Published:Updated:

முக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இவ்ளோ பேசுவீங்களா?! அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி?

முக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இவ்ளோ பேசுவீங்களா?! அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி?
முக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இவ்ளோ பேசுவீங்களா?! அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி?

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி பன்னு, அபிஷேக் பச்சன், விக்கி கௌஷல் நடிப்பில் வெளிவந்திருக்கும் #Manmarziyaan (மனம் விரும்புவதைப் போல) படம் எப்படி?

ரு குறிப்பிட்ட பேட்டர்னுக்குள் சிக்கிக்கொண்ட இயக்குநர்கள் அவ்வப்போது அதை உடைத்து வெளியே வர நினைப்பார்கள். வெவ்வேறு ஜானர்களில் படங்கள் கொடுக்க முற்படுவார்கள். அதில் வெற்றி சதவிகிதம் என்பது குறைவுதான் என்றாலும் அந்தப் படங்கள் பரவலாகப் பேசப்படும். இந்த விளையாட்டில் தற்போது இது பாலிவுட் டார்க் ஹார்ஸ் அனுராக் காஷ்யப்பின் முறை. (ஆம், நம் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் மிரட்டிய வில்லன்தான்!. அவருக்கு இப்படியொரு இன்ட்ரோ கொடுக்கக்கூடாது தான். என்ன செய்ய ஆப்பரேசன் தியேட்டரலயும் மசாலா கேட்கும் காலமிது) அவர் எடுத்த பல படங்களில் துப்பாக்கிகள் வெடிக்கும், ரத்தம் தெறிக்கும், போதை வஸ்துக்கள் அடிக்கடி தலைகாட்டும். இவை அனைத்திற்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ஒரு ஃபீல்குட் ஃப்ரஷ் முக்கோணக் காதல் கதையைக் கொடுக்க நினைத்திருக்கிறார். அதில் வெற்றி பெற்றிருக்கிறாரா? டாப்ஸி பன்னு, அபிஷேக் பச்சன், விக்கி கௌஷல் நடிப்பில் வெளிவந்திருக்கும் #Manmarziyaan (மனம் விரும்புவதைப் போல) படம் எப்படி?

சுதந்திரப் பறவையான ரூமிக்கும் (டாப்ஸி பன்னு) DJ-வாக இருந்துகொண்டு இசைத் துறையில் சாதிக்க நினைக்கும் விக்கிக்கும் (விக்கி கௌஷல்) ஃப்யார் (Fyaar). காமத்தின் பிடியில் எப்போதும் சிக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் காதல் ஒருநாள் ரூமியின் வீட்டில் உள்ளவர்களிடமும் மாட்டிக்கொள்கிறது. உடனே, அவர்கள் டாப்ஸிக்கு வேறு திருமண ஏற்பாடுகளைச் செய்ய, டாப்ஸி தன் காதலனான விக்கியை வந்து பெண் கேட்குமாறு வற்புறுத்துகிறாள். திருமணப் பந்தத்திற்கு தயாராகாத விக்கி மறுக்கிறான். வேறு வழியின்றி ராபியை (அபிஷேக் பச்சன்) திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால், பழைய காதல் விட்டுவிடுமா என்ன? புதிய மண வாழ்க்கை, பழைய காதலன் இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்ட டாப்ஸி இருதலைக்கொள்ளி எறும்பாக அவஸ்தைப் படுகிறாள். இதனிடையில் டாப்ஸியின் இறந்தகாலத்தைக் குறித்து தெரிந்த பின்னும், அபிஷேக் பச்சனிற்கு காதல் வருகிறது. இறுதியில் யாருடைய காதல் ஜெயித்தது?

மிகப் பழைமையான கதைதான். ஆனால், அத்தகைய கதைகளில் இதுவரை தொடத்தயங்கிய தொட்டிருக்க வேண்டிய விஷயங்கள் இதில் வெளிப்படையாகப் பேசப்பட்டிருக்கின்றன. நிறுவனமயமாக்கப்பட்ட திருமண உறவுகள் மீதான தற்கால இந்திய இளைஞர்களின் பார்வையை சற்று விரிவாகவே பேசுகிறது படம். மூன்று பேர். அவர்கள் எடுக்கும் முடிவுகள். அதில் யாருடைய முடிவு சரி, யாருடையது தவறு? இப்படி அந்தந்த நேரத்தில் ஒரு வேகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்தும், அதன் எதிர்வினைகள் குறித்தும் படம் அலசுகிறது. மன்மர்ஸியானின் ரூமியாக டாப்ஸி. விக்கியுடனான ரொமான்ஸ் ஆகட்டும், திருமணக் கலாட்டாவாகட்டும், ராபியை முதலிரவைக் கொண்டாட அழைப்பதாகட்டும் அனைத்திலும் கைதட்டல்களை அள்ளுகிறார். ஹிந்தியில் தொடர்ந்து நல்ல ஸ்கிர்ப்ட்களைத் தேர்ந்தெடுக்கும் அவர், இதிலும் வெற்றி அடைந்திருக்கிறார்.

