Published:Updated:

``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..!" - டி.பி.கஜேந்திரன் `அப்போ இப்போ' பகுதி 20

``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..!" - டி.பி.கஜேந்திரன் `அப்போ இப்போ' பகுதி 20
``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..!" - டி.பி.கஜேந்திரன் `அப்போ இப்போ' பகுதி 20

`அப்போ இப்போ' தொடரின் 20-வது பகுதி. இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரன் தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யக்குநராகவும் நடிகராகவும் நமக்கு நன்கு பரிட்சயமானவர், டி.பி.கஜேந்திரன். தற்போது இயக்கம், நடிப்பு என இரண்டையும் குறைத்துக்கொண்டு சாலிகிராமத்தில் லாட்ஜ் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அவரை சந்தித்துப் பேசினோம்.

``இப்போ லாட்ஜா இருக்கிற இந்த இடத்துலதான், எங்க அப்பா சின்னச் சின்னதா ரூம் கட்டி வாடகைக்கு விட்டுக்கிட்டு இருந்தார். அப்போ பாரதிராஜாவுல இருந்து பட வாய்ப்பு தேடுற பல ஆள்கள் இங்கு தங்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லோரும் மாதம் பிறந்துட்டா வாடகை கொடுக்க முடியாம கஷ்டப்படுறதை என் கண்ணால பார்த்திருக்கேன். அதனாலேயே எனக்கு சினிமாத்துறை மேல பெருசா ஈர்ப்பு வந்ததில்லை. படிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக, படிப்புல நான் கில்லினு நினைச்சுக்காதீங்க; அதுவும் ரொம்ப சுமார்தான். பியூசியே ரெண்டு வருடம் படிச்சேன்னா, பார்த்துக்கோங்க!. முதல் முறை பியூசியை பாதியிலேயே நிறுத்திட்டு இரண்டாவது முறையாக விவேகானந்தா காலேஜ்ல பியூசி படிக்கும்போது, ஸ்டாலின் என்னோட கிளாஸ்மேட். எப்படியோ பியூசி முடிச்சுட்டு பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கப் போனேன். அங்கே போனா, ஸ்டாலினும் அதே வகுப்புல இருக்கார். மறுபடியும் மூன்று வருடங்கள் ஸ்டாலின்கூட பழகுற வாய்ப்பு கிடைச்சது. ஒரு வழியா காலேஜ் படிப்பையும் முடிச்சுட்டு, எந்த வேலைக்குப் போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ, எங்க ரூம்ல தங்கியிருந்த சில உதவி இயக்குநர்களோடு ஷூட்டிங்கிற்குப் போனேன். ஷூட்டிங் எனக்குப் பிடிச்சிருந்ததுனால, தொடர்ந்து போக ஆரம்பிச்சேன். அங்கே ஏற்பட்ட பழக்கம்தான் என்னை இயக்குநர் பாலசந்தர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்க்க வெச்சுச்சு. அவர்கிட்ட வேலை பார்த்தப்போ, இயக்குநர் விசு பழக்கமானார். 

பாலசந்தர்கிட்ட இருந்த விசு, தனியா படம் பண்ண ஆரம்பிச்சதும் என்னையும் அவரோட அழைச்சுக்கிட்டார். விசுகூட பல படங்களில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அவரோட `சம்சாரம் அது மின்சாரம்’ படம் ரிலீஸான சமயத்தில், ராம.நாராயணன் சார் என்கிட்ட, `விசுவோட கால்ஷீட் வாங்கிட்டு வந்தா உனக்கு இயக்குநர் சான்ஸ் தர்றேன்’னு சொன்னார். நானும் விசுகிட்ட கேட்டதும், `உனக்காகப்  பண்ணமாட்டேனா... எத்தனை நாள் கால்ஷீட் வேணும்’னு கேட்டார். இப்படித்தான் எனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைச்சது. பல உதவி இயக்குநர்கள் மாதிரி இந்த வாய்ப்புக்காக நான் அதிகம் அலையவில்லை; சொல்லப்போனா, இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப ஈஸியாவே கிடைச்சிடுச்சு. தயாரிப்பாளர் கிடைச்சாச்சு; ஹீரோவும் ரெடி. ஆனால், விசுக்கு ஏற்றமாதிரி என்கிட்ட கதை இல்லை. ஒரு இளம் ஹீரோவா இருந்தா அவரை வெச்சு காதல் படம் எடுத்திடலாம். என்கிட்ட 10 காதல் கதைகளும் இருந்தன. ஆனால், விசு ஒரு மிடில்ஏஜ் ஆள். அவருக்கு ஏற்றமாதிரி ஒரு குடும்பத் தலைவன் கதை என்கிட்ட இல்லை. அவருக்காகவே ரெடி பண்ண கதைதான், `வீடு மனைவி மக்கள்’. இந்தப் படம் ஹிட்டாகி அதோட வெற்றி விழாவுக்குக் கலைஞர் வந்திருந்தார். 

முதல் படம் பண்ணிட்டு, அதுக்குப் பிறகு அதையே கன்னடத்தில் ரீமேக் பண்ணினேன். அதுல, ரொம்ப நாளா நடிக்காம இருந்த வாணிஸ்ரீயை நடிக்க வெச்சேன். அந்தப் படமும் செம ஹிட்டாகி, வாணிஸ்ரீ இன்னொரு ரவுண்ட் கலக்கினாங்க. `மாப்பிள்ளை’ படத்தோட ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனில் அவங்கதான் அந்த மாமியார் கேரக்டர் பண்ணினாங்க. வாணியோட இரண்டாவது இன்னிங்ஸை நான்தான் ஆரம்பிச்சு வெச்சேன். 

எதார்த்தமான கதைகளைத்தான் படமா எடுக்கணும்னு நான் முடிவு பண்ணியிருந்தேன். அதுதான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனசுல நிற்கும்னு நம்புனேன். அப்படித்தான் நான் எடுத்த, `எங்க ஊரு காவல்காரன்’, `பாண்டி நாட்டு தங்கம்’, `பாசமுள்ள பாண்டியரே’, `பட்ஜெட் பத்மநாபன்’, `மிடில்கிளாஸ் மாதவன்’னு பல படங்கள் மக்கள் மனசுல இன்னும் எவர்கிரீனா இருக்கு.  

இயக்குநராவதுக்கு முன்னாடியே விசுவோட சில படங்களில் நடிச்சிருக்கேன். இயக்குநரானதுக்குப் பிறகு என்னுடைய படங்களிலும் வேற இயக்குநர்களின் படங்களிலும் நடிச்சுக்கிட்டு இருந்தேன். சினிமா டிஜிட்டலுக்கு மாறுனதுக்குப் பிறகு நடிக்கிறதுல எனக்கு ஆர்வம் குறைஞ்சிடுச்சு. இருந்தாலும், என்னை நடிக்க வைக்க சில இயக்குநர்கள் ஆசைப்படுறாங்க. அப்படிச் சில படங்களில் மட்டும் நடிச்சுக்கிட்டு இருக்கேன். தவிர, பிரபுவை வெச்சு ஒரு படம் டைரக்ட் பண்றதுக்கான வேலைகளும் போய்க்கிட்டு இருக்கு. விரைவில் அறிவிப்பு வரும். 

எங்க அப்பா கட்டி வெச்சிருந்த குட்டி, குட்டி ரூம்களை நான்தான் அஞ்சு வருடத்துக்கு முன்னாடி பெரிய லாட்ஜா மாத்தினேன். முதல் தளத்துக்கு என்னை இயக்குநராக வளர்த்தெடுத்த விசுவின் பெயர், இரண்டாவது தளத்துக்கு என்னை உதவி இயக்குநராய் வேலைக்குச் சேர்த்துக்கொண்ட பாலசந்தரின் பெயர், மூணாவது தளத்துக்கு இங்கு தங்கி இப்போது பெரிய ஆளுமையாக இருக்கும் பாரதிராஜாவின் பெயர்... இப்படி ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு இயக்குநரின் பெயரை வெச்சு, சந்தோஷமா லாட்ஜ் நடத்திக்கிட்டு இருக்கேன்!.’’ என்றார், டி.பி.கஜேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு