Published:Updated:

"'விஸ்வாசம்' படத்துக்காக ரெண்டு அஜித்தைச் சமாளிக்கிறது சவாலாதான் இருக்கு!" - இமான் பேட்டி #VikatanBreaks

உ. சுதர்சன் காந்தி.
"'விஸ்வாசம்' படத்துக்காக ரெண்டு அஜித்தைச் சமாளிக்கிறது சவாலாதான் இருக்கு!" - இமான் பேட்டி #VikatanBreaks
"'விஸ்வாசம்' படத்துக்காக ரெண்டு அஜித்தைச் சமாளிக்கிறது சவாலாதான் இருக்கு!" - இமான் பேட்டி #VikatanBreaks

கோலிவுட்டில் நூறு படங்களுக்கும் மேல் இசையமைத்து, வெற்றிகரமாக தன் இசைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார், இமான். `சீமராஜா' படத்தின் பாடல்கள், `விஸ்வாசம்' படத்தின் அப்டேட்ஸ் எனப் பலவற்றை நம்மிடையே பகிர்கிறார்.  

```சீமராஜா' படத்தின் பாடல்கள் உருவானது எப்படி?"

``ஒரே ஜானர், ஒரே சூழல்னு அடுத்தடுத்த படங்களில் எனக்கு எக்ஸாம் வெச்சுகிட்டே இருக்கார், இயக்குநர் பொன்ராம். `குத்துப் பாட்டுக்கு உள்ளே ஒரு மெல்லிசை இருக்கணும்'னு தெளிவா இருப்பார். அவருக்கு பி, சி சென்டர்களுடைய பல்ஸ் தெரியும். பாடல்கள், அவங்களுக்கு எளிமையாப் போய்ச் சேரணும்னு எதிர்பார்ப்பார். `வாரேன்... வாரேன்... சீமராஜா' பாட்டுடைய ட்யூன் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதைத்தான் முதலில் ஓகே பண்ணார். `மச்சக்கன்னி' பாட்டுக்கு சூஃபி மியூசிக்கைப் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். `கச்சேரி' படத்துல `கடவுளே... கடவுளே...' பாட்டுக்குப் பிறகு, இதுலதான் அந்த ட்யூனைப் பயன்படுத்திருக்கேன். அந்த இசைக்குத் தகுந்த மாதிரி சூப்பரா விஷுவலையும் வர வெச்சிட்டார், பொன்ராம்."

``இமான் - யுகபாரதி காம்போ..?"

``யுகபாரதி சார் மாதிரியான ஒரு ஆள்கூட வொர்க் பண்றதுக்கே நான் ரொம்ப பாக்கியம் பண்ணியிருக்கணும். மனுஷன், ட்யூன் சொன்ன பத்து நிமிஷத்துலேயே வரிகளைக் கொடுத்திருவார். வித்தியாசமான வரிகளை எழுதி, பாட்டை ஹிட்டடிக்க வைக்கணும்னு எப்பவுமே நினைக்கவேமாட்டார். அன்றாட நம்ம வாழ்க்கையில பயன்படுற வார்த்தைகள்தான், இவருடைய பாடல்கள்ல வரிகளா வரும். பெர்சனலாவும் அவர் இப்படித்தான். ரொம்பவே ஃப்ரெண்ட்லி. " 

``இசைத் துறையில சதமடிக்கப் போறீங்க. எப்படி இருக்கு இந்தப் பயணம்?" 

``இத்தனை வருஷமா நான் போடுற பாடல்களைக் கேட்டு, ஜீரணிச்சுகிட்டு இருக்கிற மக்களுக்குத்தான் நான் மொதல்ல நன்றி சொல்லணும். வெவ்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு நிறைய பேர்கூட நான் வொர்க் பண்ணிட்டேன். சினிமா பின்னணியே இல்லாம, இந்தத் துறைக்கு வந்து, இப்போ ஒரு நல்ல நிலைமையில இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாளுக்கு நாள் பொறுப்புஉணர்ச்சியும் அதிகமாகுது. நூறாவது படத்தைத் தொடர்ந்து, இருநூறு, முந்நூறுனு நான் ஓடலை. என்னைப் பொறுத்தவரைக்கும் இது நான் மியூசிக்ல பண்ற ட்ராவல். இது எனக்கும், என்னை நம்புறவங்களுக்கும் திருப்தியா இருக்கணும், அவ்வளவுதான்."

``உங்க துறையில ஃப்ரெண்ட்ஷிப் எப்படி இருக்கு?" 

``எல்லோருமே ரொம்ப நட்பாதான் இருக்கோம். படத்துடைய டீஸர், பாடல்கள்னு எது வெளி வந்தாலும் அதைப் பத்தி ஷேர் பண்ணுவோம். ஒரு மியூசிக் டைரக்டர், இன்னொரு மியூசிக் டைரக்டருடைய ஆல்பத்தை ரிலீஸ் பண்றோம். இதையே நான் ரொம்ப ஆரோக்கியமான சூழலாதான் பார்க்கிறேன். சராசரி ரசிகனா எல்லோருடைய படங்களையும் பார்ப்பேன். எல்லோருடைய இசையையும் கேட்பேன். `நம்ம ஒரு கிரியேட்டர்', அப்படிங்கிற எண்ணம் வந்துட்டா மட்டும்தான் ஈகோ பிரச்னை வரும். நாமளும், ரசிகர்ங்கிற மனப்பான்மையிலேயே இருந்துட்டா நல்லது. நானும் ஒரு ரசிகனா இருக்கவே விரும்புறேன்."

`` `விஸ்வாசம்' படத்துக்கான வேலைகள் எந்தளவுல இருக்கு?"

``ரெண்டு பாடல்கள் முடிச்சிருக்கோம். தல படத்துல பிஜிஎம் ரொம்ப முக்கியம். அதுக்கான வேலைகளும் மற்ற பாடல்களுக்குமான வேலைகளும் பரபரப்பா போயிட்டு இருக்கு. தல ரசிகர்களுக்காக ஒரு மாஸ் ஆல்பம் ரெடியாகிட்டே இருக்கு. அஜித் சார், படத்துல அவருடைய ஓப்பனிங் சாங்கைக் கேட்டுட்டு என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட் வர சொல்லியிருந்தார். என்னைப் பார்த்தவர், எதுவும் பேசாம கட்டிப்பிடிச்சுக்கிட்டார். மொத்த யூனிட்டுமே ரொம்ப ஹேப்பி. பொதுவா, நம்முடைய பாட்டை எப்படி யூஸ் பண்றாங்கனு தெரிஞ்சுக்க, முதன்முறையா நான் ஷூட்டிங் ஸ்பாட் போய்ப் பார்த்த படம், `தமிழன்'. அதுக்குப் பிறகு, நான் ஷூட்டிங் ஸ்பாட்போய்ப் பார்த்த படம்னா, `விஸ்வாசம்'தான். என்னுடைய இசையில அஜித் சார் டான்ஸ் ஆடுறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு."

``ரெண்டு அஜித்தை எப்படிச் சமாளிச்சீங்க?"

``இதுவரைக்கும் சிட்டி, கிராமம்னு தனித் தனியாதான் இசையமைச்சிருக்கேன். இந்தப் படத்துல ரெண்டும் கலந்துகட்டி இருக்கும். அது ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்தாலே தெரிஞ்சிருக்கும். அதுக்குத் தகுந்த இசையமைக்கிறது எனக்கு ரொம்பவே சவாலா இருந்தது. இந்த சவால்களுக்கு நடுவுல பிஜிஎம் வேற இருக்கு. அதுவும் இரட்டை தல! இதையெல்லாம் மனசுல வெச்சுதான் பிஜிஎம்ல வொர்க் பண்ணியிருக்கேன். இதற்கான வேலைகளும் கொஞ்சம் சவாலாதான் இருக்கு. அஜித் சார் ரசிகர்களோட சேர்த்து நானும் வர்ற பொங்கலுக்காக வெயிட்டிங்!"

``உங்க ஸ்லிம் சீக்ரெட் என்ன?"

``மொதல்ல நான் 117 கிலோ இருந்தேன். இப்போ 72 கிலோவுக்கு வந்துட்டேன். ரொம்ப நாளாவே உடம்பை கம்மி பண்ணணும்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். நான் ஸ்டுடியோவே கதினு இருக்கதால, நடக்கிறதுக்கே வாய்ப்பில்லாமப் போயிடுச்சு. அதுபோக, சரியான சாப்பாடும், தூக்கமும் இல்லை. சிலபல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு இப்போ இன்னொருத்தருக்கு, டயட் டிப்ஸ் சொல்ற அளவுக்கு முன்னேயிருக்கேன்னா பார்த்துக்கங்க."

``சீரியல்ல இருந்து இப்போ சினிமாவுல பயணிச்சிட்டு இருக்கீங்க. வெப் சீரிஸ் மாதிரியான விஷயங்களை எப்படிப் பார்க்குறீங்க?" 

``இப்போலாம் டிவி பார்க்கிறதே குறைஞ்சிட்டு வருது. ஒரு படம் பார்க்கணும்னா, ஒண்ணு தியேட்டர்ல இல்லேன்னா மொபைல்லனு ஆகிடுச்சு. டிவியை பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட நேரத்துலதான் அதைப் பார்க்க முடியும். ஆனா, மொபைல்ல அப்படியில்லை. எப்போ வேணாலும், எங்க வேணாலும் பார்த்துக்கலாம். நெட்ஃபிளிக்ஸ், ஐமேக்ஸ்னு தொழில்நுட்பங்கள் நிறைய வளர்ந்துட்டு வருது. மக்களை தியேட்டர் பக்கம் இழுத்துட்டு வர்றதுக்கு, இயக்குநர்கள் இனிமேல் நிறைய உழைக்கணும்னுதான் நினைக்கிறேன்."

``எந்த ஜானர் படத்துக்கு மியூசிக் பண்றது சவாலா இருக்குனு நினைக்கிறீங்க?" 

``கண்டிப்பா லவ் பாடல்களுக்குத்தான். ஒன்சைட் லவ், டபுள் சைட், லவ் ஃபெயிலியர்னு லவ்ல நிறைய வெரைட்டி இருக்கு. அதுக்குத் தகுந்த இசையை கிரியேட் பண்றதுதான் சவாலான காரியம். ரொமான்டிக் பாடல்கள்ல, வரிகளோடு சேர்த்து இசையும் நிறைய பேசணும். அதைப் பார்க்கிறவங்களோட கனெக்ட் பண்ணணும். கலை இயக்குநர்களுக்கு வரலாற்று படங்கள், ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு ஆக்‌ஷன் படங்கள் மாதிரி இசையமைப்பாளர்களுக்குக் காதல் படங்கள்தான் சரியான தீனி" என்று நம்பிக்கையோடு முடித்தார்  இசையமைப்பாளர் இமான்.