விக்கி கௌஷல் ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டி வருகிறார். இந்தத் திரைப்படத்திலும் அது சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. அவரது ஹேர்ஸ்டைலும், அவர் செய்யும் சேட்டைகளும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. படம் முழுக்க ஜாலி கேலியுடன் திரியும் அவர், தன் தந்தை தன் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும்போதும், டாப்ஸியின் கரம்பிடிக்க வந்துவிட்டு, அந்த இரவில் சொல்லாமல் அழுதுகொண்டே ஜீப்பை அசுரத்தனமாக விரட்டுவதாகட்டும் இன்றைய யதார்த்த மிடில் கிளாஸ் இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். அபிஷேக் பச்சனின் பெரும் அமைதியும், ஒரு கட்டத்தில் தன்னை மீறி வெளிப்படும் கோபமும் அவரது ஏழாவது ரீ என்ட்ரிக்கான திரைப்படம் இதுதான் என்பதை உறுதி செய்கின்றன. மனைவியின் முன்னாள் காதலை, காதலனை மிகவும் மெச்சூராக அணுகும் அபிஷேக்கின் கேரக்டர் படத்தின் பெரும் பலம். அதுதான் அவரை வழக்கமான ஃபாரின் மாப்பிள்ளை கேரக்டர்களில் இருந்து வேறுபடுத்திப் படத்தின் கதாநாயகர்களில் ஒருவனாக முன் நிறுத்துகிறது. விவாகரத்து பத்திரங்களில் கையெழுத்துப் போட்ட பின்பு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலும் அந்த உரையாடல் காட்சி, அதற்கு முத்தாய்ப்பாக “ரெண்டாவது முறையா ஃபேஸ்புக் ரிக்வெஸ்ட் குடுங்க. அக்ஸ்ப்ட் பண்றேன்” என்று அபிஷேக் சொல்லும் அந்த இடம், உணர்ச்சிக் குவியல். இன்னும் இதே மாதிரி உங்கள் நடிப்பை வெளியே கொண்டுவரும் படங்கள் பண்ணுங்க ஜூனியர் Big B.

ஒரு முக்கோணக் காதல் கதை அனுராக் போன்ற இயக்குநரிடம் இருந்து வருகிறது எனும்போது திரைக்கதையில் மாயாஜாலங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் அந்தப் பக்கமே அனுராக் செல்லாமல் வெறும் இயக்குநராக மட்டுமே இந்தப் படத்தை கையாண்டு இருக்கிறார். அதுதான் படத்தை பலவீனமாக்கியிருக்கிறது. கேமரா கோணங்கள், கதாபாத்திரங்களில் மேல் பரவும் வெளிச்சம், பின்னணி இசை போன்றவற்றிலேயே நிறைய விஷயங்களை உணர்த்திவிடும் அவரின் மேக்கிங், இதில் சுத்தமாக மிஸ்ஸிங்! அத்தனை கதாபாத்திரங்களும் படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் தனியாக வேறு ஒரு கதாப்பாத்திரம் நிறையப் பேசுவதுபோல எழுதியிருக்கிறார்கள். “பேசறதுக்கு வரி போட்ட, நீதான் அதிகம் கட்டுவ!” என்று அந்தக் கதாபாத்திரதை மட்டும்  கலாய்க்கும் ஒரு வசனம், எல்லோருக்கும் பொருந்தும் ஜி! மிடியல! குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள் தோன்றும் காட்சிகளில் எல்லாம், அந்தக் காட்சி சொல்ல வரும் விஷயம் முடிந்த பிறகும்கூட வசனங்கள் முடியாமல் நீண்டுகொண்டே சீரியல் வாடையை வீச வைக்கின்றன. இதனால் முதல் பாதியே மூன்று மணி நேரம் ஓடிய ஃபீல்! திரைக்கதையில் நீங்களும் கைவைத்திருக்கலாமே அனுராக்?

ஆறுதலாக, ஊரில் அடிக்கடி தென்படும் இரட்டைப் பிறவி பெண்கள், ஹனிமூன் சென்ற இடத்தில் உட்கார்ந்திருக்கும் இரட்டைப் பிறவி இளைஞர்கள், வேகமாக நிகழ்த்தப்படும் அரேஞ்ச்டு மேரேஜ் வியாபாரங்கள், காமம் கலந்த காதலுக்கு விளக்கம் கொடுக்கும் ஃப்யார், எனச் சில இடங்களில் மட்டும் அனுராக் டச்!  'நீ சந்தோஷமா இருக்கியா?' என்று திருமணம் முடிந்து மறுநாளில் தன் தாத்தா கேட்கும் கேள்விக்கு, "தெரியல. காதல் முடியுறதுக்குள்ள, கல்யாணம் நடந்துருச்சு" எனக் கூறும் டாப்ஸியும், ‘உனக்கு வேணும்னா நான் டைவர்ஸ் தரேன். உன் காதலனோட போயிடு. முடிவை நீதான் எடுக்கனும்’ எனக் கூறும் அபிஷேக்கும், ஏனோ ‘மௌன ராகம்’ மோகன் – ரேவதி, மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ ராஜேஷ் - அம்பிகா ஆகியோரை நினைவூட்டுகின்றனர்.

'தேவ் டி'யை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றன அமித் த்ரிவேதியின் பாடல்களும் பின்னணி இசையும். மன்மர்ஸியானில் பன்னிரண்டு பாடல்கள்; இந்தப் பாடல்கள்தான் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதையில் சற்றே ஆறுதலான விஷயம். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இங்கே எப்படி வியாபாரமாக்கப்பட்டு ஓர் இரவில் முடிகின்றன; ஒரு முடிவு சரியா, தவறா என்று யோசிப்பதை மட்டும் ஏன் அதை எடுத்த பிறகே செய்கிறோம் எனப் படம் பேசிய விஷயங்கள் நியாயமானவைதான். இப்படிப் பேச வரும் விஷயம் அவசியமான ஒன்றாக இருக்கும்போது அதை அனைவருக்கும் ஏற்றப்படி ஜனரஞ்சகமான ஒரு படைப்பாகக் கொடுத்திருக்கலாமே? வசனங்களையும் கதாபாத்திரங்களையும் வெகுவாக குறைத்து, திரைக்கதைக்கும் சற்று வேகம் கூட்டியிருந்தால், #Manmarziyaan தன் பெயருக்கு ஏற்றாற்போல நம் மனம் விரும்பும் ஒன்றாக இருந்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு