Published:Updated:

`என் ரூட்டு தெளிவா இருக்கு!’ - ஆஃப் ஸ்க்ரீனிலும் வசீகரிக்கும் விஜய் #SarkarVijay

``இப்போதைக்கு அவர் ஆளும் நாட்டின் குடிமகன்கள் அவர் ரசிகர்கள். அவர்களை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டால், பின் நாட்டையே ஆளும்போது மக்களை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள முடியுமென நினைக்கிறார் தளபதி” என்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகத்தினர்.

`என் ரூட்டு தெளிவா இருக்கு!’ - ஆஃப் ஸ்க்ரீனிலும் வசீகரிக்கும் விஜய் #SarkarVijay
`என் ரூட்டு தெளிவா இருக்கு!’ - ஆஃப் ஸ்க்ரீனிலும் வசீகரிக்கும் விஜய் #SarkarVijay

21ம் நூற்றாண்டின் தொடக்கம். அப்போது விஜய் கையில் பூச்செண்டோடு மென்மையான, காதல் படங்களே அதிகம் நடித்துக்கொண்டிருந்தார். அஜித், ரெட் மற்றும் தீனா போன்ற ஆக்‌ஷன் படங்களில் அரிவாளோடு சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.ஜே. சூர்யாவிடம் விஜய் மற்றும் அஜித் பற்றி ஒன்லைன் ஒன்றைக் கேட்டார்கள். அவர் சொன்னது,

``விஜய்... தென்றலாய் வாழும் புயல்.”

``அஜித்... புயலாய் வாழும் தென்றல்.”

எல்லோருக்குமே ஆச்சர்யம். விஜய் புயலா?

திரையில் எப்படியோ... ஆஃப் ஸ்க்ரீனில் விஜய் ஒரு சாந்த சொரூபி. ``அந்தப் பக்கம் சண்டையா? எனக்கு அங்கு வேலையில்லை” என ஒதுங்கும் நிஜ `மாணிக்கம்’. அப்படித்தான் அப்போது விஜய்யைத் தமிழ் நெஞ்சங்களுக்குத் தெரியும்.

ஆனால், இன்று?

``மெர்சல்ல கொஞ்சம் அரசியல் பண்ணிருந்தோம். சர்கார்ல அரசியலை மெர்சல் பண்ணிருக்கோம்” என பன்ச் பேசுகிறார்.

``நான் முதலமைச்சரா நடிக்கல.. ஆனா, முதலமைச்சர் ஆனா நடிக்க மாட்டேன்” என எதையோ குறிப்பால் உணர்த்துகிறார். 

``என் நெஞ்சில் குடியிருக்கும்... இதைச் சொல்லி ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு ஃபீல். அதான் இந்த ஃபங்க்‌ஷன்” என்கிறார்.

இசை வெளியீட்டு விழாக்களில் அந்தப் படத்தின் பாடல்கள்தான் டாக் ஆஃப் த டவுன் ஆக இருக்கும். ஆனால், விஜய் படங்களின் ஆடியோ ஃபங்கஷனில் மட்டும் அவர் பேச்சுதான் ஹைலைட். திரையில் தெறிக்கும் அந்த நெருப்பு இப்போது நிஜத்திலே தெறிக்கிறது. 

விஜய் மாறிவிட்டாரா அல்லது இதுதான் அவர் இயல்பா அல்லது அரசியலுக்குத் தயாராகிறாரா?

கில்லி படம் பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்துவந்த `மதுர’ படத்துக்கு உலகம் முழுவதும் அதீத எதிர்பார்ப்பு. பல வெளிநாடுகளுக்குச் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார் விஜய். அப்படி சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது ஒரு ரசிகர் விஜய்யிடம் அவர் தங்கையைப் பற்றிக் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். விஜய் முகம் சுருங்கியது. மைக்கை கீழே வைத்தவர் மேடையைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். விழா ஏற்பாட்டாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் படத்தை அரை மணி நேரம் முன்னதாகவே போட்டுவிட்டார்கள். விஜய் அப்படித்தானிருந்தார்.

அவரிடம் என்ன என்ன கேள்விகள் கேட்கப்படப் போகின்றன என்பதை முன்பே சொல்லிவிட வேண்டும். அதைத் தாண்டி கேள்விகள் கேட்டால் அவர் பேச மாட்டார். அதற்கு, ``அவருக்குப் பேச தெரியாதுப்பா” என்ற காரணம் பரவலாகப் பேசப்பட்டது.

