Published:Updated:

``சென்னை வெள்ளம் சமயம் கல்யாணம்... இப்போ ஷேமாவுக்கு வயசு ரெண்டு!" `காதல்' சந்தியா

``சென்னை வெள்ளம் சமயம் கல்யாணம்... இப்போ ஷேமாவுக்கு வயசு ரெண்டு!" `காதல்' சந்தியா
``சென்னை வெள்ளம் சமயம் கல்யாணம்... இப்போ ஷேமாவுக்கு வயசு ரெண்டு!" `காதல்' சந்தியா

``அவ பிறந்ததிலிருந்து இப்போ வரை ஒருநாள்கூட நான் குழந்தையைப் பிரியலை. பெரிசா எந்த வெளிநிகழ்ச்சிக்கும் போகாம பொண்ணுகூடவே இருக்கேன். அடிக்கடி முத்த மழையால் என்னை உருக வைக்கிறாள்."

`காதல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், சந்தியா. குறுகிய காலத்திலேயே பல மொழிப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். திடீர் திருமணம்; குழந்தைப்பேறு எனக் குடும்ப வாழ்வில் பிஸியானார். தற்போது தன் மகளுடனான ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ந்து கழிக்கிறார். இன்று (செப்டம்பர் 26) சந்தியாவின் பிறந்த நாள். வாழ்த்துகளைச் சொல்லி, இவரின் தற்போதைய செயல்பாடுகளைப் பற்றிக் கேட்டோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்...

``சினிமா குடும்பமில்லை. சினிமாவில் நடிக்கணும்னு எனக்கு ஆசையும் இருந்ததில்லை. எதேர்ச்சையா கிடைச்ச வாய்ப்பினால், 2004-ம் ஆண்டு `காதல்' படத்துல அறிமுகமானேன். அந்தப் படம்தான் இப்போ வரை எனக்கான அடையாளம். `காதல்' படம் ரிலீஸான நேரத்தில் நிறைய பாராட்டுகள், விருதுகள், அடுத்தடுத்த பட வாய்ப்புகள், புகழ் கிடைச்சுது. அந்த 15 வயசுல சினிமா வெற்றியைப் புரிஞ்சுக்கும் பக்குவமும் எனக்கில்லை. ஆனா, ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை. `காதல்' படத்துக்குப் பிறகு நிறைய படங்கள்ல நடிச்சேன். அவை, `காதல்' படத்துக்கு இணையா இல்லைனு விமர்சனங்கள் வந்துச்சு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? ஒரு படத்தையும் அதில் வரும் என் கேரக்டரையும் மனசுல வெச்சு, என் மற்ற படங்களை ஒப்பிட்டால் எப்படிச் சரியா வரும்? இந்தப் பாகுபாடு, எனக்கு வருத்தத்தைக் கொடுத்துச்சு. ஆனாலும், என் மற்ற பட வாய்ப்புகளில் திருப்தியா நடிச்சேன். அதேநேரம், `காதல்' படம் என் வாழ்க்கையில ரொம்ப ஸ்பெஷலானது என்பதை எப்போதும் மறக்க மாட்டேன். அந்தப் படத்துல நடிக்கிறபோது, பத்தாவது படிச்சுகிட்டு இருந்தேன். அடுத்தடுத்து பல மொழிகள்ல நடிச்சேன். அதனால், படிப்பைத் தொடர முடியலை. அதுக்காக வருத்தமில்லை. சினிமாவில் எனக்குக் கசப்பான, நெகட்டிவான எந்த நிகழ்வும் நடக்கலை. ஓரளவுக்கு நடிச்சேன்; புகழ்பெற்றேன்; சம்பாதிச்சேன். சினிமா கரியர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு" என்பவர் திருமண அத்தியாயத்தைப் பற்றிப் பேசினார்.

