Published:Updated:

" 'முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு, வரலட்சுமி உங்களுக்கு போன் பண்ணும் லிங்கு'னு சொல்லியிருக்கேன்!" - விஷால்

" 'முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு, வரலட்சுமி உங்களுக்கு போன் பண்ணும் லிங்கு'னு சொல்லியிருக்கேன்!" - விஷால்
" 'முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு, வரலட்சுமி உங்களுக்கு போன் பண்ணும் லிங்கு'னு சொல்லியிருக்கேன்!" - விஷால்

`சண்டக்கோழி 2', நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், நடிகர் விஷால்.

``அப்போ `செல்லமே’ படம் வெளியாகலை. `ஜிஜே சினிமாஸ்’ ஞானவேல், ஜெயப்பிரகாஷ் இருவரும்தான் அதன் தயாரிப்பாளர்கள். கோடம்பாக்கத்துல ஞானவேல் சாருக்கு சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. ஒருமுறை அங்கே போயிருக்கும்போது, `லிங்குசாமி ஒரு லைன் வெச்சிருக்காப்ல. அப்படியே உனக்கு செட்டாகுற கதை. போய் பேசு’னு சொன்னார். அப்போவே லிங்கு என் நெருங்கிய நண்பர். `இதை என் 2-வது படமா பண்ணித் தர்றீங்களா?’னு லிங்குட்ட கேட்டேன். `ஏற்கெனவே ஒரு ஹீரோவுக்கு இந்த லைனை சொல்லிட்டேன். தவிர, இது ஆக்ஷன் படம். உனக்கு செட்டாகுமானு தெரியலையே!’னு சொன்னார். எனக்குத் தெரிந்தவகையில், அந்தக் கதையை அவர் விஜய்க்கோ, சூர்யாவுக்கோ சொல்லியிருந்தார்னு நினைக்கிறேன். ``நீங்க, `செல்லமே’ பார்த்துட்டு முடிவு பண்ணுங்க. இந்தத் திரைக்கதைக்காக 2 வருடம்கூட காத்திருக்கத் தயார். ஆனா, இதுதான் 2-வது படமா அமையணும்’னு சொன்னேன். லிங்குவும், `ஓகே பண்ணலாம்’னு சொல்லிட்டார். ஆனா, `செல்லமே’ வந்து ஒரு வருடம் கழிச்சுதான், `சண்டக்கோழி’யை ஆரம்பிச்சோம். `ஏன் தாமதிக்கிறீங்க?’னு பலர் கேட்டாங்க. `இது 10 படங்களுக்குச் சமம்’னு சொன்னேன். ஆமாம், ஆக்ஷன் ஹீரோவாகணும்னு பலர் ஆசைப்படுவாங்க. ஆனா, அவ்வளவு எளிதில் அந்த இமேஜ் கிடைச்சுடாது. எனக்கு 2-வது படத்திலேயே அந்த இமேஜ் வந்ததுக்குக் காரணம், `சண்டக்கோழி’தான். என் 25 படங்களின் பயணத்துக்கு, அந்த ஒரு படம்தான் அடித்தளம். அதுக்கு, லிங்குசாமி மட்டுமே காரணம்!” - விஷால் பேச்சில் அவ்வளவு பரவசம். `சண்டக்கோழி 2’ ரிலீஸ் வேலைகளில் இருந்தவரைச் சந்தித்தேன். 

`` `சீக்வெல்’னு வெறும் பெயரை வெச்சே பணம் சம்பாதிக்கலாம், வழக்கமான ஒரு ஆக்ஷன் படமா எடுத்துடுலாம். ஆனால், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி பண்றமாதிரி கதை, திரைக்கதை அமையிறதுதான் மிகப்பெரிய சவால். ஆனால், இந்தத் திரைக்கதையைக் கேட்டதும், `ஒரு தயாரிப்பாளரா எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணலாம்’னு உணர்ந்தேன். ஒரு நடிகனா, இது என் 25-வது படம்ங்கிறது ரொம்பப் பெருமையா உணர வெச்சது. இதை நாங்க திட்டமிடவே இல்லை. எல்லாம் அதுவா அமைஞ்சதுதான். இந்தப் படத்துக்காக லிங்கு நிறைய காத்திருந்தார், விட்டுக்கொடுத்திருக்கார். ஃப்ரெண்ட்ஸ் என்பதைத்தாண்டி இன்னைக்கு லிங்கு எங்க ஃபேமிலியில ஒருத்தர், என் பிரதர். இந்த நட்புக்கு, உறவுக்கு, `சண்டக்கோழி 2’ படத்துல ரெண்டுபேருமே நியாயம் பண்ணியிருக்கோம்னு நினைக்கிறேன்.”