ஆரம்பக் காலகட்டத்தில் விஜய்யைச் செதுக்கிய அவர் தந்தை, விஜய்க்கு நிறைய பாடங்கள் சொன்னார். பாடம் என்பதைவிட நிபந்தனை என்றே சொல்லலாம். நிகழ்ச்சியோ, படப்பிடிப்போ... நேரத்துக்குச் சென்றுவிட வேண்டும். யாரிடமும் கடிந்து பேசிவிடக்கூடாது. ரசிகர்களை எந்தக் காரணம் கொண்டு விட்டுக்கொடுக்கக் கூடாது என நிறைய சொல்லலாம். அவற்றை இன்றுவரை விஜய் பின்பற்றி வருவது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்தக் காரணத்தால்தான் விஜய் எப்போதும் மேடையிலும் அசெளகர்யமாகவே உணர்வார். சில சமயம் அதையும்மீறி அவருக்குக் கோபம் வந்ததுண்டு. 'வில்லு' படம் வெளியானதும், ஒரு பிரஸ் மீட் நடந்தது. படம் தோல்வி என்பதால் ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்திருப்பார். கூடவே யாரோ வில்லங்கக் கேள்வி ஒன்றைக் கேட்க, தனது ``கூல் ப்ரோ” ஆட்டிட்யூடை விட்டு எகிறிவிட்டார் விஜய். 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் சிக்கல்தான். அவர் வாயிலிருந்து கூடுதலாக 2 வார்த்தை வந்துவிடாதா என ஏங்குவார்கள் தொகுப்பாளர்கள். அவரது அந்த முன்னம்பல் இரண்டும் தெரியும்படி கூட சிரிக்க மாட்டார். எல்லாமே ம்யூட்டில்தான் நடக்கும். 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விஜய் அப்படியில்லை. நண்பன் பட புரமோஷனுக்காக விஜய், ஷங்கர் எஸ்.ஜே. சூர்யா, ஜீவா எனப் படக்குழு முழுவதுமே ஆஜர். இதில் ஷங்கர் தவிர மற்ற எல்லோரும் ``போதும் ப்ரோ... நிறுத்திக்கலாம்” எனச் சொல்லுமளவுக்குப் பேசுகிறவர்கள். கலாய் பேர்வழிகள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஸ்கோர் செய்தது விஜய். அதுதான் விஜய் கலகலவெனப் பேசிய முதல் நிகழ்ச்சியாக இருக்கக்கூடும். அந்த மாற்றம் ரசிகர்களைவிடத் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் கருணாநிதி, கமல், ஜாக்கி சான் ஆகியோருடன் விஜய்யும் பேசினார். உடல் முழுக்கத் தயக்கத்தோடு, பயம் கலந்த உடல்மொழியோடு அவர் பேசியது...

``பல சூப்பர்ஸ்டார்கள் இருக்கும் இந்த மேடையில் இந்தச் சின்னக்குருவிக்கும் இடம் கொடுத்ததுக்கு நன்றி!”

அந்த வீடியோவையும் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதையும் பார்த்தாலே வித்தியாசம் புரியும். விஜய், ஆஃப் ஸ்க்ரீனிலும் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறார். இது தன்னை எப்படி வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையால் வந்ததா? அல்லது ``இனி நாம நாமளாவே பேசுவோம்” என்ற நினைப்பில் வந்ததா? இதற்குப் பதில் இரண்டுமே என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் நிஜத்திலும் எஸ்.ஜே. சூர்யா சொன்னதுபோல புயல்தான். இந்தத் திரைப்பட உலகையும், அது தந்த புகழையும் எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாதபோது அமைதியாக இருப்பதே சிறந்த வழி என நினைத்து அப்படியிருந்திருக்கிறார். இப்போது அவர் கூட்டிலிருந்து வெளி வர வேண்டிய கட்டாயம். காரணம்... அரசியல்?

விஜய்க்கு அரசியலுக்கு வர வேண்டுமென்ற எண்ணம் எப்போதுமே உண்டு. மக்கள் இயக்கம், ரசிக மன்றத்துக்குக் கொடி என அதை அவ்வப்போது அவர் நடவடிக்கைகள் உறுதி செய்யும். சினிமாவுக்கு வந்தபோதே விஜய் பார்க்காத விமர்சனம், ஏளனம் கிடையாது. ஆனால், அவரின் கடின உழைப்பால் தனது மைனஸ்களை எல்லாம் பிளஸ் ஆக்கித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். எதிலும் அவருக்கு நிதானம் உண்டு. அரசியலுக்கும் அதே டெக்னிக்தான் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். 

