Published:Updated:

``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா

```பசி' படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார். அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின் மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது."

``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா
``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா

மிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி' சத்யா. திறமையான கலைஞராக இருந்தும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாதவர். தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.

``மதுரை என் பூர்வீகம். அம்மா, சங்கீத வித்வான். அப்பா, மத்திய அரசு ஊழியர். சினிமாவுக்கும் எனக்கும் வெகுதூரம். எதேச்சையா வாய்ப்பு கிடைச்சது. `பவளக்கொடி' நாடகத்தின் மூலம் நடிப்புப் பயணம் ஆரம்பிச்சது. ஸ்கூல் படிச்சுக்கிட்டே பல நாடகங்களில் நடிச்சேன். பிறகு சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினேன். 9 ம் வகுப்புக்குப் பிறகு படிக்கலை. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் முன்னிலையில் பல நாடகங்களில் நடிச்சேன். அப்போ ஓரளவுக்குப் புகழுடன் இருந்தேன்" என்கிற சத்யா, 2,000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

``1970-களில் நாடகங்களுக்குத் தனி வரவேற்பு இருந்துச்சு. அதில் புகழ்பெற்றவங்க சினிமாவுக்குப் போனாங்க. ஹைட், வொயிட், வெயிட்னு சினிமாவில் பிரதானமா எதிர்பார்க்கப்படும் மூணு விஷயங்களிலும் நான் பின்தங்கியிருந்தேன். அதனால், பெரிசா சினிமா ஆசையில்லை. `முயலுக்கு மூணு கால்' படத்தில் சைக்கிள் ஓட்டும் பெண் ரோலில் நடிக்க எந்த நடிகையும் முன்வரலை. அந்த கேரக்டர்படி, என்னைவிட வயசுல மூத்த மனோரமாவுக்கு அம்மாவா நடிச்சேன். நீண்ட காலத்துக்குப் பிறகு, `அண்ணாமலை' சீரியலில், என்னைவிட வயதில் மூத்த சிவக்குமார் சாருக்குப் பாட்டியாக நடிச்சேன். என் கேரக்டர் பற்றிக் கவலைப்பட மாட்டேன். நடிப்பை மட்டும்தான் பார்ப்பேன். அதனால், எந்தக் கூச்சமும் பார்க்காமல் நடிச்சேன். `பசி' மற்றும் `வீடு' உள்ளிட்ட சில படங்கள் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துச்சு. `வீடு' படம், டம்மி செங்கற்கள் இல்லாமல் நிஜமாக ஒரு வீடு கட்டுற மாதிரிதான் எடுக்கப்பட்டது. அதில் நிஜ சித்தாளாகவே வாழ்ந்தேன்.

என் சினிமா பயணத்தில் ஒரு விஷயம் எப்போதும் மறக்கமுடியாது. `பசி' படத்தில் நடிக்கும்போது, சினிமாவுக்குப் புதிதாக வந்த சின்ன நடிகையா இருந்ததால், பெரிய ஆர்ட்டிஸ்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பேன். அப்போ பெரிய புகழுடன் இருந்த ஷோபா, என் மேல் தனி அக்கறை காட்டினாங்க. தன் காரிலேயே என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. அவங்களோடு சேர்ந்து சாப்பிடுவேன். அந்தப் படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார். அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின் மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது. தனிப்பட்ட முறையில் பெரிய வலியையும் வேதனையையும் உண்டாக்கிச்சு. அன்றைய வெற்றி விழா நிகழ்வும் நடக்கலை. `பசி' படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவங்களுக்குக் கிடைச்சது. அதையெல்லாம் அனுபவிக்காமல் 17 வயசுல இறந்துட்டது பெரிய சோகம். இப்போ வரை ஷோபாவை நினைச்சுட்டே இருக்கேன்" என்கிறவர் வார்த்தைகளில் வலி கூடுகிறது. 

``சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிடுச்சு. 250 படங்களில் நடிச்சுட்டேன். இன்னும் நிறைவு கிடைக்கலை. அதேநேரம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருப்பதால், எனக்குப் பெரிய வாய்ப்புகள் வரலையேனு வருத்தமும் இல்லை. என்னை நம்பிவரும் சினிமா, சீரியல்களை ஏத்துக்கறேன். நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து இப்போது வரை, எனக்குள்ளும் கவலைகள் நிறைய இருந்திருக்கு. அதை எப்போதும் வெளிக்காட்டிக்கிறதில்லை. வயசாகிட்டே இருக்குதே. 2015-ம் ஆண்டு, திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டுச்சு. ஒட்டுமொத்தக் குடும்பமும் தவிச்சுட்டாங்க. என் உடல்நிலை மேலே கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பிச்சேன். என் கணவர் மத்திய அரசு ஊழியரா பணியாற்றி ஓய்வுபெற்றவர். இரண்டு பிள்ளைகள். நல்ல வேலையில் இருக்காங்க. நடிப்புதான் என் வாழ்க்கைனு மாறிடுச்சு. வருமானத்துக்கான தேவை இருக்கவே செய்யுது. ஆனாலும், அதைப் பற்றி பெரிசா கவலைப்படாமல் அமைதியா நடிச்சுட்டிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார், `பசி' சத்யா.