பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்!

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்ஹாசன்

என் 19 வயதில் என்னை நம்பிய 40 வயதுக்காரர்...

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

மிழைப்போல் மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் என் ட்ராக் ரெக்கார்டுகள் எனக்குப் பெருமை

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தருபவை. மலையாள சினிமா நண்பர்களைப்போல் அங்குள்ள நல்ல எழுத்தாளர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அதில் மூத்தவர் டி.பத்மநாபன், கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, சீனியர் எழுத்தாளர் பால் சக்காரியா போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள். அதேபோல் நாவலாசிரியரும் இயக்குநருமான பத்மராஜனும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. பலமுறை தமிழ் சினிமாவுக்கு அழைத்தும், `‘நாம் எழுதாத ஒரு பாஷையில் ‘எழுத்தாளன்’ என்று எப்படி சொல்லிக்கொண்டு வரமுடியும்’’ என்று தமிழ் சினிமாவுக்கு வராமல் போனவர். இதேபோல, காலமாகிவிட்ட லோகிததாஸையும் ஆரம்பத்திலேயே கூப்பிட்டேன். அவரும் அப்போது வரவில்லை. அவர்கள் வந்திருக்கலாம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.

பட்டாம்பூச்சியை அழுத்திப் பிடித்தால் அதன் கலர் கையில் ஒட்டுமே தவிர, பூச்சி இறந்துவிடும். அதுபோல அவர்களை ரொம்பவும் வற்புறுத்தி அழுத்திப்பிடிக்கவும் முடியாது என்பதால் அவர்களை நான் கட்டாயப்படுத்தவில்லை.

என் தன்னம்பிக்கை, வித்தியாசமான சினிமா சிந்தனைகள் இரண்டும் மலையாள சினிமா எனக்குத் தந்த மிகப்பெரிய தானம். அவர்கள்தாம் என்னை முதலில் ஹீரோவாக்கினார்கள் என்ற நன்றிக்கடனுக்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்பார்கள். ஆனால், அது இல்லாமலும் இருக்காது. ஏனெனில், இங்கு என்னை பாலசந்தர் சாரைத்தவிர வேறு யாரும் மதிக்கவே இல்லை. சின்னச்சின்ன பிட் ரோல்களுக்குக் கூப்பிடுவார்கள். இல்லையென்றால், ‘`தம்பி, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா, அவங்க நடிக்கட்டும். நீ ஏன் குறுக்க குறுக்க போற’’ என்பார்கள்.

ஆனால், என்னை மனிதனாக மதித்து, நான் சொல்வதையும் கேட்டு, துணை எழுத்தாளனாகத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது சங்கரன் நாயர். ‘`பிரமாதமா சொல்றான்யா இந்தப்பையன். நீ சொல்லு கமல்’’ என்றவர், ஒரு கட்டத்தில், `‘கமல் சொல்வதுதான் சரி’’ என்று என் 19 வயதில் என்னை நம்பிய 40 வயதுக்காரர். அவருடைய ‘விஷ்ணு விஜயம்’ படத்தில் நடிக்கக் கதை கேட்க உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சந்தித்தோம்.

படத்தின் கதையை அவர் சொல்லும்போதே, அதனுடைய மூலம் எது என்று சொன்னேன். அப்படியே அமைதியாக என்னைப் பார்த்தவர், ‘`அதெல்லாம் படிச்சிருக்கீங்களா’’ என்றார். `‘கொஞ்சம் படிப்பேன் சார்’’ என்றேன். ‘`எங்களுக்கு 19 வயசுப்பையன் வேணும்னு கேட்டோம். நிஜமாலுமே உங்களுக்கு 19 வயசுதானா” என்றார். ‘`ஆமாம் சார்’’ என்றேன். ‘`இல்ல, நான் நிர்ணயம் பண்றேன். உங்களுக்கு 35 வயசு’’ என்றவர், ‘`இருந்தாலும் நீங்க என்னைவிட இளையவர். கம் அண்ட் ஜாயின் மீ ஃபார் ஸ்டோரி டிஸ்கஷன்” என்றார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

படம்: ஜி.வெங்கட்ராம்

அதிலிருந்து ‘விஷ்ணு’ என்று அந்த கேரக்டரின் பெயரிலேயே கூப்பிட ஆரம்பித்துவிட்டார் சங்கரன் நாயர். அடுத்த படத்துக்கு என்ன கதை பண்ணலாம் என்று ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, ‘`தமிழில் ‘உணர்ச்சிகள்’னு ஒரு படம் பண்ணிட்டிருக்கோம். அதைக் கொஞ்சம் மாற்றிப் பண்ணினால் இங்கு சரியாக இருக்கும்’’ என்றேன். ‘`பண்ணலாமே’’ என்றார். சக்தி அண்ணனிடம் சொல்லி `உணர்ச்சிகள்’ பட ரைட்ஸை வாங்கித்தந்தேன். சக்தி அண்ணன் அப்போது கொஞ்சம் பணக்கஷ்டத்தில் இருந்தார். அவருக்குப் பணம் வாங்கித்தந்தால் உதவியாக இருக்குமே என்று,  ‘உணர்ச்சிகள்’ கதையைக் கொஞ்சம் மாற்றி மலையாளத்தில் எடுத்தோம்.

அதுதான் அங்கு மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ராசலீலா.’ அந்தப் படத்துக்கான டைட்டில் கார்டில், ‘கதை’ என்று பெயர் போட்டுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அங்கோ, ‘அந்தக்கதை என்னுடையது’ என்று மூன்று  பேர் சண்டை போட்டுக்கொண்டார்கள். உடனடியாக நானும் ஆர்.சி.சக்தி அண்ணனும் அங்குபோய் ‘`இது நாங்க இரண்டுபேரும் சேர்ந்து எழுதின கதை’’ என்று சொல்லி சமாதானப்படுத்திய பிறகு எல்லோரும் அமர்ந்து விருந்து சாப்பிட்டு வந்தோம். வரும்வழியில், ‘`எங்கேயோ தெருவில் உட்கார்ந்து உருவாக்கின கதை, இன்னிக்கு அதுக்கான மரியாதையைப் பாருங்க’’ என்று பேசிச் சிரித்துக்கொண்டே வந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

சங்கரன் நாயருடன் அடுத்த படம்   ‘மதனோத்ஸவம்’. இன்றும் மலையாளத்தில் பெரிதாகப் பேசப்படக்கூடிய படம்.  போகப்போக   காட்சியமைப்பு உட்பட அனைத்திலும் சுதந்திரமாக விட்டார். ‘`அவன் வரட்டும். அவன் வராம பண்ணினா நல்லா இருக்காது. வந்த பிறகு பண்ணுவோம்’’ என்று எனக்காகக் காத்திருப்பார். பல சமயங்களில், ‘`அந்தப்பகுதியை நீயே எடுத்துடு’’ என்பார். அவர் ஒருபக்கமும் நான் வேறு பக்கமும் இரண்டு கேமராக்களுடன் ஷூட் செய்துகொண்டிருப்போம்.

இந்தச் சமயத்தில், சங்கரன் நாயர்போல தமிழில் தன் உதவியாளர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய இயக்குநர் பாரதிராஜாவைக் குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இயக்கியவர், என் நண்பர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. கலையை மறைத்துவைக்க நினைக்காத நல்ல மனிதர். மணிவண்ணன், பாக்யராஜ் போன்றோர் எல்லாம் அவர்வழி வந்தவர்கள்தாம். ஆனால், செட்டில் அவர்கள் நாணிக்கோணி நிற்பதைப் பார்க்கும்போது, ‘என்ன இப்படிக் கொண்டாடுறார். ஒருவேளை உறவுக்காரர்களா இருக்குமோ’ என்றெல்லாம்கூட நினைத்ததுண்டு.

மலையாள சினிமாவில் என்னை அரவணைத்த முக்கியமான இன்னோர் இயக்குநர் சேதுமாதவன் சார். அவர் என் சிறுவயதிலேயே என்னை இயக்கியிருக்கிறார். அவரின் முதல் படத்தில் நான் குழந்தை நட்சத்திரம். பிற்பாடு அவரின் ‘கன்னியாகுமரி’யில் நடிக்கும்போது, ‘`இன்னொரு மலையாளப் படத்துக்குக் கூப்பிடுறாங்க, போகலாமா’’ என்று ஆலோசனை கேட்டேன். ‘`இதெல்லாம் என்ன கேள்வி. நீ போ. உனக்கு டான்ஸ் தெரியும். கதை எல்லாம் பண்ற. நம்பிப் போ. மதிப்பாங்க. நானும் சொல்றேன்’’ என்றார். அவர் அன்று என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்து நான் போகும்போது அவர்கள் காட்டிய மரியாதையே வேறுமாதிரி இருந்தது.

