``சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்கிறேன்!" - விவாகரத்து கோரும் `ஆட்டோகிராஃப்' கோமகன் | 'autograph' komagan seeks divorce from his wife

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (26/09/2018)

கடைசி தொடர்பு:14:34 (26/09/2018)

``சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்கிறேன்!" - விவாகரத்து கோரும் `ஆட்டோகிராஃப்' கோமகன்

மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி `ஆட்டோகிராஃப்' கோமகன் வழக்கு

``சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்கிறேன்!

`என் கணவரை மீட்டுத் தாருங்கள்!' - கண்ணீர் விடும் `ஆட்டோகிராஃப்' கோமகன் மனைவி' - விகடன் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி வெளியான கட்டுரை இது.

`இயக்குநர் சேரனின் `ஆட்டோகிராஃப்' படத்தில் இடம்பெற்ற `ஒவ்வொரு பூக்களுமே' பாடல் காட்சியில் வரும் பார்வை இழந்த கோமகனைக் காதலித்துக் கைபிடித்த அவரது மனைவி அனிதா, தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் காவல்துறையில் புகார் தர இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். ஒருவேளை தன்னுடன் வந்து வசிக்க கணவர் மறுக்கும் பட்சத்தில், சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார், அனிதா. மேலும், கோமகன் தன்னுடன் வசிக்கவில்லை என்கிற தகவலை முதல்முறையாக மீடியாவுக்குத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கோமகன்

அப்போதே கோமகனிடமும் அனிதாவின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டிருந்தோம். அவர் தன்னுடைய பதிலில், `பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கலாம்னு சொன்னேன். அவங்க சம்மதிக்கலை. சட்டபூர்வ தீர்வுக்கு முயற்சி செய்றாங்கன்னா, அதை எதிர்கொள்ள நானும் தயாராக வேண்டியதுதான்!' என்று சொல்லியிருந்தார்.

கோமகன் - அனிதா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை மாதவரம் பகுதியில் இயங்கி வரும் `தேசியப் பார்வையற்றோர் நலச் சங்க'த்தில் கோமகனை முதல் முதலாக சந்தித்த அனிதா தன்னுடைய வீட்டார் எதிர்ப்பை மீறியே கோமகனைத் திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில வருடங்கள் தம்பதிகளிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. மோனஸ், மோவின் என இரு மகன்கள் பிறந்தனர். அதன் பிறகு இருவரிடையே சிறு சிறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் எழ, அது பெரிதாகி பிரிந்து செல்கிற அளவுக்குப் போய்விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அனிதா தன் மகன்களுடன் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். கோமகன் சென்னை புறநகரான கதிர்வேடு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது கோமகன் அனிதாவிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாட, அனிதாவுக்கு நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. நாளை (செப்டம்பர் 27) சென்னையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோமகன்

அனிதாவிடம் பேசியபோது, `மேற்கொண்டு இந்தப் பிரச்னை தொடர்பாக எதையும் பேச விரும்பலை. நீதிமன்றத்துல ஆஜராகச் சொல்லி தபால் வந்திருக்கில்லையா, அங்கே போய் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதைச் சொல்லிடுறேன்!' என்றார்.

 

தவிர, கோமகன் தற்போது பணிபுரியும் சென்னை ஐ.சி.எஃப் அலுவலகத்துக்கும் இந்தப் பிரச்னை தொடர்பாக கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார், அவரது மனைவி அனிதா. அதில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் தன் கணவர் கோமகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.  

பணிபுரியும் அலுவலகத்தில் பிரச்னையைக் கொண்டு சென்றது போன்ற சில காரணங்களால்தான், மனைவி அனிதாவிடமிருந்து விவாகரத்து பெற முடிவெடுத்தாரா கோமகன். நீதிமன்றத்தில் என்ன சொல்லப்போகிறார் அனிதா?!

வழக்கு விசாரணைக்கு வருகிறபோதுதான் எல்லாம் தெரியும்!

 


டிரெண்டிங் @ விகடன்