Published:Updated:

பிரபாகரும் ஆனந்தியும் அமைதியைத் தேடி ஓடிய நாள் இன்று..! #11YearsOfKattradhuThamizh

தார்மிக் லீ
பிரபாகரும் ஆனந்தியும் அமைதியைத் தேடி ஓடிய நாள் இன்று..! #11YearsOfKattradhuThamizh
பிரபாகரும் ஆனந்தியும் அமைதியைத் தேடி ஓடிய நாள் இன்று..! #11YearsOfKattradhuThamizh

பிரபாகரும் ஆனந்தியும் அமைதியைத் தேடி ஓடிய நாள் இன்று..! #11YearsOfKattradhuThamizh

ஹீரோக்களின் பலவீனமே கமர்ஷியல் என்ற வட்டத்துக்குள் சிக்குவதுதான். ரசிகர்களுக்காகவும், தயாரிப்பாளர்களின் கல்லாக்கட்டுவதற்கும் வேறு வழியில்லாமல் ஹீரோக்களும் மாஸ் எலெமன்ட்ஸ், கமர்ஷியல் படங்களை நடித்துக் கொடுக்கிறார்கள். இந்த வேலியை வெட்டியெறிந்து ஒரு கலைஞனால் என்ன முடியும் என்பதைக் கணித்து அதை நிரூபிப்பது ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே. அப்படித் தன் படத்தின் மூலம் ஜீவா என்ற நடிகனை மீண்டும் கலைஞனாக்கிய பெருமை இயக்குநர் ராமுக்கு உண்டு. ராம், ஈ படங்களில் நடித்த அனுபவம் ஜீவாவுக்கு கற்றது தமிழில் அதிகம் கைகொடுத்தது.

ஆம், பிரபாகர் அவனது ஆனந்தியை தேடியலைந்த நாள் இன்று; ரயில் தண்டவாளத்தில் இருவரும் கைகோத்து அமைதியைத் தேடி ஓடிய நாள் இன்று; சமூகத்தில் நடக்கும் குறைபாடுகளைக் கண்ட பிரபாகர், கையில் துப்பாக்கியைப் பிடித்த நாள் இன்று; சிவபானம் பிடித்து கிறுக்காட்டம் ஆடிய நாள் இன்று; மருத்துவம் தேர்ந்தெடுக்கும் அளவுக்குப் படித்து மார்க் வாங்கியிருந்தாலும், தமிழைத்தான் கற்பேன் என்று அடம்பிடித்த பிரபா தமிழ்ப்பித்தனான நாள் இன்று... இவன் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 

தன் கண் முன்னே பெற்றோர்களைப் பறிகொடுத்த பிரபாகர், பள்ளி விடுதியில் தங்கி கனத்த இதயத்தோடு தனது பால்ய காலத்தை ஆரம்பிக்கிறான். தமிழையும், வண்ணதாசனின் கவிதைகளைக் கற்றுக்கொடுக்கும் தமிழ் ஐயா பூபல் ராவர், பிரபாவுக்கு எல்லாமுமாய் இருந்து அவனை அன்போடு அரவணைத்து வளர்கிறார்.  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழை அச்சிறுவன் மனதில் ஆழமாய் வேரூன்றி நிற்கச் செய்கிறார். அவனுடன் சேர்ந்து தமிழும் வளர்கிறது. நெல்லைத் தமிழ்ப் பேசும் அவரிடமிருந்து சங்கத் தமிழின் பெருமையை உணர்கிறான்; கற்கிறான். மெது மெதுவாக தந்தை, தாயின் இழப்பிலிருந்து மீண்டு வருகிறான்; மறக்கவும் செய்கிறான். அப்போது இலக்கிய நோக்கோடு தமிழுடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், வெள்ளந்தியான ஆனந்தியின் நினைவலைகளில் நீந்துவதையும், மனம் மறுக்கவில்லை.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நல்ல மதிப்பெண்ணோடு தமிழ் இலக்கியம் படிக்க கல்லூரி வாசலில் காலடியெடுத்து வைக்கும் பிரபா, ஏதோ வேற்றுகிரக வாசியைப் பார்ப்பதைப் போல் பார்க்கப்படுகிறார். காரணம் 12 ம் வகுப்பில் இவன் பெற்ற மதிப்பெண். கல்லூரிக் காலத்தையும் எப்படியோ கடந்துவிட்டு, வேலையில் சேர்கிறான். தனது தமிழ் ஐயா பூபல் ராவரைப் போல் இவனும் வாத்தியாராகி மற்றவர்களுக்கு தமிழைக் கற்றுகொடுக்கிறான். தமிழைக் கொச்சை செய்யும் பல இடங்களில் கோபப்பட்டு விபரீத முடிவுகளை எடுக்கிறான். அதை ரௌத்திரம் எனச் சொல்லி தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொள்கிறான்.

அரசாங்க அதிகாரி ஒருவர், கேரள நாட்டிடம் தன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், எதிர்பாராத விதமாக பிரபாகர் சிக்குகிறான், போலீஸிடம் அடி வாங்குகிறான், அவமானப்படுகிறான், மனதளவிலும் பாதிக்கப்படுகிறான். அன்று வரை சாந்தமாக வாழ்வை நடத்தி வந்த பிரபாகரின் மனதில் ரௌத்திரத்தைப் பழக்கியது, அந்தத் தருணம். அதற்குப் பின் ஏற்படப்போகும் விளைவுகளுக்கான விதை அந்தச் சம்பவத்தில்தான் முளைத்திருக்க வேண்டும். அதிலிருந்து தனக்கென விதிமுறை எழுதி வாழத் தொடங்குகிறான். பார்ப்பவர்களையெல்லாம் அடிக்கிறான், பிடிக்காதவர்களை எல்லாம் கொல்கிறான். 

சமூகத்திலிருந்து தொலை தூரம் தள்ளி வாழ ஆரம்பிக்கிறான், பிரபாகர். இக்கட்டான ஒரு சூழலில் தன் சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்த அவனுக்குக் கிடைத்ததோ, கிழிந்த 5 ரூபாய். பயணம் மாற்றத்தைக்கொடுக்கும் என்றெண்ணி, ரயில் நிலைத்துக்குச் செல்கிறான், பயணச்சீட்டைப் பெற கிழிந்த 5 ரூபாயை நீட்டுகிறான். வாக்குவாதம் முற்றி, அப்போதுதான் ரத்த வாடையை முகர்கிறான். அனைவராலும் விகாரமாகப் பார்க்கப்பட்டாலும், தன்னைக் கடவுளாக நினைத்து சிரித்த முகத்தோடு உலகத்தை அன்றிலிருந்து எதிர்கொள்கிறான். அங்கிருந்து பயணப்படும் பிரபா பல்வேறு மனநிலைகளுக்கு ஆளாகிறான். 

பிரபாவுக்கு தமிழ் எவ்வளவு பிடிக்குமோ ஆனந்தியையும் அதேயளவுக்குப் பிடித்தது. ஆனால், தமிழைக் கற்ற அளவுக்கு, பிரபா ஆனந்தியைக் கற்கவில்லை. அதனால்தான் எதுவும் சொல்லாமல் பல முறை விலகி வேறு ஊருக்குச் சென்றிருக்கிறாள். பல வருடங்கள் நினைத்து வாழ, ஒரு நாள் இளைப்பாறல் போதும் என்று பயணப்படுகிறான். முயற்சியைக் கைவிடாமல் தேடுகிறான், தேடுகிறான், தேடிக்கொண்டே இருக்கிறான். பிரபாவால் ஆனந்தி பல்வேறு சூழ்நிலையில் பார்க்கப்பட்டாலும் எப்போதும் ஒரே ஆனந்தியாக மட்டும்தான் பார்க்கப்படுகிறாள். `நெஜமாதான் சொல்றியா' எனக் கொஞ்சும் குரலில் சொல்லும் அதே ஆனந்தியாக! . என்ன ஆனாலும் , பிரபாவுக்கு கோழி றெக்கைய பிய்த்துக்கொடுத்த அதே குட்டி ஆனந்தியாகத்தான் அவள் தெரிந்தாள். 

படம் முழுக்க ஆனந்தி அழுதுகொண்டே தான் இருப்பார்.அவரது தந்தை பற்றிய உண்மை தெரியவரும் போதும்; அந்த இடத்தில் பிரபாகரை சந்திக்கும் போதும்; அவரின் துன்பங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். இறுதியில் போலீஸ் துரத்த, ஆனந்தியும், பிரபாகரும், சிறுவயதில் அவர்களது செல்ல நாய் டோனி இறந்த அதே ரயில் குகைக்குள் செல்வர்.ஆனந்திக்கு அனைத்துமே தெரியும். ஆனால், பிரபாகரனை பார்க்கும் போதெல்லாம், அவள் சிரித்துக்கொண்டே தான் இருப்பாள். எல்லாம் முடிந்த பின் ,இரு குழந்தைகள் சிரிக்கும் சப்தத்துடன் ராம் பேசத் தொடங்குவார். யுவன் இசை,அஞ்சலியின் சிரிப்பு, ராமின் குரல் என அது ஒரு மென்சோக மெலடி.எல்லாம் கடந்த பின், மரணம் கூட சுகம் தான்.

இப்படிப் படம் நெடுக வலிகளின் சுவடுகள் மட்டுமே பறந்து விரிந்து காட்டப்பட்டு வந்த சமயத்தில் ஒரு மணி நேரம் கழித்து ஒரு குரல் நம்மை நோக்கிக் கேட்கிறது. அது பிரபாவின் (ராம்) தேடுதுலுக்கு உதவி செய்ய வந்த ராஜாவின் குரல். ஒரு ராஜா இசையில் அழுக, இன்னொரு ராஜா குரலில் உருக்க, இது இரண்டினையும் இறுக்கிக் கட்டிப்போட்டபடி அமைந்தது நா.முத்துக்குமாரின் வரிகள். இயக்குநர் ராமோடு சேர்த்து அந்தச் சமயத்தில் இந்த நால்வரையும் நினைக்கும்போது கோபம்தான் ஏற்பட்டது. உலகத்தில் உணர்ச்சிதான் தி மோஸ்ட் அண்டர்ரேட்டட். இது போன்ற சினிமாக்களின் வாயிலாகத்தான் காதல் என்ற உணர்வு அவ்வளவு அழகாகக் காட்டப்படுகிறது. அதனால்தான் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலரான இப்படத்தை 11 ஆண்டுகள் கழித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பேசுவோம். 

கொண்டாடப்பட வேண்டிய திரை மொழி, `கற்றது தமிழ்'!

அடுத்த கட்டுரைக்கு