Published:Updated:

``சிங்கமும் புலியும் நடமாடும் காட்டில், மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உலவவிட்ட கதை!" - #5YearsOfOnaayumAattukkuttiyum

மாரியப்பன் பொ

இயக்குநர் மிஷ்கின் இயக்கிய `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் வெளியாகி, இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த குட்டி ரீவைண்டு!

``சிங்கமும் புலியும் நடமாடும் காட்டில், மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உலவவிட்ட கதை!" - #5YearsOfOnaayumAattukkuttiyum
``சிங்கமும் புலியும் நடமாடும் காட்டில், மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உலவவிட்ட கதை!" - #5YearsOfOnaayumAattukkuttiyum

மிஷ்கின் - வாழ்வின் யதார்த்தமும் இருள் சூழ்ந்த பக்கங்களும்தான் இவரின் திரைமொழியாய் இருக்கும். 2006-ம் ஆண்டு முதல் திரைத்துறையில் இருக்கும் மிஷ்கினுக்கு இருட்டு இயக்குநர் என்ற பெயர்தான் திரைத்துறையினர் மத்தியில் இருக்கிறது. திரைப்படத்தைப்  பார்த்தால், 5 நிமிடங்களில் இவர் படம்தான் என்று கண்டுபிடித்துவிடலாம். எப்பொழுதும் குனிந்தே நடக்கும் ஹீரோ, வரிசையாக வந்து அடிவாங்கும் அடியாள்கள், டாப் ஆங்கிள் ஷாட் அல்லது லாங் ஷாட்டிலிருந்து படத்தைத் தொடங்குவது, லோ ஆங்கிள் காட்சிகள்.. என கிளிஷேக்கள் அவர் படத்திலிருக்கலாம். ஆனால், அந்தப் படத்தின் இறுதியை ஏதேனும் சமூக அக்கறையை அல்லது அன்பை அல்லது மனிதத்தை நமக்கு உணர்த்தவே ஒதுக்கியிருப்பார். அது `நந்தலாலா'வைப் போல கவிதையாகவும் இருக்கலாம், `யுத்தம் செய்' போல நெற்றிப் பொட்டில் அறைவதாகவும் இருக்கலாம்.

2013-ம் ஆண்டு செப்டம்பர் மிஷ்கினின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். 2012-ம் ஆண்டு `முகமூடி' தந்த படுதோல்வியிலிருந்து அவர் இன்னும் வெளிவந்திருக்கவில்லை. அடுத்த படத்தின் வேலைகள் மும்முரமாகத் தொடங்குகின்றன. `வழக்கு எண் 18/9' படத்தில் நடித்த ஸ்ரீ மட்டும் தெரிந்தவராய் இருக்கிறார். மற்ற எல்லோரும் புதுமுகங்கள். தானும் ஒரு பாத்திரமாய் இருப்பதாகச் சொல்கிறார், மிஷ்கின். ஒரு வழியாகப் படம் தயாராகிவிட்டது. ஆனால், வெளியிட தியேட்டர்கள் இல்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு திரையரங்குகள் கிடைக்க, இரவோடு இரவாக போஸ்டர்களை ஒட்டினார். படமும் வெளியானது. வழக்கம்போல் ரசிகர்கள் மத்தியில் வெகுவான பாராட்டைப் பெறவில்லை. ஒரு வாரம்கூட தியேட்டரில் ஓடவில்லை. ஆனால், சினிமா விமர்சகர்கள் மத்தியில் அசாத்திய பாராட்டுகளை அள்ளியது. கிட்டத்தட்ட அத்தனை திரைப்பட விழாக்களிலும் வெளியிடப்பட்டது. அந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, மிஷ்கினின் `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. இப்படம் வெளியாகி, இன்றோடு 5 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

படத்தின் கதை சிம்பிள்தான். கரடி ஓநாய் புலிகள் அடங்கிய காட்டில் நடக்கும் ஒரு சண்டையில், சிதையும் குடும்பத்தைக் கரைசேர்க்கப் போராடும் ஓநாயோடு, ஓர் அப்பாவி ஆட்டுக்குட்டியும் சேர்ந்தால்... என்ன ஆகும். படத்தின் ஒன்லைன் இதுதான். சுலபமான கதையாக இருந்தாலும், அதை நேர்த்தியான திரைக்கதை ஆக்கியதில்தான் மிஷ்கினின் உழைப்பும், இப்படத்தின் வெற்றியும் அடங்கியிருக்கிறது. வசனங்கள் மிகக்குறைவு. ஆனால், காட்சிமொழி மூலமாக நம்மையும் அந்தக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார், மிஷ்கின். படத்தில் முக்கியமாக எந்தவொரு காட்சியும் வீணாக இல்லை. அந்த டாப் ஆங்கிள் ஓப்பனிங்கில் தொடங்கி, இறுதியில் ஸ்ரீ அந்தக் குழந்தையைத் தூக்கிச் செல்லும் காட்சி வரை... கண் இமைக்காமல் பார்க்கும் அளவுக்கு அப்படியொரு நேர்த்தி. முந்தைய மிஷ்கின் படங்களைப் போல் இதில் மஞ்சள் சேலை டான்ஸ் இல்லாதது உண்மையான ரசிகர்களுக்கு ஒரு குறையாகத் தெரிந்திருக்கவில்லை. படத்தின் ஒவ்வொரு குரூரக் காட்சியிலும் விதைக்கப்படும் ஆழமான மனிதம்தான் படத்தின் மொத்த நிறை.

