Published:Updated:

"வடிவேலு விடிய விடியக் கேட்டார்..!" 'வின்னர்' கைப்புள்ள உருவான கதை #15YearsOfWinner

"வடிவேலு விடிய விடியக் கேட்டார்..!" 'வின்னர்' கைப்புள்ள உருவான கதை  #15YearsOfWinner
"வடிவேலு விடிய விடியக் கேட்டார்..!" 'வின்னர்' கைப்புள்ள உருவான கதை #15YearsOfWinner

`வின்னர்' படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அப்படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், `வின்னர்' வசனகர்த்தா பூபதி பாண்டியன்.

``சுந்தர்.சி சார்கிட்ட இணை இயக்குநரா இருந்த சிங்கம்புலி சாருக்கு `ரெட்' படம் ஓகே ஆன சமயம். அவர் தனியா படம் பண்ணப் போனதுனால, சுந்தர்.சி சாருக்கு ரைட்டர் ஒருத்தர் தேவைப்பட்டார். சிங்கம்புலி சார் சொல்லித்தான், `வின்னர்' வாய்ப்புக் கிடைச்சது." - `வின்னர்' தொடங்கிய நினைவுகளிலிருந்து உரையாடலைத் தொடர்கிறார், அப்படத்துக்கு வசனம் எழுதிய இயக்குநர் பூபதி பாண்டியன். 

``கைப்புள்ள - கட்டதுரை காம்போவை மறக்க முடியாது... எப்படிப் பிடிச்சீங்க அந்த ஐடியாவை?"   

``ஒரு காதல் கதை பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சோம். படம் முழுக்க ஒரு ஹியூமர் கேரக்டர் இருந்தா நல்லாயிருக்கும்னு சுந்தர் சார் சொன்னார். அந்த கேரக்டர்தான், கைப்புள்ள. அது வடிவேலு சாரை மனசுல வெச்சுதான் எழுதினோம். எங்க ஊர்ல ஒரு டீக்கடைக்காரர் இருக்கார். அவர் பேர்தான், `கைப்புள்ள'. அவர் பிறந்தப்போ அம்மா அப்பா இல்லாம கிடந்தாராம். அவரைக் கைப்புள்ளயா தூக்கிட்டு வந்ததுனால, அதுவே அவருக்குப் பெயர் ஆயிடுச்சு. இதை சுந்தர் சார்கிட்ட சொன்னதும், அவருக்கும் பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டார். அந்தப் படம் எடுக்குற சமயத்துல நியூஸ் பேப்பர்ல அடிக்கடி `கட்டதுரை'ங்கிற பெயர் என் கண்ல பட்டுக்கிட்டே இருக்கும். `கைப்புள்ள - கட்டதுரை' கேட்கவே நல்லா இருக்குல்ல... அதையே வெச்சுட்டோம்!"  

``பிரசாந்த் - கிரண் ஜோடியும் முன்னாடியே யோசிச்சதுதானா?"   

``பிரசாந்த் ஹீரோனு முடிவு பண்ணித்தான் படத்தை ஆரம்பிச்சோம். வேற ஒரு நடிகை கமிட் ஆகியிருந்தாங்க. சில பிரச்னையால அவங்க நடிக்கலை. அப்போ `ஜெமினி' படம் ஹிட்டான சமயம். அதுல நடிச்ச கிரண் பாப்புலரா இருந்தாங்க. அவங்களையே ஹீரோயின் ஆக்கிட்டோம். இந்தக் கதையை பிரசாந்த், அவங்க அப்பா தியாகராஜன் சார்கிட்ட சொல்லியிருக்கார். படத்துல வர்ற `இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்குறாங்கய்யா' வசனம் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய், அதை அவரும் அடிக்கடி பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாராம்." 

``கைப்புள்ள வசனங்கள் எல்லாமே இன்னுமே டிரெண்டிங்... அந்த வசனங்கள் உருவானது எப்படி?" 

``பெரும்பாலும் திரைக்கதையில இருந்தது. வடிவேலு சாரும் கொஞ்சம் சொன்னார். படத்துக்கு ரைட்டர் யாரோ, அவரைத்தான் நடிக்கிற எல்லோருக்கும் கதை சொல்ல அனுப்புவார், சுந்தர்.சி. அதனால, நான்தான் எல்லோருக்கும் கதை சொல்லப்போனேன். `தமிழ்' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல சாயங்காலம் 4.30 மணிக்கு கதை கேட்க ஆரம்பிச்ச வடிவேலு, ராத்திரி 12 மணி வரைக்கும் கேட்டுக்கிட்டிருந்தார். முக்கியமா, அந்தக் கைப்புள்ள கேரக்டரைப் பத்திதான் பெரும்பாலும் பேசினோம். வடிவேலு சார் கேரக்டருக்குள்ள வந்துட்டா, 100 % அந்த  கேரக்டராவே மாறிடுவார். `வேணா அழுதிருவேன்', `அடிகொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா..', `அவன் இன்னும் கேவலாமா  இருப்பான்'னு படத்துல வர்ற பெரும்பாலான வசனங்களுக்கு தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ்." 

``ஸ்பாட்ல வடிவேலு சேர்த்துக்கிட்ட வசனங்கள்?"  

```எம்.ஜி.ஆர் இல்லாததுனால உனக்குக் குளிர்விட்டுப் போச்சு'னு நம்பியார் சாரைப் பார்த்து சொன்ன வசனம், அவர் ஸ்பாட்ல சொன்னதுதான். நம்பியார் சார் ஏதாவது நினைச்சுக்குவாரோனு அந்த ஒரு வசனத்தை மட்டும் அவர் இல்லாத சமயத்துல எடுத்தோம். `இந்த அவமானம் உனக்குத் தேவையா?', `பேசாம போறியா வாய்ல கத்தியை விட்டுச் சுத்தவா?'  - இதுவும் வடிவேலு ஸ்பாட்ல பேசுன வசனங்கள்தான். `ஹலோ நேத்து அடிக்க வர்றேன்னீங்க வரவே இல்லை' வசனத்தை டப்பிங்ல சேர்த்துக்கிட்டோம். நாகேஷ் சாருக்கு எப்படி ஒரு `தருமி'யோ அப்படி, வடிவேலு சாருக்கு `கைப்புள்ள' கேரக்டர்."

`` `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' யாரோட ஐடியா?"

```வருத்தப்படாத வாலிபர் சங்கம்'ங்கிற பெயரை கதை டிஸ்கஷன்ல மதுரைக்காரர் ஒருத்தர் சொன்னது. அதையே படத்துக்கான டைட்டிலா வைக்கலாம்னுதான் யோசிச்சோம். அப்புறம்தான், அதைப் படத்துல பயன்படுத்திட்டு, `வின்னர்'னு பெயர் வெச்சோம். அப்போவே வெச்சிருந்தா, நாங்கதான் முதல் `வருத்தப்படாத வாலிபர் சங்க'மா இருந்திருப்போம். சுந்தர்.சி சார் சுதந்திரமா வேலை பார்க்க வைப்பார். இந்தப் படத்தோட ஷூட்டிங் வேகமா ஆரம்பிச்சு, இடையில சில பிரச்னைகளால ஒன்றரை வருடம் ஷூட்டிங் நடக்கல. ஆனா, படம் வெளியான பிறகு எல்லா கஷ்டமும் காணாமப் போயிடுச்சு. 15 வருடம் கழிச்சும் இந்தப் படத்தைப் பத்தி எல்லோரும் பேசுறதே, எங்களுக்கான அங்கீகாரம்தானே?!"

அடுத்த கட்டுரைக்கு