Published:Updated:

நிறைய காதல்... நிறைய நிறைய காதல்... ஒரு லவ் க்ளாஸிக்! - '96 விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

'96 திரை விமர்சனம்

நிறைய காதல்... நிறைய நிறைய காதல்... ஒரு லவ் க்ளாஸிக்!  - '96 விமர்சனம்
நிறைய காதல்... நிறைய நிறைய காதல்... ஒரு லவ் க்ளாஸிக்! - '96 விமர்சனம்

இங்கே, எல்லாருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அதில், கொண்டாட ஒரு காதலும் இருக்கிறது. அந்தக் காதலுக்கு, ஒரு தேவதை உருவமும் கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம். தேவதைகளுக்கு ஏது பால் பாகுபாடெல்லாம். ஒரு சின்ன அழுக்கடைந்த புகைப்படமோ, ராஜா அல்லது ரஹ்மானின் ஒரு மென்சோகப் பாடலோ, பக்கங்களெல்லாம் காதல் நிரப்பி வைத்திருக்கும் ஒரு புத்தகமோ, அந்தத் தேவதையின் நினைவுகளை உங்களுக்கு மீட்டுத் தரலாம். ஒரு முழுநீளப் படம், உங்களை கடந்த காலத்துக்கு கைபிடித்து அழைத்துச்சென்று அந்த தேவதையிடம் விட்டால்... அதுதான் `96.

1996- ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் ராமும் ஜானுவும். பள்ளியில் அரும்பும் இவர்களின் காதல் எதிர்பாராத பிரிவால் தடயமே இல்லாமல் கலைந்துபோகிறது. சில நண்பர்களின் முயற்சிகளால் இருவரும் 22 ஆண்டுகள் கழித்து சந்திக்கிறார்கள். இருவரிலும் நிறைய மாற்றங்கள். ஆனால், இருவருக்குள்ளும் எந்த மாற்றங்களுமில்லை. இதைக் கண்டதும் உணர்ந்துகொள்கிறார்கள் இருவரும். அதன்பின் என்ன, வழக்கமான காதல் கதையாக இல்லாமல் பல தளங்களில் பரிணமிக்கிறது அந்தப் பின்னிரவுப் பயணம்.

ஜானுவின் தேவதை ராமாக விஜய் சேதுபதி. கண்களில் நீர் முட்டத் தேங்கி நிற்கிறார்... வெடித்துச் சிரிக்கிறார்... வெட்கப்படுகிறார்... ஏக்கம், இயலாமை, தேடல்... என இன்னும் என்னவெல்லாமோ செய்கிறார். அவ்வளவும் அழகாக இருக்கிறது. உடலாக இந்த யுகத்தில் இருந்தாலும் மனதளவில் கடந்த காலத்திலேயே தேங்கிப்போன மனிதன். சில காட்சிகளில் நமக்குள் இருக்கும் ராமை நினைவுபடுத்துவதால் நம்மையே திரையில் பார்ப்பது போலிருக்கிறது. கமர்ஷியல் ஹீரோக்களுக்கு எவர் க்ரீன் அடையாளம் என்பது நிச்சயம் ஒரு காதல் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில், விஜய் சேதுபதியின் எவர்க்ரீன் அடையாளம் இந்த `96.

ராமின் தேவதை ஜானுவாக த்ரிஷா. இப்படி ஒரு த்ரிஷாவைப் பார்த்து சரியாக 8 ஆண்டுகள் ஆகின்றன. ஜெஸ்ஸிக்கு 37 வயதானால் எப்படி இருக்கும், பேச்சிலும் உடல்மொழியிலும், குணத்திலும் அதிக பக்குவம் இருக்குமே அதுதான் ஜானு.  படம் முழுக்க குட்டிக் குட்டியான ரசனை நிமிடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதை அப்படியே நமக்குக் கடத்திய விதத்தில் ஜெஸ்ஸியை மிஞ்சுகிறார் ஜானு. சலூனிலிருந்து வெளியே வந்த பின், சிங்கிள் டேக்கில் ஒரு காட்சி, காரிலிருந்து இறங்கிக் கண்ணீரோடு ஓடி, குளியலறையில் உடைந்து அலறும் காட்சி - வாவ் த்ரிஷா. இதைவிட சிறந்த கம்பேக் அவருக்கு இருக்கவே முடியாது. இரண்டாம் பாதி, முழுக்க முழுக்க இவர்கள் இருவரும்தான்.  

எம்.எஸ். பாஸ்கரை பார்க்கும்போதெல்லாம் இப்படியொரு பிரமாதமான நடிகர் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தாரே எனத் தோன்றிக்கொண்டே இருக்கும். அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் சின்ன வயது ராமாக வரும் அவரின் மகன், ஆதித்யா பாஸ்கர். ஜீன்களில் தங்கியிருக்கும் திறமை ஃப்ளாஷ்பேக் முழுக்க வெளிப்படுகிறது. சின்னவயது ஜானுவாக கெளரி கிருஷ்ணன். நடிப்பில் அவ்வளவு முதிர்ச்சி. கதையின் கனத்தை அவ்வளவு எளிதாகத் தாங்கி நிற்கிறார். மொத்தப் படத்தின் மையமே ஃப்ளாஷ்பேக் காட்சிகள்தாம். ஆதித்யா, கெளரி இருவருமே அந்தக் கதாபாத்திரங்களுக்குப் பக்கா பொருத்தம். நண்பர்களாக வரும் பகவதி பெருமாள், `ஆடுகளம்' முருகதாஸ், தேவதர்ஷினி... வாட்ஸ்அப் குரூப்பில் பதில் சொல்லும் அத்தனை பேரும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். ஃப்ளாஷ்பேக்கில் வரும் அவர்களின் ஜூனியர்களும் சிறப்பு!  

