Published:Updated:

``ஆஸ்கருக்குச் செல்லும் அஸ்ஸாமின் குக்கிராம வாழ்க்கை!" - `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஸ்பெஷல்

``ஆஸ்கருக்குச் செல்லும் அஸ்ஸாமின் குக்கிராம வாழ்க்கை!" - `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஸ்பெஷல்
``ஆஸ்கருக்குச் செல்லும் அஸ்ஸாமின் குக்கிராம வாழ்க்கை!" - `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஸ்பெஷல்

உண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தையே காட்சிக்காகப் பயன்படுத்தியுள்ளார், ரிமா தாஸ். கேனான் 5டி கேமராவும், ஒரு ரோட் மைக்கும் இப்படத்தை எடுக்க ரிமா தாஸிற்குப் போதுமானதாய் இருந்திருக்கின்றன. சில காட்சிகளை எடுக்க 10 நாள்கள் வரை காத்திருந்தாராம், ரிமா தாஸ்.

"என்னுடைய மனதுக்குத் தோன்றிய காட்சிகளையே ஷாட்டாக வைக்கிறேன். மற்றபடி ஒளிப்பதிவு குறித்தோ, ஒளிப்பதிவின் விதிமுறைகள் குறித்தோ எனக்கு ஒன்றும் தெரியாது. நான் முறையாக ஃபிலிம் ஸ்கூலில் படித்து வந்தவள் கிடையாது. எனக்குத் தோன்றுகிற கதைகளையே படமாக்க முயன்று வருகிறேன்" - கேரள சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடலுக்குப் பின் நடந்த உரையாடலில், "'வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தில் சில முக்கியமான ஷாட்களில் திட்டமிட்டு ஒளிப்பதிவு விதிமுறைகளை உடைத்தீர்களா?" என்ற கேள்விக்கு, படத்தின் இயக்குநர் ரிமா தாஸின் பதில் இது. 91 வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் (Best Foreign Language Film) பிரிவில் பங்கேற்கிறது, `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (Village Rockstars)'. 

இந்தியாவின் வடகிழக்கு மூலையான அஸ்ஸாமிலிருந்து ஆஸ்கருக்குச் சென்றிருக்கும் படம். அஸ்ஸாமில் உள்ள ஒரு குக்கிராமத்தின் வாழ்க்கைதான் கதை. 10 வயதான துனு, தனது அண்ணன் மற்றும் விதவைத் தாயுடன் அஸ்ஸாமின் குக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். அங்கிருக்கும் உள்ளூர் சிறுவர்கள் போலியான பொம்மை இசைக் கருவிகளுடன் மியூசிகல் பேண்ட் ஒன்றை ஜாலியாக நடத்திப் பாடி வருகிறார்கள். பெரும்பாலும் பாலிவுட் பாடல்கள்தாம் பாடப்படுகின்றன. அதைப் பார்க்கும் துனுவுக்கு, உண்மையான கிட்டாரை வாங்கி வாசித்து ஒரு நிஜ மியூசிகல் பேண்ட்டை உருவாக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை எப்படி நிறைவேறுகிறது? அந்தக் குக்கிராமம் எப்படியான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறது என்பதே `வில்லேஜ் ராக்ஸ்டார்'ஸின் பிரதானம். 

படத்தின் ஒன்லைனை எளிதாகச் சொல்லிவிட்டாலும், படம் கடத்தும் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்வது கடினம்தான். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான ஏழ்மையான வாழ்க்கை துனுவுடையது. சொல்லப்போனால், அந்தக் கிராமத்தினுடையது. கதை நடப்பது என்னவோ 2016-ல்தான் என்றாலும், முழு கிராமத்துக்கும் மின்சாரம் வந்து சேரவில்லை. மிக மெதுவாக வளரக்கூடிய செடியைப் போலத்தான் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸின் திரைக்கதையும். ஆனால், அதன் முடிவில் அப்படி ஒரு பூ நமக்குக் கிடைக்கிறது. பட்டப் பகலில் உக்கிரமான வெயிலில்கூட மழை பெய்துவிடும் என நினைக்கும் அசாத்தியங்கள் சிறுவர், சிறுமிகளுக்கே உரித்தானவை. வெள்ளத்தையும் மழையையும் தடை செய்யவேண்டும் எனக் கூச்சலிடும் அதே அசாத்தியங்கள் அஸ்ஸாமின் குக்கிராமத்து சிறுவர்களிடமும் இருக்கின்றன. எவ்வித வசதிகளும் இல்லாவிட்டாலும், தினமும் பள்ளிக்குப் போவதை நிறுத்தாத குழந்தைகள் அவர்கள். சேறு சகதிகளில் அழுக்கே மகிழ்ச்சியென ஆடித் திரியும் பொழுதுகளும், பாலின பேதமற்ற ஊர் சுற்றலும், சண்டை என்றால் அடித்து உருண்டுகொள்வதுமாக அந்தக் குழந்தைகளின் பொழுதுகள் படத்திலும் கதையிலும் இயல்பாய் விரிகின்றன. அதிகப் பிரசங்கித்தனங்களற்ற இயல்புகள் அவை. 

