Published:Updated:

காதல் தேசம்!

காதல் தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
காதல் தேசம்!

நினைவோவியம்சந்தோஷ், விக்னா - ஓவியங்கள் : ஷண்முகவேல்

காதல் தேசம்!

நினைவோவியம்சந்தோஷ், விக்னா - ஓவியங்கள் : ஷண்முகவேல்

Published:Updated:
காதல் தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
காதல் தேசம்!

பிருந்தாவன் விரைவு வண்டியில் பெங்களூரிலிருந்து சென்னைக்குச் செல்லக் காத்துக் கொண்டிருந்தேன். மெலிதாக வீசிக்கொண்டிருந்த காற்று, திடீரென வேகமெடுத்து வீசியது. மரங்கள், நாட்டியம் ஆடுவதுபோல் அசைந் தாடின. டிசம்பர் பூக்கள், வேலி தாண்டி ரயில்வே பிளாட்பாரத்துக்குள்ளும் உதிர்ந்தன. மெல்லிய பனியில் அந்தப் பூக்களை மிதிக்காதபடி உயரமான ஒரு பெண் வெள்ளை சுடிதாரில் நடந்துவருவது நீர்வண்ண ஓவியம்போல தெரிந்தது. பெண் என்றா சொன்னேன், இல்லை இல்லை... பெண்மணி. என் கண்கள் ஸ்லோமோஷனில் அந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்தபோதே அவர் என் கோச்சை நெருங்கியிருந்தார். பக்கத்தில் வந்ததும்தான் முகம் துலக்கமானது. `அட, இது `காதல் தேசம்' திவ்யா அல்லவா?' மெள்ள புன்னகைத்துக்கொண்டே கவிதைத்தனமாகத் (அப்படி எனக்குத் தோன்றியதா?) தன் லக்கேஜுகளைத் தூக்கிக்கொண்டு எனது கோச்சுக்குள் ஏறினார். சில நிமிட தாமதத்துக்குப் பிறகு நான் கோச்சுக்குள் ஏறி, எனது பெர்த்துக்குச் சென்றேன். திவ்யா எனக்கு எதிரில் இருந்தார்.

`காதல் தேசம்' திவ்யா, எனக்குள் ஏதோ சுருள் சுருளாக ஓடி, இருபது வருடங்களுக்குப் பின்னால் இழுத்துச் செல்வதை உணர்ந்தேன். அந்தக் கல்லூரிச் சாலை, மெள்ள ஞாபகத்துக்கு வந்தது. வழவழப்பாக இருந்த அருண்,  படித்த அழகான பணக்கார இளைஞன். அந்தக் காலத்தின் அட்வான்ஸ் காரான மாருதி 800 வைத்திருந்தவன். கார்த்திக், பொருளாதாரத்தில் சிரமப்படும் கவிதை எழுதும் நாயகன்.

காதல் தேசம்!

இன்று போலவே இந்த திவ்யா இருபது வருடங்களுக்கு முன், க..க..க... கல்லூரி சாலையில் கொட்டிக்கிடக்கும் பூக்களை மிதிக்காமல் லாகவமாக நடந்து வந்து ரசிகன் மனதுக்குள் என்ட்ரியானவர். அவர் அழகில் மயங்கி, பெட்ரோல் போடுபவர் பெட்ரோலைக் காரின் டயருக்கு அபிஷேகம் செய்ய, ஷேவிங் செய்துகொள்ள வந்தவருக்கு சலூன் கடைக்காரர் மொட்டை போடுவார்.

இவர் வாழ்க்கையில் நாயகன்கூட இல்லை. நாயகர்கள் இருவர் காதலித்த பெண். நாம் பாரதிராஜா வளர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் என்பதால், `திவ்யா ஒரு தேவதை' என்பதைக் காட்ட, படம் முழுக்க விதவிதமான வெள்ளை சுடிதாரில் வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து, லோக்கல் தேவதை ஆக ஆசைப்பட்ட என் வகுப்புத் தோழி ஒருத்தி, ஒரே வெள்ளை சுடிதாருக்கு வேறு வேறு துப்பட்டா மாற்றி, தினமும் அணிந்து வந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்?

முன்கதை போதும். எதிரில் `காதல் தேசம்' திவ்யாவை வைத்துக்கொண்டு இதற்கு மேல் பேசாமல் இருக்க முடியாது. மேலும், அவருக்கு நட்பு பிடிக்கும் என்பது காதல் தேசத்துக்கு மட்டுமல்ல... இந்தப் பாரத தேசத்துக்கே தெரியும் என்பதால், தைரியமாக ஒருமுறை குரலைக் கச்சிதப்படுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தேன்.

