Published:Updated:

``சினிமாவை கடைசி பெஞ்சில் வைப்பது அறியாமை!" - மலையாள கிளாசிக் இறுதிப் பகுதி

``சினிமாவை கடைசி பெஞ்சில் வைப்பது அறியாமை!" - மலையாள கிளாசிக் இறுதிப் பகுதி
``சினிமாவை கடைசி பெஞ்சில் வைப்பது அறியாமை!" - மலையாள கிளாசிக் இறுதிப் பகுதி

மலையாள கிளாசிக் தொடரின் நிறைவுப் பகுதி...

நான் `மலையாள கிளாசிக்' தொடரை எழுத ஆரம்பித்தபோது `தொண்டிமுதலும் திருக்சாட்ஷியும்' வரை எழுதுவதைத்தான் ஒரு பேச்சாகச் சொல்லியிருந்தேன். `சுடானி ஃபிரம் நைஜீரியா' வரை வந்தது. மலையாளத்தில் அது கடைசிப் படமாக இருக்காதே! இவ்வருடம் வந்த படங்களில், `பூமரம்' அற்புதமான படம். `ஈ மா யு' சொல்லவே தேவையில்லை. இப்போது அஞ்சலி மேனனின் `கூடே' வந்து போயிற்று. அதுவுமே நல்ல படம்தான். அப்படிப் பல படங்கள் தொடர்ந்து வர இருக்கின்றன.

ஓஷோ ஒரு கதை சொல்லியிருக்கிறார். பாலைவனத்தில் ஓர் ஆடு மேய்ப்பன் தனது ஒட்டகத்துடன் வழி தவறிவிடுகிறான். ஒரு கட்டத்துக்கு அப்புறம் சோறும் நீரும்கூட கிடையாது. வெயில் உடலைப் பிளக்கிற சாட்டைகளாய் மாறத் தொடங்கியிருந்தது. ஒரு பொழுதுபோக்குபோல அவன் காமத்தை ஊதி எழுப்பி, அந்த ஒட்டகத்தைப் புணரத் தலைப்படுகிறான். ஆனால், சரியாய் பொருந்த வேண்டிய நேரத்தில் எல்லாம் ஒட்டகம் நகர்ந்துவிட இவன் பாட்டுக்குக் கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல் அந்த முயற்சியையே தொடர்ந்து கொண்டிருக்கிறான். பாலையிலிருந்து ஒரு ரோட்டுப் பக்கம் இறங்க முடிந்த அந்த நாளில், ஒரு பேரழகி ரிப்பேரான காருடன் நின்றுகொண்டிருக்கிறாள். விவரம் கேட்டு இவன் காரை ஆராய்ந்து அதைச் சரி செய்தும் கொடுக்கிறான். அழகிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. எப்பேர்பட்ட உதவி செய்திருக்கிறாய் என்கிற நன்றியுடன் உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்கிறாள். ஒருவேளை கடவுளுக்கேகூட மயங்காத அப்படி ஒருத்தி தன்னைத் தர தயாராகி நின்றாயிற்று. அவன் அதைக் கவனிக்கவில்லை. எனக்கு ஒன்றும் வேண்டாம் என்கிறான். அவள் ஏமாற்றமடைகிறாள் என்று சொன்னால் போதுமல்லவா. இல்லை, நீங்கள் எனக்கு உதவி செய்தே ஆகவேண்டும் என்று நினைப்பீர்களானால், அந்த ஒட்டகத்தைக் கொஞ்சம் அசையாமல் பிடித்துக்கொள்ள முடியுமா என்று கேட்கிறான்.

பழக்கம் என்பது பயங்கரமான பொறி. முதலில் அப்படிப் பழக்கத்திலிருந்து நழுவிக்கொண்ட படங்களைத்தான் நான் முதலில் எழுதுவதற்கு எடுத்துக்கொண்டேன். மலையாளப் படங்களின் தற்போதைய எழுச்சியைப் புரிந்துகொள்வதற்காக எனது ரசனையில் நல்ல படங்களாக அறியப்பட்ட படங்களைப் பற்றி எழுத முடிந்தது. அது முடிந்த முடிவல்ல. பலரும் பல அபிப்பிராயங்கள் வைத்திருப்பார்கள். லிஸ்டில் இந்தப் படம் வருமா என்று யார் யாரோ கேட்டதில், பல படங்களை நான் யோசிக்கவே இல்லை. நான் எழுதின இந்தப் படங்களில் எல்லாம் ஒருவிதமான புதுமையின் இணைப்பு இருந்திருப்பதாக நம்பியே தொடர்ந்தேன். நான் கூறின ரசனை அதன் அடிப்படையில்தான் இருந்தது. எதிர்காலத்தில் மலையாள சினிமா இன்னுமே கற்றுக்கொண்டு வளர்வதற்கான சாரம் கொண்டிருந்த படங்கள் இவையெல்லாம் என்பது, என் கோணம். பலரும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள். சினிமா பார்ப்பது என்பது இன்று ஓர் உறுதியான கலாசாரமாகிக் கொண்டு வருகிற சூழலில், மலையாள சினிமா என்றில்லை, இந்திய சினிமாவே நல்லவற்றை உட்கொண்டு வளம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாரும் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எல்லைகளே இல்லை. மனிதன் எங்கேயும் மனிதன்தான்.

