Published:Updated:

``சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க விஷால்..!’’ - `ஜோடிக் கோழி' அட்வைஸ்

``சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க விஷால்..!’’ - `ஜோடிக் கோழி' அட்வைஸ்
``சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க விஷால்..!’’ - `ஜோடிக் கோழி' அட்வைஸ்

`செல்லமே’ படத்தில் தொடங்கிய விஷாலின் நடிப்புப் பயணம், 14 வருடங்கள் 25 படங்கள் என வளர்ந்து நிற்கிறது. இந்த சினிமா பயணத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தேர்தல், இயக்கம் என நடிப்பைத் தாண்டி பல விஷயங்களில் கால்பதித்து, அதில் பல வெற்றிகளையும் கண்டிருக்கிறார் விஷால். விஷாலின் 25 வது படமான `சண்டக்கோழி 2’ பட இசை வெளியீட்டு விழாவில், 25 படங்களாக விஷாலோடு பயணித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஸ்டன்ட் டைரக்டர்ஸ், கோரியோகிராபர்ஸ் மற்றும் நண்பர்கள் எனப் பலர் கலந்துகொண்டு அரங்கை நிரப்பினார்கள்.

விழா அரங்கத்தின் நுழைவு வாயிலில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனத் திருவிழாவைப் போன்றதொரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.

வெள்ளை வேட்டி, சட்டையோடு என்ட்ரி கொடுத்த விஷால், விழாவுக்கு வந்திருந்த அனைத்துச் சிறப்பு விருந்தினர்களையும் கட்டியணைத்து வரவேற்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும், குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நடிகை இனியா, விஷாலின் பட பாடல்களுக்கு நடனமாடினார்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்குப் பூங்கொத்து கொடுப்பது அல்லது பொன்னாடை போர்த்துவது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் விஷால் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, பூங்கொத்து மற்றும் பொன்னாடை வாங்கச் செலவாகும் பணத்தை நான்கு பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவுக்கு அதைப் பிரித்துக் கொடுத்தார்.

முதல் படத்திலிருந்து இப்போது வரை விஷாலோடு பணியாற்றிய நடன இயக்குநர்களை மேடை ஏற்றினார்கள். வர முடியாத சிலர் வீடியோ பதிவுகள் மூலம் விஷாலுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.

நடன இயக்குநர்கள் மேடையில் இருக்கும் போது விஷாலை ஆட வைக்க வேண்டும் என ஸ்கெட்ச் போட்டார் தொகுப்பாளினி பார்வதி. ஆனால், விஷால் உஷாராக, `எனது நடன குரு சூரி வந்தால்தான் ஆடுவேன்’ எனச் சொல்ல, சூரியும் மேடை ஏறி சில ஸ்டெப்களைப் போட்டார்.

`அவன் இவன்’ படத்தில் விஷால் கொடுத்த நவரசம் பற்றி பேசிய சிவசங்கர் மாஸ்டர், அதை சூரியைப் பண்ணச் சொன்னார். உடனே அந்தக் காட்சியின் வீடியோ க்ளிப்பையும் ஒளிப்பரப்பினார்கள். அந்த வீடியோ க்ளிப் முடிந்ததும், கீழே அமர்ந்திருந்த இயக்குநர் சுசீந்திரன், `சூரி ஓடி வந்துரு’ என கமென்ட் அடித்துக் கலகலப்பாக்கினார்.

கோரியோகிராபர்கள் பேசி முடித்ததும் விஷாலோடு பணியாற்றிய ஸ்டன்ட் டைரக்டர்ஸ் மேடை ஏறினார்கள். விஷாலும் சண்டையும் என்கிற ரேஞ்சில் போடப்பட்ட ஒரு வீடியோவில், விஷாலின் படப் பெயர்களுக்குப் பக்கத்தில் 5, 8, 10 எனச் சில எண்கள் இருந்தன. `இதற்கு என்ன அர்த்தம்’ என விஷாலிடம் மனோபாலா கேட்க, `அதெல்லாம் அந்தந்த பட சண்டைக்காட்சிகளால் தனக்குப் போடப்பட்ட தையல்களின் எண்ணிக்கை’ என்றார். `இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு’ என மனோபாலா கேட்க, `நீங்க இப்படிக் கேட்ப்பீங்கனு தெரியும். எனக்குத் தையல் போடுற எங்க ஃபேமிலி டாக்டர் இந்த விழாவுக்கு வந்திருக்கார். அவர்கிட்ட கேட்டுக்கோங்க’ என அந்த டாக்டரையும் மேடையில் ஏற்றிப் பேச வைத்தார்கள்.

"`இரும்புத்திரை’ படத்துக்காக விற்பனையாகும் டிக்கெட்களில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் என அந்தப் பணத்தை விவசாயிகளுக்குக் கொடுப்பேன்’" என விஷால் முன்னரே சொல்லியிருந்தார். "10 லட்சம் டிக்கெட் விற்பனை ஆகியிருப்பதால், 10 லட்ச ரூபாயை விவசாயிகளுக்குக் கொடுக்கிறேன்" என விவசாயிகளை மேடைக்கு அழைத்து அந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுத்தார்கள். 

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் விஷாலுக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துரையை மேடையில் படித்துக்காட்டினார், நாசர்.

விஷாலின் 25 படங்களில் அவரோடு நடித்த சீனியர் நடிகர் - நடிகைகளான லால், அர்ஜூன், பிரபு, விவேக், நாசர், துளசி, ஊர்வசி, நதியா, குஷ்பூ ஆகியோர் மேடை ஏறி, விஷாலோடு நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவரும் பேசி முடித்ததும், அவர்களோடு சேர்ந்து விஷால் நடனமாடினார்.

அதன் பிறகு மேடை ஏறிய ஹிப்ஹாப் ஆதி, `ஆம்பள’ படத்தில் வந்த ராப் போர்ஷனைப் பாடினார். அவர் பாடி முடித்ததும், `இந்த ராப்பை நீ கீர்த்தி சுரேஷை பாட வைக்கணும்’ என விஷால் சொல்ல, கீர்த்தியும் பாட முயற்சி செய்தார். `நாமெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் ராப் பாட முடியும். ஆனால், வரலட்சுமி சாதாரணமாகப் பேசினாலே அது ராப் பாடுற மாதிரிதான் இருக்கும்’ என்று கலாய்த்த விஷால், அதே டோனில் வரலட்சுமியைப் பேசவும் வைத்தார்.

அடுத்து இயக்குநர்களின் சங்கமம். மிஷ்கின், சுசீந்திரன், பாண்டிராஜ், லிங்குசாமி, திரு, பூபதி பாண்டியன், முத்தையா, ராஜசேகர், சபா ஐயப்பன், பார்த்திபன் என இயக்குநர்கள் பலர் வந்திருந்தனர். தங்களுக்கும் விஷாலுக்குமான நட்பை அனைவரும் பகிர்ந்துகொண்டார்கள். அப்போது மிஷ்கினின் கண்ணாடியைக் கழட்டி ஜாலியாகக் குறும்பு செய்து கொண்டிருந்தார் விஷால்.

ஆர்.கே.செல்வமணியும் ஏ.எம்.ரத்னமும் `சண்டக்கோழி 2’ படத்தின் `கம்பத்துப் பொண்ணு’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்தார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் மேடை ஏறி, விஷாலுடனான தங்களது நட்பைப் பகிர்ந்துகொண்டார்கள். பிறகு, முதன்முறையாக விஷாலை வைத்து சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்கும், விஷாலின் நண்பரான ரமணா அந்த நிகழ்ச்சிப் பற்றிப் பேசினார். 

` `சன் நாம் ஒருவர்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி, 26 வாரங்களாக சன் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இந்த 26 வாரங்களில் `இனி கடவுள்தான் வந்து காப்பாற்றணும்’ என்கிற நிலைமையில் இருக்கும் 30 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் உதவி செய்யவிருக்கிறார் விஷால். அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது’ என்ற தகவலையும் ஒரு புதிய ப்ரோமோவையும் வெளியிட்டார் ரமணா.

கன்னட சினிமாவின் டாப் ஹீரோக்களின் ஒருவரான யாஷ், `சண்டக்கோழி 2’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

விஷாலின் என்ட்ரியை குஷ்பூவும், டான்ஸ் மாஸ்டர்களின் சந்திப்பை தொகுப்பாளினி பார்வதியும், ஸ்டன்ட் மாஸ்டர்களின் சந்திப்பை ரோபோ சங்கரும், இயக்குநர்களின் சந்திப்பை இயக்குநர் ராமகிருஷ்ணனும், விவசாயிகள் சந்திப்பை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் தொகுத்து வழங்கினார்கள்.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், நண்பர்கள் என விழாவில் பேசிய பலரும்,`சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க’ என `சண்டக்கோழி’ விஷாலை `ஜோடிக் கோழி’யைத் தேடச் சொல்லி அறிவுரைகள் வழங்கினார்கள்.

'சண்டக்கோழி - 2’ படத்தில் நடித்திருந்த விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பிற நடிகர் - நடிகைகள், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குநர் லிங்குசாமி மற்றும் டெக்னிக்கல் டீம் என எல்லோரும் மேடை ஏற, சிறப்பு விருந்தினர்களான மோகன் லாலும், இயக்குநர் ஷங்கரும் படத்தின் இசைத் தட்டை வெளியிட, விழா இனிதே நிறைவடைந்தது. 

அடுத்த கட்டுரைக்கு