Published:Updated:

``தெரிந்த இடம்தான்... அதற்காக ஜன்னலோரப் பயணத்தை மறுக்க முடியுமா?" #LailaMajnu

``தெரிந்த இடம்தான்... அதற்காக ஜன்னலோரப் பயணத்தை மறுக்க முடியுமா?" #LailaMajnu
``தெரிந்த இடம்தான்... அதற்காக ஜன்னலோரப் பயணத்தை மறுக்க முடியுமா?" #LailaMajnu

லைலாவும் மஜ்னுவும் தற்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். நமக்கு அது தெரியாது, அவ்வளவே. ஏதோவோர் அப்பனின் வீராப்பும், சமூகமும், மரணமும் அவர்களைப் பிரித்துவிடுமா என்ன?!

நீங்கள் லைலா - மஜ்னுவின் கதையைக் கேட்டதுண்டா? 

காதலித்தவனுடன் சேர முடியாமல் பெண் வேறு திருமணம் செய்துகொள்வாள். இவன் மனநலம் பாதிக்கப்பட்டு அங்கும் இங்கும் சுற்றுவான். ஒரு கட்டத்தில் அவள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வாள். அவள் கல்லறையிடம் வந்து இவனும் மரித்துப் போவான். இது லைலா - மஜ்னுவின் கதை மட்டுமல்ல. உலகில் சேர முடியாமல் போய்விட்ட பல காதலர்களின் கதையும்தாம்.

இந்தக் கதையிலும் லைலா இருக்கிறாள். காதலும் இருக்கிறது. மஜ்னுவும் உருவாகிறான். பிரிவும் நேர்கிறது. மரணங்களும் நிகழ்கின்றன. ஆனால், அதெல்லாம் தெரிந்ததுதானே. அதற்காக லைலா - மஜ்னுவின் சிறுபிள்ளைத் தனமான காதலை ரசிக்காமல் இருந்துவிட முடியுமா அல்லது அது கடத்தப்போகும் வலியை நம் இதயக்கூட்டில் நுழையவிடாமல்தான் தடுத்துவிட முடியுமா. தொலைவிலுள்ள ஊர் முன்னமே தெரியும் என்பதற்காக, அதை நோக்கி நாம் செய்யும் பயணத்தை, கடக்கும் தூரத்தை ரசிக்காமல் இருந்துவிட முடியுமா என்ன. இந்த நவீனக் காலத்து லைலா - மஜ்னுவின் கதையும் அதே சேராக் காதல்தான், விரக்திதான், பித்துப் பிடிப்பதுதான். ஆனால், இந்தப் பயணம், ஜன்னலோரக் கம்பியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ரசிப்பவனின் பயணம். வெளியே மழையும் அடிக்கும், சில சமயங்களில் வெயிலும் அடிக்கும். அதை ரசிப்பதும் ரசிக்காமல் போவதும் அவரவர் அகநிலையைப் பொறுத்த விஷயமல்லவா?

‘லைலா’ என்ற குண்டு எழுத்துகளுடன் அறிமுகமாகிறாள், அவள். அழகி. அதாவது அவள் இருக்கும் காஷ்மீரைப்போல, தன்னை ஆண் மகன்கள் உற்று நோக்குகிறார்கள் என்பது தெரிந்தால், உற்சாகமடைகிறாள். தினமும் அவள் காரில் கல்லூரிக்குச் செல்கையில் பைக்குகளில், தெருவோரங்களில் அவளைப் பின்தொடரும் கண்களையும் கால்களையும் அவ்வளவு விரும்புகிறாள். அதற்காகவே ஒப்பனையிட்டு தன் சகோதரியுடன் தினமும் பயணிக்கிறாள். ஒருநாள் அந்தக் கால்கள் நின்று விடுகின்றன. பைக்குகள் பின் தொடரவில்லை. காரணம் முன்னே செல்லும் ஜீப். அதில், அவன் இருக்கிறான். மஜ்னுவாக அல்ல... இவன் குயாஸ். லைலாவைக் காதலிக்கும் அனைவரும் மஜ்னு அல்லவே. இவன் ரெஸார்ட் ஓனரின் மகன். இவன் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். கேட்டுத்தான் ஆகவேண்டும். இவன் முன்னமே லைலாவைப் பார்த்திருக்கிறான். லைலாவும் அவனைப் பார்த்திருக்கிறாள். சிறுவயதில் ஒருமுறை... ஆனால், அது இப்போது முக்கியமில்லை. மிகச் சமீபத்தில், மற்றொரு நடு இரவில், சிறுநீர் கழிக்கப் போனவன் கீழே விழுந்தான். பள்ளத்திலும்... அவள் வசீகரத்திலும். பார்த்தவுடன் காதல்தான். அதுதானே இந்த அமரக் காவியங்களின் பிரச்னை.

அவனின் ஜீப் கறுப்புக் கண்ணாடிகளால் ஆனது. ரகசியங்களை உள்ளேயே வைத்துக் கொள்வது. சொல்லப்போனால், அவனுக்கு நேரெதிர். அவன் எல்லோருக்கும் எல்லாமும் சொல்வான். லைலாவை அவன் காதலிப்பது எல்லோருக்கும் தெரிகிறது. யாரிவன் எனத் தேட, லைலாவுக்கு அவனைப் பற்றி தவறான தகவல்களே கிடைக்கின்றன. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவன், பெண்களை ஏமாற்றுபவன், இன்னும் பல. ஆனால், அவள் அதை ரசிக்கிறாள்; விரும்புகிறாள். ஏனெனில், அவள் முன்னமே காதலில் விழுந்துவிட்டாள். அதுதானே விதி. அவர்கள் கதை முன்னமே எழுதப்பட்டுவிட்ட ஒன்றுதானே.. காதல் வளர்கிறது. கூடவே பிரச்னையும்!.

அவன் லைலாவின் அப்பாவுடைய எதிரியின் மகன். லைலாவின் அப்பாவிடம் ஓர் இரவில் காதலும் காதலுமாக மாட்டுகிறார்கள். இவன் தன் அப்பாவிடம் வந்து கெஞ்சுகிறான். அவர் சென்று பேசிப் பார்க்கிறார். லைலாவின் அப்பாவிடமிருந்து அவமானம்தான் பதில். லைலாவுக்கு வேறு திருமணம் நடக்கிறது. குயாஸ் விரக்தியில் நகரத்தைவிட்டு வெளியேறுகிறான். நான்கு வருடங்கள் ஓடி விடுகின்றன. குயாஸின் அப்பா அன்று காலை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இறந்துபோகிறார். குயாஸ் வரமாட்டான் எனச் சொந்தங்கள் நினைக்கின்றன. சட்டெனப் புதர்களின் மறைவில் குயாஸ் நிற்கிறான். ஆனால், அவன் இப்போது குயாஸ் இல்லை. `மஜ்னு’ என்ற பெரிய எழுத்துகள் திரையை ஆக்கிரமிக்கின்றன. லைலாவைக் காதலிக்க குயாஸாக இருந்தால்போதும். ஆனால், மஜ்னுவாக மாற அந்தக் காதலில் தோல்வி கண்டிருக்க வேண்டும். காதலால் மனம் ஒடிந்து பரதேசியாக... மஜ்னுவாக அங்கே நிற்கிறான் குயாஸ்.

லைலாவின் கணவன் குடிகாரன். லைலாவின் அப்பா நினைத்ததைப்போல உத்தமன் இல்லை. நான்கு வருடங்கள் அவனின் வதையைப் பொறுத்திருந்த லைலா, அன்று அவனையே எதிர்க்கிறாள். அவளின் காதலன் வந்துவிட்ட தைரியமோ, இருக்கலாம். பின்னிரவு முழு போதையில் காரை ஓட்டி, அந்தக் குடிகாரக் கணவன் இறந்துபோகிறான். லைலாவும் மஜ்னுவும் சேர்ந்து வாழ இனி எந்தத் தடையும் இல்லை. லைலாவின் அப்பாவை மட்டும் சரிக்கட்ட வேண்டும். மஜ்னுவுக்கு இது தவறாகத் தெரிகிறது. நினைத்ததையெல்லாம் கொடுத்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லையே. இந்தக் கதை அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமான முடிவைப் பெற்றுவிடாது என்று அவன் நம்புகிறான். நினைத்ததுபோலவே லைலா அவனிடம் அவகாசம் கேட்கிறாள். இது அவன் எதிர்பார்த்ததுதானே... சிரிக்கிறான். லைலாவுக்கு ஆச்சர்யம், இவன் ஏன் சிரிக்கிறான் என்று. ஒருவேளை பழைய குயாஸாக இருந்தால் அவன் அழுதிருக்கக்கூடும். ஆனால், இப்போது அவன் மஜ்னு. பித்துப் பிடித்தவனைப்போல சிரிக்கிறான்.

தனிமை அவனை வாட்டுகிறது. இது யாருமற்ற தனிமையல்ல. அவன் லைலா இல்லாத தனிமை. மலையில் ஏறுகிறான்; இறங்குகிறான். செடிகள், மரங்களுடன் பேசுகிறான். ஒருநாள் அங்கே ஒரு புத்தி சுவாதீனமற்ற ஒருவனைப் பார்க்கிறான். பின்பொரு நாள் அந்தப் புத்தியில்லாத மனிதனாக இவனே கீழே இறங்குகிறான். ஆம், மஜ்னு இப்போது புத்தி பேதலித்தவன். திரையில் விரியும் அந்த வெறித்தனமான `ஹாஃபிஸ் ஹாஃபிஸ்’ பாடல் இந்தப் புத்தியற்றவனின் கற்பனையை நமக்குள்ளும் புகுத்திவிடுகிறது. ஒருநாள் ஊர்மக்கள் துரத்த, மலையிலிருந்து தண்ணீரில் குதிக்கிறான். நண்பர்கள் காப்பாற்றியவனை லைலா வந்து பார்க்கிறாள். ஆனால், மஜ்னு வேறோர் உலகில் தன் லைலாவுடன் ஏற்கெனவே மகிழ்ச்சியாக இருக்கிறான். வந்திருந்த லைலாவுக்கு இப்போதுதான் என்ன செய்யவேண்டும் என்று புரிகிறது. அன்று இரவே தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். அவளின் காரியங்கள் முடிந்தபின், அவளின் கல்லறைக்கு வரும் மஜ்னு, தட்டுத் தடுமாறி அவளின் கல்லறையிலேயே விழுந்து இறந்துபோகிறான்.

சிறுவனான குயாஸைப் பிடிக்க சிறுமி லைலா ஓடுகிறாள். அந்தத் துரத்தலில் இளவயது லைலா வெளிப்படுகிறாள். அவளுக்கு முன்னால் குயாஸ் மஜ்னுவாக ஓடிக்கொண்டிருக்கிறான். வாழ்வின் நீட்சியான மரணத்துக்குப் பின்னான வாழ்வில், லைலாவும் மஜ்னுவும் தற்போது ஒன்றாக இருக்கிறார்கள். தன் உயிரை மாய்த்துக்கொண்ட லைலா, மஜ்னுவின் லைலாவாக அவனுடைய உலகத்திலேயே தன்னை இப்போது சேர்த்துவிட்டாள். அவர்கள் அளந்த தெருவை மீண்டும் அளக்கிறார்கள். ஆனால், அங்கே அதே இடத்தில் நிஜ வாழ்வில் யாரோ எடுத்த செல்ஃபிகளில் இவர்கள் தெரியமாட்டார்கள். ஆனால், அதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. லைலாவும் மஜ்னுவும் தற்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். நமக்கு அது தெரியாது, அவ்வளவே. ஏதோவோர் அப்பனின் வீராப்பும், சமூகமும், மரணமும் அவர்களைப் பிரித்துவிடுமா என்ன?

காஷ்மீரைக் கதைக்களமாக வைத்துவிட்டு, இன்னமும் அரசியல் பேசியிருக்கலாமே. மஜ்னு போலவே திக்கற்றுத் திரியும் இரண்டாம் பாதிக்கும் சற்றுக் கடிவாளம் போட்டிருக்கலாம். அவ்வளவு தெளிவான கதாபாத்திரங்களாக வரும் லைலாவும் மஜ்னுவும், ஏன் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவே இல்லை. இன்னும் யோசித்தால், இன்னும் கேள்விகள் எழுப்பலாம். ஆனால், இங்கு எல்லாமும் எப்போதும் சரியாக இருந்துவிடுவதில்லையே. எதுவுமே சரியாக அமைந்துவிடாத லைலா மஜ்னுவின் வாழ்க்கை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன.

அறிமுக நடிகர் அவினாஷ் திவாரி குயாஸாகவே வாழ்ந்திருக்கிறார். லைலாவாக வரும் திருப்தி டிம்ரி சற்று ஓவர் ஆக்டிங். இருந்தாலும், லைலாவின் இயல்புக்கு அது நன்றாகப் பொருந்திப்போயிருக்கிறது. பாடல்களும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் கதையோடு இன்னமும் நம்மை ஒன்றிப்போக உதவியிருக்கின்றன. ரூமியின் தத்துவ மொழிகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் படைக்கும் இம்தியாஸ் அலி, இதில் தன் திரைக்கதை மூலம் தன் தம்பி சாஜித் அலியை இயக்குநர் ஆக்கியிருக்கிறார். ``சரி, தவறு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஓர் இடம் இருக்கிறது. அங்கு நான் உன்னைச் சந்திப்பேன்!” என்ற ரூமியின் தத்துவ மொழி அவரின் `ராக்ஸ்டார்’ படத்துக்கு எந்த அளவுக்குப் பொருந்திப்போகுமோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இந்த ‘லைலா – மஜ்னு’வுக்கும் பொருந்திப் போயிருக்கிறது.

அதுசரி, வழக்கமான விமர்சனம் எதற்கு... நீங்கள் லைலா மஜ்னுவின் கதையைக் கேட்டதுண்டா?

அடுத்த கட்டுரைக்கு