Published:Updated:

``பிக் பாஸ்ல மட்டுமல்ல, சினிமாவுலேயும் ரித்விகா ஜெயிக்கணும்!" - கலையரசன்

சுஜிதா சென்

ரஜினியுடன் நடித்த அனுபவம், பா.ரஞ்சித்துக்கு அனுப்பிய மெசேஜ், ரித்விகாவுக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம்.. எனப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார், நடிகர் கலையரசன்.

``பிக் பாஸ்ல மட்டுமல்ல, சினிமாவுலேயும் ரித்விகா ஜெயிக்கணும்!" - கலையரசன்
``பிக் பாஸ்ல மட்டுமல்ல, சினிமாவுலேயும் ரித்விகா ஜெயிக்கணும்!" - கலையரசன்

2010-ம் ஆண்டு, `நந்தலாலா' படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோல் மூலம் திரைக்கு அறிமுகமானவர், கலையரசன். `மெட்ராஸ்' படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்றார். பிறகு, `டார்லிங்', 'மெட்ராஸ்', `கபாலி', `தானா சேர்ந்த கூட்டம்' உட்பட பல படங்களில் நடித்து வந்த இவருக்கு, இந்த ஆண்டு அடுத்தடுத்து 6 படங்கள் கைவசம் இருக்கின்றன. கலையரசனிடம் பேசினோம்.

``ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்... மூன்றையும் ஒரு நடிகரா எப்படிச் சமன்படுத்துறீங்க?"

``ஒரு மாஸ் ஹீரோவா என்னைக் காட்டிக்க நான் முயற்சி பண்ணினதைவிட, நல்ல நடிகரா என்னைத் தக்க வெச்சுக்கணும்னுதான் விரும்புறேன். எந்த ரோல் கொடுத்தாலும் கலையரசனால நடிக்க முடியும்ங்கிற நம்பிக்கையை இயக்குநர்களுக்குக் கொடுக்கணும். அது ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல் இப்படி எதுவாவும் இருக்கலாம். ஒரு சீன்ல நடிக்கிறதுகூட முக்கியம்தான்." 

``இயக்குநர் பா. இரஞ்சித், மிஷ்கின் இவர்களுடனான உங்க பயணம்...?" 

``எனக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்து என்னைச் செதுக்கிய இயக்குநர்கள் இவங்கதான். என் முதல் படம் மிஷ்கின் சாரோட `நந்தலாலா'. இரண்டாவது படம் இரஞ்சித் சாரோட `அட்டக்கத்தி'. பிறகு மீண்டும் மிஷ்கின் சாரோட `முகமூடி' படத்துல சின்ன ரோல் பண்ணினேன். இரஞ்சித் சாரோட கதைகள்ல ஒரு ஜீவன் இருக்கும். யாரும் பண்ண விரும்பாத சப்ஜெக்ட்ல படம் எடுக்கத் தயங்காதவர். என் சினிமா வாழ்க்கையில `மெட்ராஸ்' மாதிரி இன்னொரு படம் அமையுமானு தெரியலை. என்னைத் திறம்படப் பயன்படுத்தி நடிப்பை வாங்குனதும், இவங்கதான். இப்போவரை சினிமா சம்பந்தமான எந்தச் சந்தேகம்னாலும், இவங்ககிட்ட மட்டும்தான் கேட்பேன்." 

``சினிமாவுல வர்றதுக்கான உங்க முயற்சிகள் குறித்துச் சொல்லுங்க..."

``எனக்கு சினிமா தவிர ஆத்மார்த்தமான வேலை எதுவும் தெரியாது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடிச்சுட்டு, குடும்பச் சூழ்நிலைக்காக ஐடி கம்பெனியில வேலை பார்த்தேன். அதனால, சினிமா சம்பந்தமான வேலைகளைப் பார்க்க முடியல. வேலையையே விட்டுட்டு முழு நேரமா சினிமா ஆடிஷன்ஸ்ல கலந்துக்கிட்டேன். என் நண்பர்கள் பலர் சினிமா பின்னணியில இருந்து வந்தவங்களா இருந்தாங்க. காலேஜ் படிக்கும்போது எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் சென்னையில இருந்தார். அவர்கிட்ட போன் பண்ணி சொன்னா, ஊருக்கு வரும்போது நிறைய சினிமா கேஸட்டுகள் எடுத்துட்டு வருவார். அவர் எப்போ ஊருக்கு வருவார்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே காத்துக்கிட்டு இருப்போம். அந்த அளவுக்குப் படம் பார்க்கிறதுல ஆர்வம் இருந்தது.  

ஒருநாள் `கனா காணும் காலங்கள்' சீரியல்ல நடிக்க வாய்ப்பு வந்தது. அதுமூலமா சின்னச் சின்னதா பட வாய்ப்புகளும் கிடைச்சது. ரஜினி சார்தான் எனக்கான இன்ஸ்பிரேஷன். `சிவாஜி' பட ஷூட்டிங் நடக்கிறதைக் கேள்விப்பட்டு, ரஜினி சாரைப் பார்க்க ரோட்டுல ரொம்ப நேரம் நின்னுருக்கேன். பார்க்க முடியலையேனு பலமுறை வருத்தப்பட்டிருக்கேன். ஒருமுறையாவது அவரை நேர்ல பார்த்துடணும்னு ஆசைப்பட்ட எனக்கு, அவர்கூட `கபாலி' படத்துல நடிக்கிறதுக்குக் கிடைச்ச வாய்ப்பு, அதிர்ஷ்டம்தான். அப்போ, என் நடிப்பை அவர் பாராட்டவும் செய்தார். சமயத்துல, அந்தப் பாராட்டு ஒண்ணு போதும்னு தோணும்."

