Published:Updated:

"'என்ன பொண்ணுடா இது’னு வியந்திருக்கேன்!’" - சூர்யா - ஜோதிகா காதல் தருணங்கள் #FlashBack

"'என்ன பொண்ணுடா இது’னு வியந்திருக்கேன்!’" - சூர்யா - ஜோதிகா காதல் தருணங்கள் #FlashBack
"'என்ன பொண்ணுடா இது’னு வியந்திருக்கேன்!’" - சூர்யா - ஜோதிகா காதல் தருணங்கள் #FlashBack

ஒரு பட விழாவில், "சூர்யா என் நண்பராக இருந்ததால்தான் நல்ல காதலராக, கணவராக இருக்க முடிகிறது. கோடி நன்றி சூர்யா!'' என்று ஜோ கண்கலங்க, சூர்யா ஓடிவந்து பக்கத்தில் ஆறுதலாக தோளை அணைத்து ஆசுவாசப்படுத்தியது பொன்னான தருணம். 

செப்டம்பர் 11, 2006... தமிழ்சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்த காதல் ஜோடி சூர்யா- ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்த நாள். `சூர்யா' என்ற மூன்றெழுத்தும் `ஜோதிகா' என்ற மூன்றெழுத்தும் இணைந்து சக்சஸ்ஃபுல் தம்பதிகளாக திகழ்வதற்குக் காரணம் மூன்றெழுத்து மந்திரமே... ஆம். `அன்பு' எனும் மூன்றெழுத்து மந்திரம் அது! 

1999-ம் ஆண்டு... சூர்யா அப்போது சரவணன். விபத்துபோல நடிக்கவந்து சூர்யாவாகத் தத்தளித்துக்கொண்டிருந்த சமயம். `அழகாயிருக்கிறார்... ஆனால், நடிப்போ, நடனமோ சரியாக வரவில்லை..! காணாமல் போய்விடுவார்’ என மீடியாக்கள் ஆரூடம் எழுதிக் கொண்டிருந்தன. 5-வது படமாக வந்ததுதான் `பூவெல்லாம் கேட்டுப் பார்’. இந்தப் படத்தில்தான் இந்த ஜோடி முதன்முதலாக கைகோத்தது. ஜோதிகா இந்தப் படத்துக்கு முன் இந்தியில் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் நம்பி சென்னையில் தங்கியிருந்தார்.

அது ஒரு டிசம்பர் மாதம். சென்னைத் திரைப்பட நகரில் `டெஸ்ட் ஷூட்' எனப்படும் பரிசோதனைக் காட்சிகளை இயக்குநர் வஸந்த் இயக்கியிருக்கிறார். சூர்யாவிடம், ``சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க. ஏன்னா இது ரொமான்டிக் மூவி!’’ என அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். ஜோவின் முதல் பார்வையிலும் புன்னகையிலும் சூர்யா வசீகரிக்கப்பட்டிருக்கிறார். `மணிரத்னம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமான ஆள்’ என்ற தயக்கம் ஜோவுக்கு. `பாலிவுட்ல இருந்து வந்த பொண்ணு’ என்ற பிரமிப்பு சூர்யாவுக்கு. முதல் டெஸ்ட் ஷூட்டில் சூர்யா தயங்கி நிற்க `நாம இப்போ ஃப்ரெண்ட்ஸ்!’ எனக் கைகுலுக்கி ஜோவியலாகப் பேசியிருக்கிறார் ஜோ. 

``பெண்களிடம் கூச்சமும் தயக்கமுமாக அவர் பேசியதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக இருக்கிறது. நான் ஆணோ, பெண்ணோ கண்களைப் பார்த்துப் பேசுபவள். அவர் பெண்கள் இருக்கும் பக்கமே திரும்பியும் பார்க்காத சின்ஸியர் பையன். இது போதாதா... நானாக வலியச் சென்று பேசுவேன். அக்கறையோடு நலம் விசாரிப்பார். நல்ல நண்பர்களாக சில நாள்களில் மாறினோம்'' என்கிறார் ஜோதிகா.

``ஷூட்டிங் ஸ்பாட்ல காதல் தவிப்புக்கும், கோபத்துக்கும் ஒரேவிதமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்குற அளவுக்குத்தான் அப்போ என் சினிமா அறிவு இருந்தது. ஆனா, ஜோ கண்களாலேயே நடிக்கிற ஆளு. `என்ன பொண்ணுடா இது!’னு நடிப்பைப் பார்த்து வியந்திருக்கேன். வியந்திருக்கேன்னு சொல்றதைவிட வியர்த்திருக்கேன்னும் சொல்லலாம். ஆனா, ஜோ என்னை செமையாப் பாராட்டுவாங்க. அப்பல்லாம் `கான்ஃபிடன்ஸ் லெவல்' அவ்ளோ ஏறும். அதுக்குப் பிறகு ஒருவரோட வளர்ச்சியில இன்னொருவர் அக்கறை எடுத்துக்க ஆரம்பிச்சோம்.

சினிமா சம்பந்தமாப் பேசுவோம். எங்களைப் பத்தி வந்த கிசுகிசுக்களைப் பேசி காமெடி பண்ணிக்குவோம். நடுவுல ஜிவ்வுனு `தெனாலி' மாதிரி பெரிய படங்கள்லாம் பண்ண ஆரம்பிச்சாங்க. எனக்கு சந்தோஷமாவும் கொஞ்சம் கூச்சமாவும் இருக்கும். ஆனா, ஜோ என்னைப் பார்த்து `சீக்கிரமே நீங்க பெரிய ஸ்டாரா ஆயிடுவீங்க!' எனச் சொல்லிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்துல நான் பிஸியா ஆனதும் அவங்க கல்யாணத்துக்கு ரெடியாகி, அப்படியே எனக்காகவும் பசங்களுக்காகவும் நடிப்பைவிட்டு ஒதுங்கிட்டாங்க. பசங்க வளர்ந்தபிறகு `நடிக்கிறியாமா?'னு கேட்டதும் 'நடிக்கலாமே'னு உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. இப்ப அவங்களுக்குனு சில நல்ல கதைகள் வந்துட்டு இருக்கு. ஜோதிகா கரியர் மேல எனக்குப் பொறுப்பு நிறைய இருக்கு!'' என்று சொல்லும் சூர்யா, சக்சஸ்ஃபுல் மணவாழ்க்கைக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறார்...

"செப்டம்பர் 11, 2006 கல்யாணம் ஆன நாள்ல இருந்து இன்றுவரை நாங்க நார்மலான தம்பதியா சந்தோஷமாதான் இருக்கோம். கல்யாணம் ஆனதும் நாங்க பேசின முதல் விஷயம் ‘எங்களுக்குள்ள எப்போதாவது `மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்' வந்தா பேசாமல் இருக்கணும். வார்த்தையால ஒருத்தருக்கொருத்தர் காயப்படுத்திக்கக் கூடாதுங்கிறதுதான். அப்படி ஒரு சின்னச் சண்டையில 15 நாள்கள்வரை பேசாமல் இருந்திருக்கோம். ஆனால், ரெண்டு பேருமே அந்தக் காலகட்டத்துல ரொம்ப மிஸ் பண்ணினோம். பதறிட்டுத் திரும்பப் பேச ஆரம்பிச்சுட்டோம். அதுக்குப் பிறகு இப்பவரை சண்டைகளே வந்ததில்லை. இந்த ஃபார்முலா எல்லோருக்கும் பொருந்தும். அப்ளை பண்ணிப்பாருங்க!''  

"சூர்யா அதிகம் பேசமாட்டார். ஆனால், சத்தமே இல்லாமல் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். திடீர்னு ஷூட்டிங் கேன்சல் ஆச்சுன்னா வீட்டுக்குப் பக்கத்துல வந்துட்டு கார் இன்ஜினை ஆஃப் பண்ணிட்டு போன் பண்ணுவார். `இன்னிக்கு வீட்டுக்கு வரமுடியாது ஜோ! பசங்களைப் பார்த்துக்க. மிஸ் யூ!'னு சொல்லிட்டு கட் பண்ணிடுவார். போர்டிகோவுக்கு வந்தா பொக்கேவும் நிறைய சாக்லேட்ஸுமாய் நிப்பார். அப்புறம் லவ் லெட்டர்லாம் எழுதி என் கண்பார்வையில படுற மாதிரி வெச்சுட்டு கிளம்பிடுவார். நான் அவரை மிஸ் பண்ற நேரத்துல எதேச்சையா என் கண்ணுல அது பட்டுரும். அந்த லவ் லெட்டரை வாசிக்குறப்போ கிடைக்குற ஃபீலை வார்த்தையால வர்ணிக்க முடியாது. ரொம்ப ரொம்ப லவ்வபிள் பாய் சூர்யா!'' என்கிறார் ஜோ.

இந்தத் தம்பதிக்கு 2007-ல் தியா 2010-ல் தேவ் என்ற இரண்டு சுட்டிகள் பிறந்தன. சூர்யா பிஸியான நடிகராக வலம்வந்துகொண்டிருந்தாலும் ஜோவின் கணவராக கதை கேட்பது, நல்ல படங்களைப் பரிந்துரைப்பது, `2 டி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்வதோடு பொறுப்பான தந்தையாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது என ஜோவின் இடத்தை இட்டு நிரப்பி அசத்துகிறார் சூர்யா. 

ஒரு பட விழாவில், ``சூர்யா என் நண்பராக இருந்ததால்தான் நல்ல காதலராக, கணவராக இருக்க முடிகிறது. கோடி நன்றி சூர்யா!'' என்று ஜோ கண்கலங்க, சூர்யா ஓடிவந்து பக்கத்தில் ஆறுதலாக தோளை அணைத்து ஆசுவாசப்படுத்தியது பொன்னான தருணம். 

வாழ்க்கையை நீ...ண்...ட தேனிலவாய் கொண்டாடும் இந்தத் தம்பதியரை வாழ்த்துவோம்! 

அடுத்த கட்டுரைக்கு