Published:Updated:

"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!" - நிதின் சத்யா

"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!" - நிதின் சத்யா
"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!" - நிதின் சத்யா

"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!" - நிதின் சத்யா

'வசூல் ராஜா', 'சென்னை-28', 'சரோஜா', 'சத்தம் போடாதே' ஆகிய படங்களில் நடித்து வந்த நிதின் சத்யா, பல வருடங்களுக்குப் பின் தயாரிப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். "புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு அதிகமா இருக்கு. கொஞ்சம் நேரம் பிரேக் கிடைச்சாலும் புத்தகங்கள்தான் படிப்பேன். ஞானவேல் ராஜா சார், தாணு சார், எஸ்.ஆர் பிரபு சார் ஆகிய மூணு பேரும்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். தயாரிப்பாளர்களுக்கு படம் எடுப்பதைத் தாண்டி, அதை ரிலீஸ் செய்யுறதுல நிறைய பிரச்னை இருக்கும். அதையும் பண்ணலாம்னு இப்போ தயாரிப்பாளரா உருமாறியிருக்கேன்." என்று பேச ஆரம்பித்த நிதின் சத்யாவிடம் அவருடைய அடுத்தடுத்த சினிமா திட்டங்களைப் பற்றிக் கேட்டோம்.  

"தயாரிப்பாளரா உருவெடுத்ததற்கான காரணம் என்ன?"

"சினிமாவுல நடிப்பைத் தாண்டி நிறைய விஷயங்கள் பண்ணணும்னு நெனச்சேன். நடிக்க ஆரம்பிக்கும்போது சில சவாலான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு நெனச்சேன். ஆனா, இப்போ ஒரு தாயாரிப்பாளரா கேரக்டர்களை உருவாக்கணும்னு நெனக்கிறேன். குறிப்பா குழந்தைகளுக்கு பிடிச்ச நல்ல அனிமேஷன் படம் உருவாக்கணும்னு ஆசைப்படுறேன். அறிமுக நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கணும்; அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரணும். அவ்வளோதான்." 

"ஜெய் பத்தி நிறைய விமர்சனங்கள் வருது. உங்களுடைய நண்பர்ங்கிற முறையில அவரை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..."

"ஜெய், நல்ல நடிகன். அவனை சினிமா இன்னும் நல்லா பயன்படுத்தணும். ஜெய்யை பத்தி ஊர் ஆயிரம் பேசும். அவர் ஷூட்டிங்க்கு வரமாட்டார், சொன்னதை சரியா செய்ய மாட்டார்னு புரளியை கிளப்பிவிடுவாங்க. ஆனா, நான் அவனோட நிறைய வருஷம் பழகியிருக்குறேன்ங்கிற முறையில சொல்றேன். ஜெய் மாதிரியான நேர்மையான ஒரு நடிகனைப் பார்க்க முடியாது. 'சென்னை-28' படத்துல இருந்து 'ஜருகண்டி' படம் வரை காலையில முதல் ஆளா ஷூட்டிங்க்கு வந்து நிக்குறது ஜெய்தான்." 

"நீங்க ஒரு நடிகரா சிறப்பா பெர்ஃபார்ம் பண்ண படம் எது?"

"'சத்தம் போடாதே' படம்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். வசந்த் சாருடைய படங்கள்னாலே அதுல ஒரு தனித்துவம் இருக்கும். 'தமிழ் பெஸ்ட் டாப் 10 சைக்கோ திரில்லர் படங்கள்' லிஸ்ட்டுல இந்தப் படம் கண்டிப்பா இருக்கும். எப்படி நடிக்கணும்னு எனக்கு கத்துக்கொடுத்ததே வசந்த் சார்தான். வில்லன் கதாபாத்திரம் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிய வெச்சதும் அவர்தான். தவிர, ப்ரொடக்ஷன் வேலைகளையும் இவர்கிட்ட இருந்ததான் கத்துக்கிட்டேன்." 

"'ஜருகண்டி' படத்துல டேனியல் இருக்கார். பிக் பாஸ்ல அவர் இருக்கும்போது என்ன நெனச்சீங்க?"