  ஐ.வி.சசியிடமும் அதே அன்புதான். ‘`ஏய் கமல், நீ ஸ்டன்ட்காரனைக் கூட்டிட்டுப்போய் அதை எடுத்திட்டு வந்துடு. நான் அதுக்குள்ள இங்க க்ளைமாக்ஸுக்கு ரெடி பண்ணிட்டிருக்கேன். மதியம் 2 மணிக்குள்ள வந்து, நீயும் க்ளைமாக்ஸ்ல கலந்துடணும்’’ என்பார். `ஈட்டா’ உட்பட சில படங்களில் அப்படி இருவரும் வேலை செய்திருக்கிறோம்.

சோமன், கிட்டத்தட்ட கூடப்பிறந்த அண்ணன் மாதிரி. அப்போதெல்லாம் கேரளாவுக்குப் படப்பிடிப்புக்குப் போனால், எங்கு ரூம் போட வேண்டும், எந்தெந்த நாள் படப்பிடிப்பு என்பது உட்பட அனைத்தையும் பார்த்துக்கொள்வார். ‘`ஏய், அந்த ஹோட்டல் சரியில்லை. என்கூட ரூம் போடச்சொல்லிட்டேன்’’ என்பார். ஒரே கட்டில்தான் என்றால், ‘`நான்லாம் ஏர்ஃபோர்ஸ். உனக்கு அதெல்லாம் சரியா வராது. நீ சொகுசு, சிவிலியன்’’ என்று சொல்லி என்னை பெட்டில் படுக்கச்சொல்லிவிட்டு அவர் தரையில் படுத்துக்கொள்வார்.

இப்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அந்தந்த மொழிக்கலைஞர்களுடன் அவரவர்களின் மொழிகளில்தான் பேசுகிறேன். அது அப்படியே பழக்கமாகிவிட்டது. இது,  ஏமாற்று வேலையல்ல. எனக்கான ஒருவிதமான பயிற்சி. அப்படிப் பேசும்போது மலையாளிகளிடம் தமிழில் பேசிவிட்டால், ‘`நீங்கள் எதுக்கு தமிழ்ல பேசணும்’’ என்று ஆச்சர்யப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் என்னை அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க விரும்பாதவர்கள். அதேபோல, `‘மலையாளம் எனக்கு எழுத வராது’’ என்றால், ‘`அப்படியா? அது எப்படி இருக்க முடியும்?” என்று நம்ப மறுப்பார்கள். இப்படி அவர்களின் ஆளாகவே பார்க்கவைத்த கேரளத் திரைத்துறைக்கு நான் திரும்பத் திரும்ப நன்றி சொல்ல அதுதான் காரணம்.

பாரதிராஜா மற்றும் நடிகர்களுடன்
பாரதிராஜா மற்றும் நடிகர்களுடன்

இன்னும் சொல்லப்போனால் கன்னட ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் கிரிஷ் கர்னாட், பி.வி.காரந்த் உட்பட பலர் எனக்கு நல்ல பழக்கம். பி.வி.காரந்த்தை வைத்து ‘அம்மா வந்தாள்’ டைரக்ட் பண்ண வேண்டும் என்று ஆசை. ‘`அப்படியென்றால், தஞ்சாவூரில் ஏதாவது ஒரு வீட்டில் இரண்டு மாதங்கள்  தங்க வையுங்கள். எந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு அந்தச் சூழல் புரியணும். அதுக்கு அங்க தங்க அனுமதி வாங்கிக்கொடுங்க’’ என்றார். பிறகு அது நடக்கவில்லை. ஆனால் ‘அம்மா வந்தாள்’ அப்புவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை, கற்பனை இருந்தது. பிறகு, நடுத்தர வயதைக் கடந்ததும், வேறுவிதமான அப்புவாக அதை ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் மாற்றிக்கொண்டேன்.

தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை எனக்கிருக்கும் ட்ராக் ரெக்கார்டு வியப்பானது. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்கள், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்கள். ஆனால், தெலுங்கில் வெறும் 16 படங்களே நடித்துள்ளேன். அவற்றில் 12 சூப்பர் ஹிட். அதிலும் தெலுங்கு சினிமா சரித்திரத்தைச் சொல்லும்போது ‘சங்கராபரண’ பட வரிசையில் ‘மரோசரித்திரா’, ‘சாகர சங்கமம்’, ‘சுவாதி முத்யம்’ போன்ற என் ஆறு படங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. `இப்படி மிகப்பெரிய பெயரை நமக்குத் தந்திருக்கிறார்களே’ என்று எனக்கே வியப்பாக இருக்கும்.