நம் காதலுக்கு சாட்சியாக ஏகப்பட்ட ரகளையான எளிய மனிதர்கள் இருப்பார்களே, சிலருக்கு பள்ளிக்கு வெளியே கடை வைத்திருக்கும் பாட்டி, சிலருக்கு ஆட்டோக்கார அண்ணன். ராமுக்கு ஸ்கூல் வாட்ச்மேன் ஜனகராஜ். ராம் மட்டுமல்ல.. நாமும்தானே அவரைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறோம். மனிதரைப் பார்த்தாலே வாஞ்சையாக இழுத்து அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. இன்னொரு ரகளை சாட்சியாக கவிதாலயா கிருஷ்ணன். ``எல்லாம் எனக்குத் தெரியும் போடா " என அந்த ஒற்றை வரியிலேயே ராமின் அத்தனை காதலையும், ஏக்கத்தையும் சொல்லிச் செல்கிறார் மனிதர்.

படத்தின் பாடல்கள் வெளியானவுடனே சூப்பர் ஹிட். சூப்பர் ஹிட்டான பாடல்களை சரியான இடத்தில் பொருத்துவது மிகப்பெரிய சவால். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள் இயக்குநர் பிரேம் குமாரும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும். த்ரிஷா காரிலிருந்து இறங்கும் அதே வினாடியில் துடிக்கத் தொடங்குகின்றன கோவிந்தின் வயலின் நரம்புகள். பார்ப்பவர்களுக்குச் சிலிர்க்கிறது. அப்படியே அடுத்தடுத்த காட்சிகளில் பின்னணி இசையில் வெவ்வேறு உயரங்கள் தொடுகிறார். மியூஸிக்கல் லவ் ஸ்டோரி என இந்தப் படத்தைத் தாராளமாகச் சொல்லலாம். படம் நெடுக இளையராஜாவின் தாக்கம் இருப்பது பெரிய பிளஸ்!

ஓரிரவில் நடக்கும் கதையைச் சலிப்பு தட்டாமல் முன்னெடுத்துச் செல்கிறது மகேந்திரன் ஜெயராஜு -  சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு. மழை இரவில் தூரத்துப் பால்கனியில் காபிக் கோப்பைகளோடு இருவரும் நிற்பது, கண்ணாடித் தடுப்பின் முன் த்ரிஷா கைவைத்து அழ, அடுத்த காட்சியில் அங்கே விஜய் சேதுபதி மட்டும் நிற்பது என நிறைய கவித்துவமான ஃப்ரேம்கள். கதைக்கு நிறையவே பலம் சேர்க்கின்றன இத்தகைய முயற்சிகள்.  

ஓர் அழகான மென்சோகக் கவிதையைப் படமாக்கியது போல் இருக்கிறது '96. ராமின் பார்வையில்... அதன்பின் ஜானுவின் பார்வையில் மீண்டும் ராமின் பார்வையில் என ஃப்ளாஷ்பேக்கை சுவாரஸ்யமாக்குகிறது திரைக்கதை. வழக்கமான க்ளிஷேவாக இருக்குமோ என நாம் நினைக்கும்போதெல்லாம் அதை உடைத்து வேறு கோணத்தில் கதையை நகர்த்திப் போகிறார்கள் ராமுவும் ஜானுவும். அதே சமயம், எல்லாராலும் படத்தின் கேரக்டர்களோடு உடன்பட்டுப் பயணிக்கமுடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடக்கூடிய கதை. கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரியேதான். அதீதப் பொறுப்போடு அதைக் கையாண்டிருக்கிறார் பிரேம். `சந்தோஷமா இருக்கேனான்னு எல்லாம் தெரியல... ஆனா நிம்மதியா இருக்கேன்' போன்ற வசனங்கள் அந்தப் பொறுப்பை வெளிக்காட்டுகின்றன. இயக்குநராக மட்டுமல்ல எழுத்தாளராகவும் கவனம் ஈர்க்கிறார் பிரேம்குமார். 

படத்தின் குறை அதன் நீளம். இரண்டரை மணிநேரம். அதிலும் இரண்டாம் பாதி முழுக்க காட்சியமைப்புகள் குறைந்து உரையாடல்களே அதிகமிருப்பதால், இன்னும் நீளமான படம் போன்ற தோற்றத்தைத் தருகிறது. பள்ளிக் காட்சிகள் முழுக்க முழுக்க காதலைச் சுற்றியே இருப்பது லேசாக உறுத்துகிறது. அதைத் தவிர்த்து, சில சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருக்கலாம். 

ராம், ஜானு, அவர்களின் கதை, இசை என எல்லாமுமாக சேர்ந்து நினைவுகளை கிளறிவிடுவதால் நமக்கும் கடந்தகாலத்திற்கு ஒரு நடை போய்விட்டு வந்த அனுபவம் நேர்கிறது. சிலருக்கு அரவமில்லாமல் மூலையில் அமர்ந்திருக்கும் மரபெஞ்ச்சின் கிறுக்கல்கள் நினைவுக்கு வரலாம். சிலருக்கு தூண் மறைவில் மங்கலாக தெரியும் நிழலுருவம் நினைவுக்கு வரலாம். சிலருக்கு பரணில் பழைய வாசனையோடு தூங்கும் பொக்கிஷங்கள் சிலவற்றைப் பற்றிய நினைவுகள் வரலாம். ஆனால், அந்த நினைவுகளைத் தூண்டி அவற்றின் மேல் மீண்டுமொரு முறை காதல் கொள்ள வைத்ததில் வெற்றி பெற்றுகிறது '96'.  

'பரியேறும் பெருமாள்' விமர்சனத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்!