Published:Updated:

இனியும் வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

இனியும்  வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
இனியும் வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

ஆனந்த ராகம்கு.ஆனந்தராஜ்

இனியும் வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

ஆனந்த ராகம்கு.ஆனந்தராஜ்

Published:Updated:
இனியும்  வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
இனியும் வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

“தமிழ்ல ‘நேருக்கு நேர்’ திரைப்படம்தான் நான் கடைசியா நடிச்சது. அது வெளிவந்து 20 வருஷங்களாச்சு. இப்போ சினிமாவில் என் மூணாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கேன்!’’ - உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார் சாந்தி கிருஷ்ணா. நெளி முடி, சிறிய கண்கள், பளிங்கு நிறம், பள்ளிச் சீருடை எனப் ‘பன்னீர் புஷ்ப'ங்களில் பார்த்த அந்தப் பிம்பம்தான், நம் முன்னே இருக்கும் நிஜத்தைப் பின்னுக்குத் தள்ளி நினைவில் மேலெழும்புகிறது. 

இனியும்  வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

“பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பை. ஸ்ரீராம், சுரேஷ் கிருஷ்ணா, சதீஷ்னு மூணு அண்ணன்களுக்குச் செல்லத் தங்கச்சி நான். பாலகாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்க் குடும்பம் என்பதால், வீட்ல தமிழ்தான் பேசுவோம். ஆறு வயசில் பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். நான், ‘கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா ஸ்காலர்ஷிப் ஃபார் பரத நாட்டியம்’ வாங்கின செய்தி நியூஸ் பேப்பர்ல வந்தது. அதைப் பார்த்த மலையாள டைரக்டர் பரதன் சார், அப்போ கே.பாலசந்தர் சாரின் அசோஸியேட் டைரக்டரா இருந்த அண்ணன் சுரேஷ் கிருஷ்ணா மூலமா, எனக்கு அவர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் ப்ளஸ் டூ படிச்சப்போ ஹீரோயினா நடிச்ச முதல் படம் ‘நித்ரா’ சூப்பர் ஹிட். உடனே தமிழ்ல ‘பன்னீர் புஷ்பங்கள்’ பட வாய்ப்பு வந்தது. ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்’, ‘பூந்தளிர் ஆட’ உள்பட இளையராஜா சாரின் பாடல்களோடு என் முகமும் பிரபலமானது பெரிய சந்தோஷம்’’ என்பவர், தமிழில் ‘சிவப்பு மல்லி’, ‘சின்ன முள் பெரிய முள்’, ‘மணல் கயிறு’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘அன்புள்ள மலரே’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன், ஐந்தாண்டுகளுக்குள் 70-க்கும் அதிகமான படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தார்.

இனியும்  வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

‘`இதற்கிடையில் கரஸ்ல பி.ஏ முடிச்சேன். 1984-ம் வருஷம், மலையாள நடிகர் ஸ்ரீநாத்தைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குடும்பத்துக்காக நடிப்புக்கு பிரேக் விட்டேன். ஆனா, திருமண வாழ்க்கை யில் நிறைய கசப்பான சம்பவங்கள். அதனால ரெண்டு பேரும் சுமுகமா பிரிஞ்சுடலாம்னு விவாகரத்து வாங்கிட்டோம். அப்போ எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட, சினிமாதான் கைகொடுத்தது. மம்முட்டியுடன் ‘நயம் வியக்தம்மாகன்னு’, மோகன் லால்கூட ‘விஷ்ணுலோகம்’ படத்துல நடிச்சேன். சொல்லப்போனா, முதல் இன்னிங்ஸைவிட, செகண்டு இன்னிங்ஸ் நடிப்பு எனக்கு மனநிறைவைக் கொடுத்தது. ‘நேருக்கு நேர்’ படத்துல நடிகர் சூர்யாவின் அக்காவா நடித்ததும் அந்தச் சூழல்லதான்...’’ என்பவருக்கு, அதே காலகட்டத்தில்தான் இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது.

“ ‘சுக்ருதம்’ மலையாளப் படத்தில் நடிச்சு முடிச்சதும், சதாசிவன் பஜூரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனேன். வீட்டிலேயே பரதம் ஆடுறது, நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணுறதுனு இருந்தேன். ஒரு கட்டத்துல, அந்தப் பந்தத்திலும் பல பிரச்னைகள் எழ, பிரிவுதான் தீர்வு என்கிற சூழல் வந்தது. வாழ்க்கை நாம கணிக்கிற மாதிரி இருக்காது. எப்பவும் எதுவும் நேரலாம் என்பதுதான் முதல் விதி. அதிலும் எனக்கு இதில் ரெட்டை அனுபவம் என்பதால ரொம்ப துவண்டுட்டேன். ஆனா, அந்தப் பிரச்னையிலேயே மூழ்கியிருந்தா நமக்கும், நம்மைச் சார்ந்தவங்களுக்கும் தீராத வேதனைதானே மிஞ்சும்? அதனால, மோசமான நினைவுகளை மனசுலேருந்து டெலிட் பண்ணிட்டு, ‘இனியும் வாழ்க்கை இருக்கு, குழந்தைகளோட எதிர்காலம் இருக்கு’னு பாசிட்டிவ் எண்ணங்களைப் பெருக்கிக்க ஆரம்பிச்சேன்’’ என்கிறவர் தன் மூன்றாவது இன்னிங்ஸ் பற்றிப் பேசும்போது மலர்கிறார்.

இனியும்  வாழ்க்கை இருக்கு! - சாந்தி கிருஷ்ணா

“சினிமா தொடர்புகள் அற்றுப்போய், அமெரிக்காவுல குழந்தைகளோடு வசிச்சுக்கிட்டிருந்த என்னைத் தேடிப் பிடிச்சு, ‘இந்த கேரக்டரை நீங்கதான் பண்ணணும்’னு கேட்டாங்க. இம்முறையும் சினிமா நம்மை துயரத்திலிருந்து மீட்கட்டும்னு, குழந்தைகளோடு பெங்களூருக்கு ஷிஃப்ட் ஆனேன்.
20 வருடங்களுக்குப் பிறகு, என் மூணாவது இன்னிங்ஸை, ‘நிஜண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ மலையாளப் படம் மூலமா தொடங்கியிருக்கேன். நிவின் பாலிக்கு அம்மாவா நடிச்ச இந்தப் படம் ஹிட்” என்பவர், போல்டான சிங்கிள் பேரன்ட்டாக இருப்பது பற்றிப் பேசியது இன்னும் அழகு. 
“இது பெரிய டாஸ்க். ஆனா, பெண்ணின் வலிமையை முழுமையா வெளிப்பட வைக்கிறதும் இதுபோன்ற சூழ்நிலைதான். பையன் மிதுல் ப்ளஸ் டூ-வும், பொண்ணு மிதாலி எட்டாம் வகுப்பும் படிக்கிறாங்க. அவங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் புரியுது. ‘நீ உனக்குப் பிடிச்ச நடிப்புலயும் டான்ஸ்லயும் கவனம் செலுத்தும்மா; நாங்க உனக்குப் பலமா இருக்கோம்’னு குழந்தைங்க சொல்லும்போது, வேறென்ன வேணும்னு தோணுது எனக்கு’’ என்னும் சாந்தி, இறுதியாக ஒரு கருத்தைப் பகிர ஆசைப்படுகிறார்.

“ஒருவேளை தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்தால், குழந்தைகளின் நலனுக்காக யாராச்சும் ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழ முயற்சி எடுக்கணும். பிரிஞ்சு வாழறது மட்டும்தான் தீர்வுனு ஒரு சூழல் வந்தா, அதுக்காகக் கலங்க வேண்டாம். யாரையும் சார்ந்திருக்காம தன்னம்பிக்கையோடு சுயமா வாழக் கத்துக்கலாம்... கவலைப்படாதீங்க’’ என்கிறார் தன் வாழ்க்கையிலிருந்தே.

தமிழ் சினிமாவுக்கும் வெல்கம்!