Published:Updated:

``என் சிக்ஸ்பேக்கை நான் சட்டைலாம் கிழிச்சுக் காமிச்சுக்கலை!" - அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் பேட்டி

``என் சிக்ஸ்பேக்கை நான் சட்டைலாம் கிழிச்சுக் காமிச்சுக்கலை!" - அருண் விஜய்
``என் சிக்ஸ்பேக்கை நான் சட்டைலாம் கிழிச்சுக் காமிச்சுக்கலை!" - அருண் விஜய்

ணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார், அருண் விஜய். தவிர, நடிகர் பிரபாஸின் `சாஹோ' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் குறித்து, அருண் விஜய்யிடம் பேசினேன். 


`` `செக்கச் சிவந்த வானம்' தியாகு கேரக்டருக்காக என்னென்ன ஹோம்வொர்க்ஸ் பண்ணீங்க?"

``தியாகு கேரக்டர் ரொம்ப வித்தியாசமானது. ரொம்ப எமோஷனலான கேரக்டரும்கூட!. இந்தக் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது பெரிய வரம்னுதான் சொல்லணும். அதை நான் சரியா பண்ணியிருக்கேன்னு நம்புறேன். நான் நல்லா நடிச்சேன்னு சொல்றதைவிட, என்கிட்ட இருந்து நல்ல நடிப்பை மணி சார் வாங்கினார்னுதான் சொல்லணும். இந்த கேரக்டர்ல நடிக்கும்போது, ஒரே ஒரு விஷயத்தைத்தான் மனசுல நினைச்சேன். `இதுவரை நான் நடிச்ச எந்த கேரக்டரில் பிரதிபலிப்பாகவும் இது இருக்கக் கூடாது!'. துபாய்ல வசிக்கிறவங்களோட கிளாஸியான லுக்கை என்னிடம் கொண்டு வந்தேன்." 

``ஃபிட்னஸ்மேல ரொம்ப கவனமா இருக்கீங்களே... தொடர்ந்து எப்படி அதை மெயின்டெயின் பண்றீங்க?" 

``சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும்ங்கிற மைண்ட்செட் எனக்கு இருந்தது. நடிக்க வந்ததுக்குப் பிறகு அது அதிகமாகிடுச்சு. தமிழ் சினிமாவுல முதல் முறையா  சிக்ஸ்பேக் வெச்ச ஹீரோ நான்தான். `ஜனனம்' படத்துக்காக அதைப் பண்ணினேன். ஆனா, எந்த இடத்திலேயும் சட்டையைக் கிழிச்சு, நான் சிக்ஸ்பேக் வெச்சிருக்கேன்னு ஷோ காட்டியதில்லை." 

`` `சாஹோ' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்கள்?" 

``படத்தோட ஷூட்டிங் துபாய்ல நடந்தது. அங்கே ஸ்கை டைவிங் ரொம்பவே ஃபேமஸ். எனக்கும் ஸ்கை டைவிங் பிடிக்கும். இதுவரை அறுபத்து ஏழு முறை ஸ்கை டைவிங் பண்ணியிருக்கேன். இந்தப் படத்துல ஸ்கை டைவிங் சீன் ஒண்ணு இருந்தது. ஆனா, அது எனக்கான சீன் இல்ல, பிரபாஸுக்கானது." 

`` `சாஹோ' படத்துல நீங்கதான் வில்லனா?" 

``இப்போ அதைச் சொல்லமுடியாதே! ஆனா, என் கேரக்டர் ரொம்ப சர்பிரைஸா இருக்கும். பிரபாஸ், ஜாக்கி ஷெரப், நீல் நிதின் முகேஷ் இவங்ககூட நடிச்சது, புது அனுபவமா இருந்தது. `பாகுபலி' படத்தின் சாயல் கொஞ்சமும் இல்லாத, வித்தியாசமான ஒரு படத்தைத் தேர்வு செஞ்சிருக்கார், பிரபாஸ். `சாஹோ' சயின்ஸ் சம்பந்தமான படம்னு ஒரு டாக் இருக்கு. ஆனா, அதுமட்டுமே இல்லைனு படம் பார்க்கும்போது தெரியும். நான் சொல்றேன்... `சாஹோ' இந்தியாவின் மிக முக்கியமான படமா இருக்கும்!"   

``அப்பா..?" 

``ரொம்ப அன்பானவர். சின்ன வயசுல என் பிறந்தநாளுக்கு எல்லா சினிமா பிரபலங்களையும் அழைத்து கொண்டாடுவார். சின்ன வயசுல எனக்கு ஃபிளைட்னா ரொம்பப் பிடிக்கும். அதுக்காக, ஃபிளைட் வடிவத்துலேயே கேக் செஞ்சு வெட்டுன நாளையெல்லாம் என்னால மறக்கவே முடியாது. ரொம்ப பிஸியா நடிச்சுக்கிட்டு இருந்தாலும், குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க மறக்கமாட்டார். இப்போ, என் பையனுக்கு நானும் அப்பா கடைபிடிச்ச வழியையே ஃபாலோ பண்றேன்."  

``உங்க முதல் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளரா கமிட் ஆனார். ஆனா, அந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆனது. இத்தனை வருடங்கள் கழித்து அவருடைய இசையில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?" 

``ரஹ்மான் சார் இசையில நான் நடிக்கணும்ங்கிறது நீண்டநாள் கனவு. என் முதல் படத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சிருக்க வேண்டியது, நடக்கல. இத்தனை வருடங்கள் கழிச்சு அது சாத்தியமாகியிருக்கு. அவரோட இசையில என்னைத் திரையில பார்க்கிறது அவ்வளவு சந்தோஷமா இருக்கு."

``வனிதா விஜயகுமார் சமீபத்துல சொன்ன குற்றசாட்டுகள்...?"

``அவங்களைப் பத்திப் பேச விரும்பல. அவங்க என்னவேணா சொல்வாங்க; எப்படிவேணா பேசுவாங்க. அவங்க கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பல!"