Published:Updated:

டார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்
டார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்

அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி

பிரீமியம் ஸ்டோரி

வ்வோர் ஆணின் வாழ்க்கையிலும் முதலும் முடிவுமானவள் பெண். அவளின்றி அவனுலகம் தொடங்குவதுமில்லை, முழுமையடைவதுமில்லை. பெண்ணின்றி அமையாது உலகு என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்வதில்தான் இருக்கிறது ஆண்மையின் அழகு. அப்படியோர் அழகன் இயக்குநர் கே.பாக்யராஜ்.

“ஒரே ஒரு பெண்ணைப் பத்திதான் பேசணுமா? ரொம்ப கஷ்டமாச்சே...’’ என்றவர், நீண்ட யோசனைக்குப் பிறகு இருவரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஒருவர் நிழல் நாயகி, இன்னொருவர் நிஜ நாயகி.

``அது ஒரு கிராமம். வேலை வெட்டியில்லாமல் எப்போதும் ஏதேனும் வம்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிற பெரியவங்க ரெண்டு பேர் கிராமத்தின் மரத்தடிகளில் பொழுதைக் கழிப்பாங்க. ‘என்னய்யா ஊர் ரொம்ப மோசமா போச்சு... ஒரு பஞ்சாயத்துமே வர மாட்டேங்குது’னு புலம்பிக்கிட்டிருப்பாங்க. அவங்க அப்படிப் புலம்பும்போது தினமும் அழகான பெண் ஒருத்தி அந்த வழியே போவாள். தலைநிறைய பூவும் ஆடம்பரமான சேலையுமா அவளின் அழகு அவங்களை வாய்பிளக்க வைக்கும். ‘எப்படிடா இவ புருஷனுக்கு துபாய்ல வேலை பார்க்க மனசு வருது? எனக்கெல்லாம் இவ்வளவு அழகான பொண்டாட்டி இருந்தா, வாரத்துல ஒருநாள், ரெண்டுநாள் லீவு போட்டுட்டு அவ பக்கத்துலயே இருப்பேன். இவ புருஷனால எப்படி அங்க போய் இருக்க முடியுதோ... அப்படி என்ன சம்பாத்தியம்னு தெரியலை’னு பேசுவாங்க. ஒருநாள் வேறோர் ஊர்க்காரர் அங்கே வந்தாரு. அந்த ரெண்டு பேர்கிட்டயும் ஏதோ முகவரி விசாரிக்கிறவர், அந்தப் பெண் வர்றதைப் பார்த்துட்டு அதிர்ச்சியாகி நிற்கிறார். ‘என்னங்க இப்படி டிரஸ் பண்ணிட்டுப் போகுது அந்தம்மா’னு கேட்கிறார்.

டார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்

‘அவ புருஷன் துபாய்ல சம்பாதிச்சு அனுப்பறான். அவ டிரஸ் பண்ணிக்கிறா. உனக்கென்னய்யா’னு கேட்கறாங்க வம்பு பார்ட்டிகள்.

‘இல்லீங்க... இந்தப் பொண்ணுக்கு எங்க ஊர்தான். அந்தப் பொண்ணுக்கு புருஷன் இல்லை. கல்யாணமாகி ஆறு மாசம்தான் இருக்கும். ஆனா, ரெண்டாவது மாசமே புருஷன் ஆக்ஸிடென்ட்டுல தவறிட்டாரு. அப்புறம் வெள்ளைப் புடவை கட்டிக்கிட்டு எங்க ஊர்லதான் இருந்துச்சு. திடீர்னு காணாமப் போயிடுச்சு. அந்தப் பொண்ணு இந்த ஊர்ல இப்படியொரு கோலத்துல நடமாடிக்கிட்டிருக்கும்னு எதிர்பார்க்கலை’னு சொல்லிவிட்டுக் கிளம்பிடறார்.

வம்புக்கு அலைகிற முதியவர்களுக்குச் செமத்தியாக ஒரு பஞ்சாயத்து கிடைத்துவிட்ட குஷி. ‘அதெப்படி புருஷன் இல்லாதப்ப அவன் இருக்கிறதா நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு, இப்படியொரு கெட்டப்புல சுத்திக்கிட்டிருக்கு. உடனே பஞ்சாயத்து கூட்டியாகணும்’னு ஆர்வமாகிடறாங்க.

கதையின் ஹீரோ ஓர் இளைஞன். ஊர்க்காரர்கள் மதிக்கிற நபர். அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் பஞ்சாயத்து கூட்டலாம்னு முடிவு செய்றாங்க. ஹீரோவும் அந்தப் பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமானவங்க. டவுனுக்குப் போய் வரும்போது புத்தகங்கள் வாங்கிட்டு வந்து அவளுக்குப் படிக்கத் தருவான். படிச்சுட்டு அவளும் திருப்பித் தருவாள். ஹீரோ காதுக்குத் தகவல் போச்சு. ‘நம்ம கிராமத்துக்குனு ஒரு பண்பாடு இருக்கு. அதை அந்தப் பொண்ணு அசிங்கப்படுத்திருச்சு. அதனால இதைச் சும்மாவிடக் கூடாது’னு சொல்றாங்க பெரியவங்க.

‘அவசரப்படாதீங்க... எதுக்கும் நான் விசாரிக்கிறேன். அப்புறம் பேசுவோம்’னு சொல்லிட்டுப் போறான் ஹீரோ.

அந்தப் பெண் வேலை பார்க்கிற இடத்துக்குத் தேடிப்போறான். ‘ஃப்ரீயா இருந்தா டீ சாப்பிடுவோமா’னு கூப்பிடறான். ‘உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்’னு தயங்கி நிற்கிற அவனிடம், ‘நான் கணவனை இழந்தவள்னு தெரிஞ்சு போச்சா?’னு கேட்கறா அந்தப் பெண்.

‘நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். கல்யாணமான உடனேயே புருஷன் தவறிட்டாரு. அதுவரை என்னை அக்காவா, தங்கையா, மகளா பார்த்த ஆம்பிளைங்க, நான் புருஷன் இல்லாதவள்னு தெரிஞ்சதும் என்னை வேற மாதிரிப் பார்க்க ஆரம்பிச்சாங்க. எனக்கு அவங்க மேல கோபமில்லை. என் வயசும் நிலைமையும் அவங்களுக்கு சபலத்தை ஏற்படுத்திடக்கூடாதுனுதான் அந்த ஊரைவிட்டே வந்தேன். இந்த ஊருக்கு வரும்போதே ஒரு விஷயத்தை முடிவு பண்ணினேன். புருஷன் செத்துட்டான் அல்லது கூட இல்லைன்னா ஆம்பிளைங்க அவளைப் பார்க்கிற விதமே வேற... ஆனா, அதுவே புருஷன் எங்கேயோ இருக்கான்னு தெரிஞ்சா கொஞ்சம் விலகியே இருப்பாங்க. அதுக்காகத்தான் இந்த ஊருக்கு வரும்போதே என்னை அலங்கரிச்சுக்கவும் அழகா காட்டிக்கவும் ஆரம்பிச்சேன்’னு தன் கதையைச் சொல்லி முடிக்கிறா.

‘அடுத்தவங்க சபலப்படக்கூடாதுங்கிற உங்க நல்ல எண்ணம் சரிதான். ஆனா, சின்ன வயசுதானே... நீங்க ஏன் இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக்கூடாது?’னு கேட்கிற ஹீரோகிட்ட, தனக்கு அப்படியோர் எண்ணமே இல்லைன்னு சொல்லிட்டுப் போயிடறாள் அவள்.

டார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்

அடுத்த நாள் அவளைப் பார்க்கிற பஞ்சாயத்து ஆசாமிகளுக்கும் ஹீரோவுக்கும் அதிர்ச்சி. வழக்கமான அலங்காரங்கள் இல்லாம, பூ, பொட்டெல்லாம் வைக்காமல் வருகிறாள். ‘வேஷம்தான் கலைஞ்சிருச்சே... இன்னும் எதுக்கு அந்த அலங்காரம்’னு சொல்றதா முடியும் அவளுடைய கதை.
இது நான் என் படத்துக்காக உருவாக்கி வெச்சிருக்கிற கேரக்டர். கணவனை இழக்கிற பெண் வேறொருவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னொரு வாழ்க்கைக்குத் தயாராகிறது மாதிரியான கேரக்டர்களை நிறைய பார்த்திருக்கிறோம். இந்த கேரக்டர் தமிழ் சினிமாவில் புதுசு. இப்படிச் சிந்திக்கிற கேரக்டர் இருந்தா எப்படியிருக்கும்னு யோசிச்சேன். உருவாக்கினேன். அந்த வகையில இந்தப் பெண் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவள். கதைக்கான அடுத்தகட்ட விவாதத்துல உட்காரும் போதுதான் அதற்குப் பொருத்தமான நடிகையை முடிவு செய்யணும்...’’ - விவரிப்பிலேயே முழுநீளப் படம் பார்த்த உணர்வைத் தருகிற இயக்குநர் பாக்யராஜ், அடுத்து தன் வாழ்க்கையில் வெற்றிகளுக்குப் பின்னால் நிற்கும் பெண் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

‘` `தாய்க்குப் பின் தாரம்’னு சொல் வாங்க. என்னைப் பொறுத்தவரை தாய்க்குப் பின் எல்லாமாகவும் இருக் கிறவர் என் மனைவி பூர்ணிமா...’’ - நிழல் நாயகியைப் பற்றிப் பேசியபோது கற்பனைகளில் விரிந்த இயக்குநரின் முகம், நிஜ நாயகியைப் பற்றி ஆரம்பிக்கும்போது நினைவுகளால் நெகிழ்கிறது.

