Published:Updated:

ஆயிரம் காதல் காவியங்கள் இருக்கலாம்... ஆனால், `தேவ் டி’ ஏன் ஸ்பெஷல்? #HBDAnuragKashyap

பாரோக்கள் தேவ்தாஸை உருகி உருகிக் காதலித்ததெல்லாம் காவியத்தில் வேண்டுமானால் இருக்கலாம். இன்றைய பாரோக்கள் காதலிக்க மட்டுமல்ல... தப்பு செய்தால் `தேவ் தாஸை' தண்டிக்கவும் செய்வார்கள் என்பதை சமகாலக் காவியமாக்கி தந்திருந்தார் அனுராக் காஷ்யப்.

ஆயிரம் காதல் காவியங்கள் இருக்கலாம்... ஆனால், `தேவ் டி’ ஏன் ஸ்பெஷல்? #HBDAnuragKashyap
ஆயிரம் காதல் காவியங்கள் இருக்கலாம்... ஆனால், `தேவ் டி’ ஏன் ஸ்பெஷல்? #HBDAnuragKashyap

பிப்ரவரி 9,  2009 என்று நினைக்கிறேன். `தேவ் டி' படம் ரிலீஸாகி சென்னை சத்யம் திரையரங்கின் ஸ்டூடியோ 5-ன் காலைக் காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது. எங்கோ, எதிலோ பாலிவுட் படம் `தேவ் டி’ பற்றிய பாஸிட்டிவான ஒரு வரியைக் கேள்விப்பட்டதோடு சரி. நண்பர் ஒருவர் அருமையாக இருக்கிறதெனச் சொன்னதாக ஞாபகம். அதனால் தியேட்டருக்குள் வந்திருந்தேன். அதற்கு முன் அனுராக் காஷ்யப் பற்றி எனக்குத் தெரியாது. வழக்கமான ரொமான்ஸ் படமென்றே அப்போது நினைத்தேன். 

பாலிவுட்டில் ரொமான்ஸ் படமென்றாலே எனக்கு 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே'வும், 'ஹம் ஆப் கே ஹேய்ன் கோனும்'தான். 20 பாட்டாவது இருக்கும். மூன்று மணிநேரமாவது ஏதோ ஒரு `கான்’ உருகி உருகி ஒருதலையாகவோ இருதலையாகவோ காதலித்துவிட்டு, குடும்பத்துக்காகக் காதலைத் தியாகம் செய்திருப்பார். நாயகிக்காக நம்ம ஊர் `பூவே உனக்காக' விஜய்யையே தூக்கிச் சாப்பிட்டிருப்பார்கள். நாயகியின் முதலிரவுக்குப் படுக்கையை மலரால் அலங்கரிக்கும் அளவுக்கு இறங்கி வேலை செய்திருப்பார்கள். க்ளைமாக்ஸில் மூகூர்த்த நேரத்தில் ஒரு பாடலோடு ஒன்று சேர்ந்து கண்ணில் அருவியைப் பெருக்கெடுக்க வைத்திருப்பார்கள். 

அன்று நான் சோலோவாகத் தியேட்டருக்குள் படம் பார்க்க ஆரம்பித்தபோது அதே மனநிலையில்தான் இருந்தேன். அதை உறுதி செய்வதுபோல படத்தின் தொடக்கத்தில் பஞ்சாப்பின் கடுகு வயலை நான் `தேவ் டி'யிலும் பார்த்தேன். இதற்கு முன் `தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே'வில் கறுப்பு ஜெர்க்கினோடும் தொப்பியோடும் ஷாரூக் கான் நம் கஜோலைப் பார்த்து உருகி உருகிப் பாடிய 'துஜே தேகா தோ யே ஜானா சனம்' டூயட்டெல்லாம் இதே கடுகு வயலில்தான் என மனக்கண்ணில் வந்துபோனது.

நேரம் செல்லச் செல்ல மொழிப்பிரச்னையைக் கடந்து கதை சொல்லலில், நடிகர்களின் உடல்மொழியில் எனக்குக் கதை விளங்க ஆரம்பித்தது. ஆனால், என்ன இது..? திரையில் நாயகன் தேவ், நாயகி பாரோவைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறான். ஆச்சர்யமானேன். ஒரு கரும்பு வயலுக்குள் உயிருக்கு உயிராகக் காதலிக்கும் பாரோவோடு நெருக்கமாக இருக்கும்போது, யாரோ சொன்ன பொய்யைக் கேட்டு அவள் நடத்தையில் சந்தேகப்பட்டு அதை அவளிடமே பச்சையாகக் கேட்டும்விடுகிறான். அதிர்ச்சியானது பாரோ மட்டுமல்ல நானும்!  

கேட்டது வேறொரு நபராக இருந்தால் கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்தே இருப்பாள் பாரோ. ஆனால், தன் காதலன் மேல் இருக்கும் அதீத அன்பில் அவனை மன்னித்தும், தான் அப்படிப்பட்டவள் இல்லையென்றும் கெஞ்சுகிறாள். அப்படிக் கேட்டுவிட்டு அதைப் பற்றிய வருத்தம் துளியுமின்றி ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அவன், அவளை மனரீதியாகக் காயப்படுத்துகிறான். கடைசியில் அவள் தன் பெற்றோர் பார்க்கும் பையனைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்க... மணநாளில் அவள் நல்லவள் என்ற உண்மை தேவுக்குத் தெரிய வருகிறது.

ஆனால், அவனது ஈகோ அவளிடம் மன்னிப்பு கேட்க இடம் கொடுக்கவில்லை. அன்றைய தினம் அதிகமாகக் குடிக்கிறான். அவளாவது வேறொருவருடன் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என முடிவெடுக்கிறான். அதே குடிபோதையில் அவளது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் போய் மயங்கி விழுகிறான். 

அதன் பிறகு self destructive-வாக மாறுகிறான். காதல் தோல்வியில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கும் போதை மருந்து பழக்கத்துக்கும் ஆளாக்கிக்கொள்கிறான். தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட பந்து எப்படி வேகமாக மேலெழுமோ, அதேபோல பாரோ மேல் காதல் பிரவாகமாக ஊற்றெடுத்து வழிகிறது. தன்னிலை மறந்து சந்தா என்ற பாலியல் தொழிலாளியிடம் போகிறான். ஆனாலும், அங்கும் பாரோ ஞாபகமே வருகிறது. ஒருநாள் இரவில் போதையின் உச்சத்தில் பாரோவின் கணவருக்குப் போன் செய்கிறான். நல்லவேளை சந்தோஷமான மணவாழ்க்கையில் இருக்கும் பாரோவுக்கு குழப்பம் எதுவும் நிகழவில்லை.

மறுநாள் தேவ் தங்கியிருக்கும் மட்டமான விடுதிக்கே வருகிறாள். அவனை மோசமான நிலையில் கண்டவள் மனம் வேதனைப்படுகிறாள். அவளுக்குள் இருக்கும் அன்பின் வெளிப்பாடாக, அவனுக்குப் பணிவிடை செய்கிறாள். அந்த அறையை ஒழுங்குபடுத்துகிறாள். ஆனால், அவன் உடல்ரீதியாக அவளுடன் இணைய ஆசைப்பட்டு அவளிடம் மோசமாக நடந்துகொள்கிறான். அதைத் தடுத்து அங்கிருந்து கிளம்பிவிடுகிறாள். அதன் பிறகு அவனைப் பற்றிய நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு மணவாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறாள். ஆனால், தேவ் மெள்ள மெள்ள காதல் தோல்வியில் அதலபாதாளத்தில் வீழ்கிறான். ஒருகட்டத்தில், அதிலிருந்து மீளச் சந்தாவின் உதவியையே நாடுகிறான். கடைசியில் சந்தாவின் அன்பால் முழுவதும் மீண்டு தன் வாழ்க்கையைப் புதிதாய் வாழ ஆரம்பிக்கிறான்.  