கிட்டாரும் துனுவும்தான் மையக் கதையாக இருந்தாலும், அந்தக் கிராமத்தின் விவசாயமும் வெள்ளமும் பெருமழையும் படகு வாழ்க்கையும் முழுக்க இருள் கவிழ்ந்து கிடக்கும் இரவில் ஆங்காங்கே மின்னும் மின்சார விளக்குகளும்... என அங்கிருக்கும் வாழ்க்கையையும் அரசியலையும் கதையின் வழியாகவே நம்மை உணரச் செய்கிறார், ரிமா தாஸ். மியூசிக்கல் பேண்ட் கதையாக இருந்தாலும், பின்னணி இசை இயல்பாகத்தான் ஒலிக்கிறது. மகளுக்கு நீச்சலைக் கற்றுக்கொடுப்பது, எப்போதும் திட்டாமல் கண்டிப்பது, மகளின் ஆசையைப் புரிந்துகொள்வது... என துனுவின் அம்மா கதாபாத்திரம் துனுவுக்கான நம்பிக்கை. `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' திரைப்படமே வாழ்வுக்கான நம்பிக்கையைத்தான் கொடையாகக் கையளிக்கிறது. உங்களது வாழ்க்கை எந்த வகையான வாழ்க்கையாகவும் இருக்கலாம். ஆனால், நம்பிக்கைதான் அவற்றுக்கான ஆதாரம். அதனால்தான், துனு படகை எடுத்துக்கொண்டு வெள்ளத்தில் தனியாகச் சுற்றுகிறாள். படத்தில் நிறைய உரையாடல்கள் எளிமையாகத்தான் இருக்கின்றன. ஆனால், ஆழமானவையாக!

டொரான்டோ, கேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், இந்திய அரசின் 65-வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இட ஒலிப்பதிவாளர் (Best Location Sound Recordist) ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. ரிமா தாஸின் முதல் படமான `மென் வித் தி பைனாகுலர்'ஸும் (Man with the Binoculars) அஸ்ஸாமின் கிராமத்தை மையப்படுத்தியதே. அதுவும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற சுயாதீனத் திரைப்படம்தான். `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' திரையரங்குகளில் வெளியாகுவதற்குள், `புல்புல் கேன் சிங் (Bulbul Can Sing)' எனும் மற்றொரு படத்தையும் எடுத்து முடித்து, திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டார், ரிமா.

`வில்லேஜ் ராக்ஸ்டார்ஸி'ல் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனத் தனித்தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரண்டையுமே இயக்குநர் ரிமா தாஸ்தான் செய்திருக்கிறார். மொத்தப் படக்குழுவும் இவர்தான். அஸ்ஸாமின் கிராமத்தில் தங்கி சுற்றித் திரிந்து ஒற்றை ஆளாகவே முழுப்படத்தையும் எடுத்து முடித்துள்ளார். 2014-ல் ஆரம்பித்த படப்பிடிப்பு 3 வருடங்களில் மொத்தமாக 150 நாள்கள் நடந்துள்ளது. உண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தையே காட்சிக்காகப் பயன்படுத்தியுள்ளார். கேனான் 5டி கேமராவும், ஒரு ரோட் மைக்கும் இப்படத்தை எடுக்க ரிமா தாஸிற்குப் போதுமானதாய் இருந்துள்ளது. சில காட்சிகளை எடுக்க 10 நாள்கள் வரை காத்திருந்தாராம், ரிமா. இப்படி அஸ்ஸாமின் பரந்த சமவெளியும், வெள்ளமும் கேனான் 5டியால் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எடிட்டிங்கும் அப்படியே. இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுகளில் வெளிநாட்டு மொழிப் பிரிவில் அனுப்பப்பட்ட படங்களில், `மதர் இந்தியா', `சலாம் பாம்பே', `லகான்' ஆகிய சில படங்கள் மட்டுமே இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளன. இப்படமும் அப்படியான ஒரு போட்டியை ஏற்படுத்தும் என நம்பலாம். அஸ்ஸாமிலிருந்து ஓர் உலக சினிமா உருவானதன் பின்னால் இருக்கும் ரிமா தாஸ் சொல்வது ஒன்றுதான், ``நமது கனவுகளை உண்மையாக்க நாம்தான் கடினமாக உழைக்க வேண்டும்".

அடுத்த கட்டுரைக்கு