எமோஷன்ஸ் எங்கேயும் பிடிபட்டு விடும்.

சந்தோசம் நோய் போலப் பற்றக்கூடியது. ஆற்றாமல் அழுகிற கண்ணீர் எந்த இடுக்கிலும் சம்பாதிக்கக் கூடியது. சால்ட் அண்ட் பெப்பரில் தம்மை அறிந்துகொண்டு விட்ட ஒரு காதலிருந்தது. ஆணும் பெண்ணும் அடைத்துக்கொள்ள வேண்டிய படுக்கையறையில் மதம் வந்து உட்கார்ந்து கொள்வது `அன்னையும் ரசூலும்' படத்தில் இருந்தது. ஒவ்வொரு சுலைமானிலும் இத்திரி மொகபத்து என்றான், `உஸ்தாத் ஓட்டல்' கிழவன். தம்மை அறிந்த காதல் போலவே தன்னை அறிந்த பெண்ணொருத்தி இருந்தாள் `22 பீமேல் கோட்டய'த்தில்!. யாருடைய தியாகத்தில் நமது சுதந்திரம் அகம்பாவம் கொள்கிறது என்றது, `நார்த் ட்வன்டி போர் காதம்'. அழகிகளின் மனம் தீட்டிக் காட்டியது, `அஞ்சு சுந்தரிகள்'. பாம்புச் சட்டையை உரிப்பதுபோல உரிந்து வந்து ஒரு கலைஞன் உருவானதை `நத்தோலி செறிய மீனல்லா' சொல்லிற்று. நாம் அறிய விரும்பாத உலகங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றது, 'ஞான் ஸ்டீவ் லோபஸ்'. `ஆமென்' படத்தில் வைதீகத்தை உடைத்துக்கொண்டு மிஞ்சுகிறது கலை. பழக்கத்தில் நடக்காத எளிமையான ஆளில் உள்ள சுதந்திரம் சமூகத்தை எப்படி அச்சுறுத்தும் என்கிற கதையை விவரித்தது, `முன்னறியிப்பு'. `கன்யகா டாக்கீஸ்' கடவுளின் இடத்தைப் பிட்டுப் படங்களும் எடுத்துக்கொள்ள முடியும் என்று புன்னகைத்தது.

ஒரு மனிதனின் வளர்ச்சியில் காதலும் தொடர்ந்து வருவதைச் சொன்னது, `பிரேமம்'. சாராயக் கோப்பைகளில் மிதக்கிற ஆண்களின் தனிமை எழுந்து வருவதை `லுக்கா சுப்பி'யில் சொல்லியிருந்தார்கள். யாருக்காகவும் வாழுவதே வாழ்வல்ல என்றது, `ஆனந்தம்' படம். `மகேஷின்ட பிரதிகாரம்' துளியில் தொடங்கி கடலாய் விரிகிற சென். தளுக்குக் காட்டுகிற நகரங்களின் பாதாளங்களிலிருந்து அடித்து அமர்த்தபட்ட குரல்கள் எழுந்து வருவதைக் காட்டினர், `கம்மாட்டிப் பாடம்' படத்தில். `அனுராகக் கருக்கின் வெள்ளம்' ஈடுபடுகிற எந்தக் காதலுக்குமான தித்திப்பு. ஒரு பொறம்போகினால்கூட சகித்துக்கொள்ள முடியாத உலகின் முகமூடியை அவிழ்த்துக் காட்டிய படம், `லீலா'. நட்பு, மனிதாபிமானம், சமூக உறவு இவற்றுக்கு எல்லாம் ஆழத்தில் சந்தர்ப்பம் கிடைத்தால் எழுந்து கொள்ளக்கூடிய மேட்டிமையின் பழிவெறியை `ஒழிவு திவசத்தின்ட களி'யில் காத்திரமாகச் சொன்னார்கள். பிழைப்பின் பொருட்டு பையன்கள் வளர்ந்து ஆள்களாவதைச் சொல்லிற்று, `அங்கமாலி டயரீஸ்'. குற்றமென்ன, தண்டனை தானென்ன என்பதைத் `தொண்டிமுதலும் திருக்சாட்சியும்' விளக்கியது. காதலில் நம்பிக்கைக்கு உள்ள ரோலை `மாயாநதி' ஆராய்ந்தது. புறப்படும் இடத்தில் இருக்கக்கூடிய ரசவாதம் பேசியது, `கார்பன்'. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று வலுவாகக் கேட்டது, `சுடானி ஃபிரம் நைஜீரியா'.

இத்தனை படங்களில் எத்தனை குழந்தைகள், பெண்கள், ஆண்கள்...  எத்தனை மனங்கள், மணங்கள் அவற்றின் துடிப்புகள்?!
ஒரு சிறுகதை எழுதும்போது நமக்குள் உலவுகிற மனிதர்களுடன் உண்டாகிற தொடர்பு, நெருக்கடி, உவகை, நெகிழ்வு எல்லாமே இப்படங்களைப் பற்றி எழுதும்போது உண்டாயிற்று. நிஜமாகவே கலங்கடிக்கக் கூடிய பல கதாபாத்திரங்களும் நாற்காலி போட்டு அழிச்சாட்டியமாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்ததுபோல கூட இருந்தது. `கம்மாட்டிப் பாட'த்தின் கங்கா ஒரு நிக்காவில் கலந்து கொண்டு பாடியவாறு வெளியேறுகிற காட்சியை நான் கண்ணசைந்தால் வந்து விடுகிற கனவுபோலப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது ஒரு சிறிய உதாரணம்தான். இந்தப் படத்திலிருந்து அடுத்த படத்துக்குப் போகிறவரை, நான் பலநேரம் இயக்குநர்களின் மனமாகவே இருந்தேன்.     

நண்பர் சுகாதான், `விகடனில் கேட்பார்கள், எழுதுங்கள்' என்றார். எந்த ஒழுங்கிலும் அடங்காத நான், இந்தப் படங்களை மீண்டும் ஒருமுறை வரிசையாகப் பார்க்க நேர்ந்து அவற்றைக்கொண்டு பகுத்தறிந்து எழுதியபோது ஏதோ ஒருவிதமான மன விடுதலையை அடைந்துகொண்டு வருவது புலப்பட்டது. சினிமாதானே எனலாம். சினிமாவாயிற்றே எனவும் சொல்லலாம். கொஞ்சம் அலட்டல் ஆள்கள் சிணுங்கிக் கொள்கிற மாதிரி, சினிமாவைக் கடைசி பெஞ்சில் வைப்பது அறியாமை. அதை வெறும் வணிக சாமானாகவோ, புனித அப்பமாகவோ திரிப்பவரும், அசலான சினிமாவின் லட்சியங்களை உணரமாட்டார்கள். கலை எல்லா அலைகளின் மீதும் ஏறிக்கொண்டு வரும். மனதின் விட்டங்களை விரிவுசெய்ய இந்த நூற்றாண்டில் சினிமாதான் முதல் வழி. ஒருவர் மூன்றாம் படிக்கட்டிலோ, வேறு ஒருவர் முப்பத்தி மூன்றாம் படிக்கட்டிலோ அமர்ந்து கொண்டிருக்கலாம். எல்லோரையும் சென்றுசேர முந்தும் ஒரு நல்ல மாதிரியாக இந்த வகை  மலையாளப் படங்கள் இருக்கின்றன. இன்னும் தீவிரமான நல்ல படங்களைக் காண, நாம் இந்தப் பாதையில்தான் சென்றாக வேண்டும். எனது கட்டுரைகள் பலருக்குமே உதவியாய் இருக்கக்கூடும். பலருடைய ஊக்குவிப்புடன் இதை எழுதியதில் நான் எனது வேலைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன். விகடன் குழுமத்துக்கு நன்றி.

வேறு ஒரு நேரம், வேறு ஒரு தொடரின் மூலம் உரையாடலைத் தொடரலாம். 

--- முற்றும் ---
 

அடுத்த கட்டுரைக்கு