``குடும்பம்...?" 

``அப்பா ஹரிகிருஷ்ணன், அரசு ஊழியர். அம்மா தமிழ் மணி, இல்லத்தரசி. `நான் சினிமாவுல நடிக்கப்போறேன்'னு சொன்னதும் ரெண்டுபேரும் பயந்தாங்க. இருந்தாலும், என் அப்பாவுக்கு `பையனை சினிமாவுல பார்த்துடமாட்டோமா?'னு ஏக்கம் இருந்துச்சு. எனக்கு விஸ்காம் படிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, வீட்டுல இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னாங்க. விதிவிலக்கா எங்க அண்ணன் ராஜேஷ் மட்டும், `உனக்கு என்ன பிடிக்குமோ, அதைப் படி'னு ஊக்கப்படுத்தினார், சினிமாவுல நடிக்கிறதுக்கும் பக்கபலமா இருந்தார். 

படிச்சு முடிச்சிட்டு வேலைக்குப் போகும்போது, ப்ரியா எனக்கு அறிமுகம். `முகமூடி' படத்துல நடிச்ச சமயத்துல, நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணம் நடந்தப்போ எனக்குச் சொல்லிக்கிற மாதிரி எந்த வேலையும் கிடையாது. கொஞ்ச நாளைக்கு ப்ரியாவோட வருமானத்துலதான் குடும்பம் நடத்தினேன். `மெட்ராஸ்' படம் நடிச்சுட்டு இருந்தப்போ, எங்களுக்கு மகள் பிறந்தாள். பெயர், அதிதி. இப்போ அவளுக்கு நாலு வயசாகுது. டான்ஸ்ல பயங்கர ஆர்வம். ஸ்கூல்ல நிறைய பரிசு வாங்கியிருக்கா. `பரியேறும் பெருமாள்' பட டிரெய்லர்ல வர்ற குழந்தைக் குரல், அதிதியோடதுதான்!."

```மதயானைக் கூட்டம்' படத்துல உங்களுக்குத் தம்பியா நடிச்ச கதிருக்கு இப்போ சினிமாவுல மறுபடியும் ஒரு பிரேக் கிடைச்சிருக்கு... எப்படி ஃபீல் பண்றீங்க?" 

``மாரி அண்ணன் நல்ல எழுத்தாளர்னு எல்லோருக்கும் தெரியும். இந்தப் படத்தோட பூஜைக்குப் போயிருந்தப்போ, கதையைக் கேட்டேன். அதுக்கேத்த மாதிரி கதிர் ஒரு அப்பாவிப் பையனா பக்காவா செட் ஆயிருந்தார். படம் பார்த்துட்டு மாரி அண்ணாவைக் கட்டிப்பிடிச்சு அழுதேன். ரஞ்சித் அண்ணாவுக்கு ஒன்றரை பக்க மெசேஜ் அனுப்பினேன். இந்த மாதிரி கதையைப் படமாக்க தைரியம் தேவை. அந்த வகையில, `பரியேறும் பெருமாள்' மொத்த டீமையும் பாராட்டுறேன். கதிருக்கு இது மாதிரி இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்கணும்." 

``அடுத்து?"   

`` `சைனா' படம் ஷூட்டிங் முடிஞ்சு ரொம்ப நாளாச்சு. பர்மா பஜார்ல கடை வெச்சிருக்கிறவனோட வாழ்க்கைதான் கதை. பர்மா பஜாரை சைனா பஜார்னும் சொல்வாங்க. அதான், `சைனா'னு பெயர் வெச்சிருக்கோம். ரொம்ப நாளைக்கு அப்புறம், `டைட்டானிக்' படத்துல காலேஜ் பையனா நடிச்சிருக்கேன். ரொமான்டிக் காமெடிப் படம் இது.  

`களவு' படம் செயின் திருட்டு பற்றிய கதை. ஒரு செயின் திருட்டை நாலு பசங்கள்ல ஒருத்தர் கண்டுபிடிக்கிற த்ரில்லர் கதை. மிடில் கிளாஸ் குடும்பம் இதுமாதிரி ஒரு பிரச்னையில சிக்கும்போது எப்படி இருக்கும்னு எமோஷனலா சொல்லியிருக்கோம். இதுதவிர, `லட்சுமி' குறும்படத்தோட இயக்குநர் சர்ஜுன் - நயன்தாரா காம்போவுல உருவாகுற படத்துல ஒரு முக்கியமான கேரக்டர் ரோல் பண்றேன்."

``உங்க ஃபிரெண்ட், `பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ரித்விகா பற்றி...?"   

``ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி அதை அப்படியே பிரதிபலிக்கிற நடிகை, ரித்விகா. `மெட்ராஸ்', `கபாலி' படத்துல சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற பொண்ணு. ரித்விகா எந்தவொரு முடிவெடுத்தாலும், அது சரியா இருக்கும். பொண்ணுங்களுக்கு சப்போர்ட்டிங் ரோல்ல நடிக்கிறது கஷ்டமான விஷயம். கேரக்டர் ஆர்ட்டிஸ்டா நிலைச்சு நிற்கிறது அதைவிடக் கஷ்டமான விஷயம். ரித்விகாவுக்கு, பிக் பாஸ்ல மட்டுமல்ல, சினிமாவுலேயும் பல வெற்றிகள் கிடைக்கணும்."