``நானும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்ற என் கணவர் வெங்கட் சந்திரசேகரனும் காதலிச்சோம். இரு வீட்டார் சம்மதத்துடன் 2015-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி எங்க கல்யாணம் நடந்தது. என் வாழ்க்கையில மறக்க முடியாத நிகழ்வுகள்ல, எங்க கல்யாணமும் ஒன்று. திட்டமிடப்பட்ட கல்யாண தேதிக்கு சில நாள்கள் முன்புதான் சென்னையில பெருவெள்ளம் ஏற்பட்டுச்சு. அப்போ செல்போன் நெட்வொர்க் சேவையும் தடைபட்டுச்சு. அதனால, எங்க இருவீட்டாரும் பேசிக்க முடியலை; நேரில்கூட சந்திக்க முடியாத நிலை. வெள்ளம் வடிய, இயல்பு நிலை திரும்ப பல நாள்கள் ஆகும்ங்கிற நிலையை உணர்ந்தோம். எனவே, கல்யாண தேதியை மாத்திடலாம்னு நினைச்சோம். அதேநேரம், அவர் எங்களைத் தொடர்புகொள்ள எவ்வளவோ முயன்றார். ஒருவருழியா வடபழனியில் இருந்த என் வீட்டுக்கு வந்தார். திட்டமிட்ட தேதியிலேயே கல்யாணத்தை முடிச்சுடலாம்னு முடிவெடுத்தோம். முக்கியமான உறவினர்கள், நண்பர்களை மட்டும் நேரில் சந்திச்சு சூழ்நிலையை விளக்கினோம். அவங்களை அழைச்சுகிட்டுப் போக ஒரு பஸ் ஏற்பாடு செய்தோம். திட்டமிட்டபடி டிசம்பர் 6-ம் தேதி, கேரளா குருவாயூர் கோயில்ல எங்க கல்யாணம் நடந்துச்சு. அந்த ஒரு வாரம் முழுக்கவே ரொம்ப பரபரப்புல இருந்தோம். அடிக்கடி அந்தத் தருணங்களை நினைத்துச் சிரிப்போம்" என்கிறார்.

தாய்மை அனுபவம் பற்றிப் பேசும்போது, சந்தியாவின் முகம் மலர்கிறது. ``கல்யாணமாகி, அடுத்த ஒரு மாதத்துலயே கர்ப்பமானேன். மகள் ஷேமா பிறந்தாள். `ஷேமமா/நலமா இருக்கணும்' என்பது மகளின் பெயருக்கான அர்த்தம். பொண்ணுக்கு ரெண்டு வயசாகுது. ரொம்ப சமத்து; அமைதியான குணம். அவ பிறந்ததிலிருந்து இப்போ வரை ஒருநாள்கூட நான் குழந்தையைப் பிரியலை. பெரிசா எந்த வெளிநிகழ்ச்சிக்கும் போகாம பொண்ணுகூடவே இருக்கேன். அடிக்கடி முத்த மழையால் என்னை உருக வைக்கிறாள். அது ரொம்ப சுவாரஸ்யமானது. நான் இல்லைனா அவளை அமைதிப்படுத்தவே முடியாது. அதனால முன்பு போல சினிமாவுல கவனம் செலுத்த முடியலை. அதுக்காக நான் சினிமாவை விட்டு விலகிட்டேன்னு அர்த்தமில்லை. கணவரும் அவர் குடும்பத்தினரும் எனக்கு முழு சப்போர்டிவா இருக்காங்க. ஸோ, நான் ரொம்ப லக்கி. எனக்கு சினிமாத் துறை ரொம்ப பிடிக்கும். நடிக்கிறதில் எப்போதும் ஆர்வம் உண்டு. இப்போ பொண்ணு கொஞ்சம் வளர்ந்துட்டா. குழந்தை வளர்ப்பில் அம்மா எனக்கு உதவியா இருக்காங்க. மறுபடியும் நல்ல சினிமா வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நிச்சயம் நடிப்பேன். அதற்கான முயற்சிகள்லயும் கவனம் செலுத்திட்டிருக்கேன்" என்கிறார் சந்தியா, மகள் ஷேமாவை அணைத்தபடி..

அடுத்த கட்டுரைக்கு