Published:Updated:

``கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ்..!" - விக்ரம் பிரபு

'துப்பாக்கி முனை' படம்குறித்து நடிகர் விக்ரம் பிரபு பேட்டி...

``கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ்..!" - விக்ரம் பிரபு
``கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ்..!" - விக்ரம் பிரபு

`` `சிகரம் தொடு' படத்துக்குப் பிறகு, போலீஸ் கேரக்டரில் நான் நடித்திருக்கும் படம் 'துப்பாக்கி முனை'. தினேஷ் செல்வராஜ் என்கிட்ட கேட்டப்போ, உடனே பண்ணலாம்னு சொல்லிட்டேன். இந்தப் படத்துக்காக 10 கிலோ வெயிட் ஏத்தியிருக்கேன். படத்துல என்னுடைய வயசு அதிகமா தெரியணும். இந்தப் படத்துல என்னுடைய கேரக்டர் பெயர் பிர்லா போஸ். 10 வருஷத்துக்கு அப்புறம், இந்தப் படத்தின் பேரைக் கேட்டால், என்னோட முகம் மக்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு படத்துக்காக மெனக்கட்டிருக்கேன்" என உற்சாகமாக நம் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார் நடிகர் விக்ரம் பிரபு.  

"'துப்பாக்கி முனை' படத்தின் டீசர் பார்த்துட்டு மணிரத்னம் பாராட்டினாராமே?"

"படத்தோட டீசர் பார்த்துட்டு நிறையப் பேர் பாராட்டினாங்க. அதில் முக்கியமானவர் மணிரத்னம் சார். இயக்குநர் தினேஷ் செல்வராஜ் அவரோட இணை இயக்குநரா வேலைபார்த்திருக்கார். அவருடைய அப்பாவும் மணிரத்னம் சாரோட ரொம்ப நாள் இருந்திருக்கார். ரெண்டு பேரும் நிறையக் கதைகள் பேசுவாங்க, சில விவாதங்கள்லகூட ஈடுபட்டிருக்காங்க. 'அலைபாயுதே' பட சமயத்துல இருந்து வொர்க் பண்ணிட்டு வர்றாங்க. 

அதனாலதான் மணிரத்னம் சார், படத்தோட டீசரைப் பார்த்துட்டு 'குட் வொர்க்'னு பாராட்டினார். சின்ன வயசுல இருந்தே மணிரத்னம் சாரைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர் படங்களில் வரும் வசனங்களைப் போலதான் ஆளும், ரொம்ப கம்மியாதான் பேசுவார். படத்தோட ஆக்‌ஷன் சீக்வென்ஸை நிறையப் பாராட்டுனார். அவர் என்கிட்ட நிறையப் பேசலை. ஆனா, டீம் வொர்க் நல்லா இருக்குன்னு சொன்னார். 

" 'அக்னி நட்சத்திரம்' ரீமேக் பண்ணா அதுல நீங்க நடிப்பீங்களா?"

"ஒரு கிளாசிக் படத்தை ரீமேக் பண்றது ரொம்பக் கஷ்டம். அதுவும் இன்னைக்கு இருக்கிற சூழல்ல அதே மாதிரி எடுக்க முடியுமான்னு தெரியாது. சினிமா பின்னணி கொண்ட குடும்பத்துல இருந்து நடிக்க வந்த எனக்கு, நிறைய ப்ரஷர் இருந்தது. அதே மாதிரிதான் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் ரீமேக்கும். அதைவிட பெட்டரா இருக்கணும்னுதான் மக்கள் எதிர்பார்ப்பாங்க. அதுக்கு நல்ல ஸ்க்ரிப்ட் வொர்க் தேவை. அதை மணி சார்தான் செய்ய முடியும். அப்படியிருந்தால், கண்டிப்பா நான் இருப்பேன். மற்ற இயக்குநர்களால இதைச் சாத்தியப்படுத்த முடியுமான்னு தெரியலை."

"மணிரத்னம் இதைப் பற்றி எப்போவாது பேசினாரா?"

"இதுவரைக்கும் பேசலை. எனக்கான பாதையை நானே உருவாக்கிட்டு இருக்கேன். அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன்னா, எது பண்ணாலும் இப்போலாம் கம்பேர் பண்றாங்க. 'துப்பாக்கி முனை' படத்துக்கும் 'தங்கப்பதக்கம்' படத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு என்கிட்டயே கேட்குறாங்க. தாத்தாவோட நடிப்பை யாராலும் கொண்டு வரமுடியாது. அவர் வேற, நான் வேற!"

"'வால்டர்' படம் போலீஸ் கதையா?"

"இதைப் பற்றி இப்போ சொல்ல முடியாது. ஏன்னா, என்னோட அடுத்த படம் 'அசுரகுரு' படத்தோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்ல உருவாகிட்டிருக்க இந்தப் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சதுக்குப் பிறகு, இந்த வருஷ கடைசியிலதான் ஷூட்டிங் போறோம்." 

"பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மீட் பண்ணுனீங்களா?"

"'வால்டர்' படத்தோட அறிவிப்பு வந்ததுக்குப் பிறகு அவரை சந்திக்கலை. அதுக்கு முன்னாடி மும்பையில மூணு முறை பார்த்திருக்கேன். அப்பாவுக்கு அவர் நல்ல நண்பர். 'வால்டர்' படத்துல அவர்கூட நடிக்கிறது பத்தி அப்பாகிட்ட சொன்னேன். சந்தோஷப்பட்டார். சீக்கிரமே மீட் பண்ணணும்." 

"துல்கர் உங்களுடைய நண்பர். கேரளா வெள்ளம் பற்றி அவரிடம் பேசுனீங்களா?"

"துல்கர் என்னுடைய நண்பன்ங்கிறதைத் தாண்டி, சகோதரன்னே சொல்லலாம். சென்னையில வெள்ளம் வந்தப்போ, எங்க வீட்டைச் சுத்தி தண்ணி வந்துருச்சு. இன்னும் கொஞ்சம் அதிகமா மழை வந்திருந்தா வீட்டுக்குள்ளே தண்ணீர் புகுந்திருக்கும். அந்தளவுக்கு இருந்தது. கேரள வெள்ளம் ரொம்பப் பெருசு. துல்கரிடம் பேசும்போது, 'பத்திரமாதான் இருக்கோம். சேதாரம் மட்டும் இருக்கு'னு சொன்னார். வெள்ளத்துக்குப் பிறகு சாலக்குடி ஏரியாவுக்குப் போனேன். அங்கிருந்த மக்கள் ரொம்பப் பாவம். நிறைய கஷ்டத்துக்கு ஆளாயிருந்தாங்க. அப்பாகூட சேர்ந்து கொஞ்சம் நிதியுதவி பண்ணேன். இதையும் நிறையப் பேர் கம்பேர் பண்ணி பேசுறாங்க. அப்படிச் செய்யாம, நம்மளால என்ன முடியுமோ அதை களத்துல இறங்கி செஞ்சா நல்லா இருக்கும்."

"சிவாஜி தயாரிப்பு நிறுவனம் இருக்கும்போது, உங்கள் சொந்தத் தயாரிப்பில் படம் எடுத்தது ஏன்?"

"'சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்' பெரிய கம்பெனி. அதில், சீனியர்ஸ் படம்தான் நிறைய எடுத்திருக்காங்க. இன்னொரு விஷயம், சொந்தமா ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, அதில் இருக்கக்கூடிய நல்லது கெட்டது என்னன்னு தெரியும். நிறைய அனுபவம் கிடைக்கும். என்னுடை நண்பர்கள்தான் 'நெருப்புடா' படத்ந்த் தயாரிக்கச் சொன்னாங்க. அவங்களுக்காகத்தான் அதைப் பண்ணேன். தொடர்ந்து நிறையப் படங்களைத் தயாரிப்பேன்." 

"தயாரிப்பாளர் தாணுதான் நீங்க நடிக்கிற படங்களுடைய கதையை ஓகே பண்றார்னு கேள்விப்பட்டோம்?"

"என்னுடைய படங்களுக்கான கதைகளை நான் மட்டும்தான் கேட்கிறேன். வெற்றியோ தோல்வியோ என் படத்துக்கான பொறுப்பை நானே ஏத்துக்கிறேன். படத்தோட டிஸ்கஷனுக்குக்கூட நான் மட்டும்தான் போவேன். ஆனா, தாணு சாருடைய பேனர்ல படம் வந்தா அவர்தான் முதலில் கதை கேட்டு ஓகே பண்ணுவார்."