Published:Updated:

என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?
பிரீமியம் ஸ்டோரி
என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

சரித்திரம்நிவேதிதா லூயிஸ்

என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

சரித்திரம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?
பிரீமியம் ஸ்டோரி
என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

கி.பி 1540... இந்த ஆண்டில்தான் எழுதப்படுகிறது, இன்று பரபரப்பாகப் பேசப்படும் `பத்மாவதம்' காவியம். இதை எழுதிய மாலிக் முஹம்மது ஜாயஸி, தான் வாழ்ந்த காலத்தில் பெருமதிப்போ, பெயரோ, புகழோ பெற்ற கவிஞர் அல்லர்; பிறவியிலேயே ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு, அம்மைத் தழும்புகள் நிறைந்த முகம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட, சில சூஃபி ஃபக்கிர்களால் வளர்க்கப்பட்டவர். அமேதி நகருக்கு அருகே உள்ள `ஜயஸ்' என்ற ஊருக்கு வரும் ஜாயஸி, அங்கேயே தங்கிவிடுகிறார். திருமணத்துக்குப் பிறகு பிறந்த ஏழு குழந்தைகளும் விபத்தில் இறந்துபோக, இஸ்லாமிய சூஃபி மரபு வழிபாடுகளில் அதீத ஆர்வம்கொண்டு எழுதத் தொடங்குகிறார்.

`பத்மாவதம்' என்ற காவியத்துக்காகத் தன் கதைமாந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் ஜாயஸி, ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அலாவுதீன் கில்ஜியைத் தன் கதை நாயகர்களில் ஒருவராக வரிக்கிறார்.

`சித்தூரைக் கில்ஜி கைப்பற்றினான்' என்கிற ஒற்றை வரி மட்டுமே சரித்திர உண்மை என்பதும், `பத்மாவதி' என்கிற அரசி வாழ்ந்ததற்கான எந்த வரலாற்று ஆவணமும் இல்லை என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களால் அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றன. காவியத்தின் முடிவில், `இந்தக் கதையை நானே உருவாக்கி விவரித்திருக்கிறேன்' என்று `இது தன் கற்பனை மட்டுமே' என்பதை உணர்த்தும் வகையில் எழுதியிருக்கிறார் ஜாயஸி.

என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

வளம் கொழிக்கும் சிங்கள நாட்டிலிருந்து தொடங்குகிறது கதை. பாக்கு, தென்னை, ஈச்சம் என நெடிதுயர்ந்த மரங்கள் சூழ்ந்த அழகிய சிங்களத் தீவின் மன்னன் கந்தர்வசேனன். அவனின் செல்லமகள் பத்மாவதி. பன்னிரண்டு வயது நிரம்பிய பத்மாவதிக்குப் பிறந்த நாள் பரிசாக அரண்மனை ஒன்றைப் பரிசளிக்கிறான் கந்தர்வசேனன். சிறு வயதிலேயே பேரழகியான பத்மாவதி, சிறந்த அறிவாளியும்கூட. அவளது சிறந்த தோழன், ஹீராமன் என்கிற பேசும் கிளி. சாத்திரங்கள் கற்றுத்தேர்ந்த ஹீராமனும் பத்மாவதியும் வேதங்கள் குறித்து அலசுவார்கள். தன் வரவைக்கூட திரும்பிப் பார்க்காமல், மகளும் கிளியும் கதைகள் பேசிச் சிரிப்பது கண்டு கடும்கோபம்கொள்கிறான் கந்தர்வசேனன். தன் மகளின் கவனம் கவர்ந்த கிளியைக் கொல்ல ஆணையிடுகிறான். பயந்துபோன ஹீராமன், கண்ணீருடன் பத்மாவதியைப் பிரிந்து காட்டுக்குப் பறந்துசெல்கிறது. ஹீராமனின் பிரிவால் வாடுகிறாள் பத்மாவதி. கிளியோ, பஹேலியா இனத்து வேடன் ஒருவனிடம் சிக்கிக்கொள்கிறது. வேடன் அதை ஒரு பிராமணனிடம் விற்க... கிளியின் அறிவைக்கண்டு வியக்கும் அவன், சித்தூரின் மன்னன் ரத்தினசேனனிடம் ஹீராமனை விற்றுவிடுகிறான். மன்னன் ரத்தினசேனனிடம் இளவரசி பத்மாவதியின் அழகையும் அறிவையும், புகழ்கிறது கிளி. விரகதாபம் ஆட்கொள்ள, பத்மாவதியின்மேல் உன்மத்தம்கொள்கிறான் ரத்தினசேனன். அவன் தாயும், முதல் மனைவி நாகமதியும் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. முனிவர்போல ஆடை தரித்து, தன் வாழ்வை முழுமையாக்கக்கூடிய பத்மாவதியின் காதலை அடைய, நீண்ட பயணம் மேற்கொள்கிறான். 16 ஆயிரம் வீரர்கள்கொண்ட சேனை மற்றும் ஹீராமன் கிளி துணையுடன் ரத்தினசேனன் இலங்கையை அடைகிறான். பத்மாவதியைக் கரம்பிடிக்கும் ஆர்வத்தில், அங்குள்ள ஈசன் கோயிலில் கடும் தவம் புரிகிறான்.

பத்மாவதியைச் சந்தித்து, ரத்தினசேனன் வரவு குறித்து அறிவிக்கிறது ஹீராமன். ரத்தினசேனனைச் சந்திக்கக் கோயிலுக்கு வரும் பத்மாவதி, துறவுக்கோலத்தில் தவம்   இருக்கும் அவன்மீது காதல்கொள்கிறாள். ஆனால், அவனது தவத்தைக் கலைக்க விரும்பாமல் அரண்மனைக்குத் திரும்புகிறாள். தன்னைக் காணவந்த பத்மாவதியைத் தவறவிட்ட வருத்தத்தில், உடன்கட்டை ஏறுவதுபோல நெருப்பு வளர்த்து, அதில் குதிக்கத் தயாராகிறான் ரத்தினசேனன். அவனைத் தடுத்து ஆட்கொள்ளும் சிவனும் பார்வதியும் அறிவுரை சொன்னதன் பேரில், துறவிகள் போன்று வேடம்பூண்ட தன் சேனை உதவியோடு இலங்கைமீது போர் தொடுக்கிறான்.

துரதிர்ஷ்டவசமாக, கந்தர்வசேனனால் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்படுகிறான் ரத்தினசேனன். துறவி ஒருவன் தன் மகள் மீது ஆசைகொண்டுவிட்டானே என்கிற கோபத்தில், அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறான் கந்தர்வசேனன். அது நிறைவேறும் தறுவாயில், `சித்தூரின் மன்னன்தான் ரத்தினசேனன்' என்கிற விவரத்தைக் கந்தர்வசேனனிடம் கூறி, அவனைக் காப்பாற்றுகிறான் அரசவைக் கவிஞன்.

மனம் மகிழும் கந்தர்வசேனன், மகள் பத்மாவதியை ரத்தினசேனனுக்கே மணம் முடித்துவைக்கிறான். ரத்தினசேனனின் வீரர்கள் 16 ஆயிரம் பேரும், 16 ஆயிரம் பெண்களை அங்கு மணம்புரிகிறார்கள். காதல் கிளிகள் இருவரும் தங்கள் வாழ்க்கையை இலங்கையில் தொடங்குகிறார்கள்.
சித்தூரிலோ, கணவனின் பிரிவில் வாடும் ரத்தினசேனனின் முதல் மனைவி நாகமதி, பறவை ஒன்றிடம் தன் வேதனையைச் சொல்லித் தூது அனுப்புகிறாள். பறவையின் தூது கண்டதும் நாடு திரும்ப ஆவல்கொள்ளும் ரத்தினசேனன், தன் புதுமனைவி மற்றும் படைகளுடன் சித்தூர் திரும்புகிறான்.

சித்தூர் அரண்மனையில் ரத்தினசேனனின் அன்பைப் பெற, அரசிகள் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. கைகலப்பு வரை செல்லும் இந்தப் போட்டியால் கடும் கோபம் அடையும் ரத்தினசேனன், இரு மனைவிகளையும் கடிந்துகொள்கிறான். அதன் பிறகே அங்கு அமைதி திரும்புகிறது.

ராகவ்சேத்தன் என்கிற ராஜகுரு, கண் கட்டி வித்தை மூலம் ஒரு போட்டியில் வென்றதாக எண்ணிய ரத்தினசேனன், அவரைச் சித்தூரைவிட்டு வெளியேறுமாறு ஆணையிடுகிறான். கடும் சினம்கொண்டு வெளியேறும் சேத்தனைச் சந்தித்து, மன்னனை மன்னிக்கவேண்டி, தன் கைவளையைப் பிரிவுப் பரிசாக அளிக்கிறாள் பத்மாவதி. அவள் அழகைக்கண்டு ஆச்சர்யப்படுகிறார் சேத்தன்.

மனதில் மட்டற்ற வன்மம் சுழல, டெல்லி செல்லும் ராகவ் சேத்தன், சுல்தான் அலாவுதீன் கில்ஜியைச் சந்திக்க நேரம் கோருகிறார். கோரிக்கை நிறைவேற, அவர் கையிலிருக்கும் பெண்களின் வளை சுல்தானை ஈர்க்கிறது. `இது யாருடையது?' என்ற அவன் வினாவுக்கு, பத்மாவதி என்கிற பேரழகியைக் குறித்து பல கதைகள் சொல்கிறார் சேத்தன். சுல்தான் மனதில் பத்மாவதி என்ற பேரழகியின் மீது காதல் தீ மூள்கிறது. சித்தூரில் அவள் இருப்பதைக் கேள்வியுற்றதும், அதன்மீது படை எடுத்துச்செல்கிறான் கில்ஜி. சித்தூர் நகரத்தைச் சுற்றிவளைத்து முற்றுகையிடும் கில்ஜி, பத்மாவதியைத் தன்னிடம் ஒப்படைத்துவிடும்படி ரத்தினசேனனுக்குச் செய்தி அனுப்புகிறான். மறுக்கும் ரத்தின சேனன், கப்பம் கட்டத் தயாராக இருப்பதாகக் கூறுகிறான். பேச்சுவார்த்தைக்கு எனச் சொல்லி சித்தூர் அரண்மனைக்குள் நுழையும் கில்ஜி, கண்ணாடியில் அரசி பத்மாவதியின் பிம்பம் கண்டு மயங்கிச் சரிகிறான். பின்பு சுதாரித்துக்கொள்ளும் அவன், வஞ்சனையாக கோட்டையின் வாயில் வரை ரத்தினசேனனை அழைத்துவந்து, கைதுசெய்து டெல்லிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே மங்கோலியர் டெல்லியைக் கைப்பற்றக் காத்திருப்பதாக அவனுக்குச் செய்தி வருகிறது.

மனம் கலங்கவில்லை பத்மாவதி. கோரா, பாதல் என்கிற இரு தளபதிகளின் உதவிகொண்டு, கணவனை விடுவிக்கத் திட்டம் தீட்டுகிறாள். அதன்படி, தான் சுல்தானிடம் வர விரும்புவதாகச் செய்தி அனுப்புகிறாள். வீரர்களுக்கு அனுமதி மறுக்கும் சுல்தான், தன் தோழிகளுடன் பல்லக்கில் டெல்லி கோட்டைக்குள் வர அனுமதியளிக்கிறான். தளபதிகள் கோராவும் பாதலும் படை வீரர்கள் சிலரும், பெண் வேடமிட்டு கோட்டைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, ரத்தினசேனனை விடுவிக்கிறார்கள். வரும்வழியில் கோரா கொல்லப்படுகிறான். பாதலும் ரத்தினசேனனும் சித்தூரை அடைகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மன்னனும் படைத்தளபதிகளும் இல்லாத சித்தூரில் அரசிகள் இருவரும் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அருகில் உள்ள கும்பல்னேர் மன்னன் தேவபாலன், சித்தூரை காலி செய்துவிட்டு தன்னுடன் வந்து வசிக்குமாறு பெண் ஒருத்தியைப் பத்மாவதி யிடம் தூது அனுப்புகிறான். வெகுளும் பத்மாவதி, ரத்தினசேனன் டெல்லியிலிருந்து தப்பி வந்ததும் இந்தத் தகவலைச் சொல்கிறாள். கடும் சினம்கொள்ளும் ரத்தினசேனன், கில்ஜி மீண்டும் சித்தூர் வருவதற்குள் தேவபாலனுக்குப் பாடம் கற்பித்து வருவதாகச் சொல்லி கும்பல்னேரை நோக்கிப் படை செலுத்துகிறான். படைகளைத் துன்புறுத்தாமல், இரு மன்னர்களும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கிறார்கள். கடும் சண்டையின் முடிவில், ஒருவரை யொருவர் குத்திக்கொண்டு வீரமரணம் அடைகிறார்கள். கணவனின் மரணச் செய்தி அறிந்ததும் அரசிகள் இருவரும் மனமுடைந்துபோகிறார்கள்.

அங்கோ, ரத்தினசேனன் தப்பிவிட்ட செய்தி கிடைத்ததும், ஆவேசத்துடன் மீண்டும் சித்தூரைத் தாக்கக் கிளம்புகிறான் கில்ஜி. நகரை முற்றுகையிடுகிறான். கணவனை இழந்த ராஜபுதனத்துப் பெண்கள், பெரும் சிதைமூட்டி, ரத்தினசேனனின் உடலுடன் ஜோஹார் என்கிற உடன்கட்டை ஏறும் சடங்குக்குத் தயாராகிறார்கள். இன்னும் உயிருடன் இருக்கும் சித்தூரின் ஆண்கள் இறுதிப்போருக்காக நகரைவிட்டுக் கிளம்புகிறார்கள். இறுதிப்போரில் சித்தூர், கில்ஜியிடம் வீழ்கிறது. நகருக்குள் நுழையும் கில்ஜியை வரவேற்கிறது, கனன்றுகொண்டிருக்கும் பெரும் சிதை. சிதையில் ஒரு பிடி சாம்பலை அள்ளும் கில்ஜி, `இதை தடுக்கத்தானே எண்ணினேன்' என்று பெருமூச்சு விடுகிறான். `ஆசையை அடக்க முடியாது. ஆனால், இந்த உலகம் நிலையற்றது. மரணம் நெருங்கும் வரை ஒரு மனிதனை அவனது ஆசையே ஆள்கிறது' என்று அவன் சொல்வதாக முடிகிறது `பத்மாவதம்'.

`கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட இந்தக் காவியத்தைக் கேட்பவர் எவரும், காதலின் வலியை உணர்ந்து பாடுவார்கள்' என்கிறார் ஜாயஸி. `புகழுக்கு மயங்காதவர்கள் யார்? இதை வாசிப்பவர்கள் என் பெயரை நினைவில்கொள்வார்கள்' என்றும் பாடியிருக்கிறார்.

சூஃபி மரபு துறவி ஒருவர் எழுதிய இந்தப் பொதுஜனக் காவியத்தை சினிமாவாக இயக்கத் தொடங்கியதிலிருந்தே சஞ்சய் லீலா பன்சாலிக்குக் கடும் நெருக்கடிதான். இடைக்காலப் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடான ஜோஹார், பொருந்தாக் காதல், பெண்ணைப் போகப்பொருளாகப் பார்த்த அரச குடும்பங்கள் என எதையும் வெளிப்படையாக விமர்சித்துப் பேசவில்லை ஜாயஸி.

சிவனையும் பார்வதியையும் ஒரு காதல் கதைக்குள் அழகாக நுழைத்து எழுதிய இஸ்லாமியர் ஜாயஸியின் சகிப்புத்தன்மையைக் கண்டு வியப்பதா அல்லது, கதையில் என்னதான் சொல்லப் பட்டுள்ளது என்பதைக் கொஞ்சமும் உணராமல்,  அசட்டு நம்பிக்கை யில் நடிகையின் தலைக்கு விலை வைத்திருப்போரை நினைத்துக் கவலை கொள்வதா? எண்ணற்ற பத்மாவதிகள் ஏதேதோ காரணங்களால் சிதைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் தேசத்தில், ஒரு சினிமா இத்தனை கவனம் ஈர்த்திருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எது எப்படியோ, ஒரு புயல் தன் காவியத்தை மையமாகக்கொண்டு வீசுவது அறியாமல், அமைதியாக அமேதியில் கண்மூடி உறங்கிக் கொண்டிருக்கிறார் ஜாயஸி.

பத்மாவதி அவதாரத்தில் ரம்யா பாண்டியன்!

ஜோக்கர்... தேசிய அளவில் அள்ளித்தந்த விருதுகளின் மகிழ்ச்சி இன்னும் ரம்யா பாண்டியனின் இதழ்களில் மின்னுகிறது. `ஜோக்கர்' அடுத்தடுத்து ரம்யாவுக்கு அளிக்கும் பரிசுகள் முக்கியமானவை. தாமிராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனியோடு `ஆண் தேவதை' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, ராணி பத்மாவதி அவதாரத்தில் ஸ்பெஷல் மேக்கப்புடன் போட்டோஷுட்டில் ஸ்மைல் செய்கிறார்.

ரம்யாவின் அப்பா துரைப்பாண்டியன் சினிமா இயக்குநராக இருந்தவர். ரம்யாவின் சகோதரி சுந்தரி, இப்போது காஸ்ட்யூம் டிசைனர். தம்பி பரசுராமன் ஃபிலிம் டெக்னாலஜி படிக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, பிசினஸ் டெவலெப்மென்ட் மேனேஜராக பணியாற்றிய ரம்யா பாண்டியன் நடிகையானது எப்படி?

என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

``நான் பிளான் பண்ணி சினிமாவுக்கு வரல. அப்பா சினிமால இருந்தாலும் என்ன நடிக்க வரலையான்னு கேட்ட ஒரு காலத்துல கோபம் வந்தது. சினிமாவுக்கு  வந்தது யதேச்சையாத்தான். `மானே தேனே பொன்மானே' ஷார்ட் பிலிம்... நண்பன்தான் டைரக்டர். அவன் கேட்டதுக்காக நடிச்சுக்கொடுத்தேன். யூடியூப்ல அந்தப் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதுக்கு அப்புறம்தான் சினிமால நடிக்கலாம்கிற ஸ்பார்க் தோணுச்சு. எனக்கான முதல் முழுமையான அறிமுகம் `ஜோக்கர்'. மல்லிகா கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. `ஆண் தேவதை'ல நடிப்பதற்கான தன்னம்பிக்கையையும் ஜோக்கர்தான் கொடுத்திருக்கு.

நான் இந்த இடத்தை அடையறதுக்கு முன் சந்திச்ச நெருக்கடிகள் அதிகம். அபசகுனங்களே எனக்கு அதிர்ஷ்டமா மாறியிருக்கு. முதல் ஷார்ட் ஃபிலிம் கேமரா முன்னாடி நின்னப்போ, அந்த ரிசார்ட் முழுக்க கரன்ட் கட் ஆகிடுச்சு. `அன்னக்கிளி' படத்துக்கு இளையராஜா சார் மியூசிக் போட்டப்போ ரெக்கார்டிங்ல கரன்ட் போனதா  சொல்வாங்க. அதை நினைச்சு என்னையே நான் சமாதானப்படுத்திக்கிட்டேன். `ஜோக்கர்' படத்துல என் முதல் ஷாட்ல கேமராவே ஆஃப் ஆகிடுச்சு. அப்பவே இந்தப் படத்தை நல்லபடியா பண்ணிடுவோம்னு நம்பிக்கை வந்துடுச்சு!''

`ஆண் தேவதை' அனுபவங்கள் எப்படி இருந்தன?

``தாமிரா, சமுத்திரக்கனி, விஜய்மில்டன்... இப்படி மூணு ஜாம்பவான்களோட வொர்க் பண்றது யுனிவர் சிட்டில படிக்கிறதுக்குச் சமம். டயலாக் டெலிவரி, டப்பிங்னு நிறைய கத்துக்கிட்டேன்.  ஜோக்கருக்கு அப்புறமா பொறுப்பான ரோல்கள்ல நடிக்கிற வாய்ப்புத்தான் எனக்கு வருது. மக்கள் மனசுல அழுத்தமா பதியற கேரக்டர்களைத் தேர்ந்தெடுக்கறேன்.''

சமூக அக்கறை உள்ள ரோல் உங்களையும் மாத்தியிருக்கா?

``கண்டிப்பா. கேரக்டராவே வாழறது ஸ்கிரீன்ல மட்டும் இல்ல. சமூக அக்கறை எனக்குள்ளயும் எட்டிப்பார்க்குது. மரங்கள் வளர்க்கறதுக்கான முயற்சியில இறங்கியிருக்கேன். ஒரு மனுஷன் தன் வாழ்நாள்ல சில மரங்களையாவது நட்டு வளர்க்கணும். இதை ஒரு விழிப்பு உணர்வு பிரசாரமாகவும் மாத்தப் போறேன்.''

என்னதான் சொல்கிறாள் பத்மாவதி?

ரம்யாவுக்கு வேறென்ன தெரியும்?

``பெயின்டிங் என் ஹாபி. கலர்ஸ் பார்த்தா நானே பட்டாம்பூச்சியாகிடுவேன். ஆன்லைன் வீடியோஸ் பார்த்து பெயின்டிங் கத்துக்கிட்டேன். என் குரு நடிகர் சிவகுமார் சார் நான் வரைந்ததைப்  பார்த்துப் பாராட்டியதோடு  ஐடியாஸும் கொடுத்தார்.''

வீட்ல அக்கா, தம்பி நீங்க... இப்படி மூணு  பேரும் சினிமால இருக்கிறது ஜாலியா?


``நிச்சயமா. நாங்க அரட்டையடிக்க ஆரம்பிச்சாக்கூட அது சினிமாலதான் வந்து முடியும். நாங்க எல்லாரும் சினிமால இருக்கிறது அப்பாவின் ஆசீர்வாதமா நினைக்கிறேன். அவர் இப்போ எங்களோடு இல்லைன்னாலும் அவர் ஆசையை நாங்க நிறைவேத்தறோம். அதுவே ரொம்ப திருப்தியா இருக்கு.''

ஒரு நடிகையாகத் தன்னை எப்படி தயார்படுத்துகிறார் ரம்யா?

``டான்ஸ், நடிப்பெல்லாம் நான் கிளாஸ் போய் கத்துக்கல. நான் டயட் இருப்பதில்லை. சத்தான உணவுகள் எடுத்துப்பேன். ஜிம்ல வொர்க்கவுட் பண்ணி ஃபிட் ஆகிடுவேன்.''

பத்மாவதி போட்டோ ஷூட் ஐடியா எப்படி வந்தது?

``நம்ம பாரம்பர்யத்தைச் சொல்ற மாதிரி போட்டோ ஷூட் பிளான் பண்ணோம். டிசைனர் ஸ்வரூபா சாதகன் பத்மாவதி ராணியோட காஸ்ட்யூம் ரெடி பண்ணாங்க. மேக்கப் ஆர்டிஸ்ட் விஜி என்னை பத்மாவதியா மாத்தினாங்க. ஜீவன் போட்டோகிராபில நாங்க கண்ட கனவை நிஜத்துல பார்த்தோம்.''

ரம்யாவுக்கு வேறென்ன ஆசை?

இது நடிப்புக்கான பருவம்னு நினைக்கிறேன். ஒரு  பிசினஸ் விமனா அவதாரம் எடுக்கிறது என் அடுத்த டார்கெட். ஒருவருக்கு ஒரே  ஓர் லட்சியம்தான் இருக்கணும்னு அவசிய மில்லை. எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. ஒவ்வொண்ணா நனவாகும்.''

- யாழ் ஸ்ரீதேவி