ஸ்வர்ணலதா எனும் பெயர் 90களின் போதே எனக்குப் பரிட்சையமானது. முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. அவருடன் இசை உலகுக்கு வந்த மற்ற அனைவரைக் காட்டிலும் தான் பாடிய எல்லாப் பாடல்களிலும் ஸ்வர்ணலதாவுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் இருந்தது.
அக்கால கட்டத்தில் பாடலைக் கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது என்னால். அவர் பாடிய பாடல்களை ரேடியோவிலோ இல்லை தொலைக்காட்சியிலோ எதேச்சையாகக் கேட்டால் கூட சற்று நின்று நிதானமாக அப்பாடல் முடியும் வரை காத்திருந்து கடப்பது எனப் புதிதாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.
மெல்லிசை மன்னரின் அறிமுகம் என்னும் அடையாளத்துடன் இசை உலகுக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. அதுவும் முதல் பாடலிலேயே கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்கு பிறகு இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க அவர் ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
பொதுவாக அவரின் குரல் வழி இசையை அறிந்தோர் எவருக்கும் அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அதுவும் தெம்மாங்குப் பாடல்களில் நாட்டுப் புற கலைஞர்களுக்கு நிகரான உச்சரிப்பும், தொனியும் கொண்டவர் ஸ்வர்ணலதா.
இசையமைப்பாளர் சௌந்தர்யனின் முதல் படமான `சேரன் பாண்டிய’னில் ஸ்வர்ணலதா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அதில் `சம்பா நாத்து” பாடலில் அவரின் உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும். சாதாரண வார்த்தைகள்தாம் என்றாலும் தெம்மாங்கு கலந்த உச்சரிப்பு சற்றுத் தனித்து தெரிவதுண்டு. ``உனக்காக மச்சான் காத்திருந்தேன் உறங்காம கண்ணு முழிச்சிருந்தேன்” என்பதுதான் பாடல் வரிகள். ஆனால் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தத் தொனியைக் கவனித்துப் பாருங்கள் ``உறங்காமே” என்று பாடியிருப்பார். பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களில் இந்த உச்சரிப்பைக் காண்பதரிது.
``போவோமா ஊர்கோலம்”, ``நீ எங்கே என் அன்பே”, ``குயில் பாட்டு” என 90களின் ஆரம்பங்களிலேயே இளையராஜாவின் தனிக் கவனத்தைப் பெற்றிருந்தார் ஸ்வர்ணலதா. இதில் `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும்.
``மாசி மாசம்”, ``வெண்ணிலவு கொதிப்பதென்ன” போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் ஒரு மைல்கல்தான். மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை.
இளையராஜா 90 களின் பிற்பகுதிகளில் ஒரே பாடகியை வைத்து அனைத்துப் பாடல்களையும் பாட வைத்ததென்பது சற்று அரிதானது. ஆனால் `கும்மிப்பாட்டு’ படத்தின் 6 பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடியிருந்தார். பேருக்கேற்றார் போல் படத்தின் எல்லாப் பாடல்களும் மண் வாசனை நிறைந்த தெம்மாங்கு மெட்டுகளாகவே இருந்தன.
ரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ``உசிலம்பட்டி பெண்குட்டி” யில் தொடங்கியது. அதன் பிறகான பல படங்களில் ஸ்வர்ணலதாவுக்கெனத் தனி இடத்தை ஒதுக்கியிருந்தார் ரஹ்மான். பெரும்பாலும் ரஹ்மான் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஸ்வர்ணலதா கலக்கிக் கொண்டிருந்தார். ``முக்காலா முக்காபுலா”, ``குச்சி குச்சி ராக்கம்மா” , ``மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” என்று எல்லா வகையான பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருந்த ரஹ்மான் `உழவன்’ படத்தில் வரும் ``ராக்கோழி” பாடலின் மூலம் திரும்பவும் மோகத்தின் குரலுக்கென ஸ்வர்ணலதாவைப் பாட வைத்தார்.
எல்லாவற்றையும் விட ஸ்வர்ணலதா தன் ஆலாபனைகளாலும், ஹம்மிங்கு(ரீங்காரம்)களாலும் நம்மைக் கட்டிப் போடுபவர். ``என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலின் ஆலாபனையை மட்டும் ஆயுசு முழுவதுக்கும் வைத்து கொண்டாடுமளவுக்கான அற்புதத்தைத் நிகழ்த்தித் தந்தவர்.
ரஹ்மானின் முதல் இந்தித் திரைப்படமான ``ரங்கீலா” வில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருந்தார். ``ஹை ராமா” பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் அப்படி ஒன்றும் சிரமத்தை எல்லாம் தரக்கூடியதல்ல என்று. இசைக்கு மொழி அவசியமற்றது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
அவ்வகையில் ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்கை மிக அழகாக தனக்கு முதல் கிராமியப் படமென பெயர் வாங்கித் தந்த ``கிழக்குச் சீமையிலே”படத்தில் பயன்படுத்திக்கொண்டார். படம் நெடுக அம்மண்ணின் வாசனையோடும், அம்மக்களின் கண்ணீரோடும் ஸ்வர்ணலதாவின் குரலும் பயணிக்கும். பாசத்துக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் போராட்டத்துக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விருமாயியின் வாழ்க்கைக் கனவை குரல் வழி கடத்தியவர் ஸ்வர்ணலதா.
ரஹ்மானின் ஆஸ்தான பாடகியென மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு ``கருத்தம்மா” படத்தின் ``போறாளே பொன்னுத்தாயி” பாடல் தேசிய விருதை வாங்கித் தந்தது. பாடலைப் பாடி முடித்த போது கண் கலங்கிப் போனாராம் ஸ்வர்ணலதா. சோகமும், வலியும் , கடந்து வந்த பாதையுமென அக்குரலில் அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்திருப்பார். ``எவனோ ஒருவன்” பாடலிலும் இதே போன்றதொரு வலியை நமக்குக் கடத்தியிருப்பார். ``இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் பொழுது மனதெல்லாம் பாரமாக அந்த இசைக் குயிலின் முகத்தை இனி ஒரு போதும் காண முடியாது என்ற வலி நெருடிக் கொண்டே இருக்கிறது.
இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாது தேவாவுக்கும், எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் ஸ்வர்ணலதா ஆஸ்தான பாடகிதான். யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி வரை எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்களோ, நிலைத் தகவல்களோ இணையத்தில் இல்லை. கிடைத்தவரைக்குமா பொக்கிஷங்களெனப் பாடல்களை சேகரித்துக்கொண்டதுதான்.
ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் குரலுக்கு உருவமென ஒன்றை இனி காணப் போவதில்லை. ஸ்வர்ணலதாவின் குரல் வெறும் குரல் மட்டுமல்ல... அது,
``வலிகளின் அடையாளம்”
``சோகங்களின் மூச்சுக் காற்று”
``ரசனைகளின் பிரதி”
``உள்மன பிரதிபலிப்பு”
``மோகத்தின் வடிவம்”
``மகிழ்ச்சியின் எல்லை”.
குரலின் மூலம் இத்தனை உணர்வுகளையும் எப்படிக் கடத்த முடிகிறது. இது சாத்தியப்படுமெனில் அதற்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர்.
இன்றோடு அவர் பிரிந்து 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆத்மாக்களின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இக்குரலின் வழியிலும் அது தரும் உணர்வுகளின் வழியிலும் இன்னும் நூறாண்டு காலமும் அது கடந்தும் ``ஸ்வர்ணலதாவின்” பெயர் சொல்லும்.
https://t.me/vikatanconnect