Published:Updated:

"சொர்ணலதாவின் அமைதிக்கான காரணம்... யாருக்குமே புரியாத புதிர்!’’ #SwarnalathaMemories

"சொர்ணலதாவின் அமைதிக்கான காரணம்...  யாருக்குமே புரியாத புதிர்!’’   #SwarnalathaMemories
"சொர்ணலதாவின் அமைதிக்கான காரணம்... யாருக்குமே புரியாத புதிர்!’’ #SwarnalathaMemories

``சொர்ணலதாவின் உடல், ரொம்ப அமைதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற மாதிரி இருந்துச்சு. சொர்ணாவின் வாழ்க்கை ரொம்ப அமைதியா, காற்றில் வரும் கீதம் மாதிரி ஆகிடுச்சேனு தோணுச்சு."

`போவோமா ஊர்கோலம்' என உற்சாகம் அளித்தவர், `ஆட்டமா தேரோட்டமா' என்று நடனமாட வைத்தவர். `போறாளே பொண்ணுத்தாயி' எனக் கண்ணீர் வரவைத்தவர். `ராக்கம்மா கையைத்தட்டு' எனச் சொடக்குப்போடச் செய்தவர், `குயில் பாட்டு... ஓ வந்ததென்ன இளமானே' என நெகிழவைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்தவர் பின்னணிப் பாடகி, சொர்ணலதா. 14 வயதில் பின்னணிப் பாடகியானவர், `போறாளே பொண்ணுத்தாயி (கருத்தம்மா)' பாடலுக்குத் தேசிய விருது வென்றபோது, வயது 21. பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றார். குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்குச்சென்றவர், தன் 37 வயதில் மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் உறைந்த இசையுலகம், இன்றுவரை மீளவில்லை. சொர்ணலதாவின் மறைவு தினமான இன்று (12.09.2018), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார், தோழியும் பின்னணிப் பாடகியுமான சுனந்தா.

``சொர்ணலதாவுக்கு இசைத் துறையில் நான் சீனியர். 1980-களின் இறுதியில் இருவரும் சினிமா ரெக்கார்டிங் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பிஸியா பாடிட்டிருந்தோம். ஒரு டிவோஷனல் மேடை நிகழ்ச்சியில்தான் சொர்ணாவை முதன்முதலில் பார்த்தேன். தொடர்ந்து பல ரெக்கார்டிங், மேடை நிகழ்ச்சிகளில் சந்திச்சு நட்பு வளர்ந்தது. ஒருமுறை கோவில்பட்டியில் ஒரு கச்சேரிக்கு என்னால் போகமுடியாத சூழ்நிலை. சொர்ணலதாகிட்ட கேட்டதும், உடனடியா அங்கே போய் பாடினாங்க. அப்போதான் அவங்க மேலே பெரிய மதிப்பு உண்டாச்சு. பிறகு, இளையராஜா சாரின் ரெக்கார்டிங் ஸ்டு டியோவில் சந்திப்போம். எங்க பாடல்கள் பற்றி நிறைய விவாதிப்போம். அவங்களை சொர்ணானு கூப்பிடுவேன்.

நானே அமைதி டைப். என்னையே அசரவைக்கும் அளவுக்கு, அமைதியானவங்க சொர்ணா. நாங்க சிரிச்சுப் பேசிய காலங்கள் மறக்கமுடியாதவை. எங்க இருவருக்கும் பூர்வீகம், கேரளா. மலையாளத்தில்தான் அதிகம் பேசிப்போம். என் திருமணத்துக்குச் சொர்ணாவை அழைச்சேன். பிஸியா இருந்தபோதும் கலந்துகிட்டு வாழ்த்தினாங்க. பொதுவா, அவங்க யார் வீட்டுக்கும் போக மாட்டாங்க. தன் வீட்டுக்கும் பெரிசா யாரையும் அழைக்க மாட்டாங்க. அப்போ எங்க இருவரின் வீடும் சாலிகிராமத்தில் இருந்துச்சு. ஒருமுறை எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருந்த விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவங்க, இன்ப அதிர்ச்சியா என் வீட்டுக்கு வந்தாங்க. என் குழந்தைகளிடம் அன்பாப் பேசினாங்க. அவங்க வீட்டுக்கு அழைச்சு, உபசரிச்சாங்க" என்கிறார் சுனந்தா.

சொர்ணலதாவின் இறப்பு குறித்துப் பேசுகையில், ``2000-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மற்றும் இசைத் துறையில் நிறைய மாற்றங்கள் உண்டாச்சு. எனக்கு வாய்ப்புகள் குறைஞ்சது. குடும்பம், மேடை நிகழ்ச்சிகள் என இருந்துட்டேன். நாங்க இருவரும் சந்திக்கிறதும் பேசிக்கிறதும் குறைஞ்சது. அவங்க சில காலம் என்ன ஆனாங்கன்னு தெரியலை. நான் ஓர் இசை நிகழ்ச்சியில் பாடிட்டிருந்தபோது, ஒருத்தர் பக்கத்தில் வந்து சொர்ணா இறந்துட்டதா சொன்னார். நான் நம்பவே இல்லை. வேறு யாரோவா இருப்பாங்கன்னு சொன்னேன். ஆனா, என் தோழி சொர்ணாவேதான் என உறுதியா தெரிஞ்சதும் அதிர்ந்துட்டேன். தொடர்ந்து பாட முடியாமல் கிளம்பிட்டேன். அவங்க உடலுக்கு அஞ்சலி செலுத்தப்போனேன். சொர்ணாவின் உடல், ரொம்ப அமைதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற மாதிரி இருந்துச்சு. சொர்ணாவின் வாழ்க்கை ரொம்ப அமைதியா, காற்றில் வரும் கீதம் மாதிரி ஆகிடுச்சேனு தோணுச்சு. சொர்ணலதாவின் எல்லா ரெக்கார்டிங்கிலும் அவங்க அக்கா வருவாங்க. தன் அம்மாவின் இறப்புக்குப் பிறகு, அக்காதான் எல்லாமும் எனச் சொல்வாங்க. சொர்ணாவின் உடலுக்கு அருகில் அழுதுட்டிருந்த அவங்களுக்கு ஆறுதல் சொன்னேன். `என்ன ஆச்சு?'னு கேட்டேன். `உடல்நிலை சரியில்லாம இருந்தாள். திடீர்னு மோசமாகி எங்களைவிட்டுப் போயிட்டா'னு கதறி அழுதாங்க. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்திக்க முடியாமல் கிளம்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும் அழுது தீர்த்தேன்.

சொர்ணா, இசைத் துறையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, புகழின் உச்சிக்குப் போனாங்க. மெலோடி, குத்துப் பாட்டு என எல்லா வகையிலும் சிறப்பாப் பாடினவங்க. இசையமைப்பாளர்கள் சொல்லிக்கொடுக்கிறதை சட்டுன்னு உள்வாங்கறவங்க. எப்போதும் ஓர் அமைதி அவங்ககிட்டே இருக்கும். அதேநேரம், எல்லோரிடமும் மிக அன்போடு நடந்துப்பாங்க. தனக்குள் என்ன சோகம் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்க மாட்டாங்க. திருமணம்கூட செய்துக்காமல், இசைக்காகவே வாழ்நாளை அர்ப்பணிச்சவங்க. அவங்க பாடல்களைக் கேட்கும்போதெல்லாம், சொர்ணாவுடன் பழகிய நினைவுகள் வரும். தவறாமல் ஆனந்தக் கண்ணீரும் வரும்" என நெகிழ்கிறார் சுனந்தா.

சொர்ணலதா பாடியதில், உங்களுக்குப் பிடித்த பாடலை கமென்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு