Published:Updated:

`சிம்டாங்காரன்’, விஜய் ரசிகர்களின் சின்ன ஏக்கம் இதுதான் ரஹ்மான்..!

இரா.வாஞ்சிநாதன்

`சர்கார்' படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியானது. பாடல் எப்படியிருக்கிறது என்ற விமர்சனம் இங்கே.

`சிம்டாங்காரன்’, விஜய் ரசிகர்களின் சின்ன ஏக்கம் இதுதான் ரஹ்மான்..!
`சிம்டாங்காரன்’, விஜய் ரசிகர்களின் சின்ன ஏக்கம் இதுதான் ரஹ்மான்..!

விஜய் - டைரக்டர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக  இந்தாண்டு தீபாவளியன்று வரவிருக்கிறது சர்கார். பொதுவாக விஜய் படம் என்றாலே எல்லாப் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் வைரல் ஹிட் அடிக்கும். அதிலும் சர்கார் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றதுமே விஜய் ரசிகர்களுக்கு இரட்டைக்கொண்டாட்டம் ஆரம்பித்தது. சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் 24 ம் தேதி வெளியாகும் என 19 ம் தேதி அறிவித்ததிலிருந்தே எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்து வந்தது. பாடலின் டைட்டில் `சிம்டாங்காரன்' என்று படக்குழு அறிவித்ததிலிருந்தே, இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென எல்லாரையும் யோசிக்க வைத்து ஹைப் ஏற்றியது. `ஆளப்போறான் தமிழன்’ பாட்டு எழுதிய விவேக் இந்தப் பாடலை எழுதியிருப்பதால் சற்றே கூடுதலாக எதிர்பார்ப்பு இருந்தது.

சிம்டாங்காரன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் வெளியிட, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது `சிம்டாங்காரன்' பாடல். பம்பா பாக்கியா, விபின் அநேஜா, அபர்ணா நாராயணன் ஆகியோர் பாடியிருக்கும் இந்தப் பாடலின் டைட்டிலை வைத்து குத்துப்பாட்டாக இருக்கும் என்று கணிக்க முடிந்தது. மெல்லிசை தாளம் போட்டு ஹை பிட்ச்சில் குத்து எகிறும் என்று நினைத்தால் இங்கே அப்படியே தலைகீழ். எடுத்தவுடன் வாத்தியங்கள் எதுவும் இல்லாமல்,  
                       `பல்டி பக்கர டர்ல வுடணும் பல்த்து;
                       world மொத்தமும் அர்ல வுடணும் பிஸ்து
                       பிசிறு கெளப்பி பெர்ல விடணும் பல்த்து'  
என்று தர லோக்கல் கானாவாக லோ எனர்ஜியில் என்ட்ரீ கொடுக்கிறது சிம்டாங்காரன் பாடல். பிறகு அப்படியே கிட்டாரின் மெல்லிசையும் கானாவும் கைகோத்து விஜய்யின் பழைய கானா பாடல்களுக்கே உரித்தான ரிதமில் பயணிக்கிறது சிம்டாங்காரன். 

இடையிடையே வரும் புல்லாங்குழல், தர லோக்கல் பாடல்வரியுடன் இணைந்து முழு கானாவாக இல்லாமல் செமி கானா குத்துப் பாட்டாக இருப்பதுதான் அல்டிமேட் ரஹ்மான் டச். 

ஏ நெக்குலு pickle-uh மா.. 
ஓ தொட்டண்ணா தொக்கலுமா..
மக்கரு குக்கருமா..
போய் தர்ல ஒக்காரு மா...  

என்ற விவேக்கின் வரிகள் சட்டென `டங்கா மாரி' ரோக்கேஷை நினைவுபடுத்தினாலும்... பின்னே வரும் ஆண்களின் கோரஸும் , புல்லாங்குழலும், ஷேனாயும், கானாவின் ரெகுலர் தாளமும் வித்தியாசமான ஃபீலை கொடுக்கிறது.

`மன்னவா வா நீ வா வா' என்று ஆரம்பிக்கும் பெண் குரல் கானாவிலிருந்து விலகி மெலோடிக்கு அழைத்துச் சென்றாலும் பின்னாடி மெல்லிசை வாத்தியங்களோடு கானா இசை ஒலித்துக்கொண்டே இருப்பது, கானாவிலிருந்து விலக விடாமல் மெலோடி கானாவாக அழகுற இசைந்து செல்கிறது.      

இறுதியில் எலக்டரானிக் நாதஸ்வரத்தோடு, ஆண்களின் மெல்லிசை கோரஸும் , கானா வாய்ஸும் இணைந்து நச்சென முடிகிறது சிம்டாங்காரன்.  கானா லவ்வர்ஸ், விஜய் ரசிகர்கள், ரஹ்மான் ரசிகர்களுக்கு நிச்சயம் இது மெர்சலான விருந்தாக அமையும். ஆனால்,எலக்ட்ரானிக் மியூசிக் யுகத்தில் வளர்ந்த 20's கிட்ஸ்-க்கு இந்தப் பாடல் சீக்கிரம் ஒட்டுவது டவுட்தான். கானா பாடியவர்கள் சிறப்பாகப் பாடியிருந்தாலும் விஜய் அவரின் கிறங்கடிக்கிற கானா குரலில் பாடியிருந்தால் இன்னமும் ஸ்பெஷலாக இருந்திருக்கும் என்பது தளபதி ரசிகர்களின் சின்ன ஏக்கம். அதிரடி நடனத்துக்குப் பெயர் போன விஜய் இந்தப் பாடலுக்கு எப்படி ஆடுவார் என மொத்தத் தமிழகமும் வெயிட்டிங்!