Published:Updated:

நின்றுபோன திருமணம்... அம்மாவின் மரணம்... சீண்டல், கிண்டல்... சன்னி ஸ்டாரான கதை..! #KarenjitKaur

சுஜிதா சென்

'கரன்ஜித் கௌர் - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' என்ற பெயரில் ஜீ 5 -ல் நேற்று வெளியான சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பகுதிகுறித்த கட்டுரை இது.

நின்றுபோன திருமணம்... அம்மாவின் மரணம்... சீண்டல், கிண்டல்... சன்னி ஸ்டாரான கதை..! #KarenjitKaur
நின்றுபோன திருமணம்... அம்மாவின் மரணம்... சீண்டல், கிண்டல்... சன்னி ஸ்டாரான கதை..! #KarenjitKaur

சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு முழுநீளப் படமாக எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தைகள் எழுந்த நிலையில், அதை வெப் சீரீஸாக எடுக்க சன்னி லியோன் திட்டமிட்டார். அதன் டைட்டில், 'கரன்ஜித் கௌர் - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்'. பாலிவுட்டில், ரோம் -காம் படங்கள் கொடுத்த இயக்குநர் ஆதித்யா தத் இதை இயக்கியிருக்கிறார். 

சீசன்-1 தொகுப்பு: 

மே 13, 1981-ம் ஆண்டு, கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரது அப்பா, ஜெஸ்பால் சிங், திபெத்தில் பிறந்து, டெல்லியில் வளர்ந்தவர்; அம்மா, பபுள் சிங். அருணாச்சலபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர். சன்னிக்கு, சந்தீப் வோரா கௌர் என்ற மூன்று வயது இளம் தம்பியும் இருக்கிறார். பஞ்சாப்பின் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, 1907-ம் ஆண்டு கனடாவில் நடந்த ஆன்டி ஓரியன்டல் கலவரத்தின் காரணமாக, தாய்நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இவர்கள் கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்று அங்கேயே குடிபோகிறார்கள். இவர்களைப் போல கனடாவில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள், இண்டோ- கனடியன்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். 

சிறு வயதிலிருந்தே ஆண்களுக்கான உடைகளை அதிகம் விரும்புவது, ஆண் நண்பர்களுடன் தெருவில் ஹாக்கி விளையாடுவது, பாலின பேதமின்றி சரிசமமாக அனைவரிடமும் பழகுவது என கரன் தன்னை ஒரு டாம்-பாயாக நினைத்துக்கொண்டு வாழ்கிறாள். கரன், பள்ளியில் யாரிடமும் அதிகமாகப் பேச விரும்புவதில்லை. ஆனால், வீட்டில் அப்பா, அம்மா, தம்பி என அனைவரிடமும் பாசத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு பெண்ணாக வளர்கிறாள். கரனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து வீட்டில் பணக்கஷ்டம் தலைவிரித்தாடுகிறது. 'தனது பிள்ளைகள் நினைத்ததைப் பெற்றுத்தர இயலாத பெற்றோர்களாக இருக்கிறோமே', என்று கௌர் தம்பதியர்கள் வருத்தப்படுவதை அறிந்த கரன், பார்ட்டைம் வேலைகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டத் தொடங்குகிறாள். கரனுக்குத் தனது 11-வது வயதில் முதல் காதல் மலர்கிறது. காதலனுடன் கரன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட இவரது தந்தை, கரனின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.

அந்த நாளிலிருந்து, தந்தைக்குத் தெரியாமல் வெளியே பார்ட்டிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த கரன், ஒருநாள் தனது தந்தையிடம் உண்மையைச் சொல்லி பார்ட்டிக்குச் செல்ல அனுமதி கேட்கிறாள். அவள், பார்ட்டியிலிருந்து வீடு திரும்பும்போது பேரதிர்ச்சியாக ஒரு சம்பவம் காத்திருக்கிறது. அதாவது, பார்க்கிங் ஏரியாவில் அவரது அம்மா மது அருந்திக்கொண்டிருக்கும் காட்சிதான் அது. எப்போதும் இந்தியக் கலாசாரம், பண்பாடு, பாரம்பர்யம் என்று பேசிக்கொண்டிருக்கும் தனது அம்மா, போதைப் பழக்கத்துக்கு அடிமையான உண்மையைக் கரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வாரம், கரனின் அப்பாவுக்கு வேலை பறிபோன அதிர்ச்சிச் சம்பவத்தின்மூலம், கரனின் மனம் மீண்டும் உடைகிறது. 

பல பார்ட்டைம் வேலைகளைத் தேடிச்சென்ற கரனுக்கு, ஒருநாள் தனது நண்பனின் அம்மா மூலம் மாடலிங் வாய்ப்பு தேடிவருகிறது. விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த அவரது மாடலிங் வாழ்க்கையின் முதல் ஷூட், உள்ளாடைகளுக்கான விளம்பரம்! முதல் முறையே சற்றும் யோசிக்காமல் தைரியமான முடிவை எடுக்கிறார் கரன். கவர்ச்சி உடையில் கேமராவுக்கு முன் நிற்கிறாள். அத்தனைக்கும் காரணம், வேறெந்தத் துறையிலும் கிடைக்காத அளவு பணம் இதில் கிடைப்பதுதான். மேலும், அதைவிட அதிக சம்பளத்தைப் பெரும் மற்றொரு வேலையும் கரனைத் தேடிவருகிறது. அது, அடல்ட் போர்ன் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு! அதற்கும் சம்மதம் தெரிவித்து, தன்னை ஒரு ஸ்பெயின் போர்ன் ஸ்டாராக நிலைநிறுத்திக்கொள்கிறாள். 

2003-ம் ஆண்டு, 'பென்ட்ஹவுஸ் - பெட் ஆஃப் தி இயர்' எனும் பட்டம் கரனுக்குக் கிடைக்கிறது. 'பென்ட்ஹவுஸ்' என்பது பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைக்கொண்ட ஒரு இதழ். இதில், பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் கரனின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்புகைப்படமும், கரன் பார்க்கும் வேலையும், அவரின் பெற்றோர்களைப் பொதுவெளியில் இழிவுபடுத்துகிறது. 'சீக்கிய மதத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழிவு' என்ற பெயரை கரனுக்கு வாங்கிக்கொடுக்கிறது. 

ஒரு பக்கம் தனக்கான ரசிகர்கள் வட்டம் பெருக, மறுபக்கம் சமூக விரோதத்தையும் சம்பாதிக்கத் தொடங்கினார், கரன். தனக்குப் புகழ் தேடித்தந்த பென்ட்ஹவுஸ் இதழ்தான் கரன்ஜித் கௌர்க்கு 'சன்னி லியோன்' எனும் பெயரையும் வாங்கிக்கொடுத்தது. பிரபல போர்ன் ஸ்டாரான சன்னி லியோன், போர்ன் இண்டஸ்ட்ரியின் விருது வழங்கும் விழாவான 'அடல்ட் வீடியோ விருது' நிகழ்ச்சிக்கு வரவேற்கப்படுகிறார். அங்குதான் டேனியல் வெபரை முதன்முறையாகப் பார்க்கிறார், சன்னி. 

மேலே சொன்ன அனைத்தும் சன்னியின் வாழ்வில் சட்டென நிகழ்ந்துவிடவில்லை. ஒவ்வொன்றுக்கும் பின்னால் வலி தாள முடியாத அளவுக்கு ஒரு கதை இருக்கிறது. அதை விரிவாக 'டாக்கிங் டஃப்' எனும் நிகழ்ச்சியில் சொல்ல ஆரம்பிக்கிறார், சன்னி. இப்படியாக ஆரம்பித்த சீசன்-1ல், இவரது இளமைக் காலம் முதல் காதல் காலம் வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஆறு எபிசோடுகளைக் கொண்டு, நேற்று வெளியிடப்பட்டிருக்கும் சீசன்-2ல் சன்னி லியோனின் மீதி வாழ்க்கை எவ்வாறாகக் கூறப்பட்டிருக்கிறது என்பதைக் காணலாம்.    

எபிசோட்-1 Beating Around the Bush

சன்னி, தனது பெற்றோருக்குத் தனது காதலனான நேட் என்பவரை அறிமுகப்படுத்தும் காட்சியிலிருந்து துவங்குகிறது எபிசோட்-1. நேட், ஒரு போர்ன்ஸ்டார், 'பிளே பாய்' இதழில் வேலைபார்த்துக்கொண்டிருப்பவர். சன்னியின் அம்மா நேட்டிடம், "வேறு ஏதாவது ஒரு வேலையை பார்க்கக் கூடாதா? அமெரிக்காவுலதான் அடல்ட் படத்தை தடைசெய்யப் போறாங்களே" என்று கூறுகிறார். தன்னை ஒரு பிரதான லெஸ்பியன் போர்ன்ஸ்டாராக நிலைநிறுத்திக்கொண்ட சன்னிக்கு, முட்டுக்கட்டையாக அமைவதும் இதுதான். ஆம், ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றால், அடல்ட் படங்களைத் தடைசெய்யப்போவதாக அறிக்கை வெளியிடுகிறார். சன்னியின் அம்மா இதற்காகவே ஜார்ஜ் புஷ்தான் அதிபராகப் பதவியேற்க வேண்டுமென நினைக்கிறார். அவர் விருப்பப்படி, எல்லாம் நடக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, தெருவில் 'Porn is Sin', 'Ban Porn' ஆகிய வாசகங்களைக்கொண்ட கார்டுகளை பிடித்தபடி மக்கள் ஊர்வலம் செல்கிறார்கள். இதைக் கண்ட சன்னியின் அம்மா பபுள், குற்ற உணர்ச்சியால் ஒருவித மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார். மது அருந்தியபடி கார் ஓட்ட முயற்சிசெய்கிறார். அவருக்கு படபடவென்று வியர்க்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் லாரி மீது மோதுகிறார். 

எபிசோட்-2 Guilty of Doing It our way

"It's miracle that your mother is still alive" என்று மருத்துவர் சன்னியிடம் கூறுகிறார். 

குடி போதையில் வண்டி ஒட்டியதற்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என்றும், நீதிமன்றத்தில் பபுள் சரணடைய வேண்டும் என்றும், போலீஸ் சன்னியின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறது. "அம்மா ஜெயிலுக்குப் போறதுதான் அவங்களைக் காப்பாத்துறதுக்கான ஒரே வழி. ஜெயில்ல இருக்கும்போதாவது அவங்க குடிக்காம இருப்பாங்க" என்று கோபத்துடன் கூறுகிறார், சன்னி. 

"உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா. உங்க அம்மாவைப் பார்த்து இப்படியெல்லாம் பேசு உனக்கு எப்படி மனசு வருது" என்று சன்னி மீது கோபப்படுகிறார் அவரது அப்பா. இருவரும் மருத்துவமனையில் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 

"ஒரு விஷயத்துக்கு நாம அடிமையாகிட்டோம்னா, அது நமக்கு தப்பா தெரியாது. அந்த மாதிரி உனக்கு நீ நடிக்கிற படம் தப்பா தெரியலை; எனக்கு நான் குடிக்கிறது தப்பா தெரியலை" என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார், பபுள்.

500 டாலர் அபராதம், அடுத்த ஆறு மாதத்துக்கு வண்டி ஓட்டக் கூடாது எனும் நிபந்தனை, மூன்று மாதம் ஆல்கஹால் அடிக்ஷனிலிருந்து வெளிவருவதற்கான சிகிச்சை... ஆகியவற்றைக் கண்டிப்பாக பபுள் செய்தாக வேண்டும் எனும் நிபந்தனையை நீதிமன்றம் அவருக்கு வழங்குகிறது. 

"Like the day she was born, like every other mother I had dreams for her. I wanted her to be a great daughter, great sister, a great wife and eventually a great grand mother. I wanted her to be everything an ideal Indian Girl should be..." என்று பபுள் தனது மகளைப் பற்றி ட்ரீட்மென்டில் இருப்பவர்கள் முன்பு கண்ணீர் மல்கப் பேசுகிறார். அதைக் கேட்கும் மற்றவர்களும் கண்ணீரில் மிதக்கிறார்கள். ஒரு இந்தியத் தாயின் வலியைப் பகிரும் இக்காட்சி, ஊர் உணர்ச்சிக் குவியலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

"குடிக்க தினமும் எனக்கு ஒரு காரணம் தேவை. அதுக்கு என்னோட மகளைப் பயன்படுத்திக்கிட்டேன். தன்னோட பொண்ணு எப்படியெல்லாம் இருக்கக் கூடாதுனு ஒரு அம்மா நினைப்பாங்களோ, அப்படியெல்லாம் கரன் இருக்கா. நீங்கதான் என்னை மது பழக்கத்துல இருந்து எப்படியாவது வெளிய கொண்டுவரணும்" என்று கனத்த குரலில் அழுகிறார், பபுள். 

எபிசோட்-3 Is it happily ever After?

இதுவரை லெஸ்பியன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சன்னி லியோன், தனது பிசினஸை அதிகப்படுத்துவதற்காகத் தனது காதலனான நேட்டுடன் போர்ன் படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறார். இதுதான் சன்னி ஒரு ஆணுடன் நடிக்கும் முதல் படம். இவர்கள் இருவரின் காதல், கல்யாணம் வரை செல்கிறது. அதே வேளையில், சன்னியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 

சன்னியின் தம்பியான சந்தீப்பின் கேர்ள் ஃப்ரெண்டு மூலம், நேட் 'தன்னை முழு மனதோடு காதலிக்கவில்லை, அவனுக்கு தன்னிடமிருந்து பணம் மட்டுமே தேவைப்படுகிறது' எனும் உண்மை அவருக்குத் தெரியவருகிறது. 

எபிசோட்-4 The Princess and the Frogs

தனது காதலனிடமிருந்து பிரிய முடிவுசெய்கிறார், சன்னி. இவர்களது திருமணம் நிறுத்தப்படுகிறது. 2008-ம் ஆண்டு மறுபடியும் அடல்ட் வீடியோ அவார்ட் நிகழ்ச்சியில் சன்னி, டேனியல் வெபரை சந்திக்கிறார். அந்த விருது நிகழ்ச்சியில், சன்னிக்கு 'பெஸ்ட் வெப் கேர்ள் ஆஃப் தி இயர்' விருது கிடைக்கிறது. இதையறிந்த அவரது அம்மா பபுள், மீண்டும் சோகத்தில் ஆழ்கிறார். 

எபிசோட்-5 The last wish 

பபுள் தனது மூன்று மாத சிகிச்சையை முடித்து வெளிவரும்போது, அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பின், டாக்டர் அவரின் கணையம் செயலிழந்துவிட்டதாகக் கூறுகிறார். உடல்நிலை மிக மோசமாகி, அங்கிருந்து வீல் சேரில் வீட்டுக்கு அழைத்துவரப்படுகிறார், பபுள். 'அவர், சில காலம் மட்டுமே உயிரோடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதுவரை இவரை மது அருந்தவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று டாக்டர் அறிவுறுத்துகிறார்.

 எபிசோட்-6 Time to Say Goodbye!

எதிர்பாராத விதமாக, ஒருநாள் டேனியலிடமிருந்து சன்னிக்கு மெசேஜ் வருகிறது. இருவரும் மறுபடியும் சந்திக்கிறார்கள். டேனியல் சன்னியை விரும்புவதாக அவரிடம் கூறுகிறார். அதே சமயத்தில், சன்னிக்கு சந்தீப்பிடமிருந்தும் போன் வருகிறது. 'கரன்... அம்மாவுக்கு இதுதான் கடைசி நாள்னு நினைக்கிறேன். ரொம்ப சீரியஸா இருக்காங்க. எங்க இருந்தாலும் வீட்டுக்கு வா' என்று கூறுகிறார். 

"கரன்...எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. தினமும் இதுதான் கடைசி நாள்; இதுதான் கடைசி நாள்னு பயந்து பயந்து வாழ்க்கையை ஒட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இந்த நிலைமையில கஷ்டப்படுறதுக்கு செத்துப்போயிடலாம்' என்று அழுதுகொண்டே கூறுகிறார், சந்தீப். 

"கரன்...நீ உன்னோட முதல் சம்பளத்துல எனக்கு வாங்கிக்கொடுத்த கைசெயின் எங்க இருக்கு? அதை எடுத்துட்டு வா. சாகப்போற நேரத்துல அதை போடணும்னு நினைக்கிறன்' என்று சன்னியிடம் அவரது அம்மா கூறுகிறார். 

கைசெயின் சன்னியின் வீட்டில் இருக்கிறது. அதை எடுக்க அவசர அவசரமாக காரில் தனது வீட்டுக்குச் சென்று எடுத்துவருகிறார் சன்னி. அதை அம்மா கையில் அணிவித்த மறு கணமே அவரது உயிர் பிரிகிறது. 

அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு டேனியலும் வருகிறார். அவரைப் பார்த்து, "Mom... This is Daniel. Daniel... This is my Mom" என்று அழுதுகொண்டே சன்னி கூறும் காட்சியுடன் சீசன் 2-வின் முதல் ஆறாவது எபிசோடு முடிவடைகிறது. சன்னியின் திருமண வாழ்க்கை, குழந்தைகள் பற்றிய அடுத்த நான்கு எபிசோடுகள், விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.