இப்படி மலையாள, தெலுங்கு, கன்னட சினிமாக் கலைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை நம்முடன் இங்குதான் இருந்தனர். இப்போதுதான் புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் தனியே சென்று தனித்தனி இண்டஸ்ட்ரியாக இயங்குவதில் அவர்கள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால், அதை நமக்கான இழப்பாகத்தான் நான் நினைக்கிறேன். ஒருமுறை என்னிடம், ‘நேஷனல் சினிமா எங்கிருக்கிறது’ என்று கேட்டார்கள். ‘சென்னையில்’ என்றேன். ஆம், அதை விட்டால் கொல்கத்தாவைச் சொல்வேன். மும்பையை நேஷனல் சினிமா என்று சொல்லமாட்டேன். அவர்கள் இந்தி, மராட்டி சினிமா எடுப்பவர்கள் மட்டுமே. ஆனால் நாம், ‘சந்திரலேகா’வை இந்தியில் எடுத்தோம். ஏவிஎம், பட்சிராஜா, நாகிரெட்டியின் விஜயவாஹினி போன்ற ஸ்டுடியோக்கள்  இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களை எடுத்தார்கள். சிட்டாடல் ஃபிலிம்ஸ் மலையாளத்திலிருந்து வந்து இங்கு ‘விஜயபுரி வீரன்’ போன்ற படங்கள் பண்ணினார்கள்.

சந்திரலேகா படத்தில்
சந்திரலேகா படத்தில்

அப்படி எல்லா மொழிகளுக்குமான சினிமா சென்னையிலிருந்து போய்க்கொண்டிருந்தது. அத்தனை இந்திய மொழிகளிலும் சினிமா எடுத்த ஒரே கம்பெனி என்ற சாதனையைப் படைக்க வேண்டும் என்பதற்காக ஒரியா உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் சினிமா எடுத்த ராமாநாயுடுவையும் ‘வசந்த மாளிகை’  படத்தையும் நம்மால் பிரித்துப் பார்க்க முடியுமா? இப்போதும் தெலுங்குக்காரர்களுக்கு தாம் எங்கிருந்து பிரிந்து வந்தோம் என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் எல்லை கடந்துவந்து அவர்களால் ‘பாகுபலி’ செய்ய முடிகிறது. அந்த எல்லையைக் கடந்ததால்தான் இன்றும் ‘சந்திரலேகா’வை நினைத்து நாம் மார்தட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால், மும்பையை அப்படிச் சொல்லமுடியாது. அதனால்தான் நேஷனல் சினிமா சென்னையில் இருக்கிறது என்றேன்.

நாகேஷ் சார், எல்லோரையும் போல் என்னையும் வியக்கவைத்த கலைஞன். நீங்கள் கவனித்திருந்தால் அப்போது எல்லா கிராமங்களிலும் சிவாஜி சார், எம்ஜிஆர் மாதிரி ஓரிருவர் இருப்பார்கள். சமயங்களில் பெயரேகூட அதுவாக இருக்கும். அதன்பிறகு ரஜினி சார் மாதிரியும், என்னை மாதிரியும் அதே ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு பலர் வந்திருக்கலாம். ஆனால், எல்லாத் தெருவிலும் வெவ்வேறு வண்ணங்களில் தோளைக் குலுக்கிக்கொண்டு, நடந்து வரும்போது காலை இடறிவிட்டுக்கொண்டு ஒரு நாகேஷ் இருப்பார். ஒரு காமெடியனுக்கு அப்படி அமைவது ரொம்பக் கடினம். அதனால் அவரை பலபேருக்கான வாத்தியார் என்று சொல்லலாம். தோளைக் குலுக்கி இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தாலே நாகேஷ் என்று சொல்வதுபோல், அவரை அறியாமல் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர். அது ஒரு சிக்னேச்சர். `பந்தநல்லூர் பாணி’ என்று பரதநாட்டியத்தில் சொல்லுவதுபோல் அது நாகேஷ் பாணி.

சிவாஜி சாரும் அப்படித்தான். பல நாடக நடிகர்கள், மேடையில் சினிமாவில் ஒரு கவிதையை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேசி நடிக்கவேண்டும் என்பதற்கான வாத்தியார். ஒரே வாத்தியார் என்றுகூட தைரியமாகச் சொல்லலாம். ஒருமுறை, ‘`இந்த லிப் சிங்க் எனக்குக் கஷ்டமாக இருக்கு  கணேசா.  மனப்பாடம் பண்ணினாலும்கூட உதைக்கிறமாதிரி இருக்கு. அது எப்படி நீ சரியா பண்ற’’ என்று சிவாஜி சாரிடம் எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு இவர், ‘`கையெல்லாம் பெருசா நீட்டி பண்ணிட்டேன்னா வாயைப் பார்க்கமாட்டாங்க’’ என்று சொன்னாராம். அதேபோல, ‘`அந்த ஸ்டன்ட் காட்சியில் என்ன டெக்னிக்’’ என்று எம்.ஜி.ஆரிடம் சிவாஜி சார் கேட்பதும் உண்டாம். இப்படி ஒருவரைப் பற்றி மற்றவர்  கேட்பது, விசாரிப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

ஒருவரின் ஸ்டைலில் மற்றவர் எப்படி இன்ஃபுளூயன்ஸ் பண்ணியிருக்கிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஒருமுறை, நான் நடிகர் திலகத்தைப் பேட்டி எடுக்கும்போது, ‘` `யாரடி நீ மோகினி’ பாட்டுக்கு ஆடின டான்ஸ் ஸ்டைலை நீங்கள் எங்கிருந்து பிடித்தீர்கள்’’ என்று கேட்டேன். ‘`அது நான் இல்லை. ஹீரா லால்னு ஒரு டான்ஸ் மாஸ்டர். அற்புதமான கலைஞர். அவர் சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணினேன்’’ என்றார். அடுத்தநாள் டான்சர்ஸ் யூனியனிலிருந்து எல்லோரும் ஆளுக்கொரு மாலையுடன் வந்து, ‘`பேட்டி படிச்சோம் சார். யார் சார் இப்படிச் சொல்லுவாங்க’’ என்று  அவரின் காலில் விழுந்து வணங்கி நன்றி சொன்னார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்த ‘யாரடி நீ மோகினி’ பாட்டிலிருந்து ஒரு நடிகர் தன் முழுக் கரியரையே அமைத்துக்கொண்டார். நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்தப்பாட்டை பார்த்தீர்கள் என்றால் பின்னால் வரப்போகிற ரஜினி சாரின் சாயல் அதில் தெரியும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதேபோல ‘மனோகரா’ படத்தைப் பாராட்டும்போதெல்லாம் சிவாஜி சார், எல்.வி.பிரசாத் பற்றிச் சொல்லாமல் இருக்கவே மாட்டார். எல்.வி.பிரசாத் அவர்களை ஸ்டுடியோ ஓனர், ‘ஏக் துஜே கேலியே’ படத் தயாரிப்பாளர் என்ற அளவே பலர் நினைத்துக்கொண்டிருப்போம். நானும் அப்படி நினைத்திருந்தேன். ஆனால், சிவாஜி சார், சிங்கீதம் சார் போன்றோர் சொல்லித்தான் அவரின் படங்களைப் பார்த்து அவரை மனதில் ஏற்றிக்கொண்டேன். அந்த மரியாதையில்தான் அவரை நடிக்கக் கூப்பிட்டேன்.  அவரும்   வந்து   நடித்துக்கொடுத்தார். ஒருமுறை அவரின் மகன் ரமேஷ்ஜி, ‘`எங்க அப்பாவுக்கு ஆயுளை நீட்டிவிட்டதே அந்த நடிப்புதான். திடீரென்று நடிக்கும்போது உற்சாகமாகிவிட்டார். டைரக்ட் பண்ணும்போது, ஸ்டுடியோ வாங்கும்போது இல்லாத சந்தோஷம்... நடிக்கவந்ததும் திரும்பி வந்துவிட்டது. அதுக்காக தேங்க்யூ கமல்’’ என்று கைகொடுத்தார்.

நான் என் அலுவலகத்தில் அப்போது நாகேஷ் சாரின் போட்டோ மட்டுமே வைத்திருப்பேன். ஒருமுறை, ‘`இதென்னா நீ இவன் போட்டோவை மட்டும் வெச்சிருக்க’’ என்றார் வாலி சார். அதற்கு நான் என்ன பதில் சொன்னேன், வாலி சார் என்ன சொன்னார் என்பதுமட்டும் அல்லாமல், கிட்டத்தட்ட என்னுடைய 100 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுடனான பயணம் பற்றியும் சொல்கிறேன், அடுத்த வாரம்!

- உங்கள் கரையை நோக்கி!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.