Published:Updated:

`தீ' முதல் `ஐ’ வரை... ஓர் எழுத்தை டைட்டிலாக்கிய தமிழ்ப்படங்கள்..!

`தீ' முதல் `ஐ’ வரை... ஓர் எழுத்தை டைட்டிலாக்கிய தமிழ்ப்படங்கள்..!
`தீ' முதல் `ஐ’ வரை... ஓர் எழுத்தை டைட்டிலாக்கிய தமிழ்ப்படங்கள்..!

`தீ' முதல் `ஐ’ வரை... ஓர் எழுத்தை டைட்டிலாக்கிய தமிழ்ப்படங்கள்..!

ஓர் எழுத்தில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் எத்தனை இருக்கும் எனத் தேடியபோது நமது கண்களுக்கு அகப்பட்ட சில சுவாரஸ்யமான படங்களின் தொகுப்பு இதோ...

`தீ’:

இந்தி சினிமாவின் கிளாஸிக் திரைப்படங்களுள் ஒன்றான `தீவாரி'யின் ரீமேக்தான் இந்த `தீ'. இரண்டு பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்ட இரு சகோதரர்களை பற்றிய கதையில் போலீஸாக சுமனும், டானாக ரஜினியும் நடித்திருப்பார்கள். ரஜினியின் திருமணத்துக்குச் சரியாக ஒரு மாதத்துக்கு முன் 1981 ல் வெளிவந்தது `தீ' திரைப்படம்.

‘பூ’:

ஆண்களின் `ஆட்டோகிராஃப்' மட்டுமே சொல்லப்பட்ட தமிழ்த் திரையில், முதன்முதலாக ஒரு பெண்ணின் காதல் நினைவுகளை, கள்ளிப்பழ வாசத்துடன் மலரவிட்ட படைப்புதான் இந்த `பூ‘. தமிழ்ச்செல்வன் எழுதிய `வெயிலோடு போய்' சிறுகதையை ஸ்ரீகாந்த், பார்வதி நடிப்பில் செல்லுலாய்டில் விதைத்தார் இயக்குநர் சசி. 

`வ’:

`வ' என்றால் ஒன்றின் கால் பகுதி என்று பொருள். முதலில் இந்தத் திரைப்படத்துக்கு `வ-குவார்ட்டர் கட்டிங்' என்றுதான் பெயரிட்டிருந்தனர். ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் தமிழக அரசின் கேளிக்கை வரி கிடைக்காமல் போய்விடும் என்பதால் `குவார்ட்டர் கட்டிங்' என்னும் வார்த்தையை நீக்கிவிட்டு `வ' என்னும் பெயருடன் 2010ல் வெளியானது இந்தத் திரைப்படம். சிவா, எஸ்.பி.பி.சரண் ஆகியோர் நடிக்க, மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் கதை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவது போன்ற கதையமைப்புடன் படத்தை இயக்கியிருந்தனர் புஷ்கர் - காயத்ரி தம்பதியினர். 

`ஈ’:

'ஈ' திரைப்படத்தில் அடுத்தவேளை உணவுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஈ(ஸ்வரன்)யாக  நடித்திருப்பார் ஜீவா. ஜீவாவின்  கதாபாத்திரத்தின் பெயரான `ஈ'யையே படத்துக்கும் தலைப்பாக வைத்து விட்டார்கள். தனது 2 வது படத்திலேயே ஏழை நாடுகளை ஆட்டிப்படைக்கும் மருத்துவப் பிரச்னைகளை பிரசார நெடி துளிகூட இல்லாமல் நேர்த்தியாகப் படமாக்கியிருந்தார் எஸ்.பி.ஜனநாதன். 

`ஆ’:

`அம்புலி' கோகுல்நாத், மேக்னா மற்றும் பாபி சிம்ஹா நடிக்க தமிழின் முதல் திகில் ஆந்தாலஜி திரைப்படம் என்ற சிறப்புடனுடம், ஒரே டிக்கெட்டில் 5 பேய் படம் என வித்தியாசமாக விளம்பரம் செய்யப்பட்டும் 5 திகில் கதைகளுடன் 2014ல் வெளியானது `ஆ' திரைப்படம். 

`தீ’:

`ஆப்ரேஷன் துரியோதனா' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த `தீ'. சுந்தர். சி, நமீதா நடிப்பில்’ நேர்மையாக இருந்ததால் மனைவியை இழந்த போலீஸ் அதிகாரி, தனது அடையாளங்களை மறைத்து அரசியலில் கோலோச்சுவது போன்ற கதையாக `தீ' படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் கிச்சா. 

`கோ’: 

`கோ' என்றால் அரசன். தமிழகத்தை ஆளும் `கோ’ (அரசன்) யார் என்பதை ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் தீர்மானித்தால் என்ன ஆகும் என்பதையே படமும் கூறியதால் படத்துக்குப் பொருத்தமான தலைப்பாக `கோ' வை ஓகே செய்தார் கே. வி. ஆனந்த். 

`ஐ’:

`இந்தியன்' படம் வெளியான சமயத்திலேயே `ஐ' படத்தின் ஒன்லைனை தயார் செய்து விட்டார் ஷங்கர். அப்பொழுதிருந்தே `அழகன்' மற்றும் `ஆணழகன்' ஆகிய தலைப்புகள்தான் ஷங்கரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. மேற்கண்ட தலைப்புகளில் ஏற்கெனவே படம் வந்துவிட்டதால் `ஐ' என்னும் தலைப்பை இறுதி செய்தார் ஷங்கர். `ஐ' என்றால் அழகு. ஒரே எழுத்தில் படத்தின் தலைப்பு எளிமையாக இருந்ததாலும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை சுலபமாகக் குறித்ததாலும் `ஐ' என்னும் தலைப்புக்கு டபுள் டிக் அடித்தார் ஷங்கர்.

அடுத்த கட்டுரைக்கு