Published:Updated:

``நண்பரா வந்தீங்கன்னா, உட்லண்ட்ஸ்ல ஃபில்டர் காபி சாப்பிடலாம்..!''- நாகேஷ் பிறந்ததினப் பதிவு

நாகேஷ்
நாகேஷ்

முகத்தாலேயே சிரிக்க வைத்தவர் என்ற பெருமை நம் நாகேஷுக்கு உண்டு. ஆனால், அந்த முகத்தாலேயே ஒருகாலத்தில் எக்கச்சக்க வலிகளை அனுபவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

னக்கு ஏன் நடிகர் நாகேஷ் அவர்களைப் பிடிக்கும் தெரியுமா? அவரது தன்னம்பிக்கை. அவரை பேட்டிகாண சிலமுறை முயன்று தோற்றவன் நான்.

எனக்கு நாகேஷ் என்றதும் என்ன நினைவில் வரும் தெரியுமா...?

Vikatan

ஒடிசலான தேகம், ஒட்டிப்போன கன்னம், குறும்புத்தனம் கொப்பளிக்கும் கண்கள் என நாகேஷைப் பார்த்தால் யாருக்குமே பரிதாபம்தான் வரும். ஆனால், எனக்கு `அவர்கள்' படத்தில் வென்ட்ரிக்கலிஸ்ட் கமலோடு படம் முழுதும் வருமே பேசும் `ஜூனியர்' பொம்மை. அதன் முகச்சாடையோடு இருக்கும் மனிதர் என இளம்பிராயத்தில் நினைப்பேன். சந்தேகம் என்றால் `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் `சிக்குமங்கு சிக்குமங்கு செச்சே பாப்பா!' பாடலில் அவர் காட்டும் முக சேட்டைகளைப் பாருங்கள். அப்படியே பொருந்திப் போகும்!

ஆம். முகத்தாலேயே சிரிக்க வைத்தவர் என்ற பெருமை நம் நாகேஷுக்கு உண்டு. ஆனால், அந்த முகத்தாலேயே ஒருகாலத்தில் எக்கச்சக்க வலிகளை அனுபவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா. முகத்தில் அம்மை தழும்புகளோடு அவர் சினிமா வாய்ப்பு கேட்டுப் போன ஆரம்ப நாள்களில் எக்கச்சக்க புறக்கணிப்புகளை அனுபவித்திருக்கிறார். 

சிவாஜி - நாகேஷ்
சிவாஜி - நாகேஷ்

``ஏம்பா...வீட்டுல கண்ணாடி பார்க்குற பழக்கம் இல்லையா... போ போ..!'' என விரட்டாத சினிமா கம்பெனிகள் இல்லை. எக்கச்சக்க போராட்டங்களுக்குப் பிறகு `மனமுள்ள மறுதாரம்' என்ற படத்தில் 1958-ல் அறிமுகமானார் நாகேஷ். `டணால்' தங்கவேலுவோடு சிறிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அங்கு டேக்-ஆப் ஆன நாகேஷின் நடிப்புப் பயணம் கமலின் தசாவதாரத்தோடு 2008-ல் முடிவுக்கு வந்தது. 

எத்தனை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய தேர்ந்த நடிப்பை நான் முதன் முதலில் கண்டுகொண்டது `சொக்கா ஆயிரம் பொன்னாச்சே!' என்று அவர் திருவிளையாடல் படத்தில் சிவாஜியோடு பேசி நடித்த வசனம் மூலம்தான். திருவிளையாடல் படத்தின் ஆடியோ கேசட் பட்டிதொட்டியெங்கும் கோயில் திருவிழாக்களில் ஒலித்தபோது நாகேஷின் தருமி கேரக்டர் வரும்போது மட்டும் ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஓடியதுபோலவே இருக்கும். அவ்வளவு வேகம்! 

அதேபோல `காதலிக்க நேரமில்லை' படத்தில் வரும் டைரக்டர் செல்லப்பா கேரக்டரில் அவர் சொல்லும் திகில் கதை இப்போது வரை `ரெண்டு பொண்ணுள்ள கண்ணு!' என நம்மையும் மாற்றிச் சொல்லி சிரிக்க வைக்கும்.  

Nagesh
Nagesh

சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், நீர்க்குமிழி, பாமா விஜயம், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என சென்னைத் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நான் முற்றிலும் குழம்பிப் போனது `தில்லானா மோகனாம்பாள்' பார்த்துதான். காமெடியும் செய்ய வேண்டும். அதோடு கேவலமான வில்லத்தனமும் கலந்திருக்க வேண்டும் என்பதை சரிவிகிதத்தில் கலந்து செய்திருந்தார் நாகேஷ். அந்த வைத்தி கேரக்டரைப்போல ஒரு கேரக்டரைப் பண்ண அவர் யோசித்திருக்கலாம். ஆனால், அப்படி நினைக்கவில்லை. ``பவுடர் பூசின பிறகு நாகேஷ்ங்கிறவன் உலகத்தில் இல்லாமல் போயிருப்பான். என்னை நம்பி ஒரு கேரக்டரைத் தரும்போது அதைச் செய்வதுதானே நியாயம்? சொல்லப்போனால் ரோட்டில் போகும்போது வைத்தினு நினைச்சு ஒரு ஆள் துப்பினால்கூட என் நடிப்புக்குக் கிடைத்த வெற்றியாத்தான் பார்க்கிறேன்!'' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 

 எம்.ஜி.ஆருடன் 44 படங்களில் நடித்து அவருடன் அதிகப் படங்களில் நடித்த காமெடியனாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார்.  இப்படி கேரக்டராகவே மாறுவது என்பதை வெறும் வாய் வார்த்தையாக அவர் சொல்லவில்லை. உலகிலேயே பிணமாக நடித்த பெரிய நடிகர் இவராகத்தான் இருப்பார். `மகளிர் மட்டும்' படத்தில் அவர் பிணமாக நடித்து பலரை வியப்பில் ஆழ்த்தினார். ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப்படங்களை இன்ஸ்பிரேஷனாகச் சொல்வார். அதனாலேயே அவரைப்போல புதுப்புது விஷயங்களை உடல்மொழியில் கொண்டு வருவதில் வடிவேலுக்கே முன்னோடி நம் நாகேஷ் தான். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் ஸ்பூனரிஸம் (Spoonerism) பண்ணி சிரிக்க வைத்தார். அதாவது பேசும் சொற்களின் முதல் வார்த்தையின் ஒலிகளைத் தவறுதலாக மாற்றி உச்சரித்து நடித்திருப்பார். இப்போதுவரை அதை பலர் முயற்சி செய்து பார்த்து முடியாமல் நாகேஷை வியக்கிறார்கள். 

Nagesh Memories
Nagesh Memories

கமல்ஹாசன், எப்போதும் நாகேஷை தன் ஆதர்ச நடிகராக கொண்டாடத் தவறியதில்லை. மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி என முக்கியமான படங்களில் எல்லாம் தன்னுடனே வைத்துக் கொண்டாடியிருக்கிறார். அதிலும் தன்னுடைய அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷை வெரைட்டியான வில்லனாக நடிக்க வைத்திருப்பார். 

கடைசி வரை தேசிய அளவிலான அங்கீகாரங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தார். இதில் அவருக்கு வருத்தமும் உண்டு. பத்திரிகையாளர்களை கவுண்டமணிக்கு முன்பே அதிகம் தவிர்த்தவர் நம் நாகேஷ்தான். அவரது நண்பரான கவிஞர் வாலியின் மூலம் நாகேஷை பேட்டி எடுக்க முயற்சி செய்து கடைசி வரை கொடுப்பினை கிடைக்காமலே போய்விட்டது.

Vikatan

``பேட்டியா..? அப்ப வர வேணாம். வேணும்னா ஒரு ரசிகராவோ நண்பராவோ வந்தீங்கன்னா உட்லண்ட்ஸ்ல ஃபில்டர் காபி சாப்பிடலாம்..! '' என்று ஒலித்த அவரின் டெலிபோன் குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

இன்று அவரது 86-வது பிறந்தநாள். காலத்தை வென்ற கலைஞன் நாகேஷின் புகழ் நிலைக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு