Published:Updated:

``எல்லாம் ஷெரி... பட்ஷே, தமிழனை இப்படிக் காட்டியிருக்க வேண்டாம் ஷாரே!" - `தீவண்டி' படம் எப்படி?

``எல்லாம் ஷெரி... பட்ஷே, தமிழனை இப்படிக் காட்டியிருக்க வேண்டாம் ஷாரே!" - `தீவண்டி' படம் எப்படி?

மலையாளத்தில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் டொவினோ தாமஸின் `தீவண்டி' படத்தின் விமர்சனம்.

``எல்லாம் ஷெரி... பட்ஷே, தமிழனை இப்படிக் காட்டியிருக்க வேண்டாம் ஷாரே!" - `தீவண்டி' படம் எப்படி?

மலையாளத்தில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் டொவினோ தாமஸின் `தீவண்டி' படத்தின் விமர்சனம்.

Published:Updated:
``எல்லாம் ஷெரி... பட்ஷே, தமிழனை இப்படிக் காட்டியிருக்க வேண்டாம் ஷாரே!" - `தீவண்டி' படம் எப்படி?

``ஆறாம் விரல் அதிர்ஷ்டம்னு சொல்வாங்க, எனக்கு அந்த ஆறாம் விரலே சிகரெட்தான்" என்று கூறும் அளவுக்கு சிகரெட்டை சுவாசமாகக்கொண்ட ஒருவனின் வாழ்க்கையில் `அடிமையாகுதல்' என்பது எவ்வளவு கொடுமையானது, அதிலிருந்து மீண்டு வருவது அதைவிடக் கொடுமையானது என்பதை விளக்கும் படம்தான் `தீவண்டி'. 

ஒருவன், தான் பிறந்தவுடன் சுவாசிக்கும் முதல் காற்றே சிகரெட் புகைதான். இப்படிப் புகையிலிருந்து தொடங்குகிறது தீவண்டியின் கதை. ஆம், பினிஷ் தாமோதரன் (டொவினோ தாமஸ்) பிறக்கும்போதே இறந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த அவனது மாமா புகையை பினிஷ் மீது ஊதுகிறார். முதன்முறையாக அக்காற்றை சுவாசித்த அவன், அதிசயமாக கண்விழிக்கிறான். அவன் வளர்வதோடு, சிகரெட் மீதான ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இளமைக் காலத்தில் முதன்முறையாக தன்னுடைய நண்பர்களுடன் சிகரெட் பிடிக்கத் தொடங்கும்போது இருமலாலும் நெஞ்செரிச்சலாலும் மற்றவர்கள் அவதிப்பட, எந்தவித இடையூறுமின்றி எளிமையாகப் புகைபிடிக்கிறான், பினிஷ். நாளடைவில் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, சிகரெட் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிறான். அந்த சிகரெட் இவனைத் திருடனாக்குகிறது; கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்கிறது; தன் காதலை இழக்கச் செய்கிறது; ஊரில் `தீவண்டி' என்ற பட்டப்பெயரையும் பெற்றுத் தருகிறது. மலையாளத்தில் `தீவண்டி' என்றால் புகை வண்டி என்று அர்த்தமாம். அப்படித் தொடர்வண்டியில், தொடர்கிறது கதை!  

பினிஷின் காதலியாக நடித்திருக்கும் தேவி (சம்யுக்தா மேனன்), சினிமாவுக்குப் புதுவரவு. பொதுவாக சிகரெட்டுக்கு அடிமையான ஒருவனின் காதலி, அவனது செயல்களுக்கு எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார்கள் என்பதை இவர் நடிப்பில் காணலாம். சண்டை போடும்போது என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை, இவர் வசனங்களில் கேட்கலாம். அளவாகப் பேசியிருக்கிறார்; அதிகமாக நடித்திருக்கிறார். வார்ம் வெல்கம், சம்யுக்தா. `புகைபிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும்' என்ற வாசகத்தை பொதுவாக படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவோ, இயக்குநரோ சொல்வார். ஆனால், இங்கு முதல் பாதி வரை இந்த வாசகம் கூடவே தொக்கி வருகிறது. அப்படிச் சரமாரியாக சிகரெட்டை ஊதித் தள்ளும் டொவினோ, தீவண்டிக்கு செட்டாகியிருக்கும் பக்காவான எரிபொருள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம் இவ்வளவு யதார்த்தமாக நகர்வதற்கு, வினி விஷ்வ லாலின் கதை ஒரு முக்கியக் காரணம். புளிநாடு என்றொரு ஊர், அங்கு வசிக்கும், மக்கள் அவர்கள் பேசும் பாஷை, அங்கு நடக்கும் அரசியல் சண்டைகள், சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றை எந்தவித தயக்கமுமின்றி தெளிவாகக் கூறியிருக்கிறார். இதில் வருத்தம் என்னவென்றால், ஒரு காட்சியில் பிச்சைகேட்டு வீடு தேடி வருகிற ஒருவனை தமிழனாகக் காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் அத்தனையும் மலையாளத்தில் இருக்க, இவரை மட்டும் தமிழனாக கட்டியிருப்பதற்கான காரணம் என்னவென்பது இயக்குநருக்கே வெளிச்சம். இதைத் தமிழர்கள் மீது திணிக்கப்படும் `ஸ்டீரியோடைப்பிங்' என்று வைத்துக்கொள்ளலாமா. இயக்குநர் ஃபெலினிக்கு இது முதல் படம். பட்ஷே, இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை ஷாரே. 

சிகரெட் இல்லாதபோது ஏற்படும் பித்து நிலையையும், கிடைத்த பிறகு வரும் முக்தி நிலையையும் உளவியல் ரீதியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, ஒருவன் தான் நேசிக்கும் பொருள் உடன் இல்லாதபோது, ஒருவித மன அழுத்தத்துக்குத் தள்ளப்படுவான். அதில் 'ஹாலுசினேஷன்' என்பது சற்று கொடூரமான ஒரு நிலை. தன் கண் முன் சிகரெட் எரிந்துகொண்டே மிதப்பதும், அதை, அவன் பிடிக்க முயல்வதுமான கற்பனைக்காட்சி, சிகரெட்டைவிட வேறு எந்தவொரு பொருளுக்கும் இவ்வளவு கொடூரமாக அடிமையாக முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது. 

படத்தின் பாடல்கள் ஆல்ரெடி ஹிட். ஆனால், பின்னணி இசைக்கு மிகக்குறைந்த அளவே இடமளிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் படத்தின் பல இடங்களில் அப்படியொரு மயான அமைதி நிலவுகிறது. அதே சமயத்தில் 16 பேக்கெட் சிகரெட்டை ஒரே நேரத்தில் புகைத்து கின்னஸ் ரெகார்ட்டுக்கு பினிஷ் முயலும் காட்சியிலும், ப்ளூ வேல் கேம் டாஸ்கின்படி, கார் டிரைவர் கொலை செய்ய முற்படும் காட்சியிலும், அளவுக்கதிகமாக கூச்சலிரைக்கும் இசையைக் கொடுத்திருக்கிறார், கைலாஷ் மேனன். 

இரண்டாம் பாதியில், காற்றைவிட அதிகம் சுவாசித்துக் கொண்டிருந்த சிகரெட்டை விடுவதென்பது மூச்சைவிடுவதற்கு சமம் என்று வாழ்ந்துகொண்டிருப்பவனுக்கு பேரதிர்ச்சியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அக்கட்டத்தில் சிகரெட்டை நிறுத்தியாக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதாவது, இத்தனை ஆண்டு காலமாக சிகரெட்டுக்கு அடிமையாகியிருந்த ஒருவன், ஐந்து நாள்களில் திருந்துகிறான். மறுபடி அவனுக்கு சிகரெட் அடிப்பதைத் தூண்டியும், அவன் அதை முற்றிலும் மறுக்கிறான். மிகக் குறைந்த கால இடைவெளியில், இப்படியான ஒரு மாற்றம் படத்தில் மட்டும்தான் சாத்தியம் இயக்குநரே. புகை, மது போன்றவற்றைக் கொண்டாடும், ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நியூ ஜென் படங்களிலிருந்து `தீவண்டி' சற்று வித்தியாசமானது.

சகஜமாக சிகரெட் புகைக்கும் அப்பா, டீச்சர், நண்பர்கள் எனத் தீவண்டிகள் சூழ் உலகின் மோசமான பின்புலத்தையும், அவர்களுக்குக் கிடைக்கும் குறைவான சமூக அந்தஸ்தையும் அழுத்தமாகக் காட்டியிருக்கும் இப்படம், சிகரெட் காதலர்கள் தவறவிடக் கூடாத ஒன்று!