Published:Updated:

'ஒருவிரல் புரட்சி’, சர்காருக்கு ஒரு வழக்கு பார்சல்..!

'ஒருவிரல் புரட்சி’, சர்காருக்கு ஒரு வழக்கு பார்சல்..!
'ஒருவிரல் புரட்சி’, சர்காருக்கு ஒரு வழக்கு பார்சல்..!

'ஒருவிரல் புரட்சி’, சர்காருக்கு ஒரு வழக்கு பார்சல்..!

யக்குநர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் விஜய்யின் 62 ஆவது படமாக வருகிற தீபாவளி அன்று வரவிருக்கிறது ’சர்கார்’. கடந்த வாரம் 24ம் தேதி சர்காரின் முதல் பாடலான சிம்டாங்காரன் வெளியானது. பொதுவாக விஜய் பாட்டு, ரஹ்மான் பாட்டு என்றாலே நிச்சயம் பெரும்பாலான வெகுஜன மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிம்டாங்காரன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்படவில்லை, குறிப்பிட்ட தரப்பினரை மட்டுமே சிம்டாங்காரன் ஈர்த்தது. 'ஆளப்போறான் தமிழன்' பாடல் எழுதிய விவேக்தான் சிம்டாங்காரன் பாடலை இயற்றினாரா, என்றெல்லாம் விமர்சித்துத் தள்ளினார்கள் நெட்டிசன்ஸ். இருப்பினும் பாடல் 24 மணி நேரத்தில் அறுபது லட்சம் பார்வைகளைத் தொட்டதோடு கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகளையும் பெற்றது. யாரும் எதிர்பாராத நிலையில் நேற்று காலை 11:45 மணியளவில் சன் பிக்சர்ஸ் மதியம் 12:30 மணிக்கு ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். 'ஒருவிரல் புரட்சி' என்ற சர்காரின் இரண்டாவது பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பதே அந்த அறிவிப்பு.

தலைப்பை வைத்தே எழுச்சிகரமான பாடல் டைப் என்று கணிக்கமுடிந்தது. முழுவதும் கறுப்பு சிவப்பினால் வடிவமைக்கப்பட்ட போஸ்டரில் மக்கள் தங்களின் ஆள்காட்டி விரலை உயர்த்துவது போல இருந்ததினால், ஓட்டுப் போடுவதன் அவசியம் பற்றிய பாடல் என்று ஊகிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்களில் ஆளும் அரசை விமர்சிக்கும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றதால், இந்தப் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியது. போஸ்டரில் இருந்த கறுப்பும் சிவப்பும் சித்தாந்தங்களின் குறியீடா அல்லது இயல்பாய் அமைந்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் சிம்டாங்காரனில் 'என்னடா லிரிக்ஸ் இது'ன்னு சொன்ன பெரும்பாலானோரை 'ஒருவிரல் புரட்சியில்' 'என்னா லிரிக்ஸ் டா டேய்! செம!' என்று பாடலாசிரியர் விவேக் கூற வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 

’நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம் 
ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்
போர்களைத் தாண்டிதான் சோற்றையே காண்கிறோம்’

என நான்கு வரிகளைப் பாடல் ரிலீசுக்கு முன்பே விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அவிழ்த்துவிட அரசாங்கத்தை விமர்சிக்கும் பாடலென உறுதியானதில் எல்லோரும் வெறித்தன வெயிட்டிங்கில் இருந்தார்கள்.

'நேத்து வரை ஏமாளி ஏமாளி ஏமாளி;
இன்று முதல் போராளி போராளி போராளி'

என்று இயல்பாகக் குறைவான வேகத்தில் ரஹ்மான் குரலில் ஆரம்பிக்கும் பாட்டு, முழுக்க முழுக்க ஸ்லோ முதல் மீடியம் வேகத்திலேயே பயணிக்கிறது. ஆனாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை மத்திய மற்றும் மாநில ஆளும்தரப்பை வெளிப்படையாக விமர்சிப்பது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போடுவதன் விளைவு என விவேக்கின் வில்லைப் போன்ற வரிகள், தெறிக்கின்றன என்றே சொல்லலாம்.

'ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே'

எனப் பாட்டின் தலைப்பில் இருந்து கிட்டார் ஸ்ட்ரிங்ஸின் எங்கேஜிங் எனர்ஜியுடன் ரஹ்மானின் தனித்துவக் குரலில் பயணமாகிறது பாடல். அப்படியே கண்ணைமூடிக் கேட்டால் ஆயுத எழுத்து படத்தில் வரும் 'ஜன கன மன' பாடல் ஒரு காதில் புகுந்து மறுகாதில் வெளியே வரும். அதே போல ஒரு சாயலில் கிட்டத்தட்ட லிங்கா படத்தின் 'இந்தியனே வா' பாடல் போல் உள்ளது. இசைக் கருவிகளின் அரேஞ்சமெண்ட்டை வைத்துப் பார்த்தால் பாடலின் ஜானர் 'செமி ஆர்கெஸ்ட்ரல் ப்ரோகிரேஸிவ் ராக்' வகை என்று கணிக்க முடிகிறது. 

ஆரம்பத்தில் ஸ்ட்ரிங்ஸ் உடன் பியானோ கீஸ் மென்மையாக ஆரம்பித்து அப்படியே ராக்குக்கு உரித்தான கிட்டார் ஸ்ட்ரிங்ஸுக்கு மாறி அதிலேயே கடைசி வரை டிராவல் செய்கிறது. இடையிடையே டிரம்ஸ் இசையுடன் வயலின் வந்து சேருமிடம் பக்கவான செமி ராக்காக பயணிக்கிறது. இந்தப் பாடலில் இசையைத் தாண்டி பாடல் வரிகளே வலிமைப் பெற்றதாய் இருக்கின்றன. 

'ஏழ்மையை ஒழிக்கவே செய்யடா முயற்சியே;
ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா?'

என்று ஆளும் தரப்பை விமர்சிப்பதெல்லாம் செம! ஆனால் அங்கு இன்னும் கொஞ்சம் இசை வீரியமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

'கரை வேட்டிகள் அங்கங்கு சிலை;
எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை' 

என வெறும் இரண்டு வரிகளே பெண் குரலில் இருப்பது சிறிது ஏமாற்றம் அளிக்கிறது என்றாலும் ரஹ்மானின் ஹை- பிட்ச், லோ பிட்ச் என ஏற்ற இறக்கமாய் பாடுவதில் பெண் குரல் ஏன் இல்லையென்று யோசிக்கவிடவில்லை.

'துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்
அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம்'

என்ற வரிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மறைமுகமாய் சொல்வதுபோல இருந்தது.

கடைசியில் 'மானம் விற்று எதை வாங்கினாய்; எதிர்காலத்தைச் சூறையாடினாய்' என்று சுயமரியாதைத்துவம் பேசி ஸ்ட்ராங்கான எண்டிங்குடன் முடிகிறது 'ஒரு விரல் புரட்சி'. பாடலில் வரிகள் சக்கைப்போடு போட்டாலும் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. பாடல்வரிகளின் எழுச்சியை இசை டைல்யூட் செய்தது போல் ஆகிவிட்டது நிதர்சனம்.

ஆகமொத்தம் பாடலில் கரைவேட்டிகள், ஓட்டுப் போடுவதின் அவசியம் , சுயமரியாதைத்துவம் என மறைமுகமாகப் பேசினாலும் படத்தில் இவை விரிவாக நேரடியாகப் பேசப்படுகிறதா, இல்லை நுனிப்புல் அரசியலோடு நிற்கப்போகிறதா என்று பார்ப்போம்.

நுனிப்புல் அரசியலாக இல்லாமல் பாடலில் உள்ள மறைமுக சித்தாந்தத்தை நேரடியாகப் பேசினால் தற்போதுள்ள சர்காரையே மெர்சலாக்கி அதிர வைக்கும் இந்த 'சர்கார்'! 

சர்காருக்கு ஒரு வழக்கு பார்சல்! 

அடுத்த கட்டுரைக்கு