெரும் நடிகர்களுள் நீங்களும் ஒருவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராதிகா ஆப்தே.

இப்படிக்கு,

உங்கள் ரசிகை.