மேடைப்பேச்சுதான் தமிழக அரசியிலின் மிக முக்கியமான விஷயம். அதற்குத் தன்னைத் தயார் செய்துகொண்டிருக்கிறார் விஜய். அதற்காகவே அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அவர் என்ன பேச வேண்டுமென்பதை எழுத, ஆலோசிக்கப் பெரிய டீம் ஒன்றையே உருவாக்கினார். கூட்டைவிட்டு வெளியே வந்த விஜய்க்கு அவரின் இயல்பான உடல்மொழியும் பேச்சுமே போதுமானதாக இருக்கிறது. ``இப்போதைக்கு அவர் ஆளும் நாட்டின் குடிமகன்கள் அவர் ரசிகர்கள். அவர்களை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டால், பின் நாட்டையே ஆளும்போது மக்களை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள முடியுமென நினைக்கிறார் தளபதி” என்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகத்தினர். அதனால்தான், எந்த மேடையில் ஏறினாலும் தன் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல மறந்ததே இல்லை விஜய்.

விஜய்யின் மேடைப்பேச்சு ரிகர்சல் செய்து ஒப்பிப்பது கிடையாது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சர்கார் மேடையில் அவர் பேசியதில் எங்கும் தடை கிடையாது. எதையும் மறக்கவில்லை. கையில் பிட்டு பேப்பர் இல்லை. முகத்தில் குழப்பம் இல்லை. சொல்லும் வார்த்தையில் தெளிவின்மை இல்லை. டைட்டில் கார்டு தொடங்கியதும் இடைவேளை வரை வ்ரூஊஊஊஉம் எனப் பறக்கும் கில்லியின் திரைக்கதை போல இருக்கிறது இப்போதெல்லாம் விஜய்யின் பேச்சு. 

இது எல்லாவற்றையும்விட முக்கியம், அவர் பேச்சில் தெறிக்கும் பாசிட்டிவிட்டி. யாரையும் குறை சொல்வதில்லை. எதையும் விமர்சனம் செய்வதில்லை. மாறாக, வரும் எதிர்ப்புகளை எப்படி நமக்கு சாதமாக்கிக் கொள்வதென தன் ரசிகர்களுக்குப் பாடம் எடுக்கிறார் இந்த மேடை வாத்தியார். அது ஒவ்வொருமுறையும் வேற லெவலில் வொர்க் அவுட்டும் ஆகிவிடுகிறது. நெல்லையில் அவர் பேசிய கால்பந்து கதை தொடங்கி சர்கார் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன ராஜா கதை வரை ஒவ்வொன்றிலும் 1000 வாட்ஸ் எனர்ஜி.

மேடைப்பேச்சுக்கு ஸ்க்ரிப்ட்டும், அட்டகாசமான டெலிவரியும் மட்டும் போதுமா, கிடையாது. விஜய்யின் (அல்லது அவர் டீம்) நுணுக்கமான கவனிப்பு அவர் உடையிலும் உண்டு. போக்கிரி படத்தின் 175 வது நாள் விழா. மேலே ரெண்டு பட்டன்களை திறந்துவிட்டு போக்கிரியாகவே வந்திருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அதெல்லாம் கிடையாது. ஒரே மாடல் சட்டைதான். 2016 விகடன் விருதுக்குக் கறுப்பு, 2017ல் சிகப்பு, இப்போது சர்காருக்கு நீலம். ஒரே மாடல்தான். நிறம் மட்டும் வேறு. ஆஃப் ஸ்க்ரீனில் தன் இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக பலமாக்கி வருகிறார் விஜய். 

ஆன் ஸ்க்ரீன் விஜய்க்கும் ஆஃப் ஸ்க்ரீன் விஜய்க்கும் ஓர் இடைவெளி பெரியதாக இருந்தது. இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. நிஜ வாழ்வில் விஜய் செய்ய விரும்புவதும் செய்வதும் தன் படங்களிலும் தெரிய வேண்டும் என நினைக்கிறார் விஜய். கதைக்களங்களின் தேர்வும் அப்படித்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி உதவுவதுதான் ஹீரோ விஜய்யின் வேலை. நிஜத்திலும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களையும் அனிதாவின் குடும்பத்தையும் சென்று பார்த்தத்தை இங்கே நினைவு கூரலாம். போலவே, ஜல்லிக்கட்டு ஆன் ஸ்க்ரீன் மற்றும் ஆஃப் ஸ்க்ரீனிலும் இடம்பெற்ற ஒரு விஷயம் எனலாம். ஒருகட்டத்தில் ஹீரோ விஜய்யும், நிஜ விஜய்யும் ஒரே மாதிரி தெரிய வேண்டுமென்பதுகூட திட்டமாக இருக்கலாம். 

அதுதான் திட்டமென்றால், விஜய் ரூட்டு தெளிவாகத்தான் இருக்கிறது!