‘`பூர்ணிமா என் மேல வெச்சிருக்கிற அன்புக்கும் காதலுக்கும் நான் திரும்ப என்ன செய்யப்போறேன் என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. கல்யாணமான நாள்லேருந்து இன்னிக்கு வரையிலும் என்னை வழி நடத்தறது பூர்ணிமாதான். என் தேவைகளை என்னைவிடவும் சரியா புரிஞ்சு வெச்சிருப்பாங்க. எங்களுக்குக் கல்யாணமானபோது பூர்ணிமா பிஸியான ஹீரோயின். கல்யாணம் தன் கரியருக்கு முற்றுப்புள்ளி வெச்சுடுமோனு யோசிக்கலை. ஹீரோயின் கிரீடத்தைத் தூக்கி வெச்சிட்டு, தன்னை முழுமையான குடும்பத்தலைவியா மாத்திக்கிட்டவங்க. பலநாள் வெளியூர் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வருவேன். ஆனா, வீட்டுல எனக்காகக் காத்திட்டிருக்கிற மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது வாங்கிட்டு வரணும்னு தோணினதில்லை. எனக்காகக் குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு கார்ல வெயிட் பண்ணிட்டிருப்பாங்க பூர்ணிமா. காரின் பின் ஸீட்டுல எனக்கும் குழந்தைங்களுக்கும் தெரியாம ரெண்டு கிஃப்ட்டை மறைச்சு வெச்சிருப்பாங்க. ‘எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க’னு பிள்ளைங்க கேட்கறதுக்கு முன்னாடியே அதை நான் வாங்கிட்டு வந்ததுபோல சொல்லிக் கொடுப்பாங்க. உள்ளே என்ன இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. பிள்ளைங்க கேட்டா, ‘அது சஸ்பென்ஸ்... நீங்களே பிரிச்சுப் பாருங்க’னு சமாளிச்ச நாள்கள் எத்தனையோ.

கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க பிறந்த பிறகுதான் அவங்களை ஹனிமூனுக்கே கூட்டிட்டுப் போனேன். தனக்காக நேரம் ஒதுக் கலைங்கிறதை ஒருநாளும் குறையா சொல்லிக் குத்திக்காட்டினதோ, புலம்பினதோ இல்லை. எந்த விஷயத்துக்கும் என்கிட்ட சண்டை போட மாட்டாங்க. சட்டுனு அழுதுடுவாங்க. அதை என்னால தாங்க முடியாது. பெயர், புகழ், பணம், அந்தஸ்து, வசதியான வாழ்க்கை... எதுக்கும் ஆசைப்படாதவங்க பூர்ணிமா. மாசச் சம்பளம், ஆறு மணிக்கு வீட்டுக்கு வரும் கணவன், நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்குப் போதுமான வசதிகள், ஸ்கூட்டர் பயணம், சினிமா பார்க்கிறதுனு அவங்களுடைய ஆசைகள் வித்தியாசமா இருக்கும். ஆனா, என்ன செய்ய? நான் டைரக்டர் பாக்யராஜா இருக்கிறதால அவங்களுடைய அந்த ஆசைகளை நிறைவேத்த முடியலை. பூர்ணிமாவின் ஆசைகளை மட்டுமல்ல, அவங்களுக்கான நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்தவும் எனக்கு இன்னொரு பிறவி வேணும். அதுலயாவது அவங்க ஆசைப்படற அந்த வாழ்க்கையை சாத்தியமாக்கணும்...’’ - மனைவிக்கு மரியாதை சேர்க்கின்றன இயக்குநரின் வார்த்தைகள்.

டார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்

நானும் அவளும் இன்ஸ்பிரேஷனல்... இன்ஃபர்மேஷனல்!

‘`பொதுவாகவே பெண்கள் சூழ் உலகென்பது ஒவ்வோர் ஆணுக்கும் வரம். சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது மனித வாழ்க்கைக்கான தத்துவம்தானே... ஆணில் சரிபாதியானவளாயிற்றே பெண். பெண் இல்லாத உலகம் வெறிச்சோடிப் போகும். வாழத் தகுதியற்றதாக மாறும். பெண் அப்படிப்பட்ட மாபெரும் சக்தி. அப்படிப்பட்ட பெண்மையைப் போற்றுவதில் அவள் விகடன் பத்திரிகைக்கு மிக முக்கிய பங்குண்டு.

பெண்களைப் பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஆனாலும், எழுதும் ஒவ்வோர் எழுத்தும் பெண்மையைப் போற்றும் வகையில் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து நேர்த்தியான விஷயங்களைப் பக்குவத்துடன் அணுகும் பத்திரிகை அவள் விகடன்.

சுருக்கமா சொல்லணும்னா அவள் விகடன் - பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனல்; ஆண்களுக்கு இன்ஃபர்மேஷனல்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு