தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்றி, தமிழ் சினிமாவுக்கும் தன் படம் மூலம் `அறம்' செய்ய விரும்பியவர் இயக்குநர் கோபி நயினார். புறக்கணிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு முதல் படத்திலேயே புகழின் உச்சம் தொட்டபோதிலும், அந்த போதையைத் தலைக்கேற்றிக்கொள்ளாமல் வியக்கவைக்கிற தோழர்.
அழகிகளின் பிரதிநிதியாக மட்டுமே நாம் பார்த்துப் பழகிய நயன்தாராவை அறம் பேசும் அரசியாகக் காட்டியவர். பெண்களை மதிக்கும் கதையைக் கொடுத்து, பெண்கள் மதிக்கும் இயக்குநராகியிருப்பவரின் சொல்லிலும் செயலிலும் பெண்மை போற்றப்படுகிறது. நயன்தாராவை மட்டுமல்ல... தான் சந்திக்கிற அத்தனை பெண்களையும் `தோழர்' என்றழைப்பதிலேயே அது உறுதியாகிறது.
``என் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கே பெண்தன்மை என்பது முக்கியம். ஆனால், உலகம் முழுவதும் ஒடுக்கப்படுவதும் பெண் இனம்தான்...'' - யதார்த்தம் பேசுபவரின் வாழ்க்கையை அழகாக்கியதில் அவரின் மனைவிக்கும் மகளுக்கும் பெரும்பங்குண்டு. அவரது வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருப்பவரும் ஒரு பெண்... நயன்தாரா.

``தோழர் நயன்தாராவிடம் `அறம்' கதையைச் சொன்னேன். அந்த நொடியே, அதைப் படமாக எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது. அந்தப் படம் உருவானபோது அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன. என் கடந்த கால சம்பவங்கள் கிளறப்பட்டு, நான் தலை யெடுக்கக் கூடாது என்பதற்கான முயற்சிகளும் நடந்தன. அவற்றில் எதுவுமே அவரை உறுத்தவில்லை. ஒரே மாதிரியான அரசியல் கருத்துள்ள ஒரு தோழராகத்தான் நான் நயன்தாராவைப் பார்த்தேன், பார்க்கிறேன்...'' - இயக்குநரின் விவரிப்பில் நயன்தாராவைப் பற்றிய பொதுவான பிம்பம் உடைகிறது.
`` `அறம்' படம் மக்கள் சினிமாவாக மாறியதில் தோழர் நயன்தாராதான் அடிப்படைக் காரணகர்த்தா. திமிர் பிடித்தவர், ஆணவக்காரர் என்றெல்லாம் அவரைப் பற்றி வெளியில் உலவும் செய்திகள் பலவும் ஆணாதிக்க மனோபாவ வெளிப்பாடுகளே. ஓர் ஆணின் திமிர் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை. ஆனால், பெண்ணின் திமிர் எப்போதும் விமர்சனத்துக்குள்ளாகிறது. என்னை பேட்டி எடுக்கவந்த ஒரு பெண் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்தவர்கள், `என்னண்ணே அவங்க கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்காங்க' என்று என்னிடம் கேட்டார்கள். `அவங்க கால் மேல அவங்க கால் போட்டு உட்கார்ந்திருந்தா உங்களுக்கென்னங்க பிரச்னை?' எனக் கேட்டேன். கால் மேல் கால் போடக் கூடாது என்று சொல்ல நான் யார்? அது அவரின் வசதி. ஆணின் எதிரில் ஒரு பெண் கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்பது ஆணாதிக்கச் சிந்தனை. ஓர் ஆண் திமிராக இருந்தால், `அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார் தெரியும்ல... காம்ப்ரமைஸ் பண்ண மாட்டார்' என்றெல்லாம் சொல்வார்கள். பெண் ஏன் திமிராக இருக்கக் கூடாது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோழர் நயன்தாராவை `லேடி சூப்பர் ஸ்டார்' என்கிறோம். சிறந்த மனிதர்களில் ஆண் சிறந்த மனிதர்கள், பெண் சிறந்த மனிதர்கள் என்றெல்லாம் உண்டா என்ன? அதிகம் பேசாதவர் தோழர் நயன்தாரா. பசி எடுக்கிறது என்பவருக்குச் சோறு போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார். வீட்டுக்கு வந்தவர்களை வராண்டாவில் உட்கார வைப்பவர் அல்லர்; டைனிங் டேபிளுக்கு அழைத்துச் செல்பவர். யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்பவர். தேடித் தேடி உதவிகள் செய்பவர்...'' - தோழரின் நற்குணங்களினூடே பெண்ணுக்குத் திமிரும் ஓர் அழகு என்பதையும் உணர்த்துகிறது இயக்குநரின் பேச்சு.
``அறம் திரைப்படமானால் மக்கள் சினிமாவாக மாறும் என்பதை நம்பியவர் தோழர் நயன்தாரா. கதையின் கருவைக் கருணையுடன் புரிந்துகொண்டவர். `நல்லாருக்கு... இந்தப் படத்தை எடுங்க' எனத் தயாரிப்பாளரிடம் சொன்னதோடு நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். தானே அந்தப் படத்தில் நடிக்கவும் சம்மதித்தார். அந்தக் கணமே தயாரிப்பாளருக்குப் படத்தின் வெற்றியைப் பற்றிய நம்பிக்கை வந்து விட்டது. என் வாழ்க்கை அந்த இடத்தில் அந்தக் கணத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த அத்தனை சம்பவங்களும் தோழரைச் சந்தித்த சில மணி நேரத்தில் நடந்தவை. 12.30 மணிக்குக் கதை கேட்டவர், 3 மணிக்கு எனக்கு அட்வான்ஸ் கொடுத்தபோதே நல்ல விஷயங்களுக்குக் காலம் கடத்தக் கூடாது என்கிற அவரின் எண்ணம் விளங்கியது. அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கவும் அந்த மனோபாவம்தான் காரணம்...'' - தோழரால் முன்னேற்றம்கண்ட இயக்குநரின் வாழ்க்கையில் வெற்றிக்கான முதல் விதையை விதைத்தவர் அவரின் இணையர் அலமேலு.