"ஒரு பக்கம் டேனி எப்படியாவது  ஜெயிக்கணும்னு நெனச்சேன். இன்னொரு பக்கம் சீக்கிரம் எலிமினேட் ஆகி வெளிய வந்துட்டா படத்தை ப்ரொமோட் பண்றதுக்கு உதவியா இருக்கும்னு நெனச்சேன். ஆனா, டேனியல் தன்னோட இயல்பை எந்தவொரு கள்ளத்தனமும் இல்லாம மக்களுக்கு வெளிக்காட்டிட்டு வந்துட்டார். அதுதான் அவரோட வெற்றி. டேனி இப்போ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கார். அது போதும்! 'ஜருகண்டி' படத்துல அவருக்கு ஹீரோவோட ட்ராவல் ஆகுற ரோல். அவர் இந்தப் படத்துடைய இரண்டாவது ஹீரோனு கூட சொல்லலாம்." 

"யோகி பாபுவுக்கு உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க..."

"யோகி பாபுவும் நானும் நல்ல நண்பர்கள். ஒருத்தர் 'நான் உங்களை சினிமாவுல நடிக்க வைக்கிறேன்'னு சொல்லி கூட்டிட்டுப் போய் ஏமாத்திட்டார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. பெரிய படங்களுடைய இயக்குநர்கள்கூட இவர் கால்ஷீட்டுக்காக காத்துட்டு இருக்காங்க. இதை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. அவருக்கு திறமை அதிகம். பட்ட கஷ்டங்களும் அதிகம். இனிமேலாவது, அவர் நல்ல நிலைமைக்கு வரணும்."

"கமல் - ரஜினி அரசியல்ல உங்க சப்போர்ட் யாருக்கு?"

"ரஜினி சாரோட எனக்கு நேரடிப் பழக்கம் கிடையாது. ஆனா, கமல் சாரோட 'வசூல் ராஜா' படத்துல நடிச்சதுல இருந்தே நான் அவரை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். அவர் எது செய்தாலும் நல்லதுக்காகத்தான். அவர் அரசியல்ல என்ன செய்யணும்னு திட்டமிட்டு செய்றார். ஒரு அரசியல்வாதிக்கு இதுதான் முக்கியம். என்னோட சப்போர்ட் அவருக்குத்தான்."

"விஷாலின் செயல்பாடுகள் குறித்து என்ன நெனைக்கிறீங்க?"

"விஷால் அவருடைய ரசிகர்களை ஒருங்கிணைப்பு செய்து பல விஷயங்களை சாதிச்சிருக்கார். சினிமாலேயும் சரி, மக்கள்கிட்டயும் சரி, அவருக்கு அதிக ஆதரவு கிடைக்குது. விஷால் எனக்கு பெர்சனல் ப்ரெண்ட். அவர் சினிமாலேயும் நடிக்கிறார்; இரண்டு அமைப்புகளுக்கு தலைவராவும் இருக்கார். இப்போவாரைக்கும் எனக்கு ஒரு உதவி தேவைனு குரல் கொடுத்தா போதும், முதல் ஆளா வந்து நிக்குறது விஷால்தான். எனக்கு மட்டுமில்ல, ஓட்டுமொத்த சினிமா நபர்களுக்கும் அவர் அப்படிதான்!"

"ஆன்-லைன் பைரசியை தடுக்க என்ன பண்ணலாம்?"

"மத்த எந்த மாநிலத்துலயும் இல்லாத பிரச்னை தமிழ் நாட்டுல இருக்கு. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள்ல பைரசி கிடையாது. தமிழ்நாட்டுல மட்டும் இந்த நிலைமை ஏன் தொடரணும்? இதைத் தடுக்குறதுக்காக சினிமா சார்பா நடவடிக்கைகள் எடுத்துட்டு இருக்கோம். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாவும் இதுக்காக நிறைய வேலைகள் போயிட்டு இருக்கு. ஆனா, அரசாங்கத்துகிட்ட இருந்து எந்த உதவியும் எங்களுக்குக் கிடைக்கலை. அவங்களும் சப்போர்ட் பண்ண மட்டும்தான் இதை முழுமையா ஒழிக்க முடியும்." என்று நம்பிக்கையோடு பேட்டியை முடித்தார் நிதின் சத்யா.

அடுத்த கட்டுரைக்கு