Published:Updated:

‘கின்னஸ்’ பக்ரூ

என் குடும்பம் என் இதயம்கு.ஆனந்தராஜ்

பிரீமியம் ஸ்டோரி

‘‘அழகைப் பிரதானமா நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பலர், வாழ்ந்துபார்க்கும்போது அன்பில் ஏமாந்திருப்பாங்க. ஆனா, ‘இவரைவிட ஒரு நல்ல கணவர் கிடைச்சிருக்க மாட்டார்’ என்ற என் நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்துட்டே வருது’’ எனும் காயத்ரி மோகன், தன் கணவர் ‘கின்னஸ்’ பக்ரூவை நேசத்துடன் பார்க்கிறார். “இவங்க என் வாழ்க்கைத்துணையா அமைந்ததாலதான், எனக்கு அடுத்தடுத்து புகழ் உயரங்கள் கிடைச்சது” என்கிறார் பக்ரூ. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசும் தங்கள் பெற்றோரைக் கண் இமைக்காமல் பார்க்கிறாள் மகள் தீப்த கீர்த்தி. கேரளாவில் ‘குள்ளமான நடிகர்’ என்கிற பிரபல அடையாளத்துடன் கலக்கிவரும் பக்ரூவின் வீடு, ஆனந்தம் விளையாடும் கூடாக இருக்கிறது.

‘கின்னஸ்’ பக்ரூ

“கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்து வளர்ந்த எனக்குப் பெற்றோர் வெச்ச பெயர் அஜய் குமார். ஸ்கூல், காலேஜ் படிச்சதெல்லாம் கோட்டயம். அம்மா டெலிபோன் துறையிலும், அப்பா டிரைவராகவும் வேலை செய்துட்டிருந்தாங்க. மிடில் கிளாஸ் குடும்பம். எனக்கு விவரம் தெரிஞ்சப்போ, வயசுக்கேற்ற வளர்ச்சி எனக்கில்லை என்பது புரிஞ்சது. பெற்றோரும் ரொம்பவே கலங்கிப்போயிருந்தாங்க. ஆனா, என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் என்னையும் அவங்க வயசுப் பையனாவே நினைச்சு என்கூட விளையாடிட்டே இருப்பாங்க. அவங்கதான் அப்போ என் சந்தோஷத்துக்கான காரணமாகவும் இருந்தாங்க.

ஸ்கூல் படிக்கிறபோ ‘குள்ளப் பையன்’னு சிலர் என்னைக் கிண்டல் செய்வாங்க. ஒருகட்டத்துல என்னைக் கிண்டல் பண்ண பலரும் தயங்குற அளவுக்கு, என் ஃப்ரெண்ட்ஸ் எனக்குப் பாதுகாப்பு அரணா இருந்து கவனிச்சுக்கிட்டாங்க.

சின்ன வயசுலயே எனக்கு டான்ஸ், காமெடினு ஆர்வம் அதிகம். என் குறையையே நான் என் ப்ளஸ்ஸாக மாற்றினேன். குள்ளமா இருக்கிற என் உருவம் எல்லோரையும் சட்டுனு திரும்பிப் பார்க்கவைக்கும் இல்லையா... அதனால, அந்த உருவத்தோட நான் எதைச் செஞ்சாலும் இயல்புக்கும் அதிகமாவே கவனம் பெற்றது. நடனம், நகைச்சுவைன்னு கலக்கினேன்’’ என்பவர், தான் சினிமாவில் நுழைந்த கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்...

“கேரளாவின் பல பகுதிகளிலும் மேடை நிகழ்ச்சிகள் மூலமாக என் திறமைகளை வெளிப்படுத்தினேன். குறுகிய காலத்திலேயே எனக்குப் புகழ் கிடைச்சது.

1985-ல் என் 10 வயசுல ‘லூஸ் லூஸ் அரப்பிரி லூஸ்’ என்ற மலையாளப் படத்துல நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. சின்ன ரோல்தான். ஆனாலும், அந்தப் படத்துக்காக மொட்டையெல்லாம் போட்டு அர்ப்பணிப்போட நடிச்சிருந்தேன். படம் ரிலீஸான டைம், மொத்தக் குடும்பத்தையும் கூட்டிட்டு தியேட்டருக்குப் போனேன். என் சீன்கள் எப்போ வரும்னு எல்லோரும் உன்னிப்பா ஸ்கிரீனையே கவனிச்சுகிட்டு இருந்தோம். படமே முடிஞ்சிருச்சு... நான் நடிச்ச சீன்ஸ் எதுவுமே வரலை. எல்லாம் எடிட் பண்ணிட்டாங்கனு அப்புறம்தான் தெரிஞ்சுது. சில நாள்கள் ரொம்ப உடைஞ்சுபோயிருந்தேன்.

கொஞ்சகாலம் கழிச்சு, ‘அம்பிலி அம்மாவன்’கிற மலையாளப் படத்துல வாய்ப்பு கிடைச்சது. அதில் ஹீரோவா பாகன் கேரக்டர்ல நடிச்ச பிரபல மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் சாருக்கு மகனா, நான் யானைகூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம். அதில் என் கேரக்டர் பெயரான ‘உண்ட பக்ரூ’ என்பது என் பெயராவே மாறிப்போச்சு. தொடர்ந்து நிறைய திரைப்படங்கள்ல நடிச்சுட்டும், ஸ்டேஜ் புரோகிராம்கள் செய்துட்டும் இருந்தேன்’’ என்பவர் படிப்பிலும் கில்லி என்பதால், எம்.ஏ பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

‘கின்னஸ்’ பக்ரூ

‘`கவர்ன்மென்ட் வேலைக்கு நான் போகணும்னு அம்மா ஆசைப்பட்டாங்க. எனக்கு சினிமாவில்தான் ஆர்வமிருந்தது. சினிமால என்னால சிறப்பா வரமுடியும்கிற நம்பிக்கையைப் பெற்றோருக்குக் கொடுக்கும்விதமா எனக்கு சில வாய்ப்புகள் அமைஞ்சது.  அந்த சூழல்ல காயத்ரி என் வாழ்க்கைத் துணையாக வந்தது, என் வாழ்வின் அழகான அத்தியாயம்” என்கிற பக்ரூவைத் தொடர்கிறார் காயத்ரி மோகன்...

“நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கோர்ஸ் முடிச்சுட்டு வொர்க் பண்ணிட்டு இருந்த நேரம். உறவினர் மூலமாகத்தான், இவரைப் பற்றின தகவல் கிடைச்சது. இவர் வீட்டுல எல்லோருக்கும் என்னைப் பிடிச்சுப்போனாலும், ‘அவங்க அழகா இருக்காங்க, படிச்சிருக்காங்க, இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை’னு இவர் சொன்னாராம். ஆனா,  இவர் உருவத்தை நான் குறையாவே நினைக்கலை. அவரைப் பத்தி விசாரிச்சப்போ, ‘ரொம்ப அன்பானவர், எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துறவர்’னு தெரிஞ்சது. காலத்துக்கும் என்னையும் சந்தோஷமா வெச்சிக்குவார்னு நம்பிக்கை வெச்சுக் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டேன்.

இவருக்கு என் முடிவு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அதை உறுதி செய்துக்க நினைச்சார். என்னை ஒருநாள் நேரில் சந்திச்சார். ‘அழகெல்லாம் சில வருஷத்துக்கு ஈர்ப்பைக் கொடுக்கும். மனசு மட்டும்தான் வாழ்க்கையை முழுமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும். உங்களை நான் எப்பவும் குறைபாடுடையவர்னு நினைக்க மாட்டேன். அந்த எண்ணத்தோடு நீங்களும் இருக்கக்கூடாது’னு சொன்னேன். அவர் நெகிழ்ந்தார். 2006-ல் எங்களுக்குக் கல்யாணமாகி, இப்பவும் புதுமண தம்பதி மாதிரிதான் வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கோம்” எனும் காயத்ரி, தன் கணவரைச் சோகத்திலிருந்து மீட்ட அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார்.

“கல்யாணத்துக்குப் பிறகு நாங்க ஜோடியா நடந்துபோனா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசுவாங்க. அப்படிப் பேசுறவங்க, எங்க வாழ்க்கையில எந்த வளர்ச்சிக்கும் உறுதுணையா இருக்கப் போறதில்லைங்கிறதை நாங்க தெளிவா உணர்ந்திருந்தோம். என் தாய்மைக் காலத்தில் அவர் கொடுத்த அன்பும் அரவணைப்பும் நெகிழ்ச்சியானது. ஆனா, அந்தக் குழந்தை பிறந்த 15-ம் நாளே இறந்துபோயிடுச்சு. ரொம்ப உடைஞ்சிட்டோம். அவர் அழுதுட்டே இருந்தார். ‘என் குழந்தை என்னைவிட உயரமா வளரும்ல’னு கேட்டுட்டே இருந்த அவர், அந்த இழப்பில் இருந்து தேற பல மாசங்கள் ஆச்சு. ‘அடுத்த குழந்தையைக் கொடுத்துக் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்’னு சொல்லி அவரை சோகத்தில் இருந்து விடுபடச் செய்தேன்” என்ற தன் மனைவியின் கரம்பற்றிய பரூக்,

‘கின்னஸ்’ பக்ரூ

“காயத்ரி சொன்னதுபோலவே 2009-ல் எங்க பொண்ணு தீப்த கீர்த்தி பிறந்தா. ஏழு வயசு வரை என்னை அண்ணன்னுதான் நினைச்சுகிட்டிருந்தா!’’ எனும்போது, பக்ரூ கண்களில் சிறிய புன்னகை. ``என் பொண்ணுதான் என் உலகம். பாடம் சொல்லிக்கொடுக்கிறது, விளையாடுறது, கதை சொல்றது, காமெடி பண்றது, சமையல் பண்றதுன்னு நாங்க இணை பிரியாத ஃப்ரெண்ட்ஸ். ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பல்லாம் என்னால சைக்கிள், பைக் ஓட்ட முடியலையேங்கிற கவலையை எனக்கு டிரைவரா இருந்து என் ஃப்ரெண்ட்ஸ்தான் நிவர்த்தி செய்வாங்க. இப்போ மூன்றாவது படிக்கிற என் பொண்ணுதான், என் சைக்கிள் டிரைவர்’’ எனச் சிரிப்பவர், மகளின் தலையை வருடியபடியே, தன் சாதனை அனுபவங்களைக் கூறுகிறார்.

“திருமணத்துக்குப் பிறகு, 2007-ம் வருஷம் ‘அற்புதத்தீவு’ படத்துல ஹீரோவா நடிச்சேன். அதுக்கு கேரள அரசு விருது கிடைச்சுது. குள்ளமான நடிகர் ஹீரோவா நடிச்ச முறையில் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடிச்சேன். அதுவரை ‘உண்ட பக்ரூ’வா இருந்த பெயரை, அதன்பிறகு ‘கின்னஸ் பக்ரூ’னு மாத்திக்கிட்டேன். ‘குட்டியும் கொல்லும்’கிற மலையாளப் படத்தை 2013-ல் டைரக்ட் செய்தேன். அந்தப் படத்துக்காக உலகின் குள்ளமான இயக்குநர்னு லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடிச்சேன். தமிழ்ல ‘டிஷ்யூம்’ படத்துல ‘அமிதாப்’ என்ற கேரக்டர்ல நடிச்சேன். அதுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைச்சுது. மேலும், தமிழ்ல ‘காவலன்’, ‘ஏழாம் அறிவு’ உள்ளிட்ட ஐந்து படங்கள்ல இதுவரை நடிச்சிருக்கேன்’’ என்று சொல்லும் பக்ரூவின் குரலில் தெறிக்கிறது தன்னம்பிக்கை.

“இதுவரை பல நாடுகளிலும் எட்டாயிரத்துக்கும் அதிகமான மேடை நிகழ்ச்சிகள் செய்திருக்கார். இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அதுல நானும் ஒருத்தி” எனச் சிரிப்புடன் தொடர்கிறார் காயத்ரி. “அவர் நிகழ்ச்சிகள்ல காமெடி ஸ்கிட், டான்ஸ், சிங்கிங், ஆக்டிங்னு பல வெரைட்டியான நிகழ்வுகள் இருக்கும். இப்படி பிஸியா இயங்கிட்டு இருந்தவர், போன வருஷம் ஓர் ஆக்ஸிடென்ட்டால கலங்கிட்டார். அதிலிருந்து அவரை மீண்டுவரச் செய்து, இப்போ மறுபடியும் பிஸியா பார்க்கிறதுல எனக்குச் சந்தோஷம். எனக்கு ஃபேஷன்ல ஆர்வம். அதனால எனக்காக வீட்டிலேயே ஒரு பொட்டீக் ஆரம்பிச்சுக்கொடுத்து ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி அழகுபார்க்கிறார். இப்படித் தன்னைச் சுத்தியிருக்கிறவங்க மகிழ்ச்சியா இருக்கிறதுதான் அவரோட மகிழ்ச்சினு நினைக்கிறவர். அவரோட உயரம் ரெண்டரை அடியா இருக்கலாம். ஆனா, மனசால அவர் கோபுரம்!’’

- காயத்ரியின் முகத்தில் பாதி வெட்கமும் மீதி மகிழ்வுமாகப் பரவுகிறது புன்னகை! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு