Published:Updated:

"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic

"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic
"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic

'மலையாள கிளாசிக்' தொடரின் 26-வது பகுதி. 'பூமரம்' படம் குறித்த விரிவான கட்டுரை.

சினிமாவை ஒரு பழக்கமாகத் துவங்கி பார்க்க ஆரம்பித்த காலத்தில், இங்கே முற்பகல் ஷோக்கள் துவங்கின. பார்க்கவே வாய்ப்பிலாத பல பழைய படங்களையும் கவர் செய்துகொண்டிருந்தேன். சென்னையைச் சுற்றிலும் பல டென்டு கொட்டாய்கள் இருந்தன. அங்கேயும் பழைய படங்களைத் தொடர்ந்து போடுவார்கள். நான் பார்க்காத படமே இல்லை. விஷயம், நான் பார்த்த பல படங்களில் கதாநாயகர்கள் கல்லூரிக்குப் போகிறவர்களாகத்தான் இருந்தார்கள். பிறகொரு நாள் ரிலீஸான 'நீதிக்கு தலைவணங்கு' படத்தில் எம்ஜியாரும், நம்பியாரும் படம் துவங்கும்போது கல்லூரி மாணவர்கள்தான். ஆளுக்கொரு ரஃப் நோட்டு வைத்திருப்பார்கள். காலம் மாறி ஒரு 'தலை ராகம்' வந்தபோது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அப்படிப் பல படங்கள் வந்தன. 'சேது' படத்தில் வகுப்பறை எங்கே என்று எஸ்.வி.சேகர் சில்லியாக ஒரு கேள்வி கேட்டார். மலையாளத்தில் ஒரு படத்தில் மதுவும், நசீரும் கல்லூரியில் இருந்துகொண்டு விசிலடித்ததற்குத் திடுக்கிட்டதை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். கல்லூரிப் படங்கள் என்றால் ஒரு சலிப்பும் பயமும் வரவே செய்கின்றன. 'பூமரம்' நமது ஐயங்களைத் துடைத்துக் கழுவிவிடுகிறது.

"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic

படத்தின் துவக்கத்திலேயே கவுதமின் வீட்டில் அவனும், அவனுடைய அப்பாவும் பேசுவதாக ஒரு காட்சி வரும். மகாத்மா யுனிவர்சிட்டியில் நடக்கப்போகிற யூத் பெஸ்டிவலில் அவன் தனது கல்லூரி வெற்றிக் கோப்பையைத் தட்ட வேண்டியது பற்றி சொல்லும்போது, 'கோப்பை என்ன முக்கியமா?' எனக் கேட்கிறார் அவனது அப்பா. டிரெண்டு வேறு, கலை வேறு என்பதைப் பேசுகிறார்கள். ஏறக்குறைய இந்தப் பேச்சின் மையம்தான், இந்தப் படமே!. அதற்கு ஒரு கெரில்லா தாக்குதல்கொண்ட திரைக்கதையும் இருக்கிறது.

கவுதம், மகாராஜா கல்லூரியில் படிக்கிறான். மாணவர் தலைவனும்கூட. அவனும் அவனது கல்லுரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அடங்கிய ஒரு குழு கலைநிகழ்ச்சிகளுக்குத் தயாராகிறது. இடைவிடாத பயிற்சி. கடந்த வருடங்களில் எல்லாம் தெரசா பெண்கள் கல்லூரி வெற்றி பெற்று கோப்பையை அவர்களே தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடமும் தாங்கள் கொண்டு செல்கிற கோப்பையை அவர்களே திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்று மாணவிகள் தலைவியான ஐரின் தனது குழுவினருடன் இடைவிடாது பயிற்சி செய்துகொண்டிருக்கிறாள். அவர்களிடம் இருக்கிற கோப்பையை வாங்கி வரவேண்டும் என்கிற சபதத்துடன் கவுதம் குழு கிளம்புகிறது. அவர்களும் வந்து சேர்கிறார்கள். போட்டிகள் துவங்குகின்றன. மனதைத் தொடும் பேச்சுடன் விஐபி மீரா ஜாஸ்மின் விழாவைத் துவக்கி வைக்கிறார்.

சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள் இம்மாதிரிப் படங்களில் ஒரு ஆர்டரை யூகித்துக் கொண்டுவிடுவார்கள். ஆனால், படத்தில் அவைகளெல்லாம் வராது. தொடர்ந்து மேடையைக் காட்டி சாகடிக்கிற வியாபரமே கிடையாது. ரிகர்சல்களின் மூலம் இரண்டு பக்கத்திலும் உள்ளவர்கள் எந்த மாதிரி சரக்குகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கிவிடுகிறது. அதேநேரம் பாடலோ, கவிதையோ, மிமிக்ரியோ, கதாபிரசங்கமோ, நடனமோ சிறிய துண்டுகளாய் நம்மைக் கவர்ந்து மறைகின்றன. இரண்டு பக்கமும் மார்க்குகள் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நிலையில், தெரசா கல்லுரி மூன்றாம் இடத்தில்கூட பின்தங்கி அந்தக் குழுவினர் சோர்விற்க்ச் சரிகிறார்கள். ஆனால், விடுவதாய் இல்லை. படத்தின் கதைப்படி கவுதம் கவிதைப் போட்டியில் பாட வேண்டியவன். படத்தில் அப்படி ஒரு காட்சியில்லை. ஆனால், படம் முழுக்க அவன் கவிதைகளைப் பாடிக்கொண்டே இருக்கிறான். ஐரினும் கவிதை எழுதுகிறவள் என்பது படத்தில் ஒரு செய்தி மட்டுமே. அவள் ஒரு நல்ல தலைவி என்பதுதான் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.

படத்தின் பிற்பகுதியில் சில சிக்கல்கள் வருகின்றன. கௌதம் குழுவினர் நம்பிக்கொண்டிருந்த 'மைம்' செய்கின்ற பையன்களை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விடுவித்துக்கொண்டுவர முடியவில்லை. அடிதடி மோதலில் ஒரு போட்டோகிராஃபி மாணவனுக்கு கண் போயிருக்கிறது. இப்படி ஒரு வெற்றியில் கோப்பையை வாங்கி என்ன இருக்கிறது என்று கேட்கிறார், கவுதமின் அப்பா. எந்த மாதிரி உள்பார்வையைக் கொண்டு உங்களின் கலை இயங்கும் என்று கொதிக்கிறார். ஒரு மாணவர் தலைவன் நடந்த தவறுகளுக்கு நான் பொறுப்பில்லை என்று விலக முடியாது என்பது நியாயமாகவே இருக்கிறது. தெரசா கல்லூரி கோப்பையை மீட்டதில் வியப்பில்லை.

"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic

ஆனால், கவுதம், ஐரின் குழு உள்பட மொத்த மாணவர்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருகிறான். அனைவரையும் நெகிழ வைக்கிற ஒரு சம்பவம் அங்கே நடக்கிறது. போரில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, ஒரு கட்டத்தில் சாந்தியை சமாதானத்தை எட்டிய அசோகனின் கதையைத்தான் அவர்களால் மைமாக நடத்த முடியாமல் போயிற்று. அதற்கு அப்புறமும் ஒரு படியேறின இந்த நிகழ்ச்சியில் மனம் ஒன்றுபட்டு அத்தனைபேரும் மெய் மறந்திருக்கையில், படம் முடிகிறது. அந்தக் கிறக்கம், தன்னால் நமக்கும் இருக்கும்.

முதலில் இப்படத்தின் பெரும்பகுதி டாக்குமென்டரி என்று சொல்லவேண்டும். வலுவான, சுவாரஸ்யமான ஒன்று என்பது முக்கியம். அவ்வளவு முகங்கள். அவ்வளவு புன்னகை. அவ்வளவு நடவடிக்கைகள். அவ்வளவு வர்ணங்கள். மனித முகங்கள் என்பதே ஒரு பெரிய தொடர்ச்சிதானே? அதில் இல்லாத கன்டினியூட்டியா?! படத்தில் ஒரு துண்டாய் வருகிற மோகினி ஆட்டத்திலிருந்து, கிடார் பிட்டு வரை... சர்வ நிறைவு. கவிதைகள் எல்லாம்கூட நிரவித் தள்ளுகின்றன. இப்படி முகங்களையும், பிஹேவியர்சையும் அள்ளித் தொகுத்துக்கொண்டு, அதனூடே ஒரு தங்கக் கம்பியாய் நீண்டிருக்கிறது திரைக்கதை. பொதுவாய் இதெல்லாம் வெற்றிகொள்ள முடியாதவை. மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இயக்குநரின் மனதில் ஓடிய படமும், எடிட்டுங்குமாய் வேறு ஒரு தினுசை நிறுவிக் காட்டியிருக்கிறார்கள். திரைக்கதைக்குள் வைரம் மின்னுவதுபோல ஒரு நாடகமும் நிகழ்கிறது. அருமையான ஒரு போலீஸ் ஸ்டேஷன் காட்சி. மறக்கவே முடியாது. படத்தின் வேகம், ஜம்பிங், முந்துதல் போன்றற்றிற்குப் 'பிரேமம்', 'அங்கமாலி டைரீஸ்' போன்ற ஸ்டைல்ஸ் காரணம் என்றால், இப்படம் அதை மிஞ்சியிருக்கிறது.

அப்புறம் வழக்கமான தடங்களிலிருந்து விலகி, இப்படம் மனங்களைக் கொள்ளையிடக் காரணம் பாடல்கள். படத்தின் பெரும்பகுதியும் பின்னணி இசையை பாடல்களே இழைகின்றன. ஒரு பாடல்கூட குறி தவறவில்லை என்பதுடன், அவை திருட்டுத்தனமான மோசடிகள் இல்லாமல் நேர்மையாய் இருந்தன என்பதை தனியாகக் குறிப்பிட வேண்டும். நான் சொல்லவருவது பலருக்கும் புரியாமல்கூட இருக்கலாம். ஒன்றுமில்லை, வரக்கூடாத இடத்தில் வந்து தன்னைத் திணித்துக் கொண்டு மற்றதையும் குழப்பியடிக்கிற அதிகப்பிரசிங்கித்தனம் மருந்துக்கும் செய்யவில்லை என்று சொல்கிறேன். இதற்கெல்லாம்கூட இயக்குநரைத்தான் பாராட்ட வேண்டும். அதற்கு அழகான ஒத்துழைப்பு கொடுத்த இசை இயக்குநர்களுக்குப் பாராட்டு.

'இனி ஒரு காலத்தே' என்று துவங்கும்போதே, அந்தப் பாட்டுக்கு எனக்குக் கண்ணீர் வரும். மிருது மந்தகாசம், சித்ராவைக் கேட்டுப் பாருங்கள். கடவத்தொரு தோணி, ஞானும் ஞானுமெண்டாளும், இறுதியாய் சிகரம் வைத்தார்போல ஒரு சூர்யனல்லே? வெகு காலத்துக்குப் பிறகு மலையாளத்தில் ஒரு தொகுப்பை மறுபடி மறுபடி கேட்கிறேன். பார்க்கிறேன்கூட. படத்திற்காகப் பத்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அத்தனைக்குள்ளிலும் தேன் குணம் உண்டு. ஞானம் சுப்பிரமணியன் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். என்ன மாதிரி வொர்க் சார்?!

"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic

இதை நான் சொன்னபோது எல்லாப் புகழும் இயக்குநருக்கே என்றார். அது வேறு. ஆனால், இந்தக் கூட்டத்தை, குழுக்களை, பையனை, பெண்ணை, மூன்றாம் பாலினக் கலைஞர்களை யாரும் மோகிக்கிற ஒன்றாய் மாற்றுகிற லாவகம் உண்டே, அதற்கு ஈடுண்டா?! படமெங்கும் ஆற்றொழுக்காய் ஓடின அந்த சீரான அழகுக்கு ஒளிப்பதிவாளர் ஒரு முக்கியக் காரணம்.

இந்தப் படம் சென்னையில் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. மம்முட்டியோ, லாலோ, பஹத்தோ, துல்கரோ, நிவினோ இருந்தால் சப்பைப் படமென்றாலும் மல்லுஸ் கூட்டம் போட்டுவிடுவார்கள். மற்றவர்களும்கூட ஏறக்குறைய அப்படித்தான். ஒ, காளிதாசா என்று விலகியிருக்கக்கூடும். ஆனால், அவன் பெரிய நடிகன். காளிதாசனின் அப்பா ஜெயராமேகூட தனது முழுத் திறமையை வெளிக்கொண்டு வரமுடியாத இடத்தில் தொடர்பவர். இவருக்கு அது வந்துவிடக் கூடாது. இப்படத்தின் போர் முழக்கங்களுக்கு நடுவே ஒரு அமைதியின் ஒளி இருந்தவாறு இருந்ததற்கு, கவுதம் என்கிற அந்தப் பாத்திரப் படைப்பே காரணம். காளிதாஸ் அதை மேலும் கவுரவப்படுத்துகிறார். அவரது முகம் நெடுகிலும் நம்மை ஆற்றுப்படுத்தியவாறு இருக்கிறது. கண்ணாடி போட்டுக்கொண்டு பார்வையால் அவரையே வருடிக்கொண்டிருக்கும் ஒரு கொதிப்புள்ள பெண்ணுக்கு, அவர் தனியாய் ஒரு பார்வையைக் கொடுப்பதைப் பார்க்க வேண்டும்... ஆஹா.