கரடி, ஓநாய், புலி, ஆட்டுக்குட்டி... எனச் செல்லும் கதையோட்டத்துக்கு மூலமாக இருக்கும் ஃபிளாஷ்பேக் காட்சி ரத்தம் தெறிக்கும் அளவுக்கு இருக்குமென எல்லோரும் நினைக்க, மிஷ்கின் அங்கு வைத்தது இரண்டு மெழுகுவத்திகளை. ஒரே ஷாட்டில் மொத்த ஃபிளாஷ்பேக் கதையையும் தன் அசாதாரண நடிப்பால் எளிய வார்த்தைகளைக் கொண்டு வலியாகக் கடத்தி அசத்தினார், இயக்குநர் மிஷ்கின். இயக்குநர் மிஷ்கினைவிட எழுத்தாளர் மிஷ்கினும், நடிகர் மிஷ்கினும்தான் இப்படத்தில் அதிக கவனம் ஈர்த்தனர். தான் எழுதியதை அப்படியே வெளிக்கொண்டு வந்ததில் நடிகர் மிஷ்கின், ஓநாயாகவே வாழ்ந்திருந்தார். 

படத்தின் பாத்திரத் தேர்வு அத்தனை கச்சிதம். ஸ்ரீ, ஷாஜி, கண் தெரியாத கணவன் மனைவி, அந்தப் பெண் குழந்தை, அவர்களுக்கு உதவி செய்யும் திருநங்கை... என எல்லா பாத்திரப் படைப்பும் சொல்லமுடியா துயரை தன் அகத்தே வைத்துக்கொண்டு வாழ்வதாகவே சித்திரிக்கப்பட்டிருந்தது.

தான் காப்பாற்றியவரையே கொல்ல நிர்ப்பந்திக்கப்படும்போது, ஸ்ரீ தவிக்கும் காட்சி, ரயிலிலிருந்து ஸ்ரீயும் மிஷ்கினும் தப்பிப்பது, `ஐயா' என்ற ஒரே சொல்லை 3 காவலர்கள் வேறு வேறு தொனியில் சொல்லும் காட்சி, கொல்லப்பட்ட திருநங்கைக்காக ஸ்ரீ உடைந்து அழுவது, மிஷ்கின் ஓநாய் கதையைச் சொல்வது, இறுதி சண்டைக் காட்சி... படத்தில் இடம்பெற்ற ஒவ்வொன்றும் உண்மைக்கு மிக அருகில் இருக்கும் காட்சிகள். படத்தின் இன்னொரு முக்கியமான பலம் இசை. படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் பின்னணி இசையில் இளையராஜா ஓர் இசை ராஜாங்கமே நடத்தியிருந்தார். ராஜா இந்தப் படத்தின் மூலம் இன்னும் உச்சம் தொட்டார்.

மொத்தத்தில், சிங்கமும் புலிகளும் நடமாடும் காட்டில், எந்த சமரசமுமின்றி ஓநாயையும் ஆட்டுக்குட்டியையும் உலவவிட்டுப் பார்ப்பவர்களையும் வசீகரித்து உள்ளே இழுத்துச்சென்று, கனத்த மனதோடு வெளியே வர வைத்த இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் அரிய பொக்கிஷம்.

இப்படம் வெளிவந்த பின்பு இதன் திரைக்கதை வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதனால், `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்: திரைக்கதையும் திரையாக்கமும்' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. எதற்காக இந்த இடத்தில் மிஷ்கினை ஃபோக்கஸ் செய்யாமல் ஸ்ரீயை ஃபோக்கஸ் செய்தார்கள், ஏன் இந்த ஷாட் டாப் ஆங்கிளில் இருந்தது, இறுதி சண்டைக்காட்சி நடைபெறும் இடம், அந்த இடத்தில் இருக்கும் வண்ணம்... என எண்ணற்றவைக்குப் பதில் சொல்லும் புத்தகம் இது. ``இந்தப் புத்தகம் சினிமாவுக்கு வர விரும்புபவர்களுக்கு சினிமாவைப் பற்றிய சிறு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துக்காக எடுக்கப்பட்டது" என மிஷ்கின் ஒரு பேட்டியில் தெரிவித்தார். 

ஓநாய்க்கும் ஆட்டிக்குட்டிக்கு மட்டுமல்ல, அந்த ஒட்டுமொத்தக் காட்டுக்கும் வாழ்த்துகள்!