Published:Updated:

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive

``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு."

சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும், உடலமைப்பாலும் கவர்ந்த கவர்ச்சிக் கன்னி. ஹீரோ, ஹீரோயின்களைவிட, இவரின் கால்ஷீட்டுக்குப் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம் உண்டு. இந்தக் கவர்ச்சி காந்தம் சினிமா உலகில் வலுப்பெற்றிருந்த காலத்திலேயே, 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி திடீரென மரணத்தைத் தழுவிக்கொண்டது. அவரின் நினைவு தினம் வருவதையொட்டி அவரின் தோழியும், நடிகையுமான அனுராதா, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கிப் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார். 

``சில்க் ஸ்மிதா, என் நெருங்கின தோழி. நிறைய படங்கள்ல சேர்ந்து வேலை பண்ணியிருக்கிறோம். ஆனா, அவங்க வயதிலும் சினிமாவிலும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர். ஆரம்பத்தில் நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தேன். அப்போ கிளாமர் டான்ஸ்ல சில்க் பெரிய புகழுடன் இருந்தாங்க. 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்ச நிலையில, ஒரு படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடினேன். அந்தப் படம் பெரிய ஹிட். பிறகு, அப்படியான வாய்ப்புகளே எனக்கு நிறைய வர ஆரம்பிச்சுது. அவை ஹிட்டாச்சு. அதனால சில்க்கின் மார்கெட் சரிய தொடங்கினதாவும், சில்குக்கு என் மேல கோபம் இருந்ததாகவும் பேசப்பட்டுச்சு. நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அப்போகூட நாங்க இருவரும் பல படங்கள்ல ஒண்ணா வேலை பார்த்தோம். ஆனா, நாங்க பேசிகிட்டதில்லை. அதேநேரம், எங்களுக்குள் போட்டியோ, கோபமோ இருந்ததில்லை.

இந்நிலையில சில்க் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிச்சு நடிச்சாங்க. `நீங்க இப்போ பீக்ல இருக்கீங்க. என் படத்தில் ஒரு டான்ஸ் ஆடுங்க'னு என்கிட்ட கேட்டாங்க. நானும் நடிச்சேன். அப்போதிலிருந்துதான் எங்க நட்பு படிப்படியா வளர ஆரம்பிச்சுது. `சில்க் ரொம்ப தலைக்கனம் உள்ளவங்க; திமிரு பிடிச்சவங்க; பெரிசா யாரையும் மதிக்க மாட்டாங்க'னு அப்போ பலரும் சொல்லுவாங்க. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கிட்ட சில்க் ரொம்ப தைரியமா, திமிரா பேசுவாங்க. அதை, அவங்களோடு வொர்க் பண்ணின போது நானும் உணர்ந்தேன். அந்தக் கெத்தான குணம் எனக்குக்கூட இதுவரை வந்ததில்லை. ஆனா, எங்க நட்பு ஆழமான பிறகுதான், மத்தவங்க சொன்னதுல ஒண்ணுகூட உண்மையில்லை என்பதை உணர்ந்தேன்" என்கிற அனுராதா, சில்க் ஸ்மிதா உடனான நட்புத் தருணங்களைப் பகிர்கிறார்.

``சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயினுக்கும் மீறிய புகழை, தன் கிளாமர் டான்ஸால் சில்க் பெற்றாங்க. ஆனா, அந்தப் புகழ் அவருக்கு அவ்வளவு எளிதா கிடைச்சுடலை. சினிமா துறையினர் உட்பட பலராலும் பல விதத்துலயும் அவங்க நிறைய மனவேதனைகளை சந்திச்சிருக்காங்க. அந்தப் படிப்பினைகளிலிருந்துதான், தன்னைக் கோபக்காரி மாதிரி வெளிப்படுத்திகிட்டாங்க. வெளியே கோபமான ரூபத்தில் பேசினாலும், `இப்படிப் பேசிட்டோமே'னு பயமும் கவலையும் அவர் மனசுல இருக்கும். இப்படித் தனக்குத் தானே ஒரு வேலி போட்டுக்கிட்டாங்க. அதனால சில்க்கைப் பலரும் தப்பா பேசினாலும், அவரைக் கெட்ட எண்ணத்துடன் எளிதா நெருங்க முடியாம இருந்துச்சு. தன் மனசுல நிறைய வலிகள் இருந்தாலும் அவற்றை எப்போதும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாங்க. 

சில்க்குக்கு டான்ஸ் வராது. அவரோட வசீகர முகமும், உடலமைப்பும் பெரிய ப்ளஸ். அதை கேரக்டர் மற்றும் டான்ஸ் தன்மைக்கு ஏற்ப சிறப்பா நளினத்துடன் வெளிப்படுத்துவாங்க. அந்த உடலமைப்பு வேறு எந்த நடிகைக்கும் வராது; இதுவரைக்கும் வரலை. அதனால் நானும் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கேன். அதைச் சில்க் கிட்டயே சொல்லியிருக்கேன். இருவருக்கும் ஓய்வுநேரம் கிடைச்சா, மீட் பண்ணுவோம். நிறைய பேசுவோம். காமெடியா பேசுவாங்க. சந்தோஷமான விஷயங்களைப் பத்திச் சொல்லுவாங்க. தன் மனசுல இருக்கிற எதார்த்தமான விஷயங்களைப் பத்தியும் சொல்லுவாங்க. ஆனால், தன் பர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டாங்க. நானும் கேட்டதில்லை. ஒரு லிமிட்டுக்கு உண்டான வகையில் எங்கிட்ட பல விஷயங்களைச் சொல்லியிருக்காங்க" என்கிறார், அனுராதா.

சில்க் ஸ்மிதாவின் இறப்புப் பற்றிப் பேசுகையில், அனுராதாவின் குரல் உடைகிறது. ``அவளின் மரணம் இப்போ வரை மர்மமாகவே இருக்குது. அதற்கு இப்போவரை பல காரணங்கள் சொல்லப்படுது. நிறைய விஷயங்களை வெளிப்படையா சொல்ல முடியாதுங்க. அவங்க எப்படியான சூழல்ல இருந்து தவிச்சுட்டு இருந்தாங்கனு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதையெல்லாம் இப்போ பேசுறது சரிவராது. ஆனா, அவங்க ஒருத்தரைக் காதலிச்சாங்க. அந்தக் காதல் தோல்வியடைந்ததால், மனதளவில் வலிகளுடன் இருந்தாங்க. இந்த விஷயத்தைப் பத்தி ஓரளவுக்கு எங்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. அப்போ என் வீடு கே.கே.நகர்லயும், சில்க் வீடு சாலிகிராமத்துலயும் இருந்துச்சு. அவ திடீர்னு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லுவாள். நான் ஃப்ரீயா இருந்தா, உடனே போவேன். மனம்விட்டுப் பேசுவோம். 

செப்டம்பர் 23, 1996-ம் ஆண்டு. அப்போ, ஒரு கன்னடப் படத்தைத் தயாரிச்ச சில்க், அதில் நடிச்சுட்டும் இருந்தாங்க. அந்தப் படத்தில் என் கணவர் சதீஷ்தான் நடன இயக்குநர். சில்க்கின் டான்ஸ் போர்ஷனை முடிச்சு அவளை அனுப்பிட்டு, பிற நடிகர்களின் டான்ஸ் போர்ஷனையும் முடிச்சுட்டு கணவர் எங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். இரவு 9 மணி இருக்கும். சில்க்கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. `அனு, பிஸியா இருக்கியாடீ? என் வீடு வரைக்கும் வர்றியா? கொஞ்சம் பேசணும்'னு சொன்னாங்க. `இப்போதான் நானும் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். பிள்ளைக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கணும். சதீஷூம் வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். அவர் வருவதற்குள் சாப்பாடு ரெடி பண்ணணும். நாளைக்குப் பிள்ளையை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு, நேரா உன் வீட்டுக்கு வரேன். ஏதாச்சும் பிரச்னையா? போன்ல சொல்லு. ரொம்ப அவசர விஷயம்னா உடனே வரேன்'னு சொன்னேன். `பரவாயில்லை. நாளைக்கு வா. நேர்ல பேசுவோம்'னு சொல்லிட்டாங்க. அதனால நானும் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு தூங்கிட்டேன். காலையில சமையல் முடிச்சுட்டு, என் மகளை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போகும் பரபரப்புல இருந்தேன். என் கணவர் சதீஷ் டிவியில நியூஸ் போட்டார். உடனே, `நடிகை சில்க் ஸ்மிதா மரணம்'னு ஃப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாச்சு. எனக்குப் பேரதிர்ச்சி. கதறி அழுதேன். உடனே சில்க் உடலைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன். நடிகை வித்யாவும் அப்போ அங்க வந்தாங்க. சில்க்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய விஜயா ஹாஸ்பிட்டல் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னாங்க. உடனே நாங்க இருவரும் ஹாஸ்பிட்டல் போனோம். சொந்தங்கள் இருந்தும், சில்க் தனிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்தாங்க. ஹாஸ்பிட்டல்லதான் சில்க்கின் அம்மாவை முதன் முதலா பார்த்தேன். சில்க்கை கடைசியா பார்த்த அந்தத் தருணம் மறக்க முடியாதது.

22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு. மத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடமாட்டாள்; தன் பர்சனலையும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாள். ரொம்ப நல்ல மனுஷி. போல்டான பெண். ஆனா, இப்படி ஒரு தவறான முடிவைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு, தன் 35 வயசுலயே இறந்துட்டாள். சினிமா துறை அழகான, சிறந்த நடிகையை இழந்துடுச்சு. அவளோட இடத்தை இப்போவரை எந்த நடிகையாலும் ஈடுசெய்ய முடியலை" எனக் கண்ணீருடன் முடித்தார் அனுராதா.

அடுத்த கட்டுரைக்கு