Published:Updated:

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

Published:Updated:
தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

சென்னையின் செல்வாக்கான மாஃபியா சேனாபதி. அவருக்குப் பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச்சிவந்த வானம்'.

மாஃபியா சேனாபதிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதராஜ், இரண்டாவது மகன் தியாகராஜ், கடைக்குட்டி எத்திராஜ். ஒருநாள், சேனாபதியும் அவர் மனைவியும் செல்லும் காரில் வெடிகுண்டு வீசப்படுகிறது. இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள். இந்த கொலை முயற்சி செய்தியைக் கேட்டு பதறி அடித்து ஓடிவருகிறார்கள் மூன்று மகன்களும். `தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்து யார்' மற்றும் `அவருக்குப் பின் வாரிசு யார்' என்ற இரு கேள்விகள் மூவரையும் தோட்டாவாகத் துளைத்தெடுத்து பித்துப் பிடிக்க வைக்கிறது. இந்த இருபெரும் கேள்விக்குறிகளின் பதிலறிந்து நிறுத்தற்குறி வைக்கும் பயணத்தில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க செக்கச்சிவப்பாய் பரபரக்கிறது திரைக்கதை. 

செக்கச்சிவந்த வானத்தில் அவ்வளவு நட்சத்திரங்கள், அனைத்தும் அக்னி நட்சத்திரங்கள். பதற்றமும் பரபரப்பும் முகமாய்க் கொண்ட வரதனாக அரவிந்த்சாமி. தொழிலதிபருக்கான அளவெடுத்து செய்யப்பட்ட மூளைக்காரன் தியாகுவாக அருண்விஜய். `கூல் லைக் குக்கும்பர்' எத்தியாக சிம்பு. புரியாத புதிர் ரசூலாக விஜய்சேதுபதி. திரைக்கதையில் நால்வருக்கும் சரிசமமான ஏரியாவைப் பிரித்துக்கொடுக்க, நடிப்பில் பிரித்துமேய்ந்திருக்கிறார்கள். அப்பாவுக்கு விபத்து நேர்ந்த செய்திகேட்டு, `நான் வரணுமா' என சிம்பு தரும் எக்ஸ்பிரஷன்...ப்பா. வெல்கம் பேக் சிம்பு. ஆக்‌ஷன் காட்சிகளில்தான் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. மணிரத்னம் படத்திலும் விஜய்சேதுபதி விஜய்சேதுபதியாகவே. ஒட்டுமொத்தப் படத்திலும் அவர் துப்பாக்கியைத் தூக்குவது ஒரே ஓர் இடத்தில்தான். படத்தில் அவருக்கு உடல்தான் துப்பாக்கி வார்த்தைகள்தாம் தோட்டா. அசால்டான உடல்மொழியும் நக்கலான வசன உச்சரிப்புமாய்த் தெறிக்கவிட்டிருக்கிறார் மனிதர். 

எல்லாம் இழந்து எதற்கும் துணிந்து, `நீ சைபர் நான் சைபர்' என மரணத்தின் விளிம்பில் ஒருவன் மிருகமாக உருமாறும் காட்சி, பதறவைக்கிறார் அரவிந்த்சாமி. தியாகு கதாபாத்திரத்துக்கு அருண் விஜய்யைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லை. இன்னமுமே அவரைப் பயன்படுத்தியிருக்கலாம் என நினைக்க வைத்துவிடுகிறார் அருண்விஜய். இப்படித் தனித்தனியாக வரும் காட்சிகளிலேயே கெத்துக் காட்டுபவர்கள், காம்பினேஷன் காட்சிகளில் ஓவர் ஆக்டிங் செய்யாமல் ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். வரதனின் மனைவி சித்ராவாக ஜோதிகா. `நல்லாருப்பியா தம்பி நீ... நல்லாருப்பியா' என சிம்புவிடம் போனில் அழும் காட்சியில்தான் யாரென அழுத்திச் சொல்லியிருக்கிறார் ஜோ. தியாகுவின் மனைவி ரேணுவாக ஐஸ்வர்யா ராஜேஷ். எத்தியின் மனைவி சாயாவாக டயானா எரப்பா மற்றும் வரதனின் காதலி பார்வதியாக அதிதி. மூவருக்கும் பெரிய கதாபாத்திரம் இல்லை. டயானா எரப்பாவுக்கு அவரின் பெயரைவிட சின்ன கதாபாத்திரம்தான். சில நிமிடங்களே வந்தாலும் சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள் மூவரும்.  சேனாபதியாக வரும் பிரகாஷ்ராஜ். சேனாபதியின் மனைவியாக ஜெயசுதா, செழியன் மாமாவாக சிவா ஆனந்த் (படத்தின் இணை எழுத்தாளர்), சின்னப்பதாஸாக வரும் தியாகராஜன் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். 

டிரெய்லரைப் பார்த்தே கணித்துவிடக் கூடிய கதைதான். அதற்குப் பரபரப்பான திரைக்கதை அமைத்து சீட்டில் கட்டிப்போட்டிருக்கிறார்கள். யதார்த்தமில்லாத பேச்சுமொழி, கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கும் உடல்மொழியென முதற்பாதி முழுக்கவே வழக்கமான மணிரத்னம் படமாகத்தான் நகர்கிறது. ஆனால், இவை இரண்டையும் இரண்டாம்பாதியில் அடியோடு மாற்றி, `மணிரத்னம் படம்தானா இது' என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வசனங்களில் தெளிக்கப்பட்டுள்ள நகைச்சுவை அரங்கில் சிரிப்பலைபாய்கிறது. தனது சில க்ளீஷே காட்சிகளை சுயபகடியும் செய்திருக்கிறார் மனிதர். அதில், வீட்டின் உச்சியில் நின்று வெற்றிக்கூச்சல் போடும் அருண்விஜய்யைப் பற்றி `உங்கண்ணன் லூஸு மாதிரி மாடில நின்னு கத்திட்டு இருக்கானாம். செக்யூரிட்டி ஃபோன் பண்ணான்' என  சிம்புவிடம் விஜய்சேதுபதி நக்கல் செய்யுமிடம் தாறுமாறு! 

திரைக்கதையிலிருக்கும் பல லாஜிக் மீறல்களும் இதை மற்ற மணிரத்னத்தின் படங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது.  இவ்வளவு பெரிய சென்னையையும் ஒரே ஒரு மாஃபியா கும்பல் குத்தகைக்கு எடுத்தாற்போல், சென்னை எங்கும் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஸ்மார்ட்போனைப் போல கையில் எந்நேரமும் துப்பாக்கியோடு அவ்வளவு அசால்டாக ஊருக்குள் சுற்றுகிறார்கள். போலீஸ் தூங்குகிறதா, பொதுமக்கள் என்ன தக்காளித்தொக்கா. கடைகள், அலுவலகங்கள், பள்ளிவளாகங்கள் என நினைத்த இடங்களில் எல்லாம் நுழைகிறார்கள், சண்டை பிடிக்கிறார்கள், சாமானை உடைக்கிறார்கள். திரைக்கதையில் இருக்கும் முக்கால்வாசி ட்விஸ்ட்களை முன்கூட்டியே கணித்துவிட முடிவது படத்தின் பெரும் மைனஸ்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `பூமி பூமி பாடல்' ஒன்றுபோதும். படத்தின் மொத்த ஆன்மாவும் அதுதான். பல இடங்களில் தடதடக்கும் பின்னணி இசை, சில இடங்களில் மௌனமே ராகமாகப் படபடக்கிறது, பயம் தொற்றுகிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஆங்கிள்கள் அல்டிமேட். லைட்டிங்கில் விளையாடியிருக்கிறார். குறிப்பாக இந்தக் காட்சியில், குறிப்பாக அந்தக் காட்சியில் என்றெல்லாம் சொல்ல இடம் கொடுக்காமல் எல்லாக் காட்சியையும் ஒரே தரத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் ஸ்க்ரீன்ஷாட் அடித்தால் வால்பேப்பர்கள்.  கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் விஷுவலாக இன்னும் அழகு சேர்த்திருக்கிறது. படத்தின் விறுவிறுப்புக்குப் பெரும்காரணகர்த்தா படத்தொகுப்பாளர் ஶ்ரீகர்பிரசாத். எந்த இடத்திலும் தேங்கி நிற்காதொரு படத்தொகுப்பு. திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பு செம நேர்த்தி, ரத்த வாடையை மட்டும் குறைத்திருக்கலாம். 

ஆக, கீச் கீச் என்றது, கிட்டே வா என்றது, லாஜிக் மீறல்களையும் அதீத வன்முறையையும் தவிர்த்திருந்தால் படம் செம என்றது..!