``ஹலோ திவ்யா, உங்களைப் பார்த்து வருஷமாச்சு. நல்லாயிருக்கீங்களா?''

``நண்பர்கள் புண்ணியத்தில் நல்லாயிருக்கேன். இன்னும் உங்க ஞாபகத்துல இருக்கிறது ரொம்ப சந்தோஷம்!''

எனக்கோ நிறைய பேச வேண்டும் போலிருந்தது. நீண்ட உரையாடலில் எதிரில் இருப்பவரின் விருப்பத்தைப் பேச்சினூடே வரும் புன்னகையில் அறியலாம். திவ்யாவோ புன்னகைகளுக்கு நடுவில் பேசினார். சிரிக்கவைக்க மட்டுமல்லாமல், பல உரையாடல்களை இலகுவாக்கியவர் வடிவேலு. அவரைக்கொண்டே பேச்சைத் தொடங்கினேன்.

கல்லூரி மாணவராக இருக்கையில் அதகளம் பண்ணுவார்...

``அண்ணே, பஸ் வந்தாச்சுண்ணே...''

``வரட்டும்டா.''

``அண்ணே, பஸ் கிளம்பிடுச்சுண்ணே!''

``கிளம்பட்டும்டா!''

``அண்ணே, பஸ் போயிடுச்சுண்ணே!''

``போகட்டும்டா!''

காதல் தேசம்!

பிறகு ஒருவழியாக ஓடும் பேருந்தில் தொற்றிக் கொள்வார். காலேஜ் ஸ்டூடன்ட்னா ஓடுற பஸ்லேயிருந்துதான் ஏறணும், இறங்கணும் என்று பசங்களுக்கும் கற்றுக்கொடுத்தவர்; கார்த்திக்கின் நெருங்கிய நண்பர். திவ்யாவுக்கு அவரைத் தெரியாமல் இருக்குமா? கேட்டேன்.

``அவரை மறக்க முடியுமா? கார்த்திக்குக்காக அருணின் மாருதி காரை ஆள்வைத்து தகர்க்கிற அளவுக்கு நட்பு அல்லவா! இன்னமும் அப்படியேதான் இருக்கார். என்ன, ஓடுற பஸ்ல ஏறுகிற வயசைத் தாண்டியாச்சு. அதனால பஸ்ஸுக்குள்ள கைப்பிடியைப் பிடிக்காம நின்னுட்டு வர்றார். அதைப் பாராட்டிப் பேச கூடவே ரெண்டு பேர் போறாங்க. ஆனா ஒண்ணு, எங்க எல்லாரையும்விட அவர் வளர்ச்சிதான் பெருசு.''

``உங்க அப்பா, காருக்கு பெட்ரோலே போடாம, ரோட்ல உங்களை ஜொள்ளு விடுற பசங்களைத் தள்ளவெச்சே காரை வீட்டுக்குக் கொண்டுவந்திடுவாரே... இப்ப பெட்ரோல் போடுறாரா?''

வாய்விட்டு சிரித்த திவ்யா, ``அது சும்மா, அப்பா எப்பவும் கலாட்டா பண்ணிக்கிட்டேதான் இருப்பார். கதையோட முடிவுல எனக்கு அவர்தான் மிகப்பெரிய சப்போர்ட். ஒரு கணவன், நல்ல நண்பனா இருப்பான்னு சொல்ல முடியாது. ஆனா, ஒரு நல்ல நண்பன் நல்ல கணவனாகவும் இருப்பான்னு சொல்வாரே!''

``ஆமாமா, அதை மறக்க முடியுமா? யாருடைய காதலை ஏத்துக்கிறதுன்னு தெரியலைங்கிறதை கவிதை மாதிரி சொல்லி யிருப்பீங்களே. இந்தப் பறவைக்கு இடது சிறகா, வலது சிறகா எது முக்கியம்னு தீர்மானிக்க முடியலைனு. தியேட்டர்ல விசிலடிச்சுட்டே பார்த்தோம் திவ்யா!''

``அட, நீங்க வேற! எனக்கு அப்பலாம் கவிதை எழுதவே வராது.''

``தெரியுமே. கல்லூரியில் உங்களுக்கு வீட்டுப்பாடமா கவிதை எழுதக் கொடுத்திருப் பாங்க. நீங்ககூட உங்களுக்கே தெரியாம கார்த்திக் நோட்டை வெச்சுடுவீங்களே.உங்களை நம்பி உங்க தோழியும் வெறும் நோட்டை  வெச்சு, அப்புறம் நடந்ததெல்லாம் இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கு. உங்க கடுகடு விரிவுரையாளர், `காதலிச்சிருந்தாத் தானே கவிதை எழுத வர்றதுக்கு. உங்க மனசெல்லாம் இரும்புல செஞ்சிருக்கு'னு சொல்லி வகுப்பையே திட்டுவாங்க. முழுக்க கண்ணாடியால் ஆன கல்லூரியைக்கூட பார்த்திடுவோம்போல... இப்படி ஒரு லெக்சரரை இளைஞர்கள் பார்க்காமலேயே 20 வருஷங்களுக்குமேல ஓடிப்போச்சுங்க. ஆமா... அவங்க இப்ப எங்க இருக்காங்க?''

``அந்த விரிவுரையாளரின் பொண்ணு யாரையோ காதலிச்சது. அது பிடிக்காம அப்பவே மாற்றல் வாங்கிக்கிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. அப்புறம் காதல் கவிதை எழுதச் சொல்லி யாரையும் படுத்தியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.''

``உங்க லெக்சரரைவிட, போலீஸா வருவாரே ஒருத்தர்... பேருதான் குஞ்சுமோன். மீசை பெருசா வெச்சிருப்பாரே அவர்தான். நல்லா பாடம் எடுத்திருப்பாரே. அதுவரை  சண்டை போட்டுக்கிட்டிருந்த லயோலா, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அவர் நாலு வரி வசனத்துல நச்சுனு சேர்த்துவெச்சது மனசைத் தைச்சதுங்க.''

``ஆமாம், அன்னிக்கு ஒண்ணா சேர்ந்தவங்க தானே என் நண்பர்கள். பிறகு, என்மேல வந்த காதல்தான் அவங்களைப் பிரிச்சுது!'' -  `தென்றலே தென்றலே மெள்ள நீ வீசு...' என்ற வரி, அவருக்குள் ஓடுவதை மெலிதாகக் கேட்க முடிந்தது.

``உங்க நண்பர்கள் இரண்டு பேருமே உங்களைத் தான் லவ் பண்றாங்கனு தெரிஞ்சதும் எப்படி இருந்தது?''

``ரொம்ப சங்கடமாப்போச்சு. `அந்த பஸ்ஸைப் பிடிச்சுட்டா, உன் காதல் ஜெயிச்சுடும்'னு நான் சொன்னதுக்காக கார்த்திக் நிறைய ஆக்ஸிடென்ட்ல எல்லாம் சிக்கி ஓடி, பஸ்ஸைப்  பிடிப்பார். தண்டவாளத்தில் தேச்சுக்கிட்டே போய் ஓடுற ரயில்ல அடிபட இருந்த என்னை அருண் காப்பாத்துவார்.  என்மேல அவ்வளவு உயிரா இருக்கிறவங்கள்ல ஒருத்தரைக் காயப்படுத்திட்டு இன்னொருத்தரோடு சந்தோஷமா எப்படி இருக்க முடியும்னு குழப்பமாவும் இருந்தது. அதான் நீங்க பார்த்த முடிவு.''

``கரெக்ட்டுங்க. லாஜிக், கன்டினியூட்டி பத்தியெல்லாம் கவலையேபடாம, படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்னா... அதுக்குக் காரணம், நீங்களும் காதலைவிடவும் நட்பு முக்கியம்னு சொன்ன மெசேஜும்தான்.''

கட்டுரையின் கடைசிப் பகுதிக்கு வந்து விட்டதால், தைரியமாகக் கேட்டுவிட்டேன், ``இப்ப என்ன செய்றீங்க திவ்யா?''

``தேவதைகளுக்கு ஆசிரியப் பணியே பொருத்தமா இருக்கும். அதனால, நான் படிச்ச அதே கண்ணாடிக் கல்லூரியில் இப்ப தமிழ் விரிவுரையாளர். அதாவது, நானும் கவிதை எழுதச் சொல்லிப் படுத்துறேன். `நட்பு'ங்கிற தலைப்பில்'' என்று சிரித்தார்

``உங்க நண்பர்கள் என்ன செய்றாங்க?''

``அருண், ஒரு பிரபல பிராண்டுக்கு அம்பாஸடரா இருக்கார். எந்நேரமும் உங்க வீட்டுக் கதவைத் தட்டலாம். டி.வி-யில பார்த்ததில்லையா நீங்க?” என்றார்.

``ஓ மை காட்! அது அருண்தானா? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்” என்றேன்.

``கார்த்திக் டான்ஸ் ஸ்கூல் ஒண்ணு நடத்துறார். சினிமா ஆட்களுக்கெல்லாம் நடனம் கத்துக்கொடுக்கிறார். `ரா ரா... சரசுக்கு ரா ரா...'ன்னு 'சந்திரமுகி'கூட ஹாரர் நாட்டியம் ஆடினார் பார்த்ததில்லையா? மஷ்ரூம் ஹேர்ஸ்டைல் எல்லாம் கட் பண்ணிட்டு, பார்க்க மல்லுவாவே மாறிட்டார். உங்களால அடையாளம் கண்டுபிடிக்க முடியாது!”

``மிக்க மகிழ்ச்சிங்க. அருண் அப்பவே வளவள பளபளன்னு க்ளீனா இருப்பார். யூகிச்சிருக்கலாம்தான். வினீத் ஏழைங்கிறதால தொளதொளச் சட்டை மாட்டியிருப்பாரா, ஏமாந்துட்டேன். அவங்க ஃபுட்பால் விளையாடுற காட்சி இருந்ததால கோச் ஆகியிருப்பாங்கனு வேற நினைச்சுட்டேன்.''

``அழகான பெண் என்றும் இன்ஸ்பி ரேஷன்னு பாடியிருப்பாங்களே. படம் முடிஞ்ச பிறகு, கதை விக்ரமன் சார் ஸ்க்ரிப்ட்டா மாறிடுச்சு. எல்லாருமே உழைச்சு முன்னேறி ஆளாளுக்கு செட்டிலாகிட்டாங்க. சின்னிஜெயந்த் மாதிரி ஒருத்தர் அருணுக்கு ஃப்ரெண்டா வருவாரே, அவர்கூட ரேடியோ தயாரிக்கும் பெரிய நிறுவனத்தை நடத்துறார்னா பார்த்துக்குங்களேன்'' என்றார் திவ்யா.

``ஆஹா!'' - மேலும் பலதும் பேசிய பிறகு தூங்கிப்போனோம். எழுந்துப் பார்த்தால், திவ்யா இறங்கி போயிருந்தார். 

அவருக்கு யாருடன் திருமணமாகியிருக்கும், முதலில் திருமணமாகிவிட்டதா என எனக்குள் பல கேள்விகள்  இருந்தாலும், கடைசி வரை கேட்கவில்லை. திவ்யாவை ரசிக்க, அதற்குப் பதில் தேவையில்லை எனத் தோன்றியது.

காதல் தேசம்
வெளியான ஆண்டு: 1996
நடிப்பு: தபு, அப்பாஸ், வினீத், வடிவேலு இயக்கம்: கதிர்

காதல் தேசம்!

காதல் தேசம் - பார்ட் 2!

`காதல் தேசம்' நாயகர்களில் ஒருவரான வினீத்திடம், ``திவ்யா, கார்த்திக், அருண் எல்லாம் இப்போ எப்படி இருப்பாங்க?'' என்று கேட்டோம்.

``திவ்யா திருமணத்துக்கு நானும் அருணும் சென்று எல்லா வேலைகளும் பார்த்திருப்போம். எங்கள் இருவரின் திருமணங்களையும் திவ்யாவே முன்னிற்று நடத்தி வைத்திருப்பார். எங்க  மூன்று பேரின் குடும்பங்களும் எப்பவும் ஃப்ரெண்ட்ஷிப்பில் இருப்போம். மூவரின் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடியிருப் பார்கள். அடிக்கடி பிக்னிக் போய் ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் போட்டோ போட்டிருப்போம்'' என்று குதூகலமாகச் சொன்ன வினீத்திடம், ``அப்பாஸ், தபுவோடு இன்னும் நிஜ நட்பைத் தொடர்கிறீர்களா?'' என்றோம். ``அப்பாஸ்  இப்போது நியூசிலாந்தில் இருக்கிறார். அவருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃபேஸ்புக்கில் தொடர்புகொண்டு பேசினேன். அவருடைய குழந்தைகள் எல்லாம் பெரிதாகிவிட்டார்கள். சமீபத்தில் தபுவைக் கேரளாவில் என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் பார்த்தேன். அப்போது எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. எத்தனை வருஷங்களுக்குப் பிறகு பார்த்தாலும், ஏதோ நேற்றுதான் பார்த்தமாதிரி இருக்கு'' என்று நினைவுகளில் மூழ்கினார் வினீத்.

`காதல் தேசம்' இயக்குநர் கதிரிடமும் இதுபற்றிக் கேட்டோம்.

`என் டைரக்‌ஷனில் எனக்குப் பிடித்த படம் `காதல் தேசம்'தான். என் அடுத்த படத்தின் ஸ்க்ரிப்ட் இந்தப் படத்தை அடிப்படையாகக்கொண்டு, `பார்ட் 2' போல வரவிருக்கிறது. அந்தப் படமும் `காதல் தேசம்' போலவே இன்னும் இருபது வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் யூத் விரும்புகிற ட்ரெண்ட்டி மூவியாக இருக்கும்'' என்று ஆர்வம்கூட்டுகிறார் இயக்குநர் கதிர்.

- சனா