Published:Updated:

"என் குடும்பம் என்னைப் புரிஞ்சுக்கிட்டா, இன்னும் சந்தோஷமா நடிப்பேன்!" - 'ஜருகண்டி' ரெபா மோனிகா ஜான்

சுஜிதா சென்

``பி.எச்.டி பண்ணணும்னு ஆசை; கல்லூரிப் பேராசிரியர் ஆகணும்னு கனவு. மத்தபடி, ஹீரோயின் ஆகணும்னு கனவுலகூட நினைச்சதில்லை!" - ரெபா மோனிகா ஜான்

"என் குடும்பம் என்னைப் புரிஞ்சுக்கிட்டா, இன்னும் சந்தோஷமா நடிப்பேன்!" - 'ஜருகண்டி' ரெபா மோனிகா ஜான்
"என் குடும்பம் என்னைப் புரிஞ்சுக்கிட்டா, இன்னும் சந்தோஷமா நடிப்பேன்!" - 'ஜருகண்டி' ரெபா மோனிகா ஜான்

ரெபா மோனிகா ஜான். தமிழ் சினிமாவை மையம் கொண்டிருக்கும் கேரளப் புயல். நிவின் பாலியுடன் `ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யங்கள்' படத்தின் மூலம் 2016- ம் ஆண்டு அறிமுகமான இவர், தற்போது, ஜெய் நடிக்கும் `ஜருகண்டி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.  

``சினிமா என்ட்ரி..."

``ப்ளஸ் டூ படிக்கிறப்போ, ஸ்கூல் டாப்பர் நான். சின்ன வயசுல நிறைய மேடைகள்ல டான்ஸ், மியூசிக் பண்ணியிருக்கேன். ஆனா, ஒரு தடவைகூட நாடகத்துல நடிச்சதில்லை. எனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம். படிச்சுக்கிட்டிருக்கும்போதே, நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனா, நான் படிச்ச `கிரைஸ்ட் யுனிவர்சிட்டி' ரொம்ப ஸ்ட்ரிக்ட். தினமும் கிளாஸுக்கு சரியா போகலைனா, டிகிரி வாங்கமுடியாது. அதனாலேயே பல சினிமா வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டேன். எம்.எஸ்.சி-யில் வேதியியல் முடிச்சதும், பி.ஹெச்.டி பண்ணணும்னு ஆசை; கல்லூரிப் பேராசிரியர் ஆகணும்னு கனவு. மத்தபடி, ஹீரோயின் ஆகணும்னு கனவுலகூட நினைச்சதில்லை. ஆனா, சினிமாவுக்கு வந்ததும் எல்லாம் மாறிடுச்சு. இப்போ, ஐ லவ் சினிமா!  

காலேஜ் படிக்கும்போது மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்போதான், என் முதல் படத்தின் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் சாரை சந்திச்சேன். `ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யம்'ங்கிற மலையாளப் படத்துல என்னை அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே நிவின் பாலியுடன் சேர்ந்து நடிச்சதுனால, எல்லோருக்கும் ஈஸியா ரீச் ஆயிட்டேன். வினீத் என்னோட நல்ல நண்பர், எனக்கு காட்ஃபாதர்."

``நடிக்க வந்தபிறகு என்னென்ன சவால்களைச் சந்திச்சீங்க?" 

``நான் பிறந்து வளர்ந்தது கேரளா. குடும்பத்துல யாருக்கும் சினிமா பின்புலம் கிடையாது. இதுவரை  நிறைய விளம்பரப் பட ஷூட்டிங்கிற்காக சென்னை வந்திருக்கேன். இங்கே எனக்கு சில நண்பர்கள் இருக்காங்க. ஆரம்ப காலங்கள்ல எல்லா நடிகைகளுக்கும் இருக்கிற கஷ்டங்கள் எனக்கும் இருந்தது. பணத்துக்கு என்ன பண்றது, சென்னையில எங்கே தங்குறது, சினிமா சம்பந்தப்பட்ட சந்தேகங்களை யார்கிட்ட கேட்கிறது... எதுவும் எனக்குத் தெரியாது. இப்போவும் அப்படித்தான் இருக்கேன். ஆனா, முன்னவிட இப்போ கொஞ்சம் பெட்டர்னு சொல்லாம்."

`` `ஜருகண்டி' படத்துல என்ன ஸ்பெஷல்?"

``தமிழ்ல எனக்கு முதல் படம். ஆடிஷன் மூலமாதான் என்னை செலக்ட் பண்ணாங்க. ஜெய்க்கு மிடில் கிளாஸ் பசங்களைப் பிரதிபலிக்கிற கதாபாத்திரம். நான் எப்போவுமே ஜாலியா இருக்கிற பொண்ணா நடிச்சிருக்கேன். திரில்லுக்கு இந்தப் படத்துல பஞ்சம் இருக்காது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில 46 நாள்கள் ஷூட்டிங் நடத்தினோம். ஜெய் எனக்கு நல்ல நண்பர் ஆகிட்டார். அவர்  அமைதியை விரும்புற மனிதர். நல்லாப் பேசிப் பழகுனா மட்டும்தான் அவரை ஃப்ரெண்ட் பிடிக்க முடியும்." 

``ஃபேமிலி?" 

``எங்க அப்பா 4 வருடத்துக்கு முன்னாடி இறந்துட்டார். எனக்கு ஒரு தம்பி, தங்கச்சி இருக்காங்க. ரெண்டுபேருமே காலேஜ்ல படிக்கிறாங்க. என் குடும்பத்துக்கு நான் சினிமாவுல நடிக்கிறது சுத்தமா பிடிக்கல. இந்தத் துறை பாதுகாப்பற்றதுனு அவங்க நினைக்கிறாங்க. அப்படி இல்லைனு சொல்லிப் புரிய வெச்சிருக்கேன். ஆனா, அவங்க முழு மனசோட ஏத்துக்கிட்டாங்களானு தெரியாது. ஷூட்டிங்காக வெளியே சுத்திக்கிட்டு இருக்கிறதுனால, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க முடியல. அவங்க என்னை முழுசாப் புரிஞ்சுக்கிட்டா, நான் இன்னும் சந்தோஷமா நடிப்பேன்."

``பிக் பாஸ் பார்ப்பீங்களா?"

``மலையாளம், இந்தியில ஒளிபரப்பாகிற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கேன். சல்மான் கான் தொகுத்து வழங்குற விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கமல் சார் தொகுத்து வழங்குறது நேர்மையா இருக்கும். உண்மையிலேயே, அதுல கலந்துக்கிட்ட போட்டியாளர்களுக்கு அதிக தைரியம். ஏன்னா, வெளி உலகத் தொடர்பில்லாம இருக்கிறதை என்னால நினைச்சுகூடப் பார்க்கமுடியாது!" 

``அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் பற்றி..."

`` `ஜருகண்டி' ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கும்போது, நானியோட ஒரு தெலுங்குப் படத்துல நடிக்க கமிட் ஆனேன். அந்தப் படத்தோட ஷூட்டிங் அடுத்த மாசத்துல ஸ்டார்ட் ஆகுது. `நானும் ரவுடிதான்' படத்தோட கன்னட ரீமேக்ல நயன்தாரா கேரக்டர்ல நடிக்கிறேன். தமிழ்ல கயல் சந்திரனோட `டாவு' படத்துல நடிக்கிறேன்." 

``யார்கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை?" 

``விஜய் தேவரகொண்டாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனுஷ்கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. அவரோட பல படங்களைப் பார்த்து, தீவிர ரசிகை ஆயிட்டேன்."