இவ்வளவுதான் படம். ஆனால், படம் பார்த்த உணர்வை விதைக்கவில்லை. மூன்று பேரின் வாழ்க்கையை தத்ரூபமாக நேரில் பார்த்து வந்த உணர்வைத் திரைமொழி எனக்குக் கடத்தியிருந்தது. படம் முடிந்தும் அதன் தாக்கம் குறையவில்லை. தேவும் பாரோவும், சந்தாவும் என்னுள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னிடம் இருக்கும் தேவ் என்பவனை ஏதோ ஒரு காலகட்டத்திலாவது வெளிப்படுத்தியிருப்பான்.

பாரோக்கள் தேவ்தாஸை உருகி உருகிக் காதலித்ததெல்லாம் காவியத்தில் வேண்டுமானால் இருக்கலாம். இன்றைய பாரோக்கள் காதலிக்க மட்டுமல்ல... தப்பு செய்தால் `தேவ் தாஸை' தண்டிக்கவும் செய்வார்கள் என்பதை சமகாலக் காவியமாக்கி தந்திருந்தார் அனுராக் காஷ்யப். 'தேவ் டி' என்ற டைட்டில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை இந்தப் படம் காதலை 2.0 பார்வையில் உள்ளது உள்ளபடி காட்டியது. சந்தாவின் காதலில் ஆன்மா இருந்ததை உணர தேவுக்குச் சிறிது காலம் பிடித்தது போலவே எனக்கும் பிடித்தது!  

வீட்டுக்கு வந்தும் அதன் தாக்கம் குறையவில்லை. அன்று மாலை வரை படத்தைப் பற்றி யோசித்துவிட்டு, சத்யம் தியேட்டருக்குப் போய் மறுநாள் அதே காலைக் காட்சிக்கு டிக்கெட் வாங்கினேன். (அப்போதெல்லாம் இணைய முன்பதிவு இந்த அளவுக்கு இல்லை) மறுநாள் அதேபோல பஞ்சாப்பின் கடுகு வயலுக்குள் தொலைந்துபோனேன். ரொமான்ஸ் படமென்றால் இப்போதெல்லாம் கான்கள் நினைவுக்கு வருவதில்லை. அனுராக் காஷ்யப்பின் 'தேவ் டி' மட்டுமே வருகிறது. ரொமான்டிசைஸ் பண்ண விரும்பாலும் இருக்க முடியவில்லை. ஒரு சினிமா மொழியையும் தாண்டி உங்களை உருக வைக்கிறது, உணர்வுகளை அசைத்துப் பார்க்கிறதென்றால் அதன் பின்னால் இருக்கும் எழுத்தும், சினிமா ஆளுமையும் என்னை இப்போதும் வியக்க வைக்கிறது. அதன் பிறகு எத்தனையோ மொழிகளில் காதல் காவியங்களை நான் பார்த்திருந்தாலும் அனுராக் காஷ்யப்பின் `தேவ் டி' தான் மனக்கண்ணில் முதலில் வந்துபோகிறது தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட அதே பந்தின் வேகத்தைப்போல!

`தேவ் டி' தந்த பெருங்காதலன் அனுராக்குக்கு இன்று பிறந்தநாள். வாழ்த்தி மகிழ்வோம்.    

பின்குறிப்பு: 

சினிமாவைக் கனவாகக் கொண்ட இன்றைய இந்திய இளைஞர்களின் ஆதர்ச இயக்குநர். இவரது திரைப்படங்களின் கதைகளில்கூட உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், சினிமாவாக அவர் படங்களில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கதை, கலை வடிவம் கொண்ட விதத்திலும், அதற்கு அவர் மெனக்கெடும் விதத்திலும் அவரை இந்திய சினிமா ரசிகன் தவிர்க்கவே முடியாது. இதுவே அனுராக்கின் பலம். வாழ்க அனுராக். வளர்க அவர்தம் கலை!