ஐரீன் இயல்பு. கோஷமிடும்போது நம்ம லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கீச்சுக் குரல் வருவது அவ்வளவு பொருத்தம். பார்ப்பதற்கும் சற்று அவரைப்போலவே இருக்கிறாரோ?!

இப்படத்தில் சற்றேனும் சினிமா தொனி வருவது போலீஸ் ஸ்டேஷன் எபிசோடில்தான். இன்ஸ்பெக்டராக வந்த ஜோஜு ஜார்ஜ், நல்லதும் கெட்டதுமான போலீஸைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். தனியாக சொல்ல நடிகர் நடிகைகள் இல்லை. ஆனால், பிரேம் முழுக்க மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். கதை, கவிதை சொல்கிறார்கள். பார்வையற்ற ஒரு இசைக் கல்லுரி மாணவர் ஒரு பேட்டிக்காக தனது காதல் கதையை சிரித்துக்கொண்டே சொல்வது ஒன்று போதும். தூக்கம் தவிர்த்து குழுவாக அமர்ந்து அவரவர் தனது சொந்த வாழ்க்கையை மனதில் ஓட்டிக்கொண்டிருக்க, அந்தக் கல்லுரி ஆசிரியர் ஒருவர் சொல்லும் கவிதை, அந்த நேரத்தில் எரிகிற அவரது முகம்... காவியம்தான். இந்தமாதிரி படமெங்குமிருந்த ஒவ்வொருவரையும் யோசித்துக் கொண்டிருக்கலாம். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு இல்லாத மீனாட்சி என்கிற கருப்பியின் காதலைப் போலவே, மீண்டும் மீண்டும் வந்த குட்டிக் குட்டியான காதல்களையும், அவற்றை செய்து கொண்டிருந்தோரையும். அப்ரிட் ஷைன் நான் கவனித்து வைத்த இயக்குநரே அல்ல.

'1983' என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். பிடித்தும் இருந்தது. ஆனால், அதைக் குறிப்பிடத்தக்க படமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்கு அப்புறம் அவர் இயக்கிய 'ஆக்ஷன் ஹீரோ பிஜு' சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆயினும், அப்படத்தில் நல்ல காட்சிகள் இருந்தன என்பதையும் மறுக்க முடியவில்லை. மனதில் இயக்குநர் பெயர் படியக்கூட இல்லை என்கிற உண்மையைச் சொல்லியாக வேண்டும். தியேட்டரில் படம் பார்க்கும்போது இன்ன ஆள்தான் இந்தப் படத்தை செய்திருக்கிறார் என்பதுகூட தெரியாது. படம் உண்டாக்கிய மிரட்சியில் இடைவேளை நேரத்தில் விசாரிக்கும்போதுதான், பால் இவரது படம் என்றார். ஒரு வாய்ப்பாடு கதையை எடுத்து அதை நான்கு பக்கமும் சட்டமிட்டுக் கருத்துள்ள ஒரு நல்ல படத்தை யாராலும் சொல்லிவிட முடியும். இது அப்படி நடக்கிற காரியமில்லை என்கிற கோணத்தில் இயக்குநரை நான் மிகவும் வியக்கிறேன். இன்னுமே ஒரு புதிய கோணத்தில் சினிமாவை நகர்த்த அவர் முன்மாதிரியாக இருந்துவிட்டார் என்கிற சந்தோஷம் அளவிடற்கரியது.

"பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!" - #MalayalaClassic

எனக்கு லட்சியவாதத்தில் கொஞ்சமெல்லாம் அவ நம்பிக்கைகள் உண்டு. மனிதர்களுக்குப் பெரிய வொர்த் இல்லை என்பதால். ஆனால், அந்த உணர்ச்சிகளுக்கு பொருளே இல்லை என்றால் ஒருவேளை மானுடம் தேங்கி சீரழிந்திருக்கும். எனவே... க்ளைமாக்ஸ் பாட்டு.

ஒரே சூர்யனல்லே? ஒரே பூமியல்லே? ஒரே ரக்தமல்லே? ஒரே சொப்னமல்லே?

.

அடுத்த கட்டுரைக்கு