Published:Updated:

``400 படம் நடிச்சார்.. ஒரு மகளைக் கட்டிக்கொடுக்க படாதபாடு பட்டார்!" - நடிகர் கோவை செந்தில் யார்?

காமெடி நடிகர் கோவை செந்திலின் கடைசி நாள்கள் இப்படித்தான் இருந்தன.

``400 படம் நடிச்சார்.. ஒரு மகளைக் கட்டிக்கொடுக்க படாதபாடு பட்டார்!" - நடிகர் கோவை செந்தில் யார்?
``400 படம் நடிச்சார்.. ஒரு மகளைக் கட்டிக்கொடுக்க படாதபாடு பட்டார்!" - நடிகர் கோவை செந்தில் யார்?

`நாட்டாமை' படத்தில் விஜயகுமார் தீர்ப்பு வழங்குவதற்கு முன், மீசையை நீவிவிட்டபடி உறுமிக்கொண்டு வெற்றிலை எச்சிலைத் துப்பத் தயாரானதும் ஒரு குடுவையை ஏந்தியபடி அதைப் பிடிக்க, சரியாக ஒரு நொடி மட்டும் திரையில் வந்து போகிற அந்த முகத்தை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பீர்கள். நூற்றுக்கணக்கான படங்களில் இப்படி ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களே வந்து போயிருக்கிறது அந்த முகம். ஆனால், இப்போது அந்த முகம் நம் மத்தியில் இல்லை. சில தினங்களுக்கு முன் மறைந்துபோன அந்த முகத்துக்குச் சொந்தக்காரர், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த கோவை செந்தில்.

கோவை அருகேயுள்ள பள்ளிப்பாளையம் இவரது சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போதே நாடகங்களில் நடிக்கத் தொடங்க, அங்குள்ள ஒரு நாடக கம்பெனியில் வைத்தே நடிகர் பாக்யராஜைச் சந்தித்தார். குமாரசாமி என்ற இவரது பெயரை கோவை செந்தில் என மாற்றியது, பாக்யராஜ்தான். கவுண்டமணியுடன் சேர்ந்து நடிகர் செந்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்ததால், பெயர் குழப்பத்தைத் தவிர்க்கவே `கோவை' அடைமொழி.

நாடக நடிப்பு அப்படியே சினிமா ஆசையைத் தூண்ட, பார்த்துக்கொண்டிருந்த வங்கிப் பணியை உதறிவிட்டு சென்னைக்கு வந்தவருக்கு, தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் வாய்ப்பு தந்து அடைக்கலம் தந்தார், இயக்குநர் பாக்யராஜ். `பெரும்பாலும் பூசாரி மற்றும் பிச்சைக்காரர் வேடங்களே இவருக்கு அமைந்தன. `இது நம்ம ஆளு', `பவுனு பவுனுதான்', `அவசர போலீஸ் 100' போன்றவை கோவை செந்தில் நடித்த சில படங்கள்.

போகப் போக மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். பார்த்திபனின் `புதிய பாதை'யிலும் விக்ரமனின் `வானத்தைப் போல' படத்திலும் இவரை வந்துபோக வைத்தார்கள். கடைசியாக இப்போதைய இளம் இயக்குநர்கள் சிலரும் இவரைத் தங்களது படங்களில் நடிக்க வைத்தனர். உதாரணத்துக்கு, `கோவா' படத்தைச் சொல்லலாம். மொத்தமாக சுமார் 400 படங்கள் வரை நடித்திருக்கும் செந்தில், ஆரம்பத்திலிருந்தே சென்னையில் தனி ஆளாகவே வசித்து வந்தார். மேன்ஷனில் சில ஆண்டுகளும், மேற்கு மாம்பலத்தில் அறை எடுத்து சில ஆண்டுகளும் தங்கியிருந்தார். ஷூட்டிங்கிற்குப் பேருந்திலேயேதான் சென்று வருவார். `மனைவி குழந்தையை அழைத்து வந்தால், சென்னையில் கட்டுப்படியாகாது!' என்பதே காரணம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறிய விபத்தில் சிக்கியவர், அதைக் குணப்படுத்துவதற்காக சொந்த ஊருக்குச் சென்றார். பிறகு, பட  வாய்ப்புகள் அமையவில்லை. தவிர, உடல்நிலையும் குணமாகாமலேயே போக, சொந்த ஊரிலேயே இறந்துபோனார், கோவை செந்தில்.

கோவை செந்தில் குறித்து நடிகர் பார்த்திபனிடம் பேசியபோது, `என்னோட குருநாதர் படங்களில் நடிச்சவங்களை எங்கே கண்டாலும் அவங்கமேல ஒரு மரியாதை வந்திடும். அது குரு பக்தியோட தொடர்ச்சினுகூட சொல்லலாம். அவங்களுக்கு என் படங்கள்ல வாய்ப்பு தரணும்னு ஆசைப்படுவேன். அப்படித்தான், `புதிய பாதை'யில் கோவை செந்தில் நடித்தார். ஒரு கட்டத்துல அவரோட தொடர்பே இல்லாமப் போயிடுச்சு. அவர் சென்னையில இருந்து கஷ்டப்படுற விஷயம் எனக்குத் தெரிஞ்சிருந்தா, என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்திருப்பேன்.'' என்றார்.

இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் செந்திலைச் சந்தித்து நலம் விசாரித்து வந்த முத்துக்காளையிடம் பேசினேன்.

`அங்கங்க இருந்து சினிமாங்கிற ஒரு விஷயத்துக்காக சென்னை வந்து ஒண்ணா சேர்ந்த கூட்டம் நாங்க. `புது வசந்தம்' படத்துல ஊரை விட்டு ஓடி வந்து ஃப்ரெண்ட்ஸ் ஆவாங்களே... அந்த மாதிரிதான். சீனியர், ஜூனியர்னு எல்லாம் பார்க்காம, தாயா புள்ளையா ஒரே மேன்ஷன்ல கிடந்திருக்கோம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக்னு யார் எந்த சீனியர்கிட்ட அடைக்கலம் ஆனாலும், எங்களுக்குள்ள தனிப்பட்ட முறையில நட்பு தொடர்ந்தது. படங்கள்ல பஞ்சாயத்துக் காட்சி இருந்தா, நாங்க இல்லாம இருக்காது. அதனாலேயே ஒரு கட்டத்துல எங்களைப் `பஞ்சாயத்து குரூப்'னு கூப்பிட்டாங்க. செந்தில் அண்ணனை கடைசியா நானும் கிங்காங்கும் போய் பார்த்துட்டு வந்தோம். அப்போ மகளைக் கட்டிக்கொடுத்துட்ட திருப்தியை மட்டும் அவர் முகத்துல பார்க்க முடிந்தது." என்கிறார், முத்துக்காளை.

தனது மகளின் திருமணத்தின் போதும் பணத்துக்கு நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார், கோவை செந்தில். ``400 படங்கள்ல நடிச்சுட்டேன், ஒரு மகளை கட்டிக்கொடுக்க முடியலை"னு சொல்லிக்கிட்டு இருந்தார். பிறகு, நடிகர்கள் சிலர் உதவி பண்ண அந்தக் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது." என்கிறார், செந்திலின் இன்னொரு நண்பரான நடிகர் போண்டா மணி.