Published:Updated:

``கிளிஷேக்கள் இருந்தாலும் மிஷ்கின் ஏன் கொண்டாடப்படுகிறார் தெரியுமா?’’ #HBDMysskin

``கிளிஷேக்கள் இருந்தாலும் மிஷ்கின் ஏன் கொண்டாடப்படுகிறார் தெரியுமா?’’  #HBDMysskin
``கிளிஷேக்கள் இருந்தாலும் மிஷ்கின் ஏன் கொண்டாடப்படுகிறார் தெரியுமா?’’ #HBDMysskin

இயக்குநர் மிஷ்கின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

மனிதர்களை எதிர்கொள்வது என்பது கலைஞர்களுக்கான ஆகச்சிறந்த பயிற்சி. எனில், 'கலைஞர்கள் என்ன காட்டுவாசிகளா' எனக் கேட்கலாம். `இல்லை, நான் ஒரு கோமாளி' என்பார் இயக்குநர் மிஷ்கின். கோயில் கருவறையில் பாலியல் துன்புறுத்தல் அரங்கேறும் இந்தியாவில், சாதி மதச் சண்டைகள் நிறைந்து, வாழ்வா சாவா எனக் கிடக்கும் அறத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவில், தனக்குத் தெரிந்த திரைமொழி வழியே அன்பை ஆயுதமாக்கி அறம் போதித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கு இன்று பிறந்தநாள்.

'மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரஷ்ய கதையொன்றில் வரும் கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார்!' - இயக்குநர் மிஷ்கின் குறித்து, விக்கிப்பீடியா இப்படிச் சொல்கிறது. சிரிப்பு வந்தால், சிரித்துக்கொள்ளுங்கள். மிஷ்கினின் படைப்புகளை ஒருமுறை ரீவைண்ட் செய்த பிறகு, அவரது உரையாடல்களை வாசித்த பிறகு, மேலே சொன்ன இரண்டு வரிகள் இரண்டாயிரம்  வரிகள் ஆகலாம், ஆச்சர்யமில்லை.

2006. காதலர்கள் காலமான பிப்ரவரியில் ரிலீஸானது, மிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி.' புதுமுகங்களின் படம். விட்டால் பிடிக்க முடியாது என மிஷ்கினுக்குத் தெரிந்திருக்கலாம். முதல் காட்சியிலேயே ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்து, 'பேசாம உட்கார்ந்து படத்தைப் பார்' என்றார். நல்லவனாக இருந்தும் நிராகரிக்கப்படும் ஹீரோ, அடியாள் வேலைக்குச் சேர்கிறான். 'அட, அடிதடி கதையா?' என நினைத்தால், அறத்தைப் போதித்து அனுப்பி வைத்தார் மிஷ்கின். 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' அழகியை அள்ளி அணைத்துக்கொண்டு, ரீ-ரிலீஸ் ஆனபிறகுதான், இந்தச் சித்திரம் சிலாகித்துப் பேசப்பட்டது. அந்த மஞ்சள் புடவை அழகி, தனக்காக அல்ல என்பதை முதல் படத்திலேயே சொல்லிவிட்டார் மிஷ்கின். ரசிகர்களைப் பழக்கப்படுத்த அவர் முன்னெடுத்த முயற்சியாக இருக்கலாம். சண்முக ராஜா, மிஷ்கினாக மாறிய வரலாறு அது. பிறகு, அவருக்கான சினிமாக்கள் எல்லாமே மிஷ்கினிஸம். 

இரண்டாவது படைப்பான `அஞ்சாதே'யில் தோல்வி கொடுத்த குரோதத்தால், நண்பர்கள் எதிரிகள் ஆகிறார்கள். இருவரும் இணையும் இறுதியில் அன்பையும் அரவணைப்பையும் வலியுறுத்தினார் மிஷ்கின். முதல் படத்தைவிட, இப்படம் பல படிகளைத் தாண்டிய வெற்றி. பிறகு, 'நந்தலாலா'வைக் கொடுத்தார். மிஷ்கின் கொடுத்த நிஜமான தாலாட்டு அது. தன்னைத் தனித்துவிட்ட அம்மாவின் கன்னத்தில் அறைய ஆசைப்படும் மனநோயாளி. உலர்ந்த புகைப்படத்தில் புன்னகையோடு நிற்கும் அம்மாவை சந்தித்து முத்தம் கொடுக்கப் புறப்படும் சிறுவன். இருவருக்கும் கிடைத்த முத்தத்தின் கதையை மிஷ்கினுக்கே உரிய திரைமொழியில், 'தாய்மொழி தாலாட்டா'கப் பார்க்கும்போது அதுவரை தாலாட்டு கேட்காதவர்கள், 'இந்தப் படம் தழுவலாக இருந்தாலென்ன, வறுவலாக இருந்தாலென்ன' என்றுதான் நினைத்திருப்பார்கள். 

காமத்தை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக்கிய ஒரு கும்பலுக்கு, மிடில் கிளாஸ் குடும்பம் ஒன்று கொடுக்கும் பகீர் முடிவுகளால் `யுத்தம் செய்'யச் சொன்ன மிஷ்கின், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் காட்டிய அன்பு, பேரன்பு. தப்பிப் பிழைக்க ஓடிக்கொண்டிருக்கும் 'ஓநாய்'க்கும் 'ஆட்டுக்குட்டி'யான மருத்துவ மாணவனுக்குமான டாம் அண்ட் ஜெர்ரி திரைக்கதை. பார்வைக் குறைபாடுள்ள குடும்பம் ஒன்றை ஓநாய் ஒன்று கங்காருபோல சுமந்து திரியும் அந்த இரவில்தான், அத்தனை மிருகங்களையும் திரைக்கதையில் புகுத்தி, இருளடர்ந்த சினிமாவில் மெழுவர்த்தி ஏற்றிக் கதை சொன்னார் மிஷ்கின். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைக்கதை இது. பயிலும் இயக்குநர்களுக்கு, இந்தத் திரைக்கதை பாடம். சில இளைய இயக்குநர்களுக்கு இது பாலபாடம்.

இரவென்றால் பலருக்கும் பயம்தான். மிஷ்கினுக்கு இரவின்மீது காதல். பேய் படம் ஒன்றை எடுத்து, மிரட்டுவோம் என வழக்கமாக உருட்டிப் பிசையாமல், 'பேய் என்றாலே தீமைதானா? ஒரு நல்ல பேய் இருந்தால், சிதைந்த முகத்தோடு திரியும் அதற்கு அத்தனை அழகான ஒரு காதல் இருந்தால், தனக்கான சொர்க்கம் எது என்பதை அது தீர்மானித்தால்...' என்ற கேள்விகளோடு எடுத்த படத்துக்குப் 'பிசாசு' எனப் பெயர் வைத்தார். பிசாசு பெயர்தானே தவிர, பிசாசின் மொத்த உருவமும் பற்றிப் படரும் அன்பு. அதனால்தான், படம் பார்த்த நாமும் அந்தப் பேயைக் காதலித்தோம். கதை, திரைக்கதை, வசனம் மட்டும் எழுதி ஒதுங்கிய 'சவரக்கத்தி'யில்கூட வெட்டு குத்து, கொலை, கொள்ளையெல்லாம் இல்லை. 'கத்தி எதுக்குத்தான் தொப்புள் கொடி வெட்டத்தான்!' எனப் படத்திலும் சொன்னார், பாடலாகவும் சொன்னார். 

சிறுகதையாய் புரளும் காட்சிகள், நிதானமாகப் பொறுக்கியெடுத்த கட், பட்டைத் தீட்டப்பட்ட ஷாட், அடுத்தது என்ன என எழும் ஆர்வம், நிதானித்துத் தொடங்கி, விர்ரெனப் பறக்கும் திரைக்கதை... மிஷ்கின் சினிமாவின் சக்ஸஸ் சீக்ரெட்ஸ் இவை. தவிர, கதைகள் எப்போதும் எளிமைதான். இடம்பெறும் மனிதர்களும் எளிமைதான். காதல், நட்பு, மிடில் கிளாஸ் கோபம், அன்பு, அரவணைப்பு கூடவே கொஞ்சம் குடி, கும்மாளம். இவையனைத்தும் இருந்தால், அது மிஷ்கின் படம் என்றாலும், அத்தனையிலும் அன்பு ஒன்றே பிரதானமாக இருப்பது, இயக்குநர் மிஷ்கினின் ஸ்பெஷல். அதே அன்பு 'நடிகர்' மிஷ்கினிடமும் இருப்பது, கூடுதல் ஸ்பெஷல். 

'நந்தலாலா'வில் தான் அழுக்கான கதையைச் சொல்லும் பாலியல் தொழிலாளியின் முழு வலிகளையும் வார்த்தைகளாகத் தன்னுள் கடத்திக்கொண்டு, வெளியே பெய்யும் மழையில் இழுத்து வந்து, 'குளி... குளி... சரியாயிடும்!' என அந்தப் பெண்ணுக்குப் பெரும் அரணாகிறார். சாதி கலவரத்தில் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்ணைக் காப்பாற்றிய பிறகு, 'நீங்க என்ன சாதிண்ணே' எனக் கேட்கும் அவளிடம், 'மென்டல்' என்கிறார். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் காப்பாற்ற நினைத்த குடும்பத்தின் ஒவ்வொருவரையும் பலிகொடுத்துவிட்டு நிற்பவர், 'கடைக்குட்டி'யைப் பார்வையாளர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, 'நீ பார்த்துப்படா கண்ணா!' என வீழ்கிறார். பரோலில் வெளியே வந்து, கண்ணில் படுபவர்களையெல்லாம் கூறுபோடத் துடிக்கும் மங்கா', வம்பிழுத்து ஓடிய அப்பாவி ஒருவனை வெட்டியே தீருவேன் எனக் கத்தியைக் கையில எடுத்துவிட்டு, எடுத்த கத்தியைப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை அறுக்கக் கொடுத்துவிட்டு, 'டைம் ஆச்சு கெளம்பலாம்' எனச் சிறைக்குத் திரும்புகிறார். 

அன்பு ஒன்று பிரதானமாக இருக்கிறது என்பதற்காக, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதோ ஒரு புது அனுபவத்தைக் கடத்துகிறார் என்பதற்காக, அவர் படங்களில் இருக்கும் செயற்கைத்தனங்களை அப்படியே விட்டுவிடலாமா... என்பது நல்ல கேள்விதான். ஆனால், இப்படி எதிர்கொள்ளும் அத்தனை விதமான கேள்விகளுக்கும் தனக்கு திருப்தி தரக்கூடிய பதில்களை மிஷ்கின் எப்போதும் வைத்திருக்கிறாரே! கால்களைச் சுற்றும் கேமரா, உறைந்து நிற்கும் மனிதர்கள், தலை குனிந்தே பேசும் ஹீரோக்கள், வரிசையில் வந்து வீழும் அடியாள்கள்... இவையெல்லாம் மிஷ்கினின் அத்தனை படங்களிலும் இருக்கும். 'உங்களுக்குக் கிளிஷேவாகத் தோன்றும் விஷயங்களில்தான், என் சிக்னேச்சர்!' என்கிறார் மிஷ்கின். 'வருடத்துக்கு முந்நூறு படங்கள் ரிலீஸ் ஆகுது. அதுல பெரும்பாலும் காதலையும் காமெடியையும்தான் சொல்றாங்க. எனக்குனு ஒரு ஃபார்மேட் இருக்கு. என் மனதுக்கு நெருக்கமான கதைகளை, சைக்காலஜியும் ஃபிலாஸபியும் கலந்து ஆடியன்ஸுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். முக்கியமா, நான் ரியாலிட்டி சினிமா எடுக்க வரல!' என்பதும் மிஷ்கின்தான். கேட்பவர்களுக்கு எப்படியோ, பதில் சொல்லும் மிஷ்கினுக்கு அது திருப்தி. தவிர, உதிர்க்கும் வார்த்தைகளால், கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் கலை மிஷ்கினுக்கு வாய்த்திருக்கிறது.

`நான் பேன்ட், சட்டை போட்ட ஆண் பாட்டி. வாழ்நாள் முழுக்க கதை சொல்வேன்', '150 ரூபாய் கொடுத்துப் படம் பார்க்கும் இந்தச் சமூகத்துக்கு நல்ல கதைகளை நான் யோசிக்கிறேன்', 'ஆண்டவனுக்குப் பிறகு அண்ணாந்து பார்க்கிறது, சினிமா திரையைத்தான்!' - என்பனவெல்லாம் சினிமா மீதான மிஷ்கினின் காதல் வார்த்தைகள். 

மனிதர்களின் உளவியலை உரித்துப் பார்ப்பதில் மிஷ்கினுக்கு ஆர்வம் அதிகம். பேப்பர் படிப்பதில்லை, டிவி பார்க்கும் பழக்கமில்லை, இளைய சமுதாயம் குவிந்து கிடக்கும் சமூக வலைதளங்களில் மிஷ்கின் இல்லை. 'சித்திரம் பேசுதடி' வரவேற்பைப் பெற்ற பிறகும், நல்ல படைப்புகளுக்குத் தமிழ் சினிமாவில் வரும் சிக்கல்கள் அனைத்தும் மிஷ்கினுக்கும் வந்தது. 'நந்தலாலா' இரண்டு வருடங்கள் பெட்டியிலேயே கிடந்த படம். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ரிலீஸில் பிரச்னையைச் சந்தித்த படம். அதனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' போஸ்டரை அவரே ஒட்டிக்கொண்டும் திரிந்தார். அதனாலென்ன, 'எனக்குப் பிச்சை போடும் இந்த மனிதர்களுக்காக இன்னும் சில ஆண்டுகள் சினிமாவில் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை!' என்றார். ஆம், மிஷ்கின் படித்த தத்துவங்களும் அதிகம். 

மிஷ்கினின் உருவத்தில் இருப்பது, சதை மட்டுமல்ல... கதைகள். மிஷ்கின் அலுவலகத்தில் புத்தகம் இல்லாத இடத்தைத் தேடித்தான் கண்டெடுக்க வேண்டும். சிறுகதை, கவிதை, நாவல், வரலாறு, கட்டுரையென அனைத்து வடிவங்களிலும் இருக்கும் எழுத்துகளையும் தின்று செரிப்பவர். வரலாறு, வாழ்வியல் மட்டுமல்ல... மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என இந்தப் பூமிப் பந்தின் மொத்தத்தையும் அறிய விரும்புபவர். எதிர்கொள்ளும் அத்தனை கேள்விகளுக்கும் மிஷ்கினிடமிருந்து பதில் கிடைக்கக் காரணம், புத்தகங்கள் மீதான மிஷ்கினின் காதல்தான். புத்தகங்களை வகை தொகை இல்லாமல் படிக்கும் பழக்கம் இருப்பதனால்தான், அந்தக் காதல் ஒவ்வொரு நிமிடமும் அவரிடம் பூத்து சிரிக்கிறது. அதுதான், அவரிடம் இருக்கும் முட்டாள்தனங்களையும் ஒப்புக்கொள்ள வைக்கிறது. அதை அவரே சொல்கிறார். 'ஆமா, எனக்குள்ள இருக்கிற முட்டாள்தனங்களை உணர்றேன். பதிலில்லாத இந்தப் பெருவாழ்வு எதைநோக்கிப் போகுதுங்கிற கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கமாட்டேங்குது. போர் அடிக்குது!' என்கிறார். 

அதனால்தான், திட்டித் தீர்க்கவோ பாராட்டிக் குவிக்களோ மிஷ்கினைத் தேடுகிறோம். கிளிஷேக்களாக இருக்குமெனத் தெரிந்தும் மிஷ்கின் படைப்புகளை எதிர்நோக்குகிறோம். மிஷ்கினுக்கு சினிமா பிடித்திருக்கிறது. சினிமா மட்டுமே பிடித்திருக்கிறது. அதனால்தான், அறுபது எழுபது வேலைகளைச் செய்தவர் என்றாலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் முழு இரவும் சினிமா பற்றி பேச அவரால் முடிகிறது. திரைக்கதையைப் பென்சிலால் அடித்துத் திருத்தி எழுதாமல், குறித்து வைத்ததை நேர்த்தியாகப் படமாக்கியே தீர வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கிறது. அனைத்தையும் அறியும் ஆர்வம் இருப்பதால்தான், அவரால் காதலே கதியெனக் கிடக்கவும் முடிகிறது.

'ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்த இந்த வாழ்க்கையில், சினிமாதான் மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆயிரம் கவலைகளில் ஒரு கவலையேனும் மறக்க சினிமா உதவுது. மனித வளர்ச்சியின் உன்னதமான அம்சம், சினிமாதான். நான் இன்னும் நல்ல சினிமாவை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் அதற்கான முயற்சிகளையேனும் எடுக்க வேண்டும். ஏனெனில், சினிமா என்பது ரசிகர்களின் ஆன்மாவுடனான உரையாடல்!" - இது மிஷ்கினின் இலக்கு, ஆசை, இன்னும் பல. இதுதான், மிஷ்கின். அவர் படங்களில் இருக்கும் குறைகளை நாம் எப்போதும் பேசலாம். அவர் படைப்பைப் பார்த்து திட்டிக் குவிக்கலாம், பாராட்டிப் புகழலாம். ஆனால், மிஷ்கினையும் மிஷ்கினின் படைப்புகளையும் நாம் புறம்தள்ளிவிட முடியாது என்பதில்தான் இருக்கிறது, மிஷ்கினின் மாயாஜாலம்.

எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்லியிருக்கிறார், 'மிஷ்கின் நாம் புனைவுகளில் மட்டுமே கண்டறியும் கலைஞனின் ஆளுமை கொண்டவர்'. நிஜம்தான். அன்பும், கோபமும் மூர்க்கமாகக் கொண்ட, தமிழ்சினிமாவின் சமரசமற்ற கலைஞர்களில் ஒருவர் மிஷ்கின். 

'நந்தலாலா'வின் தாலாட்டில் இடம்பெற்ற வரிகள் இவை.

''நாதியற்ற பூவும் இல்லை; நட்டு வைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்; அன்னையின்றி யார் வந்தது.
எங்கிருந்தோ இங்கு வந்தோம்; வந்ததெல்லாம் சொந்தங்களே...
நம் பூமியில் அநாதை யார்?"

- பிறந்தநாள் வாழ்த்துகள். இயக்குநர் மிஷ்கின். சினிமா சைக்கோவின், அடுத்த படைப்பான 'சைக்கோ' சினிமாவுக்காக வெயிட்டிங்!
 

அடுத்த கட்டுரைக்கு