`` `சண்டக்கோழி’யுடன் இந்த இரண்டாம் பாகத்தை எப்படி முடிச்சுப்போட்டிருக்கீங்க?”

``இதையெல்லாம் லிங்கு பேசணும். நான் பேசிக்கிட்டு இருக்கேன். `என்னை வெளிநாட்டுக்கு அனுப்புனதோட முதல் பாகம் முடிஞ்சது. பிறகு ஒரு கலவரத்தால் நடக்காம இருந்த ஊர்த் திருவிழாவை 7 வருடம் கழிச்சு நடத்துறதுக்கான ஏற்பாடுகளைத் தொடங்குறாங்க. ஏன்னா, அந்த ஊர்ல மழை பெய்து 7 வருடம் ஆகியிருக்கும். அந்தத் திருவிழாவுல கலந்துக்கிறதுக்காக ஃபாரின்ல இருந்து 7 வருடம் கழிச்சு நானும் ஊருக்கு வருவேன். அப்படித்தான் கதை தொடங்கும். திருவிழா செட்டப்ல தொடங்குற கதை, அதே செட்டப்ல 7 நாள்களுக்குள்ள முடியுற மாதிரி திரைக்கதை. அப்படி ஒரு திரைக்கதை அமைச்சிருக்கார், லிங்கு."  

``முதல் பாகத்துக்கு மீரா ஜாஸ்மின் மிகப்பெரிய பலம். இப்போ, இதில் கீர்த்தி சுரேஷ். என்ன ஸ்பெஷல்?”

``படத்துல என்னதான் ஹீரோ சண்டை போட்டாலும் முதல்முறை பார்க்கும்போதே அந்த சுவாரஸ்யம் முடிஞ்சிடும். ஆனா, ரசிகர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வர வைக்கிறதுல பெண் கேரக்டர்களுக்கு முக்கியமான பங்கிருக்கு. அதனாலதான், காதல் போர்ஷனையும், பெண்களோட கதாபாத்திரங்களையும் பலமா அமைப்பாங்க. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி கேரக்டர்கள் நிச்சயம் ரிப்பீட் ஆடியன்ஸைக் கொண்டுவந்து சேர்க்கும். இதுல கீர்த்தி கமிட்டாகும்போது, `மீரா ஜாஸ்மின் மேடம் கேரக்டரை நான் பண்றேன். சரியா வருமா... நல்லா நடிக்கிறேனா?’னு லிங்குட்ட பயந்து பயந்து கேட்டுக்கிட்டே இருந்தாங்க. இதுல அவங்க பின்னிட்டாங்க. நிச்சயம் கீர்த்தியை இதில் உங்களுக்கு இன்னும் பிடிக்கும்.”

``உங்க ஹீரோயின் வரலட்சுமி, இதில் வில்லியாமே?”

``ஆமாம், வரு வில்லிதான். அதுவும் கடைசி 20 நிமிடம் கொன்னுட்டாங்க. நகரத்துல பிறந்து வளர்ந்த பெண்ணை ஒரே நாள்ல உல்டாவா மதுரைப் பொண்ணா நடிக்கச்சொல்லும்போது, நல்லா பண்ணிட்டாங்க. ஆனா, அவங்க நடிச்சதை அவங்களால உணர முடியலை. `லிங்கு, நீ எழுதிவெச்சுக்கோ. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்த்துட்டு இந்தப் பொண்ணு உனக்கு போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லும் பார்’னு சொல்லியிருக்கேன். அப்படி ஒரு கேரக்டர்.”

``ஸ்கூல் ரீயூனியன் மாதிரி 14 வருடம் கழிச்சுக் கூடியிருக்கீங்க. எப்படி இருந்தது இந்த அனுபவம்?”

``திருவிழாதான். `ஹீரோ - ஹீரோயின் கெமிஸ்ட்ரி’னு சொல்வாங்கள்ல... அப்படித்தான் எனக்கும் ராஜ்கிரண் சாருக்குமான கெமிஸ்ட்ரி. உண்மையிலேயே அப்பா - மகன் மாதிரியே இருக்குனு சொல்றாங்க. லிங்கு வைக்கிற குளோஸப்கள்ல, `ராஜ்கிரண் சார் உண்மையிலேயே நம்மமேல கோபமா இருக்காரோ’னு நினைக்கிற அளவுக்கு அவர் அவ்வளவு கம்பீரம். அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் நடந்துக்குற முறைனு எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கம்பீரத்தைக் கொடுக்குதுனு நினைக்கிறேன். அவரைத் தவிர ஹரிஷ் பரேடி, கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த், அர்ச், மெட்ராஸ் ஹரி... இன்னும் பலர் இருக்காங்க.”