``நான் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது, என் மனைவி ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தியை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தார்.. என்னவென்று கேட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் நான் களைப்பில் தூங்கிவிட்டேன். அதிகாலையில் மூன்றரை மணி ஆகியும் என் மனைவி அந்தச் செய்தியைப் பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தையை இன்னும் மீட்கவில்லை எனத் தெரிந்தது. அந்தச் செய்தி என்னைத் தூங்க விடாமல் செய்தது. `அறம்' படத்துக்கான ஆரம்பப் புள்ளி அதுதான்.
அலமேலு என் காதல் மனைவி. இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவரை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு அளவுகோல் இல்லை. இத்தனைக்கும் நான் அவருக்கு அத்தனை தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இருவருமே செழுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். திருமணத்துக்குப் பிறகு என் விருப்பம், அமைப்பு, இயக்கம் எனத் தீவிரமானதால் என்னை வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிட்டார்கள். கைக்குழந்தையுடன் என்னை நம்பி என்கூடவே வந்தவர் என் மனைவி. வறுமை என்றால் அப்படிப்பட்ட வறுமை. அதை அசைபோடுவதுகூட சாதாரணமானதில்லை. திருமணமான அடுத்த நாளே ஒரு போராட்டத்துக்காக நான் சிறைக்குப் போய்விட்டேன். அதன் பிறகும் என்னைச் சகித்துக்கொண்டு, மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இன்றுவரை தனக்கென இது வேண்டும், அது வேண்டும் என என்னிடம் கேட்டதில்லை. `உன் விருப்பம் எதுவோ அதைச் செய். நாங்கள் பட்டினி கிடக்கவும் தயார். உன் பயணத்தில் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் நாங்களும் துணைக்கு வரத் தயார்' என்றவர். இன்றுவரை அந்தப் பயணம் இனிதே தொடர்கிறது.''
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...
நானும் அவளும்
``பல வருடங்களாக நான் ஆனந்த விகடன் வாசகன். அதைத் தொடர்ந்து விகடனின் மற்ற குழுமப் பத்திரிகைகளையும் வாசிக்கத் தொடங்கினேன். அந்தவகையில் 'அவள் விகடன்' எனக்கு நன்கு பரிச்சயம். பெண்களுக்கான பத்திரிகை மட்டு மல்ல, பெண்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஆண்களுக்கான இதழும்கூட.

ஒருமுறை போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற் காகச் சிறைக்குச் சென்றிருந்தேன். அங்கு டவல் கட்டாமல் குளித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியே சிறையில் வேலை செய்கிற ஒரு பெண் கடந்து சென்றார். 'தோழர்... இந்த வழியே சிறையில் வேலை செய்கிற பெண்கள் போவார்கள். அதனால் துண்டு கட்டிக்கொண்டு குளியுங்கள்' என்று சக கைதிகள் என்னிடம் சொன்னார்கள். அதுவரை அது ஆண் சிறை என்பது மட்டுமே என் எண்ணத்தில் இருந்தது. அதேபோல பல காலமாக எனக்குச் சட்டையில் மேல் பட்டன் போடும் பழக்கம் இருந்ததில்லை.
`பெண்களிடம் பேசும்போது மேல் பட்டன் போட வேண்டும்' என்றும் சிறையில்தான் கற்றுக்கொண்டேன். இப்படியான நுணுக்கமான விஷயங்களை வெளியில் இருக்கும் சமூகம் எனக்குச் சொல்லித்தரவில்லை. உள்ளே இருந்த சிறைதான் போதித்தது. எத்தனை பெரிய வாழ்க்கைப் பாடங்கள் இவை. கற்றது கைம்மண் அளவு என்பார்கள். எல்லா ஆண்களும் பெண்களைப் பற்றிக் கற்றுக்கொள்ளவேண்டிய உலகளவு விஷயங்கள் இருக்கின்றன. அப்படியான சில விஷயங்களை அவள் விகடனும் கற்றுத் தருகிறது.''