கட்டுரைகள்
கவிதைகள்
Published:Updated:

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

சினிமா - புராணம், வரலாறு, உண்மை
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா - புராணம், வரலாறு, உண்மை

தொகுப்பு : வெய்யில், அழகுசுப்பையா ச.

சிதைந்துகொண்டிருக்கும் சமூகத்தில், கலையானது உண்மையானதாக இருக்குமானால், அந்தச் சிதைவையும் சேர்த்தே அது பிரதிபலிக்க வேண்டும். தன் சமூகப் பணிக்கு உண்மையாக இருப்பதை அது முறித்துக்கொள்ள விரும்பாமலிருக்குமானால், ‘உலகம் மாற்றியமைக்கப்படக் கூடியதுதான்’ என்பதைக் காட்ட வேண்டும்; அதை மாற்றுவதற்கு உதவ வேண்டும்.

- எர்னஸ்ட் ஃபிஷர்

சினிமா ஒரு தொழில்நுட்பக் கலை, வணிகக் கலை என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் பண்பாட்டு நிலைகளின் மீது பெரும்பாதிப்பைச் செலுத்தக்கூடிய ஒன்றாகவும் விளங்கிவருகிறது. இந்திய, தமிழக அரசியல்போக்கில் மட்டுமல்ல, உலகளாவிய வகையிலேயே சினிமா ஒரு மிக முக்கியமான பிரசாரக் கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மக்களின் உடை, சிகை அலங்காரம், குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள், பேச்சுமொழியில் நுழைந்த புதிய தொனியிலான புழங்கு வார்த்தைகள், முன்வைக்கப்பட்ட விவாதங்கள், அரசியல் மாற்றங்கள், என ஆய்வுசெய்தால், சினிமா எனும் பிரமாண்டக் கலையின் ஆற்றல் புரியவரும். சர்வதேச அளவில் சினிமாக்களுக்கு இருக்கும் சென்சார் கட்டுப்பாடுகளைக் கணக்கில்கொண்டால், சினிமா என்பது பெரிய பெரிய அரசுகளுக்கே எவ்வளவு சவாலான கலைவடிவமாக இருக்கிறது என்பது விளங்கும்.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

எத்தகைய தொழில்நுட்பமானாலும், கலையானாலும் அது இந்திய நிலத்துக்குள் நுழையும்போது, ‘இந்தியத் தன்மை’ பெற்றுவிடும். அறிவியல் புரட்சியின் முக்கியமான கண்டுபிடிப்பான சினிமா, இந்தியாவிற்குள் நுழைந்ததும் முதலில் புராணக் கதைகளைத்தான் காட்சிப்படுத்தின; பாடின. இந்தியாவின் நுட்பமான கூறுகளான சாதி, மதம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றோடு நாத்திகம், பல்கலாசார ஏற்பு போன்றவையும் சினிமாவுக்குள் கலந்தன; முக்கியமான பேசுபொருள்களாயின. அதன் வழியே உருவான சர்ச்சைகள், பிரச்னைகள், நல்ல மாற்றங்களும் குறைவற்றவை. இந்தியா என்கிற ஒரு பெரிய நிலப்பரப்பையும் அதன் பல்வேறுபட்ட பண்பாடுகளையும் அதன் வெகுமக்களுக்குக் கொண்டு சேர்த்தது சினிமாதான். சுதந்திரப் போராட்டத்தில், திராவிட அரசியலில், சினிமா ஒரு முக்கிய அரசியல் கருவியாக மாற்றப்பட்டது. இந்திய சமூகத்தின் காதல், நட்பு, தாய்மை, தேசபக்தி, வீரம், தியாகம், போன்ற உணர்வுகளைச் சதா உயிர்ப்போடு வைத்திருப்பதில் சினிமா தவிர்க்க முடியாத சமூக ஊடகமாகி நிலைத்திருக்கிறது. நிலவுடமைச் சமூக சினிமா, முதலாளித்துவ - நவீன சினிமா, பின்நவீன சினிமா என காலம் சினிமாவையும்  - சினிமா காலத்தையும் மாறி மாறிப் பாதிக்கின்றன. தமிழ் சினிமா நூற்றாண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், சினிமா கடந்துவந்த பாதைகளையும் அது உருவாக்கிய அசைவுகளையும் அலசுகின்றன இந்தக் கட்டுரைகள்...

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

ராஜா தேசிங்கும் பாரதியும்: தமிழ்த் திரையில் வரலாறு - தியடோர் பாஸ்கரன்

சினிமாவுக்கு `வரலாறு’ ஒரு தீராத மூலக்களஞ்சியமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. உலகின் பல உன்னதத் திரைப்படங்களான `பேட்டில்ஷிப் பொடெம்கின்’ (1925) முதல் `ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ (1993) வரை வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாகக்கொண்டவை. இந்த வகையில் இந்தியாவிலும் `முகலே ஆசம்’ (1960), `ஷத்ரஞ் கே கிலாடி’ (1977) போன்ற சீரிய படைப்புகள் வந்திருக்கின்றன. வரலாற்றுச் சினிமா, இரண்டு வகைப்படலாம். குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஒரு கதை நடப்பதுபோல் படம் ஒன்றை எடுப்பது, `பார்த்திபன் கனவு’ (1960) மாதிரி. இரண்டாவது, வரலாற்று நிகழ்வுகளை ஒரு திரைப்படமாக்குவது `இருவர்’ (1997) போன்று. இரண்டுவிதமான படங்களுக்கும் ஆழ்ந்த வரலாற்று ஆராய்ச்சி தேவையாகிறது. நிகழ்வுகள் பற்றி மட்டுமல்ல, வாகனங்கள், வாழிடத்தில் உள்ள இருக்கைகள், புழங்குப் பொருள்கள், உடை... இவற்றில் கவனம் அவசியமாகிறது. இது கலை இயக்குநரின் தளம். சரித்திரக்காலப் படங்களில் இயக்குநருக்கு அடுத்த இடம் கலை இயக்குநருக்கே. இந்தப் பரிமாணம் சரியில்லை என்றால், காலவழு (Anachronism) போன்ற தவறுகள் ஏற்படலாம். ஆனால், தமிழ்ப்படங்களில் கலை இயக்குநர், நாடக மேடை போன்ற செட் போடுவதைக் கண்காணிப்பவராக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, சரித்திரக்காலப் படத்துக்குச் செலவு அதிகமாகும் என்ற கருத்தும் உள்ளது. குறைந்த செலவில் ஒரு நல்ல சரித்திரக்காலப் படம் தயாரிக்க முடியும் என்பதை அம்ஷன்குமார், பிரிட்டிஷ் காலப் பின்னணியில் `ஒருத்தி’ (2003) எடுத்து நிரூபித்திருக்கிறார். அது கி.ரா-வின் கதை என்பது, அதற்கு இன்னுமொரு சிறப்பு.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

வரலாற்றுப் படங்களில் ஆடை அணிகலன்கள் மேல் கூர்ந்த கவனிப்பு தேவை. ஏனென்றால், கதை நடக்கும் காலகட்டத்தை நிறுவி, நம்பகத்தன்மையைக் கூட்டுவதில் ஆடைகளுக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு. `காந்தி’ (1982) படத்தில், இது ஒரு சிறப்புப் பரிமாணம். ஆடை வடிவமைப்புக்காக பானு அத்தையா இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்றதை நினைவில்கொள்ள வேண்டும். தமிழ்ப் படங்களில் `சிவகங்கை சீமை’ (1959) என்ற படத்தில் இந்த அம்சம் நன்றாக இருந்தது. ஆனால், பெண்களின் ஆபரணங்கள் சற்று அதீதமாகவே இருந்தன. `வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் (1959) ஆடை அலங்காரத்துக்குச் சொற்ப மதிப்பும் தரப்படவில்லை.ஆண் கதாபாத்திரங்களுக்குச் சற்றும் பொருத்தமற்ற அலங்காரம். டாம்பீகமான பட்டும் பீதாம்பரமும் அணிந்து வலம்வந்தனர். வரலாறு சார்ந்த தமிழ்த் திரைப்படங்களின் ஆடைகள், கம்பெனி நாடகப் பாரம்பர்யத்தில் வந்தவை. கம்பெனி நாடக உடைகளோ, மராத்தி நாடகங்களிலிருந்தும் ராஜா ரவிவர்மாவின் தைல ஓவியங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. ஆகவே, பொருத்தமற்று இருந்தன.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே தொன்மத்தையும் வரலாற்றையும் மரபுக் கதைகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டனர். `ஒளவையா’ரில் சோழ மன்னன் தோன்றுகிறார், பாரி வருகிறார், கடவுளரும் தோன்றுகின்றனர். விநாயகர் ஒரு யானைப் பட்டாளத்தை ஏவி விடுகிறார். மாயாஜாலமும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பிரதேசமோ, குறிப்பிட்ட காலத்தின் பின்னணியோ இல்லாமல் படம் எடுப்பது நம் மரபு, `நாடோடி மன்னன்’ (1956) போல. 1939-ம் ஆண்டில் பிரசித்திப்பெற்ற இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டி உருவாக்கிய `மாத்ருபூமி’ என்ற வரலாற்றுப் படம் வெளியானது. இந்தப் படத்தின் பிரதி இல்லாததால், அதைப்பற்றிப் பத்திரிகைகளில் வந்த செய்திதான் நமக்கு ஆதாரம். அலெக்ஸாண்டர் படையெடுப்பையும் அதற்கு இந்திய மன்னர்கள் காட்டிய எதிர்ப்பையும் உருவகக் கதையாக வடிவமைக்கப்பட்ட இதை, ஒரு பிரசாரப் படமாக பிரிட்டிஷ் அரசு பார்த்தது. உடை அலங்காரங்கள் அந்த வரலாற்றுக் காலத்துக்குப் பொருந்தாமல் இருந்தாலும், சண்டைக்காட்சிகள் செஞ்சி, கிருஷ்ணகிரி கோட்டைகளில் படமாக்கப்பட்டிருந்தன. இது ஒரு தேசபக்திப் படமாக அறியப்பட்டது. இதில் வந்த `நமது ஜென்ம பூமி… நமது... ஜென்ம பூமி’ பாடல் (பாபநாசம் சிவன்) வெகு பிரபலம். 50-களில் நான் பள்ளியில் படித்தபோதுகூட இந்தப் பாடல், பள்ளி அணிவகுப்புகளில் பாடப்பட்டது இன்றும் நினைவுள்ளது. திரைப்படங்கள், ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்தக்கூடும்; அந்த நிகழ்வின் பாடத்தை நமக்கு அவ்வப்போது நினைவூட்டும். ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இனக்கொலை பற்றி ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய `The Pianist’ (2002) போன்ற பல படங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தக் கொடுமையைப் பதிவுசெய்திருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினையின் கொடுமையைச் சித்திரித்த பமேலா ரூக்ஸ் இயக்கிய `The Train To Pakistan’ (1998) இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அது, குஷ்வந்த் சிங்கின் புகழ்பெற்ற நாவல்.

தமிழ் சினிமாவில் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியைக்கொண்டு சில படங்கள் வந்தன. அவற்றில் சிறப்பு இடத்தைப் பெறுவது `ஏழை படும்பாடு’ (1950). விக்டர் ஹ்யூகோவின் உன்னதப் படைப்பான `ல மிசரபிள்’ (Les Miserables) நாவலை, சுத்தானந்த பாரதி தமிழாக்கம் செய்திருந்தார். இதை இயக்குநர் கே.ராம்நாத் சில மாற்றங்களுடன் படமாக்கினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பதிலாக இந்தியச்

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

சுதந்திரப் போராட்டம் பின்னணியாக்கப்பட்டது. போலீஸாரின் உடை, கோச்சு வண்டிகள், நீதிமன்ற அமைப்பு இவை 40-களின் வரலாற்றுச் சூழலை நன்றாகத் தோற்றுவித்தன. இது கற்பனைக் கதை என்றாலும், நம் நாட்டின் முக்கியமான ஒரு காலகட்டத்தை மையப்படுத்தியது. ஆனால், `பராசக்தி’ (1952), `அந்த நாள்’ (1954) போன்ற படங்களின் கதைகளும் பிரிட்டிஷ் ஆட்சியின் காலப் பின்னணியில் இருந்தாலும், அந்தக் காலத்தைத் திரையில் தோற்றுவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. `பராசக்தி’யில் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வான பர்மா வழி நடைப்பயணம், பாத்திரப் பேச்சால் சொல்லப்படுகிறது; காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன் வெளியான `மானசம்ரக்‌ஷணம்’ (1945) என்ற கே.சுப்ரமணியம் இயக்கிய போர்க்காலப் பின்னணிப் படத்தில், இந்த வரலாற்றுப் பிரசித்திப்பெற்ற நடைப்பயணம் காட்டப்பட்டதாக அறிகிறோம். கல்கியின் `பார்த்திபன் கனவு’ (1960) கற்பனைக் கதை என்றாலும், வரலாற்று நாயகர்களான பல்லவ மன்னன் நரசிம்மவர்மன், சிறுத்தொண்டர் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களாகத் தோன்றுகின்றனர். என்றாலும் அதில், ஆடைகளும் ஆபரணங்களும் பொருத்தமற்றவையாக இருந்தன. ஒரு கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுபோல பல்லவர் கால ஆடை அணிகலன்கள் மாமல்லபுரத்தில் காணக்கூடியதாக இருந்தாலும், இதைப் படம் எடுத்தவர்கள் பார்க்கக்கூட இல்லை போலிருக்கிறது. சோழத் தளபதி மாரப்ப பூபதி 18-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட மராத்தியத் தலைப்பாகை அணிந்திருக்கிறார். எந்த விதமான வரலாற்றுத் தாக்கத்தையும் பார்ப்போரிடம் இந்தப் படம் ஏற்படுத்தவில்லை. அதேபோன்ற ஒரு படம்தான் `ராஜராஜசோழன்’ (1973). அது ஒரு வண்ணப்படம் என்பதுதான் வேறுபாடு. இதில் கதைமாந்தர்கள் பேசியவிதம், நடந்த பாணி இவற்றுடன் நடிப்பும் மோடித்தனமாக (stylized) இருந்ததால், நாடகத்தன்மை ஓங்கியிருந்தது. குந்தவி போன்ற பெண் கதாபாத்திரங்கள் செப்புச்சிலைகள்போல, திரிபங்க நிலையில் நின்றனர். படமாக்கப்பட்ட நாடகம் ஒன்றைப் பார்க்கும் உணர்வே மேலிட்டது. இயக்குநர், நாடக மேடைப் பாரம்பர்யத்திலிருந்து வந்தவர் என்பதை, பின்னணி இசை, முன்கோணப் படப்பிடிப்பு போன்ற கூறுகள் காட்டுகின்றன. இந்தப் படம் டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகம் ஒன்றை அடிப்படையாகக்கொண்டது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, சிறு ராஜ்ஜியங்களை அடக்கி இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து சில பாளையக்காரர்கள் எழுந்தனர். `பாளையக்காரர் போர்’ (Poligar wars) என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு வந்த `வீரபாண்டிய கட்டபொம்மன்’, `சிவகங்கை சீமை’ போன்ற படங்கள் தென்னிந்திய வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தைச் சார்ந்தவை. `சிவகங்கை சீமை’ பெருமளவு உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், கற்பனைக் கதாபாத்திரங்களையும் புகுத்தியிருந்ததால் நம்பகத்தன்மை குறைந்தது. இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு கட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களைக் காட்டும்போது, வரலாற்றுச் சூழலைக் காட்டுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள், படம் முழுவதும் ஒரே உடையில் தோன்றுகின்றனர். கர்னல் வெல்ஷ் சதாசர்வகாலமும் பணி நேரத்திலும் குடித்துக்கொண்டிருப்பவராகச் சித்திரிக்கப்பட்டிருந்தார். கதாபாத்திரங்கள் கேமராவை நோக்கி, செந்தமிழில் நீண்ட வசனங்களைச் சொற்பொழிவு ஆற்றுவதைப்போல் பேசியது, மேடை நாடகங்களை நினைவூட்டியது.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட அபூர்வமான படங்களில் ஒன்று `கப்பலோட்டிய தமிழன்’ (1961). சுதேசி இயக்கம்தான் இதற்குப் பின்னணி. அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வரலாற்றுச் சம்பவங்கள் துல்லியமாகப் படமாக்கப்படவில்லை. பெரும்பாலான காட்சிகள் ஸ்டூடியோவுக்குள்ளேயே படமாக்கப்பட்டிருந்தன. வரலாற்றை வெளிப்படுத்தும்படி எந்த விதமான காட்சி அமைப்புகளும் இல்லை. அந்நியத் துணிகளைத் தீக்கு இரையாக்கும் காட்சிகளும், சிதம்பரனார் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் விவாதிக்கும் காட்சிகளும் தட்டையாகவும் பொருத்தமற்றவையாகவும் இருந்தன. பிபின் சந்திரபாலின் கைதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம், ஹார்வி மில் வேலைநிறுத்தம், சிதம்பரம் கப்பல் ஓட்டியது போன்ற காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தன. இங்கே ஓர் அடிப்படைப் பிரச்னை உள்ளது. தமிழ் சினிமாவின் பாரம்பர்யத்தைக் கவனித்தால், வரலாற்றுக் கதைகளையும் பொழுதுபோக்குப் படத்தின் வடிவத்திலேயே உருவாக்கப்பட்டது புலப்படுகிறது. டூயட், நடனம், சண்டைக்காட்சி, காதல் காட்சி, ஆட்டம்பாட்டம், துரத்தல் போன்ற கூறுகளைச் சரித்திரப் படங்களிலும் திணித்து, அவற்றின் நேர்மையை, தாக்கத்தை நீர்த்துப்போகும்படி செய்தனர். சினிமா என்ற கலைவடிவம் கிளுகிளுப்பை ஊட்டும்போது, பொழுதுபோக்குக்காகத்தான் என்ற நோக்கு நம் பொதுப்புத்தியில் உறைந்துவிட்டது. படங்களை அவற்றின் உள்ளடக்கத்தை வைத்து வகைப்படுத்தும் பழக்கம், நம் திரைப்படப் பாரம்பர்யத்தில் இல்லை. ஆகவே, கேளிக்கை அம்சங்கள் இல்லாத படங்களை நாம் எதிர்கொள்ள முடிவதில்லை. கப்பலோட்டிய தமிழனில் `மாடசாமி’ எனும் துணைக் கதாபாத்திரத்தின் காதல் கதையும் ஒரு டூயட்டுடன் புகுத்தப்பட்டிருந்தது. `சிவகங்கை சீமை’யில் குழு நடனங்கள் இருந்தன.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

ஜவஹர்லால் நேருவின் `Discovery of India’ என்ற நூலை அடிப்படையாகக்கொண்ட ஷியாம் பெனகல் இயக்கிய `பாரத் கா எக் கோஜ்’ என்ற தொலைக்காட்சித் தொடர் 1988-ம் ஆண்டில் ஒளிபரப்பானது. இதில் 15, 16 -ம்  கிளைக்கதைகள் சிலப்பதிகாரத்தையும், 22, 23-ம் கிளைக்கதைகள் ராஜராஜசோழனின் கதை பற்றியும் கூறப்பட்டன. இவற்றில் என்னைக் கவர்ந்த அம்சம் ஆடை, அணிகலன்மேல் செலுத்தியிருந்த கவனம். எளிமையாக, சிற்பங்களில் ஓவியங்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட உடைகளும்  நகைகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதில் கோவலன், கண்ணகி கதாபாத்திரங்கள் என் மனதில் நிற்கின்றன. பல்லவி ஜோஷி, கண்ணகியாகத் தோன்றினார். பேசும் முறையும் இயல்பாக இருந்ததால் பாத்திரத்தில் உயிர்ப்புடன், நம்பகத்தன்மையுடன் தோன்றினர். ஆனால், இந்தத் தொலைக்காட்சித் தொடர் தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நமது பத்திரிகைகளும் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

`பாரதி’ படம் வெளியான 2000 ஆண்டுக்குப் பிறகு, சரித்திரக் காலத்தைத் திரையில் மீட்டெடுக்க சீரிய முயற்சிகள் சிலவற்றைப் பார்க்கிறோம். பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை ஞானராஜசேகரன் தேர்ந்தெடுத்திருந்தார். குவளைக் கண்ணனாக கஜேந்திரன் ஓர் எடுத்துக்காட்டு. சிறிது நேரமே தோன்றினாலும் பாரதிதாசன் நினைவில் நிற்கிறார். காந்தி, ராஜாஜி, பாரதி, வ.ரா தோன்றும் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது. (எத்தனை தமிழ்ப் படங்களில் காந்திஜி ஒரு பாத்திரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்!) ஆடைகள், அந்தக் காலகட்டத்தை நன்றாகப் பிரதிபலித்தன.

தமிழ்த் திரையில் இது ஒரு நல்ல வரலாற்றுப் படம் என்று துணிந்து சுட்டிக்காட்டக்கூடியது கமல்ஹாசன் இயக்கி 2000-ம் ஆண்டில் வெளிவந்த `ஹே ராம்’. காந்திஜி, சுராவர்தி, அபுல் கலாம் ஆசாத், கோட்சே போன்றோர் படத்தில் கதைமாந்தர்களாகத் தோன்றினர். ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகே படம் தயாரிக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. உடை, அணிகலன், ஆபரணங்கள், சிகையலங்காரம் இவற்றைக் கச்சிதமாகக் காலத்துக்கு ஏற்ப சரிகா அமைத்திருந்தார். போலீஸ் சீருடை, சுவரில் தொங்கும் காலண்டர், அன்றாடம் புழங்கும் ஃபேன், கட்டில் போன்ற சிறு சிறு உபகரணங்களிலும், கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களிலும், வாகனங்களிலும் கலை இயக்குநர் சாபுசிரிலின் திறமை வெளிப்பட்டது. வரலாற்றுச் சூழல் நன்றாக மீட்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெருவாரியான விமர்சனங்கள் படத்தின் இந்தப் பரிமாணத்தைத் தொடவில்லை என்பது நமது சினிமா ரசனை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. படம் எடுக்கும்போதே ஒலிப்பதிவையும் செய்தது (live sound recording... அதாவது டப்பிங்கைத் தவிர்த்து) படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. நம் நாட்டில் `லகான்’ படத்துக்குப் பிறகு இந்த முறையில் ஒலிப்பதிவு பல படங்களில் செய்யப்படுகிறது. என்றாலும், டூயட் பாடல்கள், சண்டைக்காட்சிகள் போன்ற சமரசங்களும் இந்தப் படத்தில் இருந்தன. 2008-ம் ஆண்டு வெளியான `தசாவதாரம்’ முதல் பகுதியில் சோழ மன்னன் தோன்றும் காட்சிகள் வரலாற்றுக் காலத்தையொட்டி அருமையாக உருவாக்கப்பட்டிருந்தன.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

`மதராசபட்டினம்’ (2010 ) படம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய சென்னையை அழகாகப் பிரதிபலித்தது. ஆடைகள், வாகனங்கள், கட்டடங்கள் இவற்றில் நல்ல ஆய்வு தெரிந்தது. பிரிட்டிஷ் கதாபாத்திரங்
களில் வெள்ளைக்காரர்களே நடித்தது நம்பகத்தன்மையைக் கூட்டியது. `வீரபாண்டிய கட்டபொம்ம’னில் தோன்றிய ஜாக்சன் துரையை எண்ணிப்பாருங்கள். தமிழ்நாட்டில் `ராஜாதேசிங்கு’ (1936, 1960), `சித்தூர் ராணி பத்மினி’ (1963) போன்ற இந்து - முஸ்லிம் கதைமாந்தர்கள் கொண்ட படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், மக்களிடையே அவை எந்தப் பிரச்னையும் எழுப்பவில்லை. இது, இங்குள்ள மத நல்லிணக்கப் பாரம்பர்யத்துக்கு ஒரு சான்று. அது தொடர வேண்டும் என்பதுதான் என் போன்றோரின் கனவு!

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

உண்மை எளிதன்று!

- ஜா.தீபா

ஆத்மார்த்தமான ஒரு படைப்பாளி, தன்னுடைய படைப்புகள் மூலம் உரையாடவே விரும்புவார். குறிப்பாக, தான் உண்மை என நம்பும் ஒன்றைப் பகிரவே தொடர்ந்து படைப்புலகத்துக்குள் தன்னை இருத்திக்கொள்கிறார். திரைப்பட இயக்குநர்களில் சிறந்தவர்கள் யாவருமே உண்மை பேச விழைபவர்களே! இந்த ஒரே காரணத்துக்காகப் பந்தாடப்படுபவர்களும் சொந்த அரசால் கைவிடப்பட்டவர்களும் உயிரை விட்டவர்களும்கூட உண்டு.

அற்புதமான ஓர் உதாரணம், ஈரான் நாட்டின் இயக்குநர் ஜாஃபர் பனாஹி. அவருடைய நாட்டில் பெண்கள் கால்பந்தாட்டத்தைப் பார்க்கத் தடை விதித்திருந்தது அரசு. அங்கு உள்ள இளம்பெண்கள், கால்பந்தாட்டத்தின் தீவிர வெறியர்கள்.`ஒரு பெண், கால்பந்தாட்டத்தை ஏன் பார்க்கக் கூடாது?’ என்றதற்கு, அரசு சொன்ன காரணங்கள் பல. அவற்றில் ஒன்று, `ஆண்கள் தொடையளவு உடை உடுத்திக்கொண்டு ஆடும்போது, பெண்கள் அவர்களின் கால்களைப் பார்ப்பார்கள்’ என்பது. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பனாஹி, அந்தக் கோபத்தைப் படமாக்கினார். இறுதி வரை இப்படியொரு படம் எடுக்கப்போவதாக அவர் அரசு, தணிக்கைக் குழுவுக்குச் சொல்லவேயில்லை. படத்தைத் தனது அரசுக்கே தெரியாமல் உலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவைத்தார். `Off Side’ என்ற அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அரசாங்கம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கும் என்பது புரியும். பனாஹி, அதன் பிறகு திரைப்படம் இயக்கவே தடை செய்யப்பட்டிருந்தார். இன்றைக்கும் மனஉறுதிமிக்க இயக்குநர்கள் ஈரான் நாட்டிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றனர். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைகளைக் கதையாகச் சொல்வதின் வழியே, அவர்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளைத்தான் விமர்சிக்கிறார்கள்.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

அரசாங்கங்கள் யாவும் திரைப்படத் தணிக்கையைத் தங்கள்வசம் வைத்திருப்பதன் முக்கியக் காரணம், திரைப்படங்கள் தங்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகத்தான். இரண்டு மணி நேரம் வேறு எந்தக் கவனமும் இல்லாமல் ஒருவர் திரைப்படத்தை ஆழ்ந்து உள்வாங்கும்போது, அதில் சொல்லப்படுவனவற்றின் வீரியம் உள்ளிறங்கும். அதனாலேயே சில நாடுகள், திரைப்படங்களைத் தங்களது பிரசார உத்திக்குப் பயன்படுத்துகிறார்கள். தங்கள் நாடு மற்றவரின் பார்வைக்கு எப்படிக் காட்சியளிக்கப்பட வேண்டும் என்பதை, தணிக்கை மூலமாக அரசுதான் முடிவு செய்கிறது. இதற்கெல்லாம் எதிராக சளைக்காமல் போராடி, மக்களைப் பாதிக்கும் எந்த ஒன்றையும் திரைப்படத்தின் மூலம் காட்டிவிடும் படைப்பாளிகளின் எண்ணிக்கையும் சாமானியம் அல்ல.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

கதை சொல்லும் திறன், காட்சியை உருவாக்கியவிதம் போன்ற பல சிறப்பம்சங்கள் சிறந்த இயக்குநர்களுக்கான தகுதிகளாக இருந்தாலும்கூட, இவர்கள் அனைவருக்குமே உள்ள பொதுப்பண்பு, மனதைரியம்தான். ஹிட்லரைக் கண்டு உலகமே ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில், அவரை மையக் கதாபாத்திரமாகக்கொண்டு, பகடி செய்து ஒரு படத்தை வெளியிடும் மனதைரியம் சார்லி சாப்ளினுக்கு இருந்தது. `The Great Dictator’ என்ற அந்தப் படத்தை இரண்டு முறை ஹிட்லர் பார்த்தார் என்கிறார்கள். அதில் ஒரு காட்சி வரும். உலக உருண்டையை பலூன்போல தூக்கிப் போட்டு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார், படத்தில் ஹிட்லரை நினைவுபடுத்தும் வேடத்தில் நடித்திருந்த சாப்ளின். அந்த விளையாட்டின்போது அவர் முகத்தில் பெருமையும், கர்வமும், பேராசையும் மினுங்கும். சில நிமிடத்துக்கு விளையாட்டு விரிந்துகொண்டே போகும். உலக உருண்டையைக் கையில் வைத்து ஆசையாகப் பார்க்கையில், எதிர்பாராத கணத்தில் பலூன் சட்டென உடைந்துவிடும். நிராசையாகவும் நம்ப முடியாமலும் அதையே வெறிப்பார் சர்வாதிகாரி. இந்தக் காட்சி நிச்சயம் படம் பார்க்கும்போது ஹிட்லரைப் பாதித்திருக்கக்கூடும். ஏனெனில், இதற்கு ஹிட்லர் தன்னை மீறிக் கண்கலங்கியதாகச் செய்திகள் உண்டு.

தேர்ந்த ஒரு படைப்பாளரால், ஒரு திரைப்படத்தின் மூலம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியும் என்பதற்கான மற்றுமோர்  உதாரணம், `Hotel Rwanda’.

2004-ம் ஆண்டு வெளிவந்து, பார்வையாளர்களை நெகிழவைத்த படம்.  1994-ம் ஆண்டு, ருவாண்டாவில் ஹூட்டு மற்றும் டூட்சி இனத்தவர்களிடையே உள்நாட்டுப் போர் நடந்தது. இதில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட டூட்சி இனத்தினர் படுகொலையானார்கள். அந்தச் சமயத்தில் ருவாண்டாவில் தங்கும் விடுதி ஒன்றில் 1,200 பயணிகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய விடுதியின் மேலாளர் பால் ருசெசாபெகினாவின் கதை இது. இந்தப் படம், பால் ருசெசாபெகினாவுக்கு மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அமைதிக்கான விருதுகளைப் பால் ருசெசாபெகினாவுக்குப் பல நாடுகள் அளித்து அவரைக் கௌரவப்படுத்தின. உலகம் முழுவதும் சமாதானத் தூதுவராக வலம் வருகிறார் பால் ருசெசாபெகினா. இந்தக் கௌரவங்களும் அங்கீகாரமும் `Hotel Rwanda’ படத்தின் மூலமாகவே அவருக்குக் கிடைத்தன.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

ஒரு திரைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதன் பின்னணியில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைக் கண்டுகொள்ளாமல், தனது தகுதிக்கு மீறி அவர் கொண்டாடப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தப் படம், காட்சி சுவாரஸ்யத்துக்காகச் சில சம்பவங்களைச் சேர்த்துக்கொண்டது என்றும், கனிவானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ள பால், வாடிக்கையாளர்களிடம் கறார்தன்மையுடன் நடந்துகொள்பவர்தான் எனவும் பலரும் தங்களின் அனுபவங்களின் மூலம் முன்வைத்தனர். எந்த நேரம் என்ன நடக்குமோ என்றுதான் வடகொரியாவையே பார்த்துக்கொண்டிருக்கின்றன உலக நாடுகள். `என்ன செஞ்சா இவரை வழிக்குக் கொண்டுவரலாம்’ என்று உலகத் தலைவர்கள் கூடிப் பேசும் அளவுக்கு பயம் காட்டிக்கொண்டிருக்கும் ஒருவரை, அசைத்துப்பார்த்தது ஒரு படம்.

அந்த நாட்டையே ஓர் இருட்டறைக்குள் வைத்துப் பூட்டி சாவியைத் தன்வசம் வைத்திருக்கும் அதன் ஜனாதிபதி கிம் ஜாங் உன் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் `The Interview’. ரோகன் சேத் என்பவர் இயக்கியது. இந்தப் படம், கிம் ஜாங் உன்-ஐ பகடி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது.

`The Interview’ எப்படியும் வட கொரியத் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அங்கே படத்தைப் பலர் பார்த்திருந்தனர். வடகொரிய மக்களிடம் `The Interview’ படம் சேர்ந்ததற்குப் பின்னணியாக நடைபெற்ற சம்பவம் ஆர்வமூட்டக்கூடியது.

இந்தப் படத்தின் குறுந்தகடுகளை, தென்கொரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வாங்கி அதை

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

ராட்சச பலூன்களுக்குள் வைத்து வடகொரியாவின் எல்லைப்பகுதியில் பறக்கவிட்டார். வடகொரியாவின் ராணுவம் அந்த பலூன்களைச் சுட்டு வீழ்த்தியது. பலூன்கள் வெடித்துக் குறுந்தகடுகள் வடகொரியாவுக்குள் சிதறின. எஞ்சிய குறுந்தகடுகள் பரவலாகி, அங்கு மக்கள் மத்தியில் ரகசியச் செல்வாக்கைப் பெற்றுவிட்டன. அந்தப் படம், கிம் ஜாங் உன்-ஐ கடவுளாகக் காட்டும் பிம்பத்தை உடைத்து, சாதாரண மனிதனாகக் காட்டியது. ஆபாசமான, கீழ்த்தரமான நகைச்சுவைக் காட்சிகளும் படத்தில் உண்டு என்றாலும், மரண பயத்தில் அழும் கிம் ஜாங் உன்-ஐ காட்டியதில் உள்ள உண்மைத்தன்மை தனக்குப் பிடித்திருந்த தாலேயே, அதை மக்களிடையே பரப்பியதாகச் சொன்னார் தென் கொரிய சமூக ஆர்வலர். கிம் ஜாங் உன், அந்தப் படத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தாக வேண்டிய நிலை வந்தது. கிம் ஜாங் உன், அறிக்கை ஒன்றைத் தயாரித்தார். அந்த அறிக்கை, அங்கு உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. `ஒரு சர்வாதிகாரி, ஒரு திரைப்படத்துக்காக ஏன் அச்சம்கொள்ள வேண்டும்?’ என்ற கேள்விக்கான விடை, எல்லோரையும்விட கிம் ஜாங் உன்-க்குத் தெரியும். கிம் ஜாங் உன்-ன் அப்பா கிம் ஜாங் ல், ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது கொள்கைகளைப் பரப்பும் ஓர் ஊடகமாகத் திரைப்படங்களையே பெரிதும் நம்பியிருந்தார். `Nation and Destiny’ என்கிற ஒரு திரைப்படத்தைத் தானே தயாரித்து, அந்தப் படத்தைத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் நாளுக்கு இரண்டு முறை திரையரங்குகளில் திரையிட உத்தரவிட்டார். வட கொரியாவைவிட்டு வேறு தேசத்துக்குக் குறிப்பாக, தென் கொரியாவுக்குச் செல்கிறவர்களின் நிலைமை எப்படி மோசமடையும் என்பதை விளக்கும் திரைப்படமாக இருந்தது அது. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வட கொரியப் படங்களை அவர் எல்லை தாண்டவிடவில்லை.

அவருடைய மகனான கிம் ஜாங் உன்-ம் திரைப்படத் துறையை தன்வசமே வைத்திருக்கிறார். கிம் ஜாங் உன், தனது நாட்டின் திரைப்படங்கள் எந்த உண்மையைப் பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் `The Interview’ படம் மக்களிடம் செல்வாக்கு பெறுவதை அவர் வெறுத்திருந்தார்.

ஈரான், வடகொரியா போன்ற நாடுகளிலாவது அரசாங்கம் திரைப்படங்களுக்கு நேரடிக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. அதனால், எதையும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ காட்ட முடியாது. ஆனால், தமிழ்நாட்டிலோ, திரைப்படத் துறை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை;  எதையும் வெளிப்படையாக விமர்சனம் செய்ய முடிவதில்லை. ஆனாலும், நடந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே படமாகக் காட்டுவதில் சிக்கல்கள் உண்டு. இத்தனைக்கும் தமிழகத்தில் எடுத்தாள வேண்டிய உண்மைக் கதைகள் ஏராளம் உண்டு.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

நம்மிடையே இருக்கும் துயரங்களும், வரலாறுகளும், போராட்டங்களும் சொற்களில் அடங்காதவை. ஆனால், எது படைப்பாளர்களை அதை நோக்கித் தள்ளாமல் இருக்கிறது? இதற்குப் படைப்பாளிகளை மட்டுமே குறை சொல்லிவிட முடியமா? சாதி, மதம், அரசியல், போலி வரலாற்றுத் திணிப்பு, நடிகர்களின் பிம்ப அரசியல் எனப் பலவற்றையும் ஓர் இயக்குநர் யோசித்தாக வேண்டியிருக்கிறது. படத்தைப் பார்ப்பதற்கு முன்பாகவே தடைகோரும் விசித்திரத்தை, தயாரிப்பாளர்களும் விரும்புவதில்லை.

திரைப்படம் என்பது கலை என்றும், சக்திவாய்ந்த ஊடகம் என்றும் தமிழ்த் திரைப்படப் படைப்பாளர்களில் சிலர் மட்டும் நினைவுகொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது வாழ்க்கையைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் தொழில். சமகாலத்து அரசியலை, சமூகப் பிரச்னையை ஒரு நடிகர் ஓரிரு காட்சிகளில் திரையில் பார்வையாளர்களை நோக்கி ஆவேசமாகப் பேசலாம். இந்த அளவே போதும். இதையே அந்த நடிகரின் துணிச்சலாக நாம் பாராட்டிக்கொள்வோம். அந்தக் காட்சியின் தாக்கம் மறைவதற்குள் ஒரு காதல் பாடல் வந்துவிட்டால், படம் வணிகரீதியான வெற்றிக்குத் தயாராகிவிட்டது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஒருபுறத்தில் ரசிகர்களும் அதையே விரும்புகிறார்கள். காலையில் செய்தித்தாள்கள் படிக்கிறபோது ஏற்படும் சமூக உணர்ச்சியை அடுத்த நிமிடத்தில் மறக்கச் செய்யும் நமது அன்றாட வாழ்க்கை முறைகளைப்போலத்தான் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களின் உண்மையைச் சொல்லும் அக்கறையும்.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. சின்னஞ்சிறிய கிராமங்கள் தங்களின் சாதி அடையாளத்தை ஊரின் முகப்பிலேயே காட்டிவிடுவது பழங்கால வழக்கம்தான் என்றாலும், இப்போதைய நவீன வடிவமாக, அதற்கான முகமாக நடிகர்களை வரித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரின் நுழைவாயிலில் சாதித் தலைவர்களின் சிலைக்கு அருகிலேயே அவர்கள் சாதியைச் சேர்ந்த நடிகர்களின் படம் வரையப்பட்டிருக்கிறது. இதுபோன்று சாதிக்குள் தன்னை நுழைப்பதை விரும்பாத தமிழகத்தின் நடிகர் ஒருவர், `தான் அந்தக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் அல்ல’ எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால், இன்றும் அவரது படங்கள் சாதி சார்ந்த சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டுத்தான் வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் சாதி சார்ந்த பிம்ப அரசியல், ரசிகர் மத்தியில் தீவிரமாக உள்ளிறங்கிவிட்டது. இந்தக் கதாநாயகர்கள் திரைப்படங்களில் `மரணிப்பதை’யோ தோல்வியுறுவதையோ அவரைத் தொழுபவர்கள் விரும்புவதில்லை.

ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொள்ளலாம். சமகாலத்து நடிகர் ஒருவர், மகாத்மா காந்தியாக நடிக்க முன்வருகிறார் என்றால், காந்தி சுடப்பட்டு இறந்துபோனார் என்ற வரலாற்றைக்கூட நாம் மாற்ற வேண்டியிருக்கும். `தோட்டாவைக் கையில் பிடித்துத் தூக்கி எறிந்தார்’ என்பதாகத்தான் காட்டியாக வேண்டும்.

அரசியலில் நடைபெறும் சம்பவங்களை `மீம்ஸ்’களாக மாற்றி, பகடிசெய்ய முடியும். ஆனால், ஒருபோதும் திரைப்படத்தில் அப்படியே காட்டிவிட முடியாது. இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சர் கதாபாத்திரங்கள் பல வந்திருக்கின்றன. வந்த படங்களில் பெரும்பாலானவை அந்த முதலமைச்சர் கதாபாத்திர வடிவமைப்பை எப்படிக் காட்டியிருக்கின்றன? ஊழலற்ற, மக்களின் நலனை விரும்பும் ஒருவர்போலவும், அவரது அமைச்சர்கள்தான் தவறுகளைச் செய்பவர்கள் என்பதுபோலவும்தான் காட்டப்படுகின்றன. (`முதல்வன்’ போன்ற படங்கள் விதிவிலக்கு). ஏனெனில், தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவரைச் சுட்டிக்காட்டிவிடுமோ என்பதால் ஏற்படும் அச்சம்தான் காரணம்.

புனிதம், நேர்மை, ஆளுமை போன்றவற்றுக்கு நமக்கு விளக்கங்களைவிட பிம்பங்களே எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகின்றன. அதில் ஒரு துளி சேதாரம் ஏற்பட்டாலும், அதனால் ஆதாயம் அடைபவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. யார் மனதையும் புண்படுத்தாமல் படைப்புகளில் கருத்து சொல்ல வேண்டும் என்பதுதான் இங்கு எதிர்ப்பாளர்களின் எண்ணம். இது, வலதுகை கொடுப்பதை இடதுகை பிடுங்கிக்கொள்வதைப் போன்றது. ஜனநாயகத்தில் கருத்துரிமை என்பது குரல்வளை நெரிக்கப்பட்டது போன்றதாகத்தான் அமைந்திருக்கிறது. அதிலிருந்தும் அபூர்வமாக வெளிப்பட்டுவிடும் சொற்ப ஒலிக்குத்தான் கிடைக்கின்றன கூச்சல்களும் மிரட்டல்களும்!

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

கருத்துச் சுதந்திரமும் தமிழ்த் திரைப்படங்களும் - குமரன் தாஸ்

யக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் `பத்மாவதி’ திரைப்படத்துக்குச் சாதி, மத அடிப்படைவாதிகள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, அந்தத் திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. அத்துடன் நடிகை தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரது தலைகளைக் கொண்டுவருவோருக்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற அடிப்படைவாதிகளின் பகிரங்க அறிவிப்புகளைக் காணும்போது, வட மாநிலங்களில் சாதி, மத அடிப்படைவாதிகளின் வளர்ச்சியும், ஆதிக்கமும், வன்முறையும், கருத்துச் சுதந்திரத்தின் அவலநிலையும் பளிச்செனத் தெரிகின்றன.

தீபிகா, பன்சாலி ஆகியோரது தலைகளுக்கு விலை கூவிய அறிவிப்புகளை, வெற்றுச்சவடால் என நாம் புறம்தள்ளிவிடவும் முடியவில்லை. ஏனெனில், சமீபகாலங்களில் இந்து அடிப்படைவாதத்துக்கு மாற்றான கருத்துகொண்ட அறிவுஜீவிகளான கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் இந்த அறிவிப்புகளின் பயங்கரத்தை உணர்த்துகின்றன. ஏற்கெனவே ஒருமுறை `ராமர்’ குறித்த கருணாநிதியின் கருத்துக்காக வடஇந்தியச் சாமியார் ஒருவர், `கலைஞரின் நாக்கை அறுக்க வேண்டும்; தலையைச் சீவ வேண்டும்’ என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

வட மாநிலங்களில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதலையும் வன்முறையையும் பார்க்கும்போது, நமது தமிழகத்தின் நிலவரத்தை இத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது.
கி.பி. 15, 16, 17-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றி 17, 18-ம் நூற்றாண்டுகளில் புனையப்பட்ட வாய்மொழி, கதைப் பாடல்களை ஆதாரமாகக்கொண்டு `பத்மாவதி’ போன்ற பல திரைப்படங்கள் தமிழிலும் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. `மதுரை வீரன்’, `காத்தவராயன்’, `ராஜா தேசிங்கு’ போன்ற திரைப்படங்களோடு வரலாற்றுப் படங்களாக `ராஜராஜ சோழன்’, `வீரபாண்டிய கட்டபொம்மன்’, `சிவகங்கைச்சீமை’ ஆகியவை வெளிவந்துள்ளன.

இந்தத் திரைப்படங்கள் சிலவற்றில்கூட அவற்றைத் தயாரித்து, இயக்கியவர்களின் பின்னணி சார்ந்த கண்ணோட்டங்களின் காரணமாக, சிக்கலான பல காட்சிப் படுத்துதல்கள் இருந்துள்ளன. எனினும், இதுநாள்வரை அது பற்றிய பெரிய எதிர்ப்புகளோ, அந்தத் திரைப்படங்களுக்குத் தடை கோரிய போராட்டங்களோ தமிழகத்தில் எழுந்ததில்லை. இந்தத் திரைப்படங்கள், யாரைக் காட்சியின் வழியாகக் கொச்சைப்படுத்தியதோ, அவர்கள் மத்தியிலேயே அந்தத் திரைப்படங்களும் அதன் கதாநாயகர்களும் பெரும் செல்வாக்குப் பெற்றனர் என்பதும் இங்கு யதார்த்தமாக இருக்கின்றன. உதாரணமாக, எம்.ஜி.ஆர் கைகளில் அருந்ததிய மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தையே சமர்ப்பித்திருந்தனர்.

குறிப்பாக, எம்.ஜி.ஆர் நடித்து, கண்ணதாசன் கதை-வசனம் எழுதி யோகானந்த் இயக்கிய `மதுரை வீரன்’ (1956) திரைப்படம், பிரச்னைக்குரிய சில காட்சிகளை முன்வைத்திருந்தது. இந்தக் காட்சிப்படுத்துதல்களுக்கான அடிப்படைகள், அதற்கு முன்பே 1939-ம் ஆண்டில் டி.பி.ராஜலெட்சுமி கதை-வசனம் எழுதி தயாரித்து, வி.வி.ராவ். இயக்க எம்.எம்.சிதம்பரநாதன், வி.ஏ.செல்லப்பா, டி.பி. ராஜலட்சுமி, டி.வி.குமுதினி ஆகியோர் நடித்து வெற்றியும் பெற்ற `மதுரை வீரன்’ (1939) திரைப்படம், கதைப்பாடல்கள் போன்றவற்றிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்தச் சிக்கல்களுக்கு எம்.ஜி.ஆர் நடித்த `மதுரை வீரன்’ படத்துக்குக் கதை-வசனம் எழுதிய கண்ணதாசனையோ, இயக்கிய யோகானந்தையோ முழுமையாகக் குற்றம் சுமத்த முடியாது. என்றபோதிலும், தவறான ஒரு கருத்தை மேலும் செழுமைப்
படுத்தி மக்கள் மயப்படுத்திய அவர்களது பாங்கையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

அதாவது மதுரை வீரன், அருந்ததிய சாதித் தம்பதியான சின்னான் - செல்லி (சின்னையன் - செல்வி) ஆகியோருக்குப் பிறந்தவனல்லன். மாறாக, காசி ராஜாவின் மகன். ஜோதிடர் சொல்கேட்டு காட்டில் விடப்பட்ட கைக்குழந்தையை அருந்ததிய இனத்தைச் சேர்ந்த சின்னான் - செல்லி எடுத்து `முத்துவீரன்’ எனப் பெயரிட்டு வளர்த்ததாகக் கதைப்பாடல் கூறியதையே சினிமா காட்சிப்படுத்தியது.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை
சினிமா - புராணம், வரலாறு, உண்மை

கதைப்பாடல்களின் இவ்வாறான திரிபுகளுக்கான காரணத்தைக் குறித்து ஆய்வறிஞர் கோ.கேசவன் இப்படிக் கூறுகிறார். ``இத்தகைய சமூகக் கதைப்பாடல்களில் உயர் குலத்தினரை மணந்துகொண்ட தாழ் குலத்தினரை ஏதேனும் ஒரு நிலையில் உயர் குலத்தினரோடு ஒருங்குசேர்த்துக் காட்டப்படும் முயற்சி உள்ளது. மதுரைவீரன், பொம்மியை மணந்துகொண்டது ஒரு மரபு மீறல். எனினும் மதுரை வீரன், காசி நகரத்து துளசி ராஜாவின் மகனாகக் காட்டப்பட்டுள்ளது.

காத்தவராயன், தேவலோகத்திலிருந்து தோன்றியவன். முத்துப்பட்டன் மனைவியரான பொம்மக்கா, திம்மக்கா இருவரும் சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர்களாகக் காட்டப்படுகின்றனர். எனவே, ஒரு மரபு மீறலை யதார்த்தத்தில் உள்ளடக்கியிருப்பினும் ஏதேனும் ஒரு விதத்திலேனும், கற்பனைரீதியாகவாவது

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

உயர்குலத்துக்கு இணையாக வைத்து எண்ண வேண்டிய அவசியம் உள்ளது எனத் தெரிகிறது. இவை அந்தக் கால மீறல் சிந்தனையின் பலமும் பலவீனமும் ஆகும். அதன் வரையறை எனவும் கொள்ளலாம். ஆனாலும்கூட, இந்தக் குறைந்தபட்ச அதிருப்தியைக்கூட பொறுத்துக்கொள்ள இயலாத நில உடைமை வர்க்கம் இவர்களைக் கொன்றுவிடுகிறது. இந்த மீறலை ஏற்றுக்கொள்ளும் மக்கள் இவர்களைப் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கின்றனர்.” (கோ.கேசவன்- கதைப்பாடல்களும் சமூகமும்)

17-ம் நூற்றாண்டின் கதைப்பாடல்களின் ஏற்பட்ட திரிபுக்கான காரணத்தை கோ.கேசவன் இப்படி விளக்குகிறார். இதே திரிபும், சமரசப்போக்கும் 20-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்திலும் தொடர்கிறது. மட்டுமல்லாமல், கதைப்பாடல்களின் கருத்தைக் காட்சியாக விவரிக்கும்போது, மேலும் ஆணித்தரமாகவும் வலுவாகவும் ‘மதுரை வீரன் பிறப்பால் அருந்ததியன் அல்ல, அவன் உடம்பில் ஓடுவது உயர்குல ரத்தம்’ எனத் திரைப் பார்வையாளர்களுக்குப் பதியவைக்கும் நோக்கில் மதுரை வீரனை மாவீரனாகக் காட்சிப்படுத்திய அதே வேளை, அவனின் பெற்றோரை (சின்னான் - செல்லியை) கோழைகளாக நகைப்புக்குரியவர்களாகக் காட்சிப்படுத்தியது `மதுரை வீரன்’ திரைப்படம்.

இந்த முரண்பட்ட பாத்திரப் படைப்பின் பின்னுள்ள நோக்குநிலை, தாழ்த்தப்பட்ட குலத்தினர் வீரர்களாக இருந்திருக்க முடியாது என்ற சாதியச் சமுகம் உருவாக்கியுள்ள பொதுப்புத்தி சார்ந்ததின்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

`மதுரை வீரன்’ திரைப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் (சின்னான்) டி.ஏ.மதுரம் (செல்லி) இவர்களது உடல்மொழியும் பேச்சும் பார்வையாளர்களுக்கு நகைப்பூட்டும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்தன. பொம்மி (பானுமதி) டி.ஏ.மதுரத்தை `அத்தை’ என அழைக்க, அதற்கு என்.எஸ்.கே, `நீ செத்த’ எனப் பதறும் காட்சி மிகப் பிரபலம்.இவ்வாறு தாழ்த்தப்பட்ட குலக் கதாபாத்திரங்களைக் கோழைகளாகவும் நகைப்புக்குரிய பாத்திரங்களாகவும் மாற்றி என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம், ஏ.கருணாநிதி தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு என நகைச்சுவை நடிகர்களை நடிக்கவும் வைத்த போக்கு, தமிழ்த் திரைப்படங்களில் தொடர்வது குறித்த பட்டியலைப் பார்த்தால் அது மிக நீண்டதாக இருக்கிறது.

சில எடுத்துக்காட்டுகள்...

கவுண்டமணி, செந்தில்
- சலவைத் தொழிலாளிகள் (சின்னக்கவுண்டர்)

கவுண்டமணி-பறையடிப்பவர்
(ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்)

வடிவேலு - நாவிதர் (பாஞ்சாலங்குறிச்சி)

வடிவேலு - பிணம் எரிப்பவர் (பிறகு),

துப்புரவுத் தொழிலாளி (காலம் மாறிப்போச்சு)

வடிவேலு - நாவிதர் (தலைநகரம், குசேலன்)

வடிவேலு - சலவைத் தொழிலாளி (கார்மேகம்)

இவ்வாறு அதிகத் திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட கதாபாத்திரம் ஏற்ற வடிவேலு, வருவோர் போவோர் அனைவரிடமும் கன்னத்தில் பளார் பளார் என அறை வாங்குவதே நகைச்சுவை என்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டது குரூரமல்லவா? இந்த அவலம் சமூகப் படங்களில் மட்டுமல்லாமல், வரலாற்றுத் திரைப்படத்திலேயே காணப்பட்டது, மிகக் கொடுமை! ஆம், பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கி சிவாஜிகணேசன் நடித்த `வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில், சுந்தரலிங்கனார் கதாபாத்திரத்தை நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதிக்கு வழங்கி, தாழ்த்தப்பட்ட குல ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்ட வீரரை காமெடியனாக மாற்றிய கொடுமையும் நடந்துள்ளது.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை
சினிமா - புராணம், வரலாறு, உண்மை

இதை முழுமையாக விளங்கிக்கொள்ள வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசனும் ஊமைத்துரையாக ஓ.ஏ.கே.தேவர், கட்டபொம்மனாக சிவாஜி ஆகியோர் பாத்திரமேற்று சீரியஸாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய காட்சிகளுக்கு இடையே, ஏ.கருணாநிதியை சுந்தரலிங்கனாராக நிறுத்திப் பாருங்கள், வேறுபாடு புரியும். நகைச்சுவைக்குத் தாழ்த்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை, தமிழ் சினிமாவுக்கு வகுத்தளித்தவர்கள் யார்? இந்தக் குதர்க்கத்துக்குப் பின்னால் இயங்கும் காரணிகள் எவை?

சரி, இவ்வாறு ஒரு சுதந்திரப் போராட்ட வீரரான சுந்தரலிங்கனாரை காமெடியனாகச் சித்திரித்த அவலத்தையோ, மதுரை வீரனின் பிறப்பைக் கொச்சைப்படுத்திய சின்னான்-செல்லியை நைய்யாண்டி செய்ததையோ எதிர்த்துக் கடந்த 60 ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருமுறைகூட போராடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியவை.

அதே நேரத்தில் மதுரை வீரன், சுந்தரலிங்கனார் அல்லாமல், இன்று சாதி இந்துக்களால் வரலாற்று நாயகர்களாக, தங்களது பெருமைக்குரிய புனித அடையாளங்களாக முன்னிறுத்தப்படும் திருவுருக்களில் எவரையாவது, தமிழ் திரைப்படம் இவ்வாறு காட்சிப்படுத்தி யிருந்தால், `பத்மாவதி’ திரைப்படத்துக்கும், பன்சாலிக்கும், தீபிகா படுகோனுக்கும் விடப்பட்ட சவால்களைப்போல், கொலை மிரட்டல்களைப்போல் பலமடங்கு இங்கும் விடப்பட்டிருக்கும் அல்லவா? ஆக, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைப் படைப்புச் சுதந்திரம், கருத்துச் (சொல்வதற்கு) சுதந்திரம் என்பது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களைப் பற்றித் தங்கள் மனம் போனபோக்கில் காட்சிப்படுத்துவதற்கு ஏராளமான அளவில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதேவேளையில் சமூக, அரசியல், பொருளாதார அந்தஸ்த்தில் உயர் நிலையில் இருப்போர் பற்றிய கடந்த கால வரலாற்று உண்மைகளைச் சமூக நிலவரத்தை ஆய்வுநோக்கில் பதிவு செய்வதற்குக்கூட இங்கு சுதந்திரம் இல்லை என்பது `இது நம்ம ஆளு’, `வேதம் புதிது’, `பாரதிகண்ணம்மா’, `கடவுள்’ போன்ற திரைப்படங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு போன்றவை காட்டுகின்றன. ஆனால், இந்தத் திரைப்படங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் காத்திரமாக இல்லாத காரணத்தாலும் இங்கு வட

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

மாநிலங்களைப்போல எதிர்ப்புப் போராட்டங்களும் தீவிரமாக இல்லாமல் மிகக் குறைவாகவே அமைந்திருந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, சில திரைப்படங்களுக்கு அடித்தள மக்கள், சிறுபான்மையினர் மத்தியில் இருந்து எதிர்ப்பும், திரைப்படப் பெயர் மாற்றக் கோரிக்கையும், சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தன. அதை அந்தத் திரைப்படக் குழுவினர் செவிமடுக்க மறுத்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டு குறிப்பிட்ட வெற்றிகளையும் பெற்றனர். ஆனாலும், ஒருபோதும் இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் கொலை மிரட்டலையோ, தலைக்கு விலை வைக்கும் பாசிசப் போக்குகளையோ வெளிப்படுத்தியதாகத் தகவல் இல்லை. இந்த வகையான எதிர்ப்பும் கோரிக்கைகளும்கூட ஆட்சி, அதிகாரம், பொருளாதாரம், ஊடகம் போன்ற எந்த ஒன்றையும் தங்கள் வசம் கொண்டிராத வேறு வாய்ப்பற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இருந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இது அடிப்படைவாதிகளது தாக்குதல் உத்திக்கு மாறுபட்ட தற்காத்துக்கொள்ள உந்தித்தள்ளப்பட்ட மக்களின் முயற்சியாகும். இந்த இரு வேறுபட்ட பிரிவினரது நடவடிக்கைகளையும் `கருத்துச் சுதந்திரம்’ என்ற ஒற்றைப் பரிமாணத்தைக்கொண்டு அளவிடுவது நியாயமாகாது என்பதை, கருத்துச் சுதந்திரக் காவலர்கள் முன் மிக்க பணிவுடன் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

அடுத்து, ஒரு `மதுரை வீரன்’ அல்லது `வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் தங்களது தலைவர்களையும் தங்களையும் இழிவுபடுத்திவிட்டால், அதற்கு மாற்றாகத் தங்களது தலைவர்களைப் பெருமைப்படுத்தும்விதமாகத் திரைப்படங்கள் எடுத்து வெளியிடும் வாழ்நிலையில் அடித்தள மக்கள் இல்லை என்பதையும், திரையில் விரியும் அவதூறுக்கு, காகிதத்தில் அச்சிடப்பட்டு மொழியப்படும் மறுப்பு சமம் ஆகாது என்பதையும், கருத்துச் சுதந்திரக் காவலர்கள் முன்வைக்கும் வாதமான `ஒரு திரைப்படத்தை அப்படியே திரையிடவிட்டு அதற்கு விமர்சனம், மறுப்பு சொல்லுங்கள்’ என்ற அறிவுரைக்குப் பதிலாக முன்வைக்க வேண்டியுள்ளது.

மனிதர்களைப் பின்தங்கிய உணர்வு களிலிருந்து விடுவித்து, மனிதநேயத்தை, சகோதரத்துவத்தை, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதே கலையின்/ சினிமாவின் பயன் என்று கருதும் சமூகப் பொறுப்பு உணர்வுகொண்ட இயக்குநர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். அரிவாள் தூக்குவதை, விருப்பம் இல்லாத பெண்ணை விரட்டி விரட்டி வலுக்கட்டாயமாகக் காதலிப்பதை, ஆண்மையின் அடையாளமாக இளைஞர்களுக்குக் கற்றுத்தரும் சினிமாக்களைக் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் ஆதரிக்க முடியுமா? என்ற கேள்வியையும் இங்கே முன்வைக்க வேண்டியுள்ளது.

ஆகவே, மனிதகுல முன்னேற்றத்துக்கும், நாகரிகத்துக்கும், மனித மாண்புகளுக்கும், சமத்துவத்துக்கும் ஒவ்வாத கருத்தியல்/ காட்சியியலுக்கு எதிரான அறவழிப் போராட்டம் என்பதும் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியே தவிர, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

தமிழ் உணர்வும் திருவிளையாடல் திரைப்படமும்

க.காமராசன்- அழகுசுப்பையா ச.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், 1965 ஜூலை 31-ம் தேதி வெளியான ‘திருவிளையாடல்’ படம், தமிழ்ச் சமூக நினைவில் இப்போதும் போற்றப்படுகிறது. இந்தப் படத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அதன் சமூக, சினிமாப் பரிமாணங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இந்தத் திரைப்படம் வெளியான ஐந்து மாதங்களுக்கு முன்புதான், இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஒரு வெகுசன எழுச்சியாக மாறியது. இந்தப் போராட்டத்தின் சூடு ஆறுவதற்குள் வெளியான இந்தப் படம் `புராணப் படம்’ என்றாலும்கூட, ஒளவை, தருமி, நக்கீரர், பாணபத்திரர் ஆகிய பிம்பங்களின் வழியே `தமிழ்’ உணர்வு நிரம்பி வழிகிறது. வெற்றிகரமான ஒரு புராணப் படத்தில் இந்தத் `தமிழ்’ உணர்வு வெளிப்படலை எப்படிப் புரிந்துகொள்வது, அதற்கான வேர்கள் என்ன என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியுடன் `திருவிளையாடல்’ திரைப்படத்தைப் புரிந்துகொள்வதற்கு, நாம் இரண்டு விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, தமிழ்ச் சமூகத்தில் திருவிளையாடல் புராணம். மற்றொன்று, `திருவிளையாடல்’ படம் நுகரப்பட்ட முறை.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

தமிழ்ச் சமூகத்தில் திருவிளையாடல் புராணம்:

சினிமா என்னும் காட்சிக்கலை வருவதற்கு முன்னர், தமிழ்ச் சமூகத்தில் இருந்த காட்சிக் கலைகளில் ஒன்று, புராணம் பிரசங்கித்தல். `பிரசங்கம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு நல்லதொரு தமிழ்ச்சொல் `சொற்பெருக்கு’. புராணப் பிரசங்கி, தான் விவரிக்கும் புராணக் கதையை ஏறக்குறைய நடித்துக்காட்டுவார். புராணப் பிரசங்கத்தின்போது, கதை சொல்பவராகவும் அந்தக் கதையில் வரும் பாத்திரங்களாகவும் பிரசங்கி உருவெடுப்பார். இடையில் இசையுடன்கூடிய பாடல்களும் வரும். ஆதலால், பிரசங்கித்தலைக் கேட்க மட்டுமல்லாது, பார்க்கவும் வேண்டும். இந்தக் கலை இடைக்காலத் தமிழகத்தில் கோயில்களுடன் சேர்ந்து வளர்ந்தது. இந்தக் கலையை நிகழ்த்தியவர்கள் அந்தக் காலத் தமிழ்ப் புலவர்கள்; இந்தக் கலையின் புரவலர்களும் நுகர்வோர்களும் மேட்டுக்குடிகளே! ஆயினும், இது எளிய மக்களைக் கட்டிப்போட்ட கலைகளில் ஒன்றாகவும் கடந்த காலத்தில் இருந்தது. சென்ற நூற்றாண்டிலிருந்து பல்வேறு காரணங்களால் இந்தக் கலை நசிந்துவருகிறது.

தமிழகப் புராணப் பிரசங்கக் கலையில் முக்கியமாக இடம்பெற்ற இரண்டு புராணங்களில் ஒன்று, `திருவிளையாடல்’. இது, மதுரை சொக்கநாதப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் பற்றியது. மற்றொன்று, `கந்தபுராணம்’. திருவிளையாடல் புராணத்தைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதியார் ஆகிய இருபெரும் தமிழ்ப் புலவர்கள் நூல்களாகப் படைத்துள்ளனர். இவை மட்டுமல்லாமல், தாலாட்டு, ஊசல் என்னும் சிற்றிலக்கிய வகைகளிலும் சொக்கன் திருவிளையாடல்களைப் பல புலவர்கள் இயற்றியுள்ளனர். இந்தப் புராணத்தைப் பல புலவர்கள் பாடியதற்குக் காரணம், வெகுசன புராணப் பிரசங்கக் கதையாக இருந்தது எனலாம். ஆனால், சென்ற நூற்றாண்டில் இந்த நூலை ஆறுமுக நாவலர் முதல் உ.வே.சா வரை பலர் பதிப்பித்துள்ளனர். இந்த நூல் எண்ணற்ற முறை அச்சிடப்பட்டது. இதற்குக் காரணம், இந்த நூல் அந்தக் காலத்தில் எழுந்த நவீனத் தமிழ் உணர்வுடன் உறவாடத் தொடங்கியதே.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

திருவிளையாடல் புராணம், மதுரையோடும் தமிழோடும் தொடர்புடையது. இது வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று எனக் கூறப்படுகிறது. நவீனகாலத் தமிழ் உணர்வுடன், வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்த மறைமலையடிகள் முதலான பலர், இதைத் `தமிழ்ப்புராணம்’ என்றனர். இந்தப் புராணத்தை `வடமொழி வழிவந்த புராணம்’ என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரம்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு `தமிழ்’ என்னும் கருத்துநிலையோடும் அடையாளத்தோடும் இந்தப் புராணம் ஒன்ற ஆரம்பித்தது.

இந்தப் புராணக் கதைகள், பிரசங்கத்தால் வெகுமக்கள் உணர்வில் பதிந்த கதைகளாக இருந்தன. அதேவேளையில், நவீனகாலத் தமிழ் உணர்வுடனும் தொடர்புகொண்ட கதைகளாகவும் இருந்தன. இதுதான் இந்தப் புராணம், திரைப்படம் ஆவதற்கும் பெருவெற்றி பெறுவதற்குமான முதல் அம்சம்.

தமிழ் என்னும் உணர்வு ஆக்கமும் தமிழ் சினிமாவும்!

`திருவிளையாடல்’ பட வெற்றியின் இரண்டாவது அம்சம், தமிழ் என்னும் உணர்வின் பன்முகத்தன்மையில் உள்ளது. `நவீனகாலத் தமிழ்’ என்னும் உணர்வு, அயோத்திதாசப் பண்டிதரிடம் தொடங்கியது. பண்டிதர், தமிழ் உணர்வை- பூர்வபௌத்த சார்பு, சாதி எதிர்ப்பு, வேத நெறி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து/இந்திய தேசிய எதிர்ப்பு என்னும் களங்களின் ஊடாகக் கட்டமைத்தார். இந்தச் செயல்பாட்டில் மற்றொரு பிரிகோடாக, மறைமலையடிகள் - சாதி வேறுபாடு எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகிய களங்களில் தமிழ் உணர்வை உறுதிப்படுத்தினாலும், சைவத் தளத்தில் நிலைகொள்ளவைக்க முயன்றார். தமிழ் உணர்வுச் செயலாக்கப்போக்கில் ஓர் இடைவெட்டாக, பாரதி இந்திய தேசிய உணர்வின் ஒரு பகுதியாகத் தமிழ் உணர்வை ஆக்க முயற்சி செய்தார். அந்த முயற்சியில் சாதி வேறுபாடு தவிர்த்தல், தமிழ் மேன்மை முதலான புள்ளிகள் இருந்தாலும் வேதப் பெருமிதம், தெய்வபக்தி உணர்வு, இந்து/இந்திய தேசியப் பெருமிதம் ஆகியவை முக்கியமானவையாக மேற்கிளம்பின. பெரியார், தமிழ் உணர்வை அயோத்திதாசப் பண்டிதர் கட்டமைத்த களங்கள் ஊடாக வலுப்படுத்தினார். சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து/இந்திய தேசிய எதிர்ப்பு என்பவற்றின் ஊடாகத் தமிழ் உணர்வைப் புதிய தளங்களுக்கு எடுத்துச் சென்றார். `நீ, சூடு சொரணையுள்ள தமிழன்தானா?’ என்ற பெரியாரின் சீண்டல், தமிழ் உணர்வுக்கு முற்றிலும் புதிய வடிவம் தர முயன்றது. ஆனால், பெரியாரிடம் தமிழ்ப் பெருமித உணர்வு இல்லை. அப்படியான கடந்தகாலப் பெருமித உணர்வு எல்லாவற்றையும் பெரியார் மறுதலித்தார்; சொந்த முயற்சியில் உருவாகப்போகும் எதிர்காலம் குறித்த பெருமித உணர்வை உருவாக்க முயன்றார். ஆனால், அண்ணாதுரை, பெரியாரைத் தொடர்ந்து தமிழ் உணர்வை இன்னும் புதிய தளங்களுக்குக் கொண்டுசென்றார். வடவர் - ஆரியர் ஆட்சி, தமிழர் - திராவிடர் ஆட்சி என்ற பதங்கள், தமிழ் உணர்வுக் களத்தில் காங்கிரஸ் கட்சியை முற்றிலும் துடைத்தெறிந்தன. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, தமிழரசுக் கழகத்தை உருவாக்கிய ம.பொ.சிவஞானம்தான் தமிழ் உணர்வையும் தெய்வபக்தியையும் இணைக்க முயன்றார். பிற்காலத்தில் இந்து உணர்வையும் தமிழ் உணர்வையும் ஒன்றச் செய்யும் ஒரு முயற்சியைக்கூட மேற்கொண்டார்.

இவ்வாறு தமிழ் என்னும் உணர்வுக்களம், அரசியல் கருத்துநிலைகள், கொள்கைகள் மோதும் களமாக இருந்தது. அதன்மூலமே அந்தக் களம் விரிவடைந்தது. வெகுசன உணர்வைப் பற்றிக்கொள்ள முடிந்தது. தமிழ் உணர்வுக்களத்தில் ஒவ்வொரு கருத்துநிலையினரும் முந்தியிருக்க முயன்றனர். இந்தக் களத்தில் நடைபெற்ற இந்த மோதல்கள், எல்லாத் துறைகளிலும் வெளிப்பட்டன. அதிலும் குறிப்பாக, திராவிட இயக்கத்தினர் வன்மையோடு பயன்படுத்திய அரசியல் ஊடகங்களான மேடைப்பேச்சு, நாடகம், சினிமா போன்ற அரங்குகளில் வெளிப்பட்டன.

மேடைப்பேச்சு, மேடைநாடகம், சினிமா ஆகியவை, அவற்றுக்கு முன் இருந்த காட்சிக்கலை வடிவங்களைப் பின்னுக்குத் தள்ளின. அத்துடன், அவை முந்தைய காட்சிக்கலை அரங்குகளாகத் திகழ்ந்த கோயில் முதலானவற்றின் சாதி அடிப்படையிலான நுகர்வுத்தர நிலை உணர்வை, கேள்விக்கு உட்படுத்தின. சாதி கடந்த நுகர்வுதர நிலைக்காக, ஆரம்ப காலத்தில் எப்படித் தமிழ்ச் சினிமாவை மேட்டுக்குடியினர் நிராகரித்தனர் என்பது பற்றி, எம்.எம்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ளார். ஆனால், திராவிட இயக்கத்தினர் இந்த வடிவங்களை, அதிலும் குறிப்பாகச் சினிமாவைக் கையிலெடுத்து, தங்கள் கருத்துப் பரப்பலுக்குச் சிறப்பாகப் பயன்படுத்தினர். அவர்கள் 1950-கள் முதல் தமிழ் சினிமாக்களைச் சமூகப் பிரச்னைகள் பேசும் களங்களாக மாற்றினர். இந்தக் காலத்தில் சினிமாவில் தமிழ் என்னும் உணர்வு, கலைஞர் கருணாநிதியின் வசனங்களாகவும் சிவாஜி கணேசனின் குரல் வெளிப்பாடாகவும் வெற்றிநடை போட்டது என்று கூறினால், அது நிச்சயம் மிகையல்ல.

`திருவிளையாடல்’ - ஓர் இடையீட்டு முயற்சி!

`சமூகப் படங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், இப்படி ஒரு புராணப் படம் வெளிவந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்’ என்று அந்தக் கால  ‘ஆனந்த விகடன்’  -`திருவிளையாடல்’ படம் பற்றி விமர்சனம் எழுதியது கவனத்தை ஈர்க்கிறது. ஏ.பி.நாகராஜன், திராவிட இயக்கத்தின் சமூகப் படங்களுக்கு எதிராகப் புராணப் படங்கள் பண்ண வேண்டும் என்ற லட்சியத்தோடு சினிமா உலகுக்கு வந்தவர் என்றும், தமிழரசுக் கழகத்தின் அரசியல் கருத்துநிலையோடு தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறார். அவருடைய `சம்பூர்ண ராமாயணம்’ (1958) தொடங்கி `ஸ்ரீகிருஷ்ண லீலா’ (1977) வரை அப்படியான முயற்சிகளை விடாப்பிடியாக மேற்கொண்டார். அதனால் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தார் எனக் கூறப்படுகிறது. `திருவிளையாடல்’ படம், சுமார் ஆறு மாதங்கள் ஓடிய வெற்றிப் படம்.

இந்தப் படம் `புராணப் படம்’ என்றாலும், புராணத்தை அப்படியே எடுத்த படம் அல்ல; வழக்கத்தில் உள்ள புராணக் கதைகளை, கதை அமைப்பிலும் கதைக் கோவையிலும் கதை விவரிப்பிலும் புதுவிதமாக மாற்றியமைத்து எடுக்கப்பட்ட படம். இந்திய, தமிழ்ப் புராணங்களைப் படம் பண்ணுவது மிகச் சிரமம். ஏனென்றால், அவை வெவ்வேறு காலம், வெளியின் ஊடாகச் செல்லும் பலவிதமான கதைகள்கொண்ட கதம்பம். தர்க்கபூர்வமான ஒரு காலம், வெளி ஊடான ஒரு கதை விவரிப்பாக இருக்கும் திரைக்கலைக்கு, இந்தப் புராணங்களைப் படம் பண்ணுவது சவால்தான். இந்தச் சவாலுக்கு `திருவிளையாடல்’ படத்தில் ஏ.பி.நாகராஜன் மிக அற்புதமாக முகம் கொடுத்திருக்கிறார். முருகன் கோபித்துக்கொண்டு செல்லுதலும், அவரைச் சமாதானப்படுத்துதலுமான கதை, முழுப் படக்கதைக் காட்சியோட்டத்தைப் பிணைக்கும் சரடு. அடுத்தடுத்து வரும் கதைகள், மிகச் சரியாக இந்தச் சரடில் பிணைந்துவிட்டன.

`திருவிளையாடல்’ படத்தின் கதை விவரணையில் பொதிந்திருக்கும் சமகாலப் பிரச்னைகள் பற்றிய உரையாடல்தான் மிக முக்கியமானது. அவை அப்போதைய அரசியல் பொதுவிவாதக் களத்தில் சூடாகப் பேசப்பட்டன. ஆண்-பெண் சமத்துவம் பற்றியது தாட்சாயணி கதை. அதைப்பற்றி மிக வெளிப்படையாக விவரிக்கிறது. `சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்பதனூடாக ஆணும் பெண்ணும் சமம் என முடிவுக்கு வருகிறது. நக்கீரர் கதை, பகுத்தறிவு பற்றிய விவாதமாக விரிகிறது. நக்கீரரின் `இயற்கையில் பெண்களின் கூந்தலுக்கு, அப்பெண்கள் கடவுள்கள் ஆயினும் மணம் இல்லை’ என்ற வாதத்தை இறைவன் நெற்றிக்கண்ணால் சுட்டுப் பொசுக்குகிறார். ஆனால், நக்கீரரின் தமிழ்ப் புலமை, இறைவனிடம் மன்னிப்பைப் பெற்றுத் தருகிறது. ஹேமநாதர் - பாணபத்திரர் கதை, வடவர்-தமிழர் பிரச்னையாக மாற்றமுறுகிறது. `அன்னைத் தமிழுக்கு ஓர் அவமானம் என்றால், அது உனக்கல்லவோ..?’ என்ற கேள்வி கேட்டவுடன், சொக்கன், ஹேமநாதரை விரட்டும் அதிசயத்தைச் செய்துவிடுகிறார். கடலில் திமிங்கலத்தைக் கொல்லும் கதை, தமிழ் அகத்திணையும் புறத்திணையும், காதலும் வீரமும் பிணைந்த விவரிப்பாக மாற்றம் பெற்றுள்ளது.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

இந்தக் கதைகளில் தருமி கதைதான் மிக முக்கியமானது. அந்தக் கதை அந்தக் காலப் பிரச்னைகள் எவற்றுடனும் தொடர்புறாததுபோல தோற்றமளிக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் பிற மொழிப் பாட ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் பெற்றனர். இதை எதிர்த்துத் திராவிட இயக்கம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தது. இந்தப் பிரச்னையுடன் அந்தக் கதை ஓரளவுக்குத் தொடர்புகொண்டதாகத் தோற்றமளிக்கிறது. தமிழ் ஆசிரியர்களின் வறுமை, தருமியுடனும் வறுமையுடனும் இணைத்து நோக்கப்பட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், திராவிட இயக்கம் எடுத்துப் பேசிய பிரச்னைகள் அனைத்தையும் ஒரு புராணப் படமாக `திருவிளையாடல்’ வெளிவந்தது. அதேவேளையில் இந்தப் படத்தின் வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. அவை திராவிட இயக்கத்தின் `தமிழ்’ உணர்வின் வெளிப்பாடாக அமையும் இலக்கியத் தமிழ். இந்தப் படம் வெளிவந்த காலத்தில், சிவாஜி கணேசன் திராவிட இயக்கத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். இருந்தாலும், அப்போது அவரது குரலிலும் அங்க வெளிப்பாடுகளிலும் `தமிழ்’ கூத்துக்கலை மரபிலான வெளிப்பாடுகள் உருத்திரண்டு வெளிப்படவே செய்தன.

இந்த அம்சங்கள் எல்லாவற்றின் மூலமாக, அந்தப் படம் வெற்றி பெற்றது எனலாம்.

அதேவேளையில், இந்தப் படம் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் உணர்வு நிலையில் இடையீடு செய்து மடைமாற்றம் செய்வது, அந்த உணர்வை தெய்வபக்தியின் பக்கமாகத் திருப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, திராவிட இயக்கம் வளர்த்த ஆண்-பெண் சமத்துவம், பகுத்தறிவு முதலானவை அடங்கிய தமிழ் உணர்வை, இந்தப் படம் இறையுலகத்தில் நிலைநாட்டிவிட்டது. இந்த உண்மையின் வெளிப்பாடாக, இந்தப் படம் வெளிவந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அந்த நாள் தொடங்கி இந்த நாள் வரை, திராவிட இயக்கத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து எந்த இயக்கத்தாலும் அப்புறப்படுத்த இயலவில்லை. தமிழ் என்னும் உணர்வை, கருத்துநிலைப் பொதுவெளியிலிருந்து பிற அரசியல் கருத்துநிலைகளால் அப்புறப்படுத்தவும் இயலவில்லை. தமிழ் என்னும் உணர்வு, எவ்வளவு வெகுசன கவர்ச்சியுடையதாக இன்றும் இருக்கிறது என்பதற்கு, அண்மைக்கால ஜல்லிக்கட்டு ஆதரவு மெரினாக் கூடல் ஓர் எடுத்துக்காட்டு.

ஓர் அனுபவம்!

`திருவிளையாடல்’ படத்தின் வெற்றி, இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. 1960-களிலும் 1970-களிலும் தமிழகக் கிராமங்கள் மின்சாரமயமாகின. இதன் தொடர்ச்சியாக, கிராமத் திருவிழாக்களில் ஒலிபெருக்கியும் திரையிடலும் அந்த விழாவில் தவிர்க்க இயலாத ஒரு சடங்கியல் பகுதியாக உருமாறின. இந்த உருமாறுதலில் `திருவிளையாடல்’ படத்தின் வசன ஒலிநாடாக்களும் திரையிடல்களும் முக்கியப் பங்காற்றின. இந்தப் படம், விழா சடங்கியல் தேவைக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது. அத்துடன் சமகால உணர்வுநிலையையும் கிராமப்புற மக்களுக்குக் கொண்டு சேர்த்தது. கடந்த இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தப் படத்தை அவர்களது ஊர்த் திருவிழாக்களின்போதுதான் முதன்முதலாகப் பார்த்திருப்பார்கள். இந்தக் கட்டுரையை எழுதியவர்கள்கூட இவ்வாறுதான் இந்தப் படத்தை முதன்முதலாகப் பார்த்தார்கள். அத்துடன் `தமிழ்’ என்னும் உணர்வு ஏற்படவும், சமூக-அரசியல் அக்கறை உணர்வுகள் துளிர்க்கவும் இந்தப் படம் எங்களுக்கு உளத்தூண்டுதல் அளித்தது. இப்போது திருவிழா மற்றும்  விடுமுறை நாள்களில், பழைய படங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசைகளில், `திருவிளையாடல்’ ஒளிபரப்பப்படுகிறது; ரசிக்கப்படுகிறது. இந்த ரசிப்பு, ஒரு வெகுசன ரசிப்பாகவும் இருக்கிறது.

தமிழ்ச் சூழலில் இவ்வளவு பாதிப்பை நிகழ்த்திய ‘திருவிளையாடல்’ படம்,  நீங்கள் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு எதிர்பாராத தருணத்தில் திடீரென உங்கள் வீட்டுத் தொலைக்காட்சித் திரையில் தோன்றலாம். புராணம் - அரசியல் - வரலாறு - தமிழ் மட்டுமல்லாது, ரசனை  மிகுந்த கலவையான ஒரு கமர்சியல் படமாகவும் அது உங்களைக் கவரும்.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

பெயர்களும் அடையாளங்களும் சினிமா சித்தரிப்புகளும் - சுகுணா திவாகர்

மீபத்தில் ‘அண்ணாதுரை’ என்று ஒரு படம் வெளியானது. விஜய் ஆண்டனி படத்தின் நாயகன். படத்தின் தொடக்கக் காட்சியிலேயே ‘அண்ணாதுரை’ ஒரு கல்லறையின் மீதமர்ந்து மது அருந்துகிறார். படத்தின் முதல்பாதி முழுவதும் பாட்டிலும் கையுமாக இருக்கும் அண்ணாதுரை, குடிபோதையில் ஒரு கொலையும் செய்துவிட்டுச் சிறைக்குப் போகிறார். படத்தில் நாயகன், இரட்டையர்களில் ஒருவர். அண்ணனின் பெயர் அண்ணாதுரை, தம்பியின் பெயர் தம்பிதுரை என்பதைத் தாண்டி, திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அண்ணா என்றழைக்கப்படும் அண்ணாதுரைக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.

ஆனால், இதேபோல் ‘மோடி’ என்றோ ‘அத்வானி’ என்றோ ‘பால்தாக்கரே’ என்றோ ஒரு படம் வட

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

இந்தியாவில் வர முடியுமா? தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் அண்ணாதான் மூலவர். இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சி அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சி. இருந்தாலும் ‘அண்ணாதுரை’ என்ற பெயரை ஒரு படத்துக்கு வைத்து, நாயகனைக் குடிகாரராகக் காட்டலாமா என்று ஒரு சின்ன முணுமுணுப்புக்கூடத் தமிழகத்தில் எழவில்லை. `வீரமணி’, `காமராசு’ என்ற பெயர்களிலும்கூட தமிழில் படங்கள் வெளியாகியிருக்கின்றன. படத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

ஆனால், வட இந்தியாவில் ‘பத்மாவதி’ படத்தைத் திரையிடக் கூடாது என்று இந்துத்துவ அமைப்புகளும் ராஜபுத்திர அமைப்புகளும் தொடர்ச்சியாகப் போராடுகின்றன. உத்திரப்பிரதேச பா.ஜ.க. முதல்வர், தனது மாநிலத்தில் இந்தப் படத்துக்குத் தடை விதிக்கிறார். இன்னமும் படம் வெளியாகவில்லை. ட்ரெய்லர்கள் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அதிலும், ராஜபுத்திரர்களை இழிவுபடுத்தும் வகையிலான அடையாளங்கள் எதுவுமில்லை. ஆனால், படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் நாயகி தீபிகா படுகோனுக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது.

சினிமா - புராணம், வரலாறு, உண்மை

உண்மையில் ராஜபுத்திரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஏனெனில், கதைப்படி ‘பத்மாவதி’ ஒரு ராஜபுத்திரப் பெண்ணே அல்ல. இலங்கையில் வாழ்ந்த சிங்கள இளவரசி பத்மாவதி. அவளின் அழகை ஹீராமன் என்ற கிளியின் மூலம் கேட்டு, அதனால் கவரப்பட்ட ராஜபுத்திர அரசன் ரத்தன் சேன், இலங்கைக்குச் சென்று பத்மாவதியை மணக்கிறான். அதுவும் பத்மாவதி, ரத்தன் சேனுக்கு முதல் மனைவியும் அல்ல. ஏற்கெனவே நாகமதி என்ற மனைவி இருக்கிறாள். எனவே ‘பத்மாவதி’ திரைப்படம், ராஜபுத்திரர்களை அவமானப்படுத்துவது என்று போராட்டம் நடத்துவதில் எந்த அடிப்படையும் இல்லை. அதேபோல், இந்துத்துவவாதிகளின் போராட்டத்திலும் எந்த அடிப்படைகளும் இல்லை. ஏனெனில், ‘பத்மாவதி’யின் கதையை எழுதியவர் மாலிக் முகம்மது ஜாயஸி என்ற சூஃபி கவிஞர்.

வட இந்தியாவுக்கும் தமிழகத்துக்குமான பாரிய வித்தியாசம் இதன்மூலம் புலப்படும். அடிப்படையில் கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை என்பது தமிழ் வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. வரலாற்று மாந்தர்களையோ தொன்மத்தின் மூலம் உருவாக்கப்பட்ட லட்சிய மாந்தர்களையோ நாவல்களிலோ திரைப்படங்களிலோ சித்திரிக்கும்போது சர்ச்சைகள் எழுவது இயல்புதான். ஆனால், தமிழகத்தில் சிறியளவிலான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்திருக்கலாமே தவிர, முற்றிலுமாகப் படைப்பைத் தடை செய்வதற்கான எதிர்ப்புகள் வந்ததில்லை.

பாரதி, பெரியார், காமராசர் என்று ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டும் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. எதுவுமே உலகளவில் உருவான சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்களோடு ஒப்பிடத் தகுந்தவை அல்ல. அதுவும் ‘பெரியார்’ திரைப்படம் திராவிடர் கழகத்தின் தயாரிப்பில் உருவானது. பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், தேசியக்கொடி போராட்ட அறிவிப்பு, அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் போன்ற பலவற்றைக் காட்டாமல், பெரும்பாலும் காங்கிரஸில் இருந்த பெரியாரையே ‘பெரியார்’ படம் காட்டியது. இன்னும் சொல்லப்போனால் ‘பார்ப்பனர்’ என்ற வார்த்தை ‘பெரியார்’ படத்தில் எங்கும் இடம்பெறவில்லை.

மறுதலையாகத் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த பல படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக, மணிரத்னத்தின் ‘இருவர்’ திராவிட இயக்கம் என்பதே இரண்டு தலைவர்களின் தனிப்பட்ட உறவு சார்ந்த ஒன்று என்றும் ஆண்-பெண் உறவில் ஏற்படும் பிரச்னைகள்தான் திராவிட இயக்க வரலாறு என்றும் சித்திரித்தது. கருணாநிதியை மிக மோசமாக ‘இருவர்’ இழிவுபடுத்தியபோதும் அதற்கு எதிரான மிரட்டல்கள் வந்ததில்லை. ‘ஆயுத எழுத்து’ படத்திலும் வில்லன் கறுப்புச்சட்டை அணிந்த, ‘வடக்கு வாழ்கிறது’ என்று வசனம் பேசும் திராவிட இயக்க அரசியல்வாதிதான். ‘முதல்வன்’ படமும் மறைமுகமாகக் கருணாநிதியை விமர்சித்தது. அதுவும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்தப் படம் வெளியானது. ஆனாலும் கருணாநிதியோ, தி.மு.க-வோ இந்தப் படத்தை எதிர்க்கவில்லை. இப்படித் தொடர்ச்சியாக விமர்சனங்களை அனுமதிக்கும், வரலாற்றுச் சித்திரிப்பையும் தொன்மக் கதைகளையும் மாற்றிக்கொள்ளும் படைப்புச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் மனநிலையும் தமிழர்களிடம் இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில் விஜய்-ன் ‘தலைவா’ படத்துக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நெருக்கடி ஏற்பட்டது. அதற்குக் காரணம், ஜெயலலிதாவின் தனிப்பட்ட ஈகோவே தவிர, கருத்துச் சுதந்திரத்துக்கும் அந்தப் பிரச்னைக்கும் எந்தத் தொடர்புமில்லை.

தமிழகத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்ப்புகள் வந்தது இரண்டு சமயங்களில்தான். ‘சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ‘சண்டியர்’ படப்பெயர் ‘விருமாண்டி’ என்று மாற்றப்பட்டது. அதேபோல், ‘விஸ்வரூபம்’ திரைப்படம் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கிறது என்ற இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து, அதன் வெளியீடு தள்ளிப்போனது.

இங்கு நாம் ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தமிழ் சினிமாக்களில் தொடர்ச்சியாகத் தலித்துகளும் இஸ்லாமியரும் திருநங்கைகளும் மோசமாகவே சித்திரிக்கப்பட்டிருக் கின்றனர். ‘நாட்டாமை’, ‘சின்னக் கவுண்டர்’, ‘வானவராயன்’ போன்ற ஊர்த்தலைவர் களுக்குக் குடை பிடிப்பவர்களாகவும் கக்கத்தில் துண்டை இடுக்கிக்கொண்ட அடிமைகளாகவுமே தலித்துகள் சித்திரிக்கப்பட்டுள்ளனர். கறுப்புநிறமும் ‘அமாவாசை’, ‘முனியாண்டி’ போன்ற எளிய மக்களின் பெயர்களும் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் ‘சின்னக் கவுண்டர்’, ‘தேவர் மகன்’ திரைப்படத்துக்குப் பிறகு வந்த பல படங்கள் சாதியப் பெருமிதத்தை முன்வைத்தன. இவை ஆதிக்கச் சாதிகளுக்குப் போலிப் பெருமிதத்தை அளித்ததோடு, தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் ஊக்குவித்தது. இந்தப் பின்னணியில் இருந்துதான் கிருஷ்ணசாமியின் ‘சண்டியர்’ எதிர்ப்பை அணுக முடியும்.

அதேபோல், இந்துத்துவ எழுச்சியை ஒட்டி முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகப் பொதுப்புத்தியில் பதியவைக்கும் முயற்சி நடைபெற்றது. தாடியும் குல்லாவும் வைத்திருந்தவர்களும் லுங்கி கட்டியவர்களும் சந்தேகப் பார்வையுடன் பொதுவெளியில் பார்க்கப்பட்டனர். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதன் மூலம் மணிரத்னம் படங்கள் இந்தியச் சந்தையையும் உலகச் சந்தையையும் குறிவைத்தன. விஜயகாந்த் மற்றும் அர்ஜூனின் பல பத்து திரைப்படங்களில் ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’தான் வில்லன்கள். இந்தப் படங்களில் பெரும்பாலானவை அபத்தமானவை; அரசியல் தெளிவற்றவை. இப்படித் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்த மோசமான பிம்பங்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில்தான் ‘விஸ்வரூபம்’ படம் மீதான இஸ்லாமியர்களின் எதிர்ப்பையும் அணுக முடியும். அதேநேரத்தில் இந்துத்துவத்தைத் தீவிரமாக எதிர்க்கும் சுபகுணராஜன், ராஜன்குறை, மனுஷ்ய புத்திரன் போன்றோர், “எந்த ஒரு படைப்பும் தடைசெய்யப்படக் கூடாது” என்று கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் போதெல்லாம் நம்முன் பல கேள்விகள் எழுகின்றன. கருத்துச் சுதந்திரம் என்பது யாரை வேண்டுமானாலும் கொச்சைப் படுத்துவதற்கான சுதந்திரமா, அதிகாரத்துக்கு எதிரான படைப்புகளுக்கான சுதந்திரமும் ஒடுக்குமுறைக்குத் துணைநிற்கும் அல்லது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் படைப்புகளுக்கான சுதந்திரமும் ஒன்றுதானா, ஒரு படைப்புக்கு எதிர்ப்பே தெரிவிக்கக் கூடாது என்றால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்ற கேள்விகள் உரையாடலுக்குரியவை. கருத்துச் சுதந்திரம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குப் படைப்பாளிகளுக்குப் பொறுப்பு உணர்வும் முக்கியம்.