`` `தாவணி போட்ட தீபாவளி’னு யுவனோட பாட்டைக் கேட்டதுமே மனசுல `சண்டக்கோழி’ ஞாபகம் வந்து உட்கார்ந்திடும். யுவன், இதுல என்ன பண்ணியிருக்கார்?” 

``இரண்டு வருடம் முன்ன, இந்தப் படத்துக்கு வேறொரு மியூசிக் டைரக்டரைத்தான் பேசினோம். `காம்பினேஷன் மிஸ்ஸாகுதே!’னு நாங்களும் தயங்கி நின்னோம். யுவன் திரும்ப வந்தபிறகு இணைஞ்சோம். நீங்க சொன்ன மாதிரி, இந்தப் படம் யுவனுக்கே சேலஞ்ச். ஏன்னா, `தாவணி போட்ட தீபாவளி’ இன்னைக்கும் பிடிச்ச பாட்டு லிஸ்ட்ல இருக்கு. அதுக்கு சவால் விடுறமாதிரிதான் இதோட ஆல்பமும் அமைஞ்சிருக்கு. இதைவிட பின்னணி இசையில யுவனுக்குப் பெரிய தீனி இருக்கு. என்னதான் நாம ஆக்ஷன், அடிதடினு கஷ்டப்பட்டு நடிச்சாலும், அது அந்த பிஜிஎம்மோட வந்தாதானே சிறப்பா இருக்கும். அந்த ஏரியாவை யுவனை நம்பித்தான் இருக்கோம். அதேமாதிரி `சண்டக்கோழி’யில் கேமராமேன் ஜீவா சாரிடம் அசிஸ்டென்ட் கேமராமேனா இருந்த சக்திவேல், இதுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். உண்மையிலேயே இது ரீயூனியன்தான்.”

``டேட்டா பேஸ், ஓய்வூதியம், சங்கக் கட்டடம்... தேவைகள் ஒவ்வொண்ணாப் பூர்த்தி பண்ணி... நடிகர் சங்கத்தின் அந்த சர்க்கிள் ரொம்ப அழகா பூர்த்தியாகப்போகுது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்துல பல பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு எட்டப்படலை. நீங்க நினைச்சது அங்கே நடக்கலையோ?”

``கவுன்சிலைப் பொறுத்தவரை நாங்க இன்னும் விழிப்புடன் இருக்கணும் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சிக்கலுக்கு நாங்க மட்டுமே காரணமில்லை. ஜி.எஸ்டி வரி, உள்ளாட்சி வரினு இந்தியாவுலேயே சினிமாவுக்கு இரட்டை வரி வசூலிக்கிற மாநிலம் தமிழ்நாடு. அடுத்து, எத்தனை டிக்கெட் விற்குது, எவ்வளவு வருவாய்னு எங்களுக்கு முழுமையான, உண்மையான தகவல்கள் வர்றது இல்லை. அதுக்கு டிக்கெட் விற்பனையை கணினி மயமாக்கணும்னு கோரிக்கை வெச்சோம்.  

இப்படிப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 43 நாள்கள் வேலை நிறுத்தம் நடத்தினோம். அதன் முடிவாக, இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில், திரையுலகின் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட 7 மணிநேரப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. எங்க கோரிக்கைளை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனா, 5 மாதமாகுது, அந்தப் பேச்சுவார்த்தையின் மினிட்ஸைப் பதிவு பண்ணி, இன்னும் அரசாணை வெளியிடலை. அரசாணை வந்தாதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முழுமையான தீர்வு கிடைக்கும். நாடறிந்த கலைஞர்களுக்கே இந்த நிலைமைன்னா, சாமான்ய மக்களுக்கான பிரச்னைகள்ல இவங்க எவ்வளவு கவனம் எடுத்துப்பாங்க என்பதை நாமளே புரிஞ்சுக்க வேண்டியதுதான்.”

இவைதவிர, ``திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?", ``இயக்குநர் லிங்குசாமியுடனான கருத்து வேறுபாடு", ``ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக்கியது ஏன்?" உட்பட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் இதழில் விரிவாகப் பதிலளித்துள்ளார், நடிகர் விஷால்

அடுத்த கட்டுரைக்கு