Published:Updated:

"அவர்தான் எனக்கு மகனா பொறந்திருக்கார்!" - பி.பி.ஶ்ரீநிவாஸ் பற்றி நடிகை சுஜிதா #VikatanExclusive

"அவர்தான் எனக்கு மகனா பொறந்திருக்கார்!" - பி.பி.ஶ்ரீநிவாஸ் பற்றி நடிகை சுஜிதா #VikatanExclusive
"அவர்தான் எனக்கு மகனா பொறந்திருக்கார்!" - பி.பி.ஶ்ரீநிவாஸ் பற்றி நடிகை சுஜிதா #VikatanExclusive

"என் மகனை அவர்கிட்ட காட்டி ஆசிர்வாதம் வாங்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்குள் அவர் இறந்துட்டார். ஶ்ரீநிவாஸ் சார்தான் எனக்கு மகனா பிறப்பார்னு நினைச்சேன். அதன்படியே, மகன் தன்வின் பிறந்தான்."

ந்திய இசை உலகில் கர்னாட இசைக்கலைஞராக, சினிமா பின்னணிப் பாடகராக பல சாதனைகள் புரிந்தவர், பி.பி.ஶ்ரீநிவாஸ். 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்', 'உங்க பொண்ணான கைகள் புண்ணாகலாமா?', 'மயக்கமா? கலக்கமா?', 'காலங்களில் அவள் வசந்தம்' போன்ற ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். மயக்கும் தேன் குரலால் நம்மையெல்லாம் பல காலம் கட்டிப்போட்ட பி.பி.ஶ்ரீநிவாஸின் பிறந்த தினம், இன்று (22.09.18). இவர், தன் மகளுக்கு இணையாக நடிகை சுஜிதாவின் மீது அன்பு செலுத்தினார். அதைப் பற்றி கேட்டாலே முகம் மலர்கிறது, சுஜிதாவுக்கு.

"தெலுங்கில் நான் நடிச்ச முதல் சீரியல், 'கலிசுந்தம் ரா'. அதில் என் தாத்தாவாக புகழ்பெற்ற தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரவர்த்தி சார் நடிச்சிருந்தார். அந்த சீரியல் மிகப்பெரிய ஹிட்டாச்சு. சக்ரவர்த்தி சாரின் நடிப்பைப் பார்க்க, பி.பி.ஶ்ரீநிவாஸ் சார் அந்த சீரியலைத் தொடர்ந்து பார்த்திருக்கார். என் நடிப்பும் அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒருநாள் எதேர்ச்சையாக விமான நிலையத்தில் எஸ்.ஜானகி அம்மாவைச் சந்திச்சேன். 'உன்னை எனக்கு நல்லா தெரியும். பி.பி.ஶ்ரீநிவாஸ் சார் உன்னைப் பத்திதான் எங்கிட்ட நிறைய பேசுவார். உன்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்'னு சொன்னாங்க. அந்த 18 வயசுல, ஜானகி அம்மா பாராட்டினதை என்னால புரிஞ்சுக்க முடியலை. சில நாள் கழிச்சு, ஒரு போன் கால் வந்துச்சு. 'நான் பி.பி.ஶ்ரீநிவாஸ் பேசுறேன். உன்னைச் சந்திக்கணும்'னு சொன்னார். எனக்கு இன்ப அதிர்ச்சி. உடனே உட்லாண்ட் ஹோட்டல்ல அவரைச் சந்திக்கப்போனேன்.

நிறைய புத்தகம், பேப்பர் பண்டல் அடங்கிய பகுதிக்கு நடுவே எளிமையாக உட்கார்ந்திருந்தார். 'கலிசுந்தம் ரா' சீரியலில் நான் நடிச்ச ஒவ்வொரு காட்சியைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். அந்த அளவுக்கு

 ஶ்ரீநிவாஸ் சார் என் நடிப்பை ரசிச்சிருக்கார். எங்க அன்பு தொடர்ந்தது. தன் மகள்போல என் மீது பாசம் காட்டினார். என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தினார். என் கணவர் தனுஷ் நடராஜன், ஶ்ரீநிவாஸ் சாரின் மிகப் பெரிய ரசிகர். சார், அடிக்கடி எங்கள் இருவரையும் நேரில் அழைப்பார். நாங்களும் போவோம். கார்ல இருந்தபடி பெசன்ட் நகர் கடற்கரைக்குப் பக்கத்துல நீண்டநேரம் வலம்வருவோம். அப்போ... அவரின் சினிமா பாடல்களை எங்களுக்காகப் பாடுவார். அந்தப் பாடல்களின் ரெக்கார்டிங் நேரத்தில் நடித்த சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்துப்பார். ஶ்ரீநிவாஸ் சார் பாடும்போது என் கணவர் பதிவு செய்வார். அதை அடிக்கடி கேட்டு மகிழ்கிறோம். அவர் பிரதானமாகச் செல்லும் உட்லாண்ட் ஹோட்டல்ல அவரைச் சந்திப்போம். சினிமா, இசை, சமூகம், உணவு உள்பட பலதரப்பட்ட விஷயங்களைப் பத்தியும் நேரம் போறதே தெரியாம பேசுவோம்.

ஜூலை 12-ம் தேதி என் பிறந்தநாள்; என் கணவருக்கு டிசம்பர் 26-ம் தேதி பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் 12-ம் தேதி எனக்கும், 26-ம் தேதி என் கணவருக்கும் தவறாமல் ஶ்ரீநிவாஸ் சார் வாழ்த்துச் செய்தியை அனுப்புவார். ஒருநாள் எங்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைச்சிருந்தார். போனோம். நாங்க கிளம்பும்போது, 'இதுவரை சினிமா துறையைச் சார்ந்த யாரையும் என் வீட்டுக்கு அழைச்சதில்லை. நீங்கதான் முதன் முதலா வர்றீங்க'னு சொன்னார். எனக்கும் என் கணவருக்கும் பெரிய இன்ப அதிர்ச்சி. பெருமையாவும் இருந்துச்சு. பிறகு அவரும் எங்க வீட்டுக்கு ஒருமுறை வந்தார். அவருக்குப் பல மொழிகள் தெரியும். அவருக்கு ரொம்ப பிடிச்ச உருது உள்பட எனக்குத் தெரியாத பல மொழிகள்லயும் என்கிட்ட பேசுவார்; சொல்லிக்கொடுப்பார். அவரின் போட்டோஸ் இடம்பெற்ற காபி கப் ஒன்று அவருக்குப் பரிசாகக் கிடைச்சிருக்கு. அதை எனக்கு கிஃப்ட் பண்ணினார். வெளியூர் போயிட்டு வரும்போதும் எனக்கு ஏதாச்சும் பரிசு வாங்கிட்டு வருவார். எனக்கும் என் கணவருக்கும் நிறைய கவிதைகள் எழுதிக் கொடுப்பார். அவற்றைப் பொக்கிஷங்களா வெச்சிருக்கிறோம். இவற்றையெல்லாம்விட, அவருடன் நாங்க பழகிய தருணங்கள்தான் எங்களுக்குக் கிடைச்ச பெரிய கிஃப்ட். 'அவர் வாங்குவாரா? இல்லையா?'னு பயந்துகிட்டே அவருக்குப் பிடிச்ச கைக்கடிகாரம் ஒன்றை பரிசாகக் கொடுத்தோம். அன்புடன் வாங்கிட்டார். அடுத்த சந்திப்பின்போது அந்தக் கைக்கடிகாரத்தைக் கட்டிட்டு வந்து, எங்களை மகிழ்வித்தார்" என்கிறார்.

தன் மகன் வடிவில், பி.பி.ஶ்ரீநிவாஸ் அவர்களைக் காண்பதாகச் சொல்கிறார், சுஜிதா. " 'நீ மஹாலட்சுமி வேடத்தில் நடிக்கணும். நல்லா இருக்கும்'னு ஒருமுறை சொன்னார். அதேபோல அப்படியான வேடத்திலும் நடிச்சேன். ஒருமுறை அவரின் பிறந்தநாளையொட்டி தி.நகர்ல பாராட்டுவிழா நடந்துச்சு. எங்களையும் அழைச்சிருந்தார். அரங்கத்தில் உட்கார இடமில்லாத அளவுக்குக் கூட்டம். நானும் என் கணவரும் ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தோம். மேடையில் பேசி முடிக்கும்போதும், 'எனக்கு மிகவும் வேண்டியவர் இந்தக் கூட்டத்தில் இருப்பார்னு நினைக்கிறேன். அவர் இருப்பது உறுதியானால் சந்தோஷப்படுவேன்'னு சொல்லி என்னை மேடை முன்பு வரச்சொன்னார். ஆச்சர்யத்துடன் போய், 'நான் வந்திருக்கேன்'னு சொன்னேன்.  உடனே என்னை மேடையின் மீது அழைத்துப் பெருமையாகப் பேசினார்.  'உன் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் 'ஶ்ரீ'னு சேர்த்துக்கொள். நல்லா இருக்கும்'னு சொன்னார். அதன்படி 'ஶ்ரீசுஜித்தா'னு என் பெயரை மாத்திகிட்டேன். 

நான் கர்ப்பமானபோது, ரொம்ப சந்தோஷப்பட்டார். எனக்கு வளைகாப்பு முடிஞ்சு, அப்போ ஏழாவது மாதம் கர்ப்பமா இருந்தேன். அப்போதான் அவர் உடல்நிலை சரியில்லாம காலமானார். சாரின் மகன் எங்களுக்குத் தகவல் சொன்னார். அப்போ நான் வெளிய எங்கேயும் போக முடியாத சூழல்ல இருந்தேன். உடனே என் கணவர் சென்று சாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். என் மகனை அவர்கிட்ட காட்டி ஆசிர்வாதம் வாங்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்குள் அவர் இறந்துட்டார். ஶ்ரீநிவாஸ் சார்தான் எனக்கு மகனா பிறப்பார்னு நினைச்சேன். அதன்படியே, மகன் தன்வின் பிறந்தான். என் மகன் உருவில் நானும் என் கணவரும் அவரைப் பார்க்கிறோம். இப்போவரை அவரின் இழப்பை நினைச்சு வருத்தப்படுறேன். மிகப்பெரிய இசை ஆளுமை அவர். என் மீதும், என் கணவர் மீதும் அளவில்லா அன்பு காட்டியது எங்கள் பாக்கியம். இதை எங்க வாழ்நாள் முழுக்க நினைச்சு சிலாகிப்போம். பையனுக்கு ஐந்து வயசாகுது. ஶ்ரீநிவாஸ் சாரைப் பற்றி பையன்கிட்ட அடிக்கடிச் சொல்லுவோம். நானும் என் கணவரும் அடிக்கடி உட்லாண்ட் ஹோட்டல் போவோம். ஶ்ரீநிவாஸ் சாருடன் அமர்ந்து பேசிய இடத்தில் உட்கார்ந்து பழைய நினைவுகளை நினைச்சுப் பார்ப்போம். இப்படி நிறைய சென்டிமென்ட் விஷயங்கள் இருக்கு. தன் நிஜ பிள்ளைக்கு இணையான அன்பை எங்கள் மீது காட்டினார். எப்போதும் அவர் எங்களை ஆசிர்வதிப்பார். அதுபோதும்" என்று மனம் நிறைந்து பேசுகிறார், சுஜிதா.
 

அடுத்